Wednesday, 20 May 2015

காரைக்குடி சம்பை ஊற்று பற்றிய சமூக சிறப்பு பார்வை...

காரைக்குடி நகராட்சி கடந்த 2013 ஆண்டு மே மாதம் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒரு லட்சத்து ஆறாயிரத்து 793 மக்கள் உள்ளனர். குடிநீர் ஆதாரமான சம்பை ஊற்று, நகராட்சி எல்லையை ஒட்டிய கோவிலூர் ரோட்டில், 3.95 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு ஆழ்துளை கிணறுகள், 2 தரை மட்ட தொட்டிகள் உள்ளன. வளர்ந்து வரும் நகராட்சி என்பதால், மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், என நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு விண்ணப்பித்ததின் பேரில், ரூ.18.58 கோடி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில், சம்பை ஊற்று பகுதியில், ஆழ்துளை கிணறுகள், மோட்டார் அறை, மற்றும் இரண்டு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மேலும், முக்கியமான வீதிகளில் பைப் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்த சம்பை ஊற்றை சுற்றி, 500 மீ., சுற்றளவிற்கு எவ்விதமான கட்டடமும், கட்ட அனுமதிக்க கூடாது என, கடந்த 2002ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல், ஏராளமான வணிக மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளியேறும் கழிவு நீர் நிலத்தடி நீரை மாசுபடுத்தி, குடிநீரின் தன்மையையும் மாற்றி வருகிறது.
சம்பை ஊற்றின் இன்றைய நிலை..
சம்பை ஊற்றின் நீர்மட்டம் மிகத் தாழ்வாகச் சென்றுவிட்டது என்பதுதான் தற்போதைய அதிர்ச்சித் தகவல்!!! இந்நிலை காரணமாகவே தற்போது மக்களுக்கு தேவையான குடிநீரினை வழங்கமுடியாமல், காலை நேரத்தில் மட்டும் சிறிது நேரத்திற்கு, குறைவான அளவில் குடிநீரினை வழங்கி வருகிறார்கள். மேலும் குடிநீர் பற்றாக்குறையினால் கழனிவாசல் பகுதியில் இருந்து போர் போட்டும் தண்ணீர் எடுத்து காரை மக்களுக்கு வழங்குகிறார்கள்.
நம் சம்பை ஊற்றானது தமிழகத்தில் இரண்டு ஊர்களில் மட்டுமே உள்ளது. சேட்டிலைட் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பூமிக்குள் இருக்கும் மிகப்பெரிய ஆற்றோடைதான் அது! அந்த குடிநீர் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சுவை மிகுந்ததாகக் காணப்பட்டது. ஆனால் இப்போது கோவிலூர் கெமிக்கல் ஆலை நிர்வாகத்தினர் அந்த சம்பை ஊற்றினை முழுமையாகப் பாழ்படுத்தி அதனை அவர்களுக்கு சாதகமாக்கிப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டு, அவர்கள் தேக்கி வைத்திருக்கும் நச்சுக் கழிவு நீரினை கோவிலூர் சாலையில் உள்ள ரிலையன்ஸ் பெட்ரோல் நிலையம் அருகிலுள்ள பாலத்தின் வழியாக சம்பை ஊற்றினை வந்து சேருமாறு செய்துவந்தனர்.
இந்நிலையினைக் கண்ட CECRI ஆய்வு மையம் 2004 இல் சம்பை ஊற்று தொடர்பாக, கோவிலூர் சாலையில் உள்ள சம்பை ஊற்றுத் தண்ணீரை, பரிசோதித்துப் பார்த்ததில், அந்த தண்ணீரில் அதிக அளவு அம்மோனியா, சோடியம், சல்பேட் மற்றும் இதர கெமிக்கல் கலந்திருப்பதாவும், சம்பை ஊற்றினைக் காப்பாற்ற வேண்டி குடிநீர் வாரியம், மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, நகராட்சி உட்பட தமிழக அரசுக்கும் ரிப்போர்ட் வழங்கியது. ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

சம்பை ஊற்றின் குடிநீரினை தினசரி 6.5 லட்சம் லிட்டர் விகிதம் மாதத்திற்கு இரண்டு கோடி லிட்டருக்கும் அதிகமான குடி தண்ணீரை அந்த கோவிலூர் தனியார் கெமிக்கல் ஆலைக்கு கொண்டுசெல்கிறார்கள். அதாவது ஒரு நாளைக்கு 75000பேர் குடிக்கும் குடிநீரினை அவர்கள் கொண்டு செல்கிறார்கள். ஏற்கனவே நிலத்தடி நீர் குறைந்துவரும் நிகையில், இவ்வாறு அவர்கள் கொண்டு செல்வதால் இன்னும் சில ஆண்டுகளிலேயே, சம்பை ஊற்றில் முழுவதுமாக தண்ணீர் குறைந்து, கோவிலூர் கிராமத்தில் உள்ள நிலத்தடி நீரினைப்போல் நச்சு கலந்து, நாம் சம்பை ஊற்றினை முழுமையாக இழக்க நேரிடும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இதற்காகத்தான் சம்பை ஊற்றில் கெமிக்கலைக் கலந்துவிட்டால் பொதுமக்களுக்கு பயன்படாவண்ணம் செய்துவிட்டு, முழுவதும் இவர்களே ஆக்கிரமிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

காரைக்குடி - கோவிலூர் ரோட்டில் பெருகி வரும் வாகன பழுதுபார்ப்பு நிலைய, ஆயில் கழிவுகளால், சம்பை ஊற்றின் நீராதாரம் கெடுகிறது.சம்பை ஊற்று மூலம், 90 சதவீத தண்ணீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 70 லட்சம் லிட்டர் பம்பிங் செய்யப்பட்டு, விநியோகிக்கப்படுகிறது. ஆரம்பிக்கப்பட்டபோது, சம்பை ஊற்றின் அருகில் வீடு கட்ட கூடாது, கழிப்பறை கட்டக்கூடாது, வேறு எந்த நீர் உறிஞ்சும் நிலையங்கள் அமைக்க கூடாது, என உத்தரவிடப்பட்டது.தற்போது விதிகளை மீறி, ஒர்க்ஷாப் பெருகி வருகின்றன. இதிலிருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளால்,நிலத்தடி நீர் பாதிப்படைந்து வருகிறது. 
அருகில் உள்ள காரைக்குடி ஊரணியும் இதனால் கருப்பாக மாறி வருவதால், அப்பகுதியில், விவசாயம் நாளுக்கு நாள் பொய்த்து வருகிறது.மனோகர்,தெற்கு தெரு: காரைக்குடி ஊரணி மூலம் 400 ஏக்கர் விவசாயம் நடந்தது. தற்போது 40 ஏக்கர் கூட இல்லை. சுற்றிலும் வாகன பழுதுபார்ப்பு நிலையங்களில் இருந்து, வெளியேறும் கழிவு,இந்த ஊரணியில் கலக்கிறது.கோவிலூர் ரோட்டின் இருபுறமும் புற்றீசல் போல், ஒர்க்ஷாப் பெருகி வருகின்றன.நாளுக்கு நாள் சம்பை ஊற்றின் தண்ணீரின் தன்மையே மாறி வருகிறது.எம்.அண்ணாதுரை, பர்மாபஜார்: கோவிலூர் செல்லும் பகுதி, ஊராட்சிக்குட்பட்டதாக இருந்தாலும், சம்பை ஊற்று மூலம் நகராட்சியே அதிகம் பயன்பெறுகிறது.நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில், உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தண்ணீருக்கு தத்தளிக்கும் நிலை ஏற்படும்.
மேலும், பாதுகாப்புக் குறைவாக இருப்பதால் இந்த ஆலையினை மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியகம், தற்போது மீண்டும் இயக்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் இருந்து நம் சம்பை ஊற்றினை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும்.
எனவே உடனடியாக..
1. காரைக்குடி நகராட்சி மற்றும் சங்கராபுரம் உராட்சி மன்றம் உடனடியாக அவசரக் கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அந்த ஆலைக்கு எதிராகவும், அங்கு கொண்டு செல்லப்படும் சம்பை ஊற்றினைக் காப்பாற்ற 1000மீட்டர் தூரத்திற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்,

2. சம்பை ஊற்றினைக் காப்பதில் ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும்,

3. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு சம்பை ஊற்றினைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து
அந்த தனியார் ஆலைக்கு செல்லக்கூடிய குடிநீரினை உடனடியாக தடுத்து நிறுத்தி, மக்களின் குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படும் வண்ணம் செய்ய வேண்டும் எனவும்  

பொது மக்களின் கோரிக்கையினை வலியுறுத்தும் விதமாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் ஒன்றினை பொதுமக்கள் சார்பாக மக்கள் மன்றத்தினர் நடத்தவிருக்கின்றார்கள்.

நாம் குடிக்கின்ற குடிநீர் நம் குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் இருக்குமாறு பாதுகாக்கவும், வரும் காலங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்...ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment