Wednesday, 20 May 2015

காரைக்குடி சம்பை ஊற்று பற்றிய சமூக சிறப்பு பார்வை...

காரைக்குடி நகராட்சி கடந்த 2013 ஆண்டு மே மாதம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரு லட்சத்து ஆறாயிரத்து 793 மக்கள் உள்ளனர். குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்று, நகராட்சி எல்லையை ஒட்டிய கோவிலூர் ரோட்டில், 3.95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு ஆழ்துளை கிணறுகள், 2 தரை மட்ட தொட்டிகள் உள்ளன. வளர்ந்து வரும் நகராட்சி என்பதால், மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்ததின் பேரில், ரூ.18.58 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில், சம்பை ஊற்று பகுதியில், ஆழ்துளை கிணறுகள், மோட்டார் அறை, மற்றும் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேலும், முக்கியமான வீதிகளில் பைப் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சம்பை ஊற்றை சுற்றி, 500 மீ., சுற்றளவிற்கு எவ்விதமான கட்டடமும், கட்ட அனுமதிக்க கூடாது என, கடந்த 2002ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல், ஏராளமான வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீரை மாசுபடுத்தி, குடிநீரின் தன்மையையும் மாற்றி வருகிறது.
சம்பை ஊற்றின் இன்றைய நிலை..
சம்பை ஊற்றின் நீர்மட்டம் மிகத் தாழ்வாகச் சென்றுவிட்டது என்பதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவல்!!! இந்நிலை காரணமாகவே தற்போது மக்களுக்கு தேவையான குடிநீரினை வழங்கமுடியாமல், காலை நேரத்தில் மட்டும் சிறிது நேரத்திற்கு, குறைவான அளவில் குடிநீரினை வழங்கி வருகிறார்கள். மேலும் குடிநீர் பற்றாக்குறையினால் கழனிவாசல் பகுதியில் இருந்து போர் போட்டும் தண்ணீர் எடுத்து காரை மக்களுக்கு வழங்குகிறார்கள்.
நம் சம்பை ஊற்றானது தமிழகத்தில் இரண்டு ஊர்களில் மட்டுமே உள்ளது. சேட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்குள் இருக்கும் மிகப்பெரிய ஆற்றோடைதான் அது! அந்த குடிநீர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சுவை மிகுந்ததாகக் காணப்பட்டது. ஆனால் இப்போது கோவிலூர் கெமிக்கல் ஆலை நிர்வாகத்தினர் அந்த சம்பை ஊற்றினை முழுமையாகப் பாழ்படுத்தி அதனை அவர்களுக்கு சாதகமாக்கிப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு, அவர்கள் தேக்கி வைத்திருக்கும் நச்சுக் கழிவு நீரினை கோவிலூர் சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் அருகிலுள்ள பாலத்தின் வழியாக சம்பை ஊற்றினை வந்து சேருமாறு செய்துவந்தனர்.
இந்நிலையினைக் கண்ட CECRI ஆய்வு மையம் 2004 இல் சம்பை ஊற்று தொடர்பாக, கோவிலூர் சாலையில் உள்ள சம்பை ஊற்றுத் தண்ணீரை, பரிசோதித்துப் பார்த்ததில், அந்த தண்ணீரில் அதிக அளவு அம்மோனியா, சோடியம், சல்பேட் மற்றும் இதர கெமிக்கல் கலந்திருப்பதாவும், சம்பை ஊற்றினைக் காப்பாற்ற வேண்டி குடிநீர் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, நகராட்சி உட்பட தமிழக அரசுக்கும் ரிப்போர்ட் வழங்கியது. ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

சம்பை ஊற்றின் குடிநீரினை தினசரி 6.5 லட்சம் லிட்டர் விகிதம் மாதத்திற்கு இரண்டு கோடி லிட்டருக்கும் அதிகமான குடி தண்ணீரை அந்த கோவிலூர் தனியார் கெமிக்கல் ஆலைக்கு கொண்டுசெல்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 75000பேர் குடிக்கும் குடிநீரினை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவரும் நிகையில், இவ்வாறு அவர்கள் கொண்டு செல்வதால் இன்னும் சில ஆண்டுகளிலேயே, சம்பை ஊற்றில் முழுவதுமாக தண்ணீர் குறைந்து, கோவிலூர் கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரினைப்போல் நச்சு கலந்து, நாம் சம்பை ஊற்றினை முழுமையாக இழக்க நேரிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதற்காகத்தான் சம்பை ஊற்றில் கெமிக்கலைக் கலந்துவிட்டால் பொதுமக்களுக்கு பயன்படாவண்ணம் செய்துவிட்டு, முழுவதும் இவர்களே ஆக்கிரமிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

காரைக்குடி - கோவிலூர் ரோட்டில் பெருகி வரும் வாகன பழுதுபார்ப்பு நிலைய, ஆயில் கழிவுகளால், சம்பை ஊற்றின் நீராதாரம் கெடுகிறது.சம்பை ஊற்று மூலம், 90 சதவீத தண்ணீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் பம்பிங் செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்டபோது, சம்பை ஊற்றின் அருகில் வீடு கட்ட கூடாது, கழிப்பறை கட்டக்கூடாது, வேறு எந்த நீர் உறிஞ்சும் நிலையங்கள் அமைக்க கூடாது, என உத்தரவிடப்பட்டது.தற்போது விதிகளை மீறி, ஒர்க்ஷாப் பெருகி வருகின்றன. இதிலிருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளால்,நிலத்தடி நீர் பாதிப்படைந்து வருகிறது. 
அருகில் உள்ள காரைக்குடி ஊரணியும் இதனால் கருப்பாக மாறி வருவதால், அப்பகுதியில், விவசாயம் நாளுக்கு நாள் பொய்த்து வருகிறது.மனோகர்,தெற்கு தெரு: காரைக்குடி ஊரணி மூலம் 400 ஏக்கர் விவசாயம் நடந்தது. தற்போது 40 ஏக்கர் கூட இல்லை. சுற்றிலும் வாகன பழுதுபார்ப்பு நிலையங்களில் இருந்து, வெளியேறும் கழிவு,இந்த ஊரணியில் கலக்கிறது.கோவிலூர் ரோட்டின் இருபுறமும் புற்றீசல் போல், ஒர்க்ஷாப் பெருகி வருகின்றன.நாளுக்கு நாள் சம்பை ஊற்றின் தண்ணீரின் தன்மையே மாறி வருகிறது.எம்.அண்ணாதுரை, பர்மாபஜார்: கோவிலூர் செல்லும் பகுதி, ஊராட்சிக்குட்பட்டதாக இருந்தாலும், சம்பை ஊற்று மூலம் நகராட்சியே அதிகம் பயன்பெறுகிறது.நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில், உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்படும்.
மேலும், பாதுகாப்புக் குறைவாக இருப்பதால் இந்த ஆலையினை மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியகம், தற்போது மீண்டும் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் இருந்து நம் சம்பை ஊற்றினை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும்.
எனவே உடனடியாக..
1. காரைக்குடி நகராட்சி மற்றும் சங்கராபுரம் உராட்சி மன்றம் உடனடியாக அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அந்த ஆலைக்கு எதிராகவும், அங்கு கொண்டு செல்லப்படும் சம்பை ஊற்றினைக் காப்பாற்ற 1000மீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்,

2. சம்பை ஊற்றினைக் காப்பதில் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும்,

3. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு சம்பை ஊற்றினைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து
அந்த தனியார் ஆலைக்கு செல்லக்கூடிய குடிநீரினை உடனடியாக தடுத்து நிறுத்தி, மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படும் வண்ணம் செய்ய வேண்டும் எனவும்  

பொது மக்களின் கோரிக்கையினை வலியுறுத்தும் விதமாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை பொதுமக்கள் சார்பாக மக்கள் மன்றத்தினர் நடத்தவிருக்கின்றார்கள்.

நாம் குடிக்கின்ற குடிநீர் நம் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருக்குமாறு பாதுகாக்கவும், வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்...



ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Friday, 15 May 2015

ஊட்டி மலர் கண்காட்சியின் (2015) வியக்க வைத்த அலங்காரங்கள் !! ஒரு தவகல்..

உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. 'ஒத்தைக் கல் மந்து' என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று என தோதூவர் சொல்கின்றனர். மூங்கில் காடு இருந்தாலும், நீர் அதிகம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது என பலவாறு கூறுகிறார்கள் ,

ஊட்டி என்றும் உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்த ஊராகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.உலகின், 18 பெரிய உயிர் சூழல் மண்டலங்களில் இந்தியாவும் ஒன்று; அதில், நீலகிரி உயிர் சூழல் மண்டலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இம்மாவட்டம் உயர்ந்து நிற்பதால், இங்குள்ள மலர்கள், மரம், செடி, கொடிகள் மகத்துவம் பெறுகின்றன.இந்த ஊட்டியில் 118வது மலர் கண்காட்சி கோடை காலத்தில் நடைபெறும் கோடை மலர் கண்காட்சி மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 






















மலர் கண்காட்சி வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள 200 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதில் சிறப்பம்சமாக நீலகிரி தோடர் மக்களின் குடில், பாரம்பரிய உடையிலான அவர்களது சிலைகள் உள்ளிட்டவை பல்வேறு மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

மலர்களால் அலங்கார வளைவு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பூங்காவில், ஆங்காங்கே உள்ள படுகைகளில் நடவு செய்யப்பட்டிருந்த, 'இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயன்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், லில்லியம், சன் பிளவர்' என, 185 வகையைச் சேர்ந்த, மூன்றரை லட்சம் மலர்கள் கண்களுக்கு விருந்தளித்தன. மாடங்களில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர் செடிகள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. இத்தாலியன் பூங்கா அருகே, இந்தாண்டு முதன் முறையாக, 6,000 தொட்டிகளில், பல வண்ண மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மலர் கண்காட்சியின், 'ஹைலைட்டாக', பூங்காவின் முகப்பில், ஒரு லட்சம் ரோஜா மற்றும் கார்னேஷன் மலர்களை கொண்டு, 40 அடி நீளம், 40 அடி அகலம், 23 அடி உயரத்தில், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பச்சை பாசியின் மூலம், இரு யானைகள் நிற்பது போன்றும் வடிவமைத்திருந்தனர். ஹாலந்து, கென்யா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இடம் பெற்றிருந்தன. 119 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜெர்பரா மலர்களால் வடிவமைக்கப்பட்ட, 10 அலங்கார வளைவுகள், ஹெலிகோனியா, ஆன்தூரியம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்கள், ஹாலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட துலிப் மலர்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. தொடரும் மழையால், நேற்று காலை பார்வையாளர்கள் வருகை குறைவாகவே இருந்தது. மதியத்துக்கு மேல், கூட்டம் வரத்துவங்கியது. வரும், 17ம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படுகிறது; அன்று, மாலை, 3:00 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.  

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Wednesday, 13 May 2015

எங்க ஊரு கொப்பாத்தா திருவிழா !! ஒரு சிறப்பு பார்வை..

Image result for அருள்மிகு கொப்புடையம்மன்
நான்  பிறந்த  ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அருமையான ஊர்.  எங்கள் ஊரின் பெருமைகள் பல. அருமையான கோவில்கள் நிரம்பிய ஊர், கோட்டை மாதிரி வீடுகள் அமைந்துள்ள ஊர் (‘ஆயிரம் ஜன்னல் வீடு’ என்ற ஒரு வீடு உண்டு!, ஆயிரம் ஜன்னல்களைக் கொண்டதால்!), நல்ல குடிநீர் வளம், இப்படிப் பல. 
சரி  எங்கள் ஊர்த் திருவிழாவிற்கு வருகிறேன். எங்கள் ஊர்க் காவல் தெய்வமாக  அருள்மிகு கொப்புடையம்மன் இந்துக்களால் போற்றப்படுகிறது .
வருடா வருடம் வைகாசியில் வரும் இந்தத் திருவிழா! ஊர்க் காவல் தெய்வமாதலால் அனைவருக்கும் மிகவும் அபிமானமான திருவிழா! வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது! பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு ஊருக்கு வருவது உண்டு திருவிழாவை முன்னிட்டு!
திருவிழாவிற்கு பத்து நாட்களுக்கு முன்னர் காப்புக் கட்டுவார்கள். அன்றிலிருந்து திருவிழா முடிந்து ஒரு வாரம் வரை (காப்பு அவிழ்க்கும் வரை) ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது என்பது ஐதீகம். ஆனால் காப்புக் கட்டும் சமயத்தில் ஊரில் இருந்தால் மட்டுமே இந்த ஐதீகம் செல்லுபடியாகும்! காப்புக் கட்டும் பொழுதில் வேறு ஊரில் இருந்தால் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. இது பெரும்பாலான ஊர்களில் இருக்கும் ஒரு பொதுவான வழக்கம்! எல்லா ஊர்களிலும் திருவிழாவிற்குக் காப்புக் கட்டுவார்கள், குறிப்பாக அம்மன் பிரதான தெய்வமாக இருக்கும் ஊர்களில்.
எப்பொழுதும் செவ்வாய் அன்று திருவிழா. அம்மன் கோவில் என்பதால் செவ்வாய் விசேஷம். புதன் அன்று திரும்புதேர். (இதற்கு ஒரு கதை உள்ளது. இதைப் பிறகு சொல்கிறேன்). புதன் இரவு தெப்பத் திருவிழா அதனைத் தொடர்ந்து பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று ஊரே களை கட்டும்!  மேலும் திருவிழாவிற்கே உரித்தான் விளையாட்டுப் பொருட்கள், பலூன், காத்தாடி, கண்ணாடி, ஊதுவான் முதலிய பொருட்களை ஒரு இரும்புக் கம்பியை அடித்தளமாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தனித்தனி கண்ணாடிப் பைகளில் (பிளாஸ்டிக் பைகள்) அடைத்து, அந்தப் பைகளை இரும்புக் கம்பிகளில் வசதிக்கேற்ப தொங்க விட்டுத் தங்கள் கடையினை (தற்காலிகக் கடை) அலங்கரிப்பர் முதலாளிகள்! அவரவர்க்கே உரித்தான் பாணியில் பீப்பியை ஊதி, பலூனை ஆட்டி எப்படியாகிலும் குழந்தைகளின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிட ஒவ்வொரு கடைக்காரரும் காட்டுகிற கதாநாயக பாணி (ஹீரோயிசம்) நிச்சயம் ரசிக்கத்தக்கது! ஒவ்வொரு வருடமும் நான் அவர்களைப் பற்றிய நிரம்ப யோசிப்பதுண்டு! அவர்கள் அந்தக் கடையினை, இரவு படுக்கும் போது எங்கே வைத்துப் பாதுகாப்பார்கள், எப்படி வேறு ஊருக்குச் செல்லும் போது எடுத்துச் செல்வார்கள் என்று என் சிற்றறிவுக்கு(அப்பொழுதும் எனக்குச் சிற்றறிவு தான்!) எட்டியவரை யோசித்துப் பார்ப்பதுண்டு. பிறகு அப்படியே வேறு எங்கோ கவனம் சிதறி விட, என் கருத்தாழமிக்க (!) சிந்தனைகளும்! 
 நிச்சயம் அவரவர் ஊர்த் திருவிழாவில் எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவத் தொகுப்பு இருக்கும்!
முன் பத்திகளில் சொல்லியிருந்த கதைக்கு வருகிறேன் இப்போது! திரும்பு தேரும் இங்கே வரும்.
காரைக்குடியில் இருந்து சுமார் ஒரு 8 அல்லது 10 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டம்மன் கோவில்.  (காட்டில் இருக்கும் அம்மன் என்பதனால் இந்தப் பெயர்). இந்தக் கோவில் இருப்பது ஒரு கிராமம் (பெயர் நினைவில்லை, ஏனெனில் எங்கள் அனைவருக்கும் பழக்கமான பெயர் ‘காட்டம்மன் கோவில்’ மேலும் யாரும் அந்த ஊரைப் பெயர் சொல்லி அழைத்ததாக நினைவில் இல்லை!). அந்த ஊரில் உள்ள அம்மன் (அம்மன் பெயரும் ‘காட்டம்மன்’ !) எங்கள் கொப்புடைய அம்மனுக்கு அக்காவாம். சொந்த அக்காவாம். வருடா வருடம் நாம் எல்லோரும் நம் பெரியம்மா, சித்தி, அத்தை வீட்டிற்கு ஆண்டு விடுமுறைக்குச் செல்வது போல, கொப்புடையம்மனும் தனது அக்கா வீட்டுக்குப் போகுமாம். கொப்புடையம்மனுக்குப் பிள்ளைகள் ஏதுமில்லையாம். ஆனால் காட்டம்மனுக்கு ஏழு அல்லது எட்டுப் பிள்ளைகளாம். எப்பொழுதும் அம்மன் தனது அக்கா வீட்டிற்குச் சென்று அங்கு தன் அக்காள் பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்து விட்டு ஓரிரு நாட்களில் எங்கள் ஊருக்குத் திரும்பி வருமாம் (காரைக்குடிக்கு!).
வழக்கம் போல ஒரு வருடம் குறித்த நாளில் கொப்புடையம்மன் தனது அக்கா வீட்டிற்கு கிளம்பிச் சென்றதாம். அப்பொழுது ஏனோ காட்டம்மனுக்குத் திடீரென்று ஒரு குழப்பம் தோய்ந்த சிந்தனை வந்ததாம். அது தன் தங்கைக்கோ திருமணமாகிப் பிள்ளைகள் ஏதுமில்லை. ஆனால் தனக்கோ குறைவில்லாது மழலைச் செல்வங்கள் உள்ளன. இதனைப் பார்த்து, நினைத்துத் தன் தங்கை பொறாமைப் பட்டு, வயிறு எரிவாளோ என்று சந்தேகித்துத் தன் குழந்தகைளைப் பெரியதொரு கோழிகளை மூடும் கூடையின் உள்ளே ஒளித்து வைத்தாளாம். இது எதுவும் தெரியாத கொப்புடையம்மன் வழக்கம் போல அக்கா வீட்டுக்கு வந்தவுடன்,  குசலம் விசாரித்து முடித்து விட்டுக் குழந்தைகளைப் பற்றிக் கேட்டாளாம். அக்காவோ குழந்தைகள் வெளியே விளையாடுகின்றன என்று பொய் சொன்னாளாம். என்றும் இல்லாத அதிசயமாக இருந்த கோழிக் கூடையைப் பார்த்துத் தங்கை கேட்டாளாம் அது என்னவென்றும் அதனுள்ளே என்ன வைத்திருக்கிறாளென்றும்.  அக்காவோ ஏற்கெனவே சொன்ன பொய்யை வலுப்படுத்த, “உள்ளே ஒன்றுமில்லை. கோழிக் குஞ்சுகள் தான் உள்ளன” என்று மேலும் ஒரு பொய்யைச் சொன்னாளாம்.
அக்கா, தங்கையாக இருந்தாலும் தெய்வமாதலால் தங்கைக்கு எல்லாம் தெரிந்து விட்டதாம் ஞான திருஷ்டியில்.  இருப்பினும் மனம் மிக நொந்தாளாம் கொப்புடையம்மன். அக்காளுடைய குழந்தகைளத் தன் குழந்தைகளாகத் தானே பாவித்து வந்தேன், பிறகெதற்கு என்னிடமே அக்கா பொய் சொல்கிறாள்? என்று குமைந்தாளாம். உடனே கோபமாக அக்காவைப் பார்த்துக் கூறினாளாம், “நீ எனக்குக் குழந்தைகள் இல்லை என்பதற்காக உன் குழந்தைகளைப் பார்த்துப் பொறாமைப் படுவேன் என்று எண்ணித் தானே உன் குழந்தைகளை ஒளித்து வைத்தாய்! எனக்கு இருக்கின்றனர் ஓராயிரம் மக்கள். ஆம்! என் ஊர் மக்கள் (காரைக்குடி) அனைவருமே என் குழந்தைகள் தாம்! நான் வருகிறேன்!” என்று கோபாவசேமாகக் கூறி மறு நாளே ஊர் திரும்பினாளாம். தங்கை ஊருக்குக் கிளம்பிய பின்னர், அக்காள் தன் குழந்தைகளை வெளியே வருவிக்க எண்ணி, கோழிக் கூடையைத் திறந்தாளாம். உள்ளே பார்த்தால், அத்துணை குழந்தைகளும், கோழிக் குஞ்சுகளாய் மாறியிருந்தனவாம்!
கொப்புடையம்மன் காட்டம்மன் கோவிலுக்கு (அக்கா வீட்டிற்கு) செல்வது செவ்வாய் அன்று. தேர்த் திருவிழா அன்று தேரில் அம்மன் தனது அக்கா வீட்டுக்குச் செல்லும். ஊர் மக்கள் அனைவருமே கோவிலில் ஆஜர் ஆகி விடுவார் தேர் வடம் பிடிக்கவும், தேர் காட்டம்மன் கோவிலுக்குச் செல்வதைப் பார்க்கவும். வழி நெடுக (ஊர் எல்லையைத் தாண்டும் வரை) ஆங்காங்கே மக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வர். ஒரு ஐயரும் உடன் செல்வார்.  ஊர் எல்லை வரை மக்கள் செல்வர். அதற்கு அப்புறம் காட்டுப் பாதை (தற்பொழுது சிமெண்ட்ரோடுகள் போடப்பட்டு விட்டன, இருப்பினும் சிறு தொலைவு காட்டுப் பாதை வழியாகச் செல்வார்கள் என்று நினைக்கிறேன்! ) காட்டுப் பாதையில் செல்ல சில பேர் மட்டுமே (ஒரு பத்து, இருபது ஆட்கள்) வடம் பிடித்துச் செல்வர்.
மறு நாள் (புதன்) எங்கள் ஊரில் இருந்து அனைவரும் சைக்கிளில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில், பேருந்துகளில் காட்டம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கேயும் அன்று திருவிழா. ஊரே கோலாகலமாக இருக்கும். அந்த ஊர் மக்களுக்கு அன்று திருவிழா. நாங்கள் அங்கே போய் காட்டம்மனைத் தரிசித்து விட்டு (கொப்புடையம்மனுக்கு அங்கே ஒரு சந்நிதி இருக்கிறது என்று நினைக்கிறேன்), அர்ச்சனை, பூசை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வருவோம். அன்று மதியம் தான் கொப்புடையம்மன் தனது அக்காவுடன் கோபித்துக் கொண்டு, எங்கள் ஊருக்கு நெஞ்சம் நிறைந்த பாசத்துடன் (முன்னை விட அதிகமாக) அதே தேரில் திரும்பி எங்கள் ஊருக்கு வரும். இது தான் ‘திரும்பு தேர்‘.
எங்கள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டு வரும் அம்மனை (அம்மாவை) ஆராதித்து வரவேற்பது மிகவும் விசேஷம்! விருப்பமான விஷயமும் அல்லவா?  அன்றும் பானாக்கம், நீர் மோர் தண்ணீர்ப் பந்தல்களில் விநியோகம் செய்வர்! திரும்பு தேரில் அம்மன் கோவிலுக்கு வந்ததும் அன்று இரவு தெப்பத் திருவிழா!

தெப்ப உற்சவம்..

முன்னதாக கொப்புடையநாயகி யம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12.15 மணி அளவில் கொப்புடைய நாயகியம்மன் தெப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் அம்மன் எழுந்தருளிவார். பின்னர் பக்தர்கள் கோஷமிட தெப்பத்தில் தெப்பத் தேரில் அமர்ந்தவாறு கொப்புடையம்மன் 3 முறை வலம் வருவார். அப்போது பக்தர்கள் தெப்பகுளத்தின் சுற்று சுவரில் தீபம் ஏற்றி வழிபடுவர்.பின்பு அதிகாலை அம்மன் யானை வாகனத்தில் திரு வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேககம் நடைபெரும். 
இந்தத் திருவிழாவில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலநது கொள்வார்கள்.
இப்படியாகக் கழியும் இந்தத் திருவிழா வருடமொரு முறை .
ஆனால் நாங்கள் காட்டம்மன் கோவிலுக்கு ஒருமுறை சைக்கிளில்  சென்றது இன்றைக்கும் பசுமையான நினைவுகள்.  இந்த மாதிரி தருணங்களில் மிக அதிகம். மேலும் வழி நெடுகக் கிடைக்கும் தின்பண்டங்கள், பாணக்கம், மோர் ,குச்சி ஐஸ், இப்படிப் பலவும் எங்களை இழுக்கும்!
காரைக்குடியில் அடுத்த வாரம்  (செவ்வாய்) தேர்த் திருவிழா இனிதே நடைபெறஉள்ளது .  இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தன் விளைவே இந்தப் பதிவு!

தொகுப்பு  மு.அஜ்மல் கான்.