நான் பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள அருமையான ஊர். எங்கள் ஊரின் பெருமைகள் பல. அருமையான கோவில்கள் நிரம்பிய ஊர், கோட்டை மாதிரி வீடுகள் அமைந்துள்ள ஊர் (‘ஆயிரம் ஜன்னல் வீடு’ என்ற ஒரு வீடு உண்டு!, ஆயிரம் ஜன்னல்களைக் கொண்டதால்!), நல்ல குடிநீர் வளம், இப்படிப் பல.
சரி எங்கள் ஊர்த் திருவிழாவிற்கு வருகிறேன். எங்கள் ஊர்க் காவல் தெய்வமாக அருள்மிகு கொப்புடையம்மன் இந்துக்களால் போற்றப்படுகிறது .
வருடா வருடம் வைகாசியில் வரும் இந்தத் திருவிழா! ஊர்க் காவல் தெய்வமாதலால் அனைவருக்கும் மிகவும் அபிமானமான திருவிழா! வைகாசி மாதம் பள்ளி, கல்லூரிகளில் தேர்வு விடுமுறை என்பதால் சிறுவர், சிறுமியர் கூட்டத்திற்குப் பஞ்சமே இருக்காது! பெரியவர்கள், வயதானவர்களும் வெளியூரில் இருந்தாலும் விழுந்தடித்துக் கொண்டு ஊருக்கு வருவது உண்டு திருவிழாவை முன்னிட்டு!
திருவிழாவிற்கு பத்து நாட்களுக்கு முன்னர் காப்புக் கட்டுவார்கள். அன்றிலிருந்து திருவிழா முடிந்து ஒரு வாரம் வரை (காப்பு அவிழ்க்கும் வரை) ஊர் எல்லையைத் தாண்டிப் போகக் கூடாது என்பது ஐதீகம். ஆனால் காப்புக் கட்டும் சமயத்தில் ஊரில் இருந்தால் மட்டுமே இந்த ஐதீகம் செல்லுபடியாகும்! காப்புக் கட்டும் பொழுதில் வேறு ஊரில் இருந்தால் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. இது பெரும்பாலான ஊர்களில் இருக்கும் ஒரு பொதுவான வழக்கம்! எல்லா ஊர்களிலும் திருவிழாவிற்குக் காப்புக் கட்டுவார்கள், குறிப்பாக அம்மன் பிரதான தெய்வமாக இருக்கும் ஊர்களில்.
எப்பொழுதும் செவ்வாய் அன்று திருவிழா. அம்மன் கோவில் என்பதால் செவ்வாய் விசேஷம். புதன் அன்று திரும்புதேர். (இதற்கு ஒரு கதை உள்ளது. இதைப் பிறகு சொல்கிறேன்). புதன் இரவு தெப்பத் திருவிழா அதனைத் தொடர்ந்து பாட்டுக் கச்சேரி, நாடகம் என்று ஊரே களை கட்டும்! மேலும் திருவிழாவிற்கே உரித்தான் விளையாட்டுப் பொருட்கள், பலூன், காத்தாடி, கண்ணாடி, ஊதுவான் முதலிய பொருட்களை ஒரு இரும்புக் கம்பியை அடித்தளமாகக் கொண்டு எல்லாப் பொருட்களையும் தனித்தனி கண்ணாடிப் பைகளில் (பிளாஸ்டிக் பைகள்) அடைத்து, அந்தப் பைகளை இரும்புக் கம்பிகளில் வசதிக்கேற்ப தொங்க விட்டுத் தங்கள் கடையினை (தற்காலிகக் கடை) அலங்கரிப்பர் முதலாளிகள்! அவரவர்க்கே உரித்தான் பாணியில் பீப்பியை ஊதி, பலூனை ஆட்டி எப்படியாகிலும் குழந்தைகளின் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிட ஒவ்வொரு கடைக்காரரும் காட்டுகிற கதாநாயக பாணி (ஹீரோயிசம்) நிச்சயம் ரசிக்கத்தக்கது! ஒவ்வொரு வருடமும் நான் அவர்களைப் பற்றிய நிரம்ப யோசிப்பதுண்டு! அவர்கள் அந்தக் கடையினை, இரவு படுக்கும் போது எங்கே வைத்துப் பாதுகாப்பார்கள், எப்படி வேறு ஊருக்குச் செல்லும் போது எடுத்துச் செல்வார்கள் என்று என் சிற்றறிவுக்கு(அப்பொழுதும் எனக்குச் சிற்றறிவு தான்!) எட்டியவரை யோசித்துப் பார்ப்பதுண்டு. பிறகு அப்படியே வேறு எங்கோ கவனம் சிதறி விட, என் கருத்தாழமிக்க (!) சிந்தனைகளும்!
நிச்சயம் அவரவர் ஊர்த் திருவிழாவில் எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவத் தொகுப்பு இருக்கும்!
முன் பத்திகளில் சொல்லியிருந்த கதைக்கு வருகிறேன் இப்போது! திரும்பு தேரும் இங்கே வரும்.
காரைக்குடியில் இருந்து சுமார் ஒரு 8 அல்லது 10 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டம்மன் கோவில். (காட்டில் இருக்கும் அம்மன் என்பதனால் இந்தப் பெயர்). இந்தக் கோவில் இருப்பது ஒரு கிராமம் (பெயர் நினைவில்லை, ஏனெனில் எங்கள் அனைவருக்கும் பழக்கமான பெயர் ‘காட்டம்மன் கோவில்’ மேலும் யாரும் அந்த ஊரைப் பெயர் சொல்லி அழைத்ததாக நினைவில் இல்லை!). அந்த ஊரில் உள்ள அம்மன் (அம்மன் பெயரும் ‘காட்டம்மன்’ !) எங்கள் கொப்புடைய அம்மனுக்கு அக்காவாம். சொந்த அக்காவாம். வருடா வருடம் நாம் எல்லோரும் நம் பெரியம்மா, சித்தி, அத்தை வீட்டிற்கு ஆண்டு விடுமுறைக்குச் செல்வது போல, கொப்புடையம்மனும் தனது அக்கா வீட்டுக்குப் போகுமாம். கொப்புடையம்மனுக்குப் பிள்ளைகள் ஏதுமில்லையாம். ஆனால் காட்டம்மனுக்கு ஏழு அல்லது எட்டுப் பிள்ளைகளாம். எப்பொழுதும் அம்மன் தனது அக்கா வீட்டிற்குச் சென்று அங்கு தன் அக்காள் பிள்ளைகளுடன் பொழுதைக் கழித்து விட்டு ஓரிரு நாட்களில் எங்கள் ஊருக்குத் திரும்பி வருமாம் (காரைக்குடிக்கு!).
வழக்கம் போல ஒரு வருடம் குறித்த நாளில் கொப்புடையம்மன் தனது அக்கா வீட்டிற்கு கிளம்பிச் சென்றதாம். அப்பொழுது ஏனோ காட்டம்மனுக்குத் திடீரென்று ஒரு குழப்பம் தோய்ந்த சிந்தனை வந்ததாம். அது தன் தங்கைக்கோ திருமணமாகிப் பிள்ளைகள் ஏதுமில்லை. ஆனால் தனக்கோ குறைவில்லாது மழலைச் செல்வங்கள் உள்ளன. இதனைப் பார்த்து, நினைத்துத் தன் தங்கை பொறாமைப் பட்டு, வயிறு எரிவாளோ என்று சந்தேகித்துத் தன் குழந்தகைளைப் பெரியதொரு கோழிகளை மூடும் கூடையின் உள்ளே ஒளித்து வைத்தாளாம். இது எதுவும் தெரியாத கொப்புடையம்மன் வழக்கம் போல அக்கா வீட்டுக்கு வந்தவுடன், குசலம் விசாரித்து முடித்து விட்டுக் குழந்தைகளைப் பற்றிக் கேட்டாளாம். அக்காவோ குழந்தைகள் வெளியே விளையாடுகின்றன என்று பொய் சொன்னாளாம். என்றும் இல்லாத அதிசயமாக இருந்த கோழிக் கூடையைப் பார்த்துத் தங்கை கேட்டாளாம் அது என்னவென்றும் அதனுள்ளே என்ன வைத்திருக்கிறாளென்றும். அக்காவோ ஏற்கெனவே சொன்ன பொய்யை வலுப்படுத்த, “உள்ளே ஒன்றுமில்லை. கோழிக் குஞ்சுகள் தான் உள்ளன” என்று மேலும் ஒரு பொய்யைச் சொன்னாளாம்.
அக்கா, தங்கையாக இருந்தாலும் தெய்வமாதலால் தங்கைக்கு எல்லாம் தெரிந்து விட்டதாம் ஞான திருஷ்டியில். இருப்பினும் மனம் மிக நொந்தாளாம் கொப்புடையம்மன். அக்காளுடைய குழந்தகைளத் தன் குழந்தைகளாகத் தானே பாவித்து வந்தேன், பிறகெதற்கு என்னிடமே அக்கா பொய் சொல்கிறாள்? என்று குமைந்தாளாம். உடனே கோபமாக அக்காவைப் பார்த்துக் கூறினாளாம், “நீ எனக்குக் குழந்தைகள் இல்லை என்பதற்காக உன் குழந்தைகளைப் பார்த்துப் பொறாமைப் படுவேன் என்று எண்ணித் தானே உன் குழந்தைகளை ஒளித்து வைத்தாய்! எனக்கு இருக்கின்றனர் ஓராயிரம் மக்கள். ஆம்! என் ஊர் மக்கள் (காரைக்குடி) அனைவருமே என் குழந்தைகள் தாம்! நான் வருகிறேன்!” என்று கோபாவசேமாகக் கூறி மறு நாளே ஊர் திரும்பினாளாம். தங்கை ஊருக்குக் கிளம்பிய பின்னர், அக்காள் தன் குழந்தைகளை வெளியே வருவிக்க எண்ணி, கோழிக் கூடையைத் திறந்தாளாம். உள்ளே பார்த்தால், அத்துணை குழந்தைகளும், கோழிக் குஞ்சுகளாய் மாறியிருந்தனவாம்!
கொப்புடையம்மன் காட்டம்மன் கோவிலுக்கு (அக்கா வீட்டிற்கு) செல்வது செவ்வாய் அன்று. தேர்த் திருவிழா அன்று தேரில் அம்மன் தனது அக்கா வீட்டுக்குச் செல்லும். ஊர் மக்கள் அனைவருமே கோவிலில் ஆஜர் ஆகி விடுவார் தேர் வடம் பிடிக்கவும், தேர் காட்டம்மன் கோவிலுக்குச் செல்வதைப் பார்க்கவும். வழி நெடுக (ஊர் எல்லையைத் தாண்டும் வரை) ஆங்காங்கே மக்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்வர். ஒரு ஐயரும் உடன் செல்வார். ஊர் எல்லை வரை மக்கள் செல்வர். அதற்கு அப்புறம் காட்டுப் பாதை (தற்பொழுது சிமெண்ட்ரோடுகள் போடப்பட்டு விட்டன, இருப்பினும் சிறு தொலைவு காட்டுப் பாதை வழியாகச் செல்வார்கள் என்று நினைக்கிறேன்! ) காட்டுப் பாதையில் செல்ல சில பேர் மட்டுமே (ஒரு பத்து, இருபது ஆட்கள்) வடம் பிடித்துச் செல்வர்.
மறு நாள் (புதன்) எங்கள் ஊரில் இருந்து அனைவரும் சைக்கிளில், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில், பேருந்துகளில் காட்டம்மன் கோவிலுக்கு செல்வது வழக்கம். அங்கேயும் அன்று திருவிழா. ஊரே கோலாகலமாக இருக்கும். அந்த ஊர் மக்களுக்கு அன்று திருவிழா. நாங்கள் அங்கே போய் காட்டம்மனைத் தரிசித்து விட்டு (கொப்புடையம்மனுக்கு அங்கே ஒரு சந்நிதி இருக்கிறது என்று நினைக்கிறேன்), அர்ச்சனை, பூசை செய்து விட்டு எங்கள் ஊருக்கு வருவோம். அன்று மதியம் தான் கொப்புடையம்மன் தனது அக்காவுடன் கோபித்துக் கொண்டு, எங்கள் ஊருக்கு நெஞ்சம் நிறைந்த பாசத்துடன் (முன்னை விட அதிகமாக) அதே தேரில் திரும்பி எங்கள் ஊருக்கு வரும். இது தான் ‘திரும்பு தேர்‘.
எங்கள் மீது அளவுக்கதிகமான அன்பு கொண்டு வரும் அம்மனை (அம்மாவை) ஆராதித்து வரவேற்பது மிகவும் விசேஷம்! விருப்பமான விஷயமும் அல்லவா? அன்றும் பானாக்கம், நீர் மோர் தண்ணீர்ப் பந்தல்களில் விநியோகம் செய்வர்! திரும்பு தேரில் அம்மன் கோவிலுக்கு வந்ததும் அன்று இரவு தெப்பத் திருவிழா!
தெப்ப உற்சவம்..
முன்னதாக கொப்புடையநாயகி யம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12.15 மணி அளவில் கொப்புடைய நாயகியம்மன் தெப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் அம்மன் எழுந்தருளிவார். பின்னர் பக்தர்கள் கோஷமிட தெப்பத்தில் தெப்பத் தேரில் அமர்ந்தவாறு கொப்புடையம்மன் 3 முறை வலம் வருவார். அப்போது பக்தர்கள் தெப்பகுளத்தின் சுற்று சுவரில் தீபம் ஏற்றி வழிபடுவர்.பின்பு அதிகாலை அம்மன் யானை வாகனத்தில் திரு வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேககம் நடைபெரும். இந்தத் திருவிழாவில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலநது கொள்வார்கள்.
தெப்ப உற்சவம்..
முன்னதாக கொப்புடையநாயகி யம்மன் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 12.15 மணி அளவில் கொப்புடைய நாயகியம்மன் தெப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் அம்மன் எழுந்தருளிவார். பின்னர் பக்தர்கள் கோஷமிட தெப்பத்தில் தெப்பத் தேரில் அமர்ந்தவாறு கொப்புடையம்மன் 3 முறை வலம் வருவார். அப்போது பக்தர்கள் தெப்பகுளத்தின் சுற்று சுவரில் தீபம் ஏற்றி வழிபடுவர்.பின்பு அதிகாலை அம்மன் யானை வாகனத்தில் திரு வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேககம் நடைபெரும். இந்தத் திருவிழாவில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலநது கொள்வார்கள்.
இப்படியாகக் கழியும் இந்தத் திருவிழா வருடமொரு முறை .
ஆனால் நாங்கள் காட்டம்மன் கோவிலுக்கு ஒருமுறை சைக்கிளில் சென்றது இன்றைக்கும் பசுமையான நினைவுகள். இந்த மாதிரி தருணங்களில் மிக அதிகம். மேலும் வழி நெடுகக் கிடைக்கும் தின்பண்டங்கள், பாணக்கம், மோர் ,குச்சி ஐஸ், இப்படிப் பலவும் எங்களை இழுக்கும்!
காரைக்குடியில் அடுத்த வாரம் (செவ்வாய்) தேர்த் திருவிழா இனிதே நடைபெறஉள்ளது . இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தன் விளைவே இந்தப் பதிவு!
தொகுப்பு மு.அஜ்மல் கான்.
தொகுப்பு மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment