Wednesday, 17 August 2016

என் மனைவிக்கு 11ம் ஆண்டு மணநாள் வாழ்த்து !!

Image result for rose bouquetஎன் மனைவிக்கு
11ம் ஆண்டு
மணநாள் வாழ்த்து
கவிதை இதோ...


உன்னில் நான் இருக்கிறேன் 
என்னுள் நீயிருக்கிறாய் இருந்தும்
என் இதயப்பூவில் இன்றும்
முதல் நாள் பார்த்த அதே ஆனந்தம்..!!!
நாம் மணந்த போதும்
அவ்வப்போது
என் இதயத்தை வாட்டுகிறது
இனம் தெரியாமல்
ஓர் இன்பமான வலி...!!!
காதல் என்பது மூன்றெழுத்து தான்
ஆனால் அதற்குள்
பல ஆயிர ஆனந்தங்கள் உள்ளது
என்பதை உன்னை மணந்த
பிறகே தெரிந்து கொண்டேன்...!!
என்றும் நான் கவிதை எழுத
முதல் நாள் நீ பார்த்த
அந்த ஒற்றை பார்வை
மட்டும் போதும் எனக்கு..!!!
கண்கள் பார்க்க மட்டுமே
என்று நினைத்திருந்தேன்..
உன்னை பார்த்த பிறகு தான்
அதன் அருமையை உணர்ந்தேன்...!!!
நீ அழகானவள் என்று
என்னுள் தோன்ற வைத்தது
என்னை பார்த்து
நீ பூத்த ஒற்றை புன்னகையே...!!!
உன்னை கண்ட நாள்
முதல் காதல்
 என்னுள் பிறக்கவில்லை
விதைக்கபட்டது...!!!
அனுதினம் என்னுடன் நீ
மனைவியாய் இருந்தாலும் ..
எந்தன் சிந்தனை நீ
காதலியாகவே இருக்கிறாய்..
இரவில் கண்கள் மூடி படுத்தால்
இமைகள் மூடுகிறது ஆனால்
இதயம் உன்னையே நினைத்து
கொண்டிருக்கிறது என் அன்பே...!!!
மழையில் குடையில் ஒன்றாக
நடக்க வேண்டும் என்று நினைத்தோம்...
இன்று வாழ்க்கை குடைக்குள்
அனந்தமாய் பயணிக்கிறோம்..!!!
எனக்காக நீ அல்ல
உனக்காக நான் அல்ல
நமக்காக என்று சொல்ல வைத்தது
நம் குழந்தைகள்...!!!
உனக்கென நான் இருக்கிறேன்
எனக்காக நீ இருக்கிறாய்..
நமக்காக நம் செல்வங்கள் என
சொல்லவைத்தது நம் கவிதை..!!!
வாழ்க்கை என்பது வெறும்
வார்த்தை அல்ல...
அது வசந்தத்தின் வாயில்
என்றுமே நமக்கு...!!!
சுகமான வலியை உணர்ந்தேன்
நீ என்னை கண்ட நாள் முதல்..!!!
இன்று ஆனத்தை அனுபவிக்கிறேன்
உன்னை மனைவியாக அடைந்ததால்..
என்றும் கவிதையுடன்
மு. அஜ்மல் கான்,

Saturday, 6 August 2016

இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில்போட்டி!!


ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள்,நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.இன்று தொடங்கி மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

உலக வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் ஓர் அணியாக இணைந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 118 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் கவனிக்கத்தக்க முக்கிய 10 அம்சங்கள்:

* நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே ஒலிம்பிக் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.

* ஒலிம்பிக்கின் பாரம்பரிய கருப்பொருளான அமைதி, இம்முறை மரங்கள் குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது தொடக்க விழாவில், ''பூமிக்கு தீங்குசெய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது; இயற்கையை குணப்படுத்த இதுவே சரியான நேரம். மரங்களை நடுவோம். மானுடத்தையும், இயற்கையையும் காப்பாற்றுவோம். இதுதான் நம்முடைய ஒலிம்பிக் செய்தி'' என்று கூறப்பட்டது.

* பிரேசில் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களின் உணர்வுபூர்வ விளையாட்டான கால்பந்தை ஒதுக்கி, பருவநிலை மாற்றத்தையும் இயற்கை வளங்களின் சிதைவையும் விழாவின் மையக்கருவாக மாற்றியிருந்தனர். பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா விழாவில் கோலாகலத்துடன் அரங்கேறியது.

* விழா 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் 11 பகுதிகளில் பிரேசிலைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முதல் 45 நிமிடங்கள் பிரேசில் வரலாறும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அதன் நிலை பற்றியும் கூறப்பட்டது. வடகிழக்கு பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் சமகாலத்திய பிரேசிலின் கட்டமைப்பும், அதன் நகரமயமாக்கலும் கூறப்பட்டன.

* அடுத்ததாக வீரர்கள் அணிவகுப்பு தொடங்கியது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.

* இந்திய வீரர்கள் அணிவகுப்பில் 70 வீரர்களும், 24 அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வீரர்கள் கடல் நீல வண்ண கால்சட்டையும், மேல்சட்டையும் அணிந்திருந்தனர். வீராங்கனைகள் பாரம்பரிய புடவையையும், நீல மேல்சட்டையும் அணிந்திருந்தனர். தனது 7-வது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் லியாண்டர் பயஸ், மக்கள் கூட்டத்தில் உற்சாகத்துடன் காணப்பட்டார். பேட்மின்டன் வீராங்கனைகள் ஜ்வாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரையும் காண முடிந்தது.

* ஸ்பானிய, பிரிட்டிஷ் நாடுகளின் அணிவகுப்பு, பிரபல வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரேவின் முன்னெடுப்போடு களைகட்டியது. 60 உறுப்பினர்களைக்கொண்ட ஜமைக்கா குழு, உலக சாம்பியனான உசேன் போல்ட் இல்லாமலேயே நடந்து சென்றது. நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில், 500 உறுப்பினர்களோடு அமெரிக்க அணி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் அணிவகுத்துச் சென்றது.

* வீரர்களின் அணிவகுப்புக்குப் பிறகு, சர்வதேச ஒலிபிக் கவுன்சில் தலைவரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான தாமஸ் பாச் நீண்ட உரையாற்றினார். அதில், ''ஒலிம்பிக் அமைதியை வளர்க்கிறது. நாம் நிலையில்லாத, அவ நம்பிக்கை கொண்ட, நெருக்கடியான உலகத்தில் வாழ்கிறோம். உலகின் தலைசிறந்த 10,000 வீரர்கள் ஒற்றை ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, தங்களின் உணவையும், உணர்வையும் பகிர்ந்து வாழ்கின்றனர். இந்த ஒலிம்பிக் உலகில், எல்லோருக்கும் ஒரே விதிதான். எல்லோரும் சமம் என்பதே அது.

இந்த விழாவில் புதிதாக இணைந்துள்ள அகதிகள் ஒலிம்பிக் அணியை முழுமனதோடு வரவேற்கிறேன். நீங்கள் உலகில் இருக்கும் அனைவருக்கும் இதன்மூலம் செய்தி அனுப்புகிறீர்கள். நீங்கள் சமுதாயத்துக்கு சிறந்த பங்கை அளித்திருக்கிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

* ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறித்த முறையான அறிவிப்புக்குப் பிறகு, பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில், முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், மூன்று முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் பெற்ற பிரேசில் வீரருமான கஸ்டாவோ குயர்டன் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திவந்தார்.

* 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிரேசில் வீரரான வெண்டர்லி டி லிமா, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவதாக இருந்த கால்பந்து லெஜண்ட் பீலே உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு விலகியது குறிப்பிடத்தக்கது.


> ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம்

அரியானா (23), பஞ்சாப் (13) மாநிலங்களில் அதிகளவில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் அஜந்தா சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சதீஷ் சிவலிங்கம் (பளுதுாக்குதல்), ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் (ஹாக்கி), கணபதி, ஆரோக்கிய ராஜிவ் (தடகளம்) உட்பட மொத்தம் 12 பேர் பங்கேற்கின்றனர். இதில் சரத் கமல் 2004, 2008ஐ தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். இவர், 2006 (2), 2010 (1) காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ள போதிலும், ஒலிம்பிக் பதக்கம் மட்டும் பிடிபடாமல் உள்ளது.


வெல்வாரா சதீஷ்:கடந்த 2014, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 77 கி.கி., எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதித்தவர் தமிழத்தின் வேலுாரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம். பின் நடந்த ஆசிய விளையாட்டில் இவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக்கில் என்ன செய்வார் என பொறுத்திருந்து காணலாம்.


ஆண்கள் தொடர் ஓட்டத்தில் (4*400 மீ.,) பங்கேற்கும் திருச்சியின் ஆரோக்கிய ராஜிவ், திருப்பூரின் தருண், மற்றும் மாற்று வீரர் மோகன் குமார் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.

இதேபோல 20 கி.மீ., நடை போட்டியில் கிருஷ்ணகிரி வீரர் கணபதி கிருஷணன் பங்கேற்கிறார். ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் இருவரும் தமிழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 5 August 2016

பிரேசில் நாட்டில் 31-வது ஒலிம்பிக் திருவிழா !!

ரியோ ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இதன்படி 31-வது ஒலிம்பிக் திருவிழா பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இவர்கள் 28 வகையான விளையாட்டில் 306 பந்தயங்களில் பதக்கத்தை வெல்ல மல்லுகட்ட ஆயத்தமாகி வருகிறார்கள்.

தொடக்க விழா கால்பந்து மைதானமான மரகானாவில் அந்த நாட்டின் நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. தென்அமெரிக்காவில் அரங்கேறும் முதல் ஒலிம்பிக்கான இதில் கலாசாரத்தை பிரதிபலிக்கும் பல்வேறு உணர்வு பூர்வமான கலை நிகழ்ச்சிகள், அதிரடி நடனங்கள், சாகசங்கள் மற்றும் லேஷர் ஷோ, வண்ணமயமான வாணவேடிக்கை உள்ளிட்டவை இடம் பெறுகிறது.
தொடக்க விழாவின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, மைதானத்தின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கொப்பரையில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றுவது யார் என்பது ஏறக்குறைய தெரிந்து விட்டது. பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு தீபத்தை ஏற்றும் கவுரவத்தை வழங்க போட்டி அமைப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால் தனது பெயரை பயன்படுத்தும் முழு உரிமையை அமெரிக்க கம்பெனிக்கு வழங்கியுள்ள பீலே, அந்த நிறுவனம் அனுமதித்தால் நிச்சயம் தீபத்தை ஏற்றுவேன் என்று கூறியுள்ளார். என்றாலும் அவர் தான் தீபத்தை கடைசியாக ஏந்தி வந்து ஏற்றி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பார்வையாளர்களை பரவசப்படுத்தும் இன்னொரு முக்கிய விஷயம் அணிகளின் அணிவகுப்பாகும். 206 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகளும் உற்சாகமாக அணி வகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்திய அணிக்கு துப்பாக்கி சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தலைமை தாங்குகிறார். அவர் நமது தேசிய கொடியை ஏந்தி செல்வார்.
ஒலிம்பிக் தாயகமான கிரீஸ், அணிவகுப்பில் முதல் நாடாக செல்லும். அதன் பிறகு ஆங்கில அகர வரிசைப்படி ஒவ்வொரு அணியாக வீறுநடை போடும். இந்த பட்டியலில் இந்தியா 95-வது இடத்தில் உள்ளது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக கலந்து கொள்ளும் 10 பேர் கொண்ட அகதிகள் அணி ஒலிம்பிக் கொடியின் கீழ் வலம் வரும். போட்டியை நடத்தும் பிரேசில் அணிவகுப்பில் கடைசி நாடாக செல்லும். அதற்கு முன்பாக அகதிகள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலக தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் என்று மொத்தம் 78 ஆயிரம் பேர் தொடக்க விழாவை கண்டு களிக்க இருக்கிறார்கள். தொடக்க விழா நிகழ்ச்சி மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் என்று தெரிகிறது.
பிரேசில் நேரப்படி தொடக்க விழா இரவு 8 மணிக்கு தொடங்கினாலும், நமக்கும் அவர்களுக்கும் இடையே 81/2 மணி நேரம் வித்தியாசம் இருக்கிறது. அதாவது ஒலிம்பிக் தொடக்க விழா இந்திய நேரப்படி பார்த்தால் மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு தான் தொடங்கும். தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வருகிற 21-ந்தேதி வரை நடைபெறும் இந்த ஒலிம்பிக் கொண்டாட்டத்தில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதில் வழக்கம் போல் அமெரிக்கா, சீனா இடையே கடும் போட்டி இருக்கும். அமெரிக்கா 292 பெண்கள் உள்பட 554 பேருடனும், சீனா 413 பேருடனும் ரியோவுக்கு படையெடுத்துள்ளது. போட்டியை நடத்தும் பிரேசில் அணி 465 பேரை களம் இறக்குகிறது.
இந்த முறை இந்தியா மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. முந்தைய லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 83 பேர் பங்கேற்று இருந்தனர். அந்த ஒலிம்பிக்கில் 6 பதக்கங்கள் கிடைத்தன.
இந்த ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் 15 விளையாட்டுகளில் களம் இறங்க இருக்கிறார்கள். ஒலிம்பிக் வரலாற்றில் பங்கேற்போரின் எண்ணிக்கையில் இந்தியா செஞ்சுரி அடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இரட்டை இலக்கு பதக்க எண்ணிக்கையை தொடுவதே இந்தியாவின் லட்சியமாகும். துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, டென்னிஸ், ஆண்கள் ஆக்கி ஆகியவற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.
ஒலிம்பிக் போட்டியையொட்டி வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
இது தவிர ஒலிம்பிக் போட்டி தொடர்பான பணிகளில் அரசு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள், தனியார் ஊழியர்கள், 50 ஆயிரம் தன்னார்வ தொண்டர்கள் என்று மொத்தம் 90 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

Wednesday, 3 August 2016

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மற்றும் வேலைவாய்ப்பு !!

உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனர். இவர்களில் 80% பேர் ஆசியக் கண்டதைச் சேர்ந்தவர்கள். இதில் 90% மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை என்றும் 80% பேருக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் கல்விநிலை மிகவும் மோசமாக உள்ளது. படிப்பதற்கான ஆர்வமும் உத்வேகமும் இருந்தபோதிலும், இவர்களுக்கு படிப்பதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்தித் தருவதில்லை. இதனால், இவர்களில் பெரும்பாலானோர் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வி நிலையங்களில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லாததும், படிகள் ஏறுவதற்கான சரிவுப் பாதைகள் அமைக்காததும், சைகை மூலம் விளக்கும் ஆசிரியர்கள் குறைபாடு என இவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால் இவர்களும் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு பள்ளி செல்வதை தவிர்த்து விடுகின்றனர். மேலும் தமிழகத்தில் 39.3% மாற்றுத்திறனாளிகள் கல்வியறிவு பெறாமல் இருக்கின்றனர்.

இந்தியாவில் 2.68 கோடி மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில், 1 கோடியே 26 லட்சம் ஆண்களும், 93 லட்சம் பெண்களும் உள்ளனர். அதிக மாற்றுத்திறனாளிகள் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் (3.6 மில்லியன்) உள்ளது. பீகார் (1.9 மில்லியன்), மேற்கு வங்கம் (1.8 மில்லியன்), தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் (1.6 மில்லியன்) உள்ளனர். இதில் 1.46 கோடி கல்வியறிவு பெறாதவர்களும், 12.26 லட்ச பட்டதாரிகளும் உள்ளனர். இதில், 69.49% பேர் கிராமப்புறங்களில் வசிப்பவர்களாக உள்ளனர். இந்த 68% மாற்றுத்திறனாளிகள் எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் சதவிகிதம் வெறும் 48.88% மட்டுமே உள்ளது.

இந்தியாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வெறும் 50% மட்டுமே கல்வி கற்றவர்களாக உள்ளனர். மாற்றுத்திறனாளிகளிடம் கல்வியறிவின் நிலை கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் உயர்ந்தாலும் அதனளவு வெறும் 5.2% மட்டுமே உயர்ந்துள்ளது. கல்வியறிவு பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் நடுத்தர பள்ளி வரை மட்டுமே கல்வி பெற்றுள்ளனர். ஆனால், 2011 சென்சஸ் கணக்கெடுப்பில், இந்தியாவில் 74% மக்கள் கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது அரசாங்கம் மாற்றுத்திறனாளிகளுக்குக் கல்வித் துறையில் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தெரிகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 11,79,968 பேர் உள்ளனர். இதில், ஆண்கள் 6,57,418 மற்றும் பெண்கள் 5,22,545 பேர் உள்ளனர். நடக்க முடியாதோர் 2,87,241, காது கேளாதோர் 2,20,241, பார்வையற்றவர்கள் எண்ணிக்கை 1,27,405 பேரும், வாய் பேசமுடியாதோர் 80,077, மனநிலை குன்றியோர் 17,707 பேர் உள்ளனர். இதில், கிராமப்புறங்களில் 6,21,745, நகர்ப்புறங்களில் 5,58,218 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் மாற்றுத்திறனாளிகள் கல்வியைத் தொடர மறுப்பதற்கான முக்கியக் காரணம், பள்ளி நிலையங்களில் அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாததே என்று தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மற்றும் கவனிப்பு அங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் தெரிவித்தார்.

“பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகக் குறைவாக உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் இவர்களைச் சுமையாகப் பார்க்கிறார்கள். எனவே, இவர்கள் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர் தங்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பாததால், பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான பள்ளிகள் மிகவும் குறைவாக உள்ளன. மேலும், அநேக பள்ளிகளில் சைகை மொழியில் விளக்குவதற்கான ஆசிரியர்கள் இருப்பதில்லை. இதனால், இவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். தமிழகம் போன்ற தொழிற்துறையில் முன்னேறிய மாநிலங்களில்கூட வெறும் 11 சிறப்புப் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. அதுவும் நகர்ப்புறங்களில்தான் அதிகமாக உள்ளன. பின்தங்கிய மாநிலங்களில் இந்த நிலை மிக மோசமாக உள்ளது” என்றார் நம்புராஜன்.

மேலும், தமிழகத்தில் கல்வியறிவு பெற்ற மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கவும், சுயதொழில் தொடங்கவும் பயிற்சி அளிப்பதற்கான வலுவான கூட்டமைப்பு தேவை. அதன்மூலம் வருமானத்தை பெருக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும். தேசிய திறன் வளர்ச்சி மேப்பட்டுக் கழகத்தின் திட்டத்தின்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி, தொழில் மேம்பாட்டு மையம் மாவட்டம்வாரியாக அமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள்:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது என அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமை சங்கத் தலைவி ஜான்சிராணி கூறுகையில், “தமிழகத்தில், 2011இல் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, 22 லட்சம் என தமிழக அரசு அறிவித்தது. 2014இல் 16 லட்சம் என தெரிவித்துள்ளது. எனினும், அதற்கான கணக்கெடுப்பு, புள்ளி விவரம், ஆவணம் எதுவும் வெளியிடப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 22 லட்சமாக இருந்தது. 16 லட்சமாகக் குறைய வாய்ப்பில்லை.

எதனடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைந்தது என அதற்கான காரணங்களை அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில், 30 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். பல ஆண்டாகக் கோரியும், மாற்றுத்திறனாளிக்கு பராமரிப்புத் தொகையாக ரூபாய் 1,000 வழங்க அரசு முன்வரவில்லை.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் 40 சதவிகிதம் ஊனம் இருந்தாலே, மாற்றுத்திறனாளிக்கான சான்று அளிக்கப்பட்டு, நிதியுதவி சலுகை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 60 சதவிகிதம் தொடங்கி அதற்கும் அதிகமான ஊனம் இருந்தால் மட்டுமே, மாற்றுத்திறனாளி அங்கீகாரம் வழங்கப்பட்டு நல உதவி பெறும் நிலை உள்ளது.

அத்துடன், அந்தக் குடும்பத்தின் சொத்து ரூபாய் 5,000-க்கு மேல் இருக்கக்கூடாது. அக்குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் இருக்கக் கூடாது. ஆண்டு வருவாய் ரூபாய் 24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, வறுமைகோட்டுக்குக்கீழ் 35 கிலோ இலவச அரிசி பெறும் திட்டத்தில் சேர மாற்றுத்திறனாளிக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அவ்வாறு சேரும் மாற்றுத்திறனாளிக்கு சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட இதர ரேஷன் பொருட்கள் வழங்குவது கிடையாது. இங்கு, மாற்றுத்திறனாளிக்கு எதிரான சட்ட விதிமுறை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிக்கான மூன்று சதவிகித இடஒதுக்கீடு வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நீதிமன்றத்தின் மூலமே பெற வேண்டியுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னை மற்றும் குறைகளைக் களையவும், தேவைகளைப் பூர்த்தி செய்யவும் மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். மாநில அளவில், அமைச்சர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும். இதுவரை, மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தாமல், அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. எந்த ஒரு பிரச்னையும் இதுவரை தீர்க்கப்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும், உலக வங்கியும் இணைந்து, 2012இல், ஊனமுற்றோர் குறித்து, வெளியிட்ட முதல் உலக அறிக்கையில், உலக மொத்த மக்கள்தொகையில், 15 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

இதில், இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. சமீபத்தில், மத்திய அரசின் சமூக நிதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை நாடு முழுவதும் 39 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே, தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழகத்தில், 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நிலை, ஏழு பிரிவாக உள்ளன. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, மாற்றுத்திறனாளிகள் அளவீடு குறித்த பயிற்சியளிப்பது கிடையாது.

இதனால், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் முழுமையான எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை’’ என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு !!

இன்றைய நிலையில் தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் நிலை பற்றித் தெரிந்து கொள்ள கல்லூரிகளில் படித்துவரும் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் உங்களின் தேவை என்ன, அரசிடமிருந்தோ அல்லது இந்த சமூகத்திடமிருந்தோ நீங்கள் எதிர்பார்ப்பது என்ன என்று கேட்ட போது அவர்கள் கூரியதாவது, எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்காக அரசு பல சலுகைகளையும், வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க இட ஒதுக்கீடும் அளிக்க வேண்டும்.

 குறிப்பாக, தமிழக அரசு பணியாளர்  தேர்வாணையத்தில்(TNPSC)மற்றுத்திறனாளிகளுக்காக 3 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடஒதுக்கீடும் இதுவரை சரிவர பின்பற்றப்படவில்லை. அந்த 3 சதவிகித இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் முழுமையாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் டெட்(TET) தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்காக மற்ற மாநிலங்கள் பின்பற்றும் 60 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சிறப்பு சலுகையை தமிழக அரசும் அளிக்க வேண்டும். இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித சலுகையும் செய்யப்படாததால், பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனால் அரசு கருணை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

டெட்(TET) தேர்வில் 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சிறப்புச் சலுகை கேட்டதற்கு அரசு ஊடகங்களின் வாயிலாக தெரிவித்ததாவது, மாற்றுத்திறனாளிகளுக்கு 60 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் என்ற சலுகை அளிக்க வாய்ப்பில்லை, 70 அல்லது 80 சதவிகிதம் தேர்ச்சி மதிப்பெண் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், மேலும் டெட்(TET) தேர்வு எழுத விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்ச்சியுடன் கூடிய தனித்தேர்வு நடத்துவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.   

ஆனால் இதுவரை அரசின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகையோ அல்லது பயிற்சியுடன் கூடிய தனித் தேர்வு நடத்த அதிகாரப்பூர்வ அரசாணையோ எதுவும் அரசால் வெளியிடப்படவில்லை.மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள் குறித்து அரசு அதிகாரிகள் முழுமையாக புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. ஒருவரின் பிரச்னைகளை நேர்மையாகவும் உண்மையாகவும் புரிந்துகொள்ளாமல் அதற்கு எப்படி தீர்வு காணமுடியும்? மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறது அரசு?

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

Monday, 1 August 2016

வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் விலை வீட்சியால் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வேலை இழப்பு !! ஒரு சிறப்பு பார்வை...

சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது.வளைகுடா இந்தியர்களின் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகிக்கொண்டு வருகிறது,வேலை இழப்பு,சம்பளம் இல்லை,முடித்துக்கொண்டு இந்தியா செல்லலாம் என்றாலும் கணக்கு முடிக்காமல் கம்பனி இழுத்தடிப்பது என்று பிரச்சனை பூதாகரமாக சென்று கொண்டிருக்கிறது, நிறைய இந்தியர்கள் வேலை இழந்து இந்தியா வர முடியாமல்,பட்டினியால் வாடுகிறார்கள் என்ற செய்தி மிகக்கொடுமை,இந்த நிலையில் தான் சுஷ்மா சிவராஜ் அவர்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தங்களது இந்திய சகோதர சகோதரிகளுக்கு உதவுங்கள் என்று அவரின் ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்,பல கம்பெனிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன,பல கம்பெனிகளில் ஆட்குறைப்பு,சம்பள பாக்கி என பிரச்சனையின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது,இந்த பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்றால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வேண்டும்,கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க சில மாதம் அல்லது சில வருடங்கள் ஆகலாம்,அது வரை வளைகுடா நாட்டு இந்தியர்களுக்கு மறுவாழ்வளிக்க இந்திய அரசாங்கமும், அந்தந்த மாநில அரசாங்கமும் போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும்,அந்நிய செலாவணி ஈட்டி தரும் வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை காப்பாற்ற, உதவி செய்ய அனைவரும் முன் வரவேண்டும்...சவுதி அரேபியாவில் வேலை இழந்ததால் உணவு இல்லாமல் தவித்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

சவுதி அரேபியா


சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார வீழ்ச்சி

இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.


வேலை இழப்பு

இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

இவ்வாறு வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர்.

முகாம்களில் தஞ்சம்

இவ்வாறு மூடப்பட்ட நிறுவனங்களில், மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்த ‘சவுதி ஓஜர்’ என்ற நிறுவனமும் ஒன்று. இதன் சவுதி அரேபியா கிளையில் மட்டுமே 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். லெபனான் நாட்டு நிறுவனமான இதில் பணியாற்றி வந்த 800–க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது வேலையிழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

இவர்கள் அல்–சுமைசியில் அமைக்கப்பட்டு உள்ள முகாமில் தற்போது தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல வேறு சில கம்பெனிகளில் பணியாற்றி வேலையிழந்த இந்தியர்களுக்காக சிஸ்டன், சோஜெக்ஸ், ஹைவே, தைப் ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன
.

வெளியுறவுத்துறை நடவடிக்கை

இந்த முகாம்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தங்கி உள்ளனர். இவர்கள் கடந்த பல நாட்களாக உணவின்றி பட்டினி கிடப்பதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. சில முகாம்களில் கம்பெனி நிர்வாகத்தால் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெறுவதும் தெரியவந்தது.

பசி, பட்டினியால் வாடி வரும் இவர்களுக்கு உதவுவதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனே களத்தில் இறங்கியது. இது தொடர்பாக சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரிகள், பட்டினியால் வாடும் இந்தியர்களுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.16 ஆயிரம் கிலோ உணவுகள்

இதைத்தொடர்ந்து தூதரக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகளை தொடங்கினர். இந்திய தொழிலாளர்கள் தங்கியுள்ள 5 முகாம்களுக்கும் சென்ற அவர்கள் கடந்த 4 நாட்களாக 16 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்கினர். இந்திய தூதரகம் சார்பிலும், அங்கு வாழும் இந்தியர்கள் சார்பிலும் இந்த பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் நேற்று அதிகாலை 2.40 மணியளவில் வெற்றிகரமாக முடிவடைந்ததாக ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம் தனது ‘டுவிட்டர்’ தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தது. இதை மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மறுடுவிட் செய்திருந்தார்.சுஷ்மா சுவராஜ் தகவல்

முன்னதாக சவுதி அரேபியாவில் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் தளத்தில் தொடர்ச்சியாக பல தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியிருந்ததாவது:–

சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பணி மற்றும் சம்பளம் தொடர்பாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த நாடுகளில் பணியாற்றி வந்த ஏராளமான இந்தியர்கள் தங்கள் வேலையை இழந்தும், சம்பளம் கிடைக்காமலும் வாடுகிறார்கள்.10 ஆயிரம் இந்தியர்கள்

இதில் குவைத் நாட்டு இந்தியர்களின் நிலைமை ஓரளவு சமாளிக்கக்கூடியதாக இருந்தாலும், சவுதி அரேபியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வேலை இழந்து பட்டினியால் வாடுகின்றனர்.

அவர்களுக்கு உணவு அளிப்பதற்கு அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி அவர்களும் உணவளித்து வருகிறார்கள். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு உதவுமாறு சவுதியில் வாழும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இந்திய நாட்டின் கூட்டு விருப்பத்தை விட வலிமையானது எதுவும் இல்லை.வி.கே.சிங் பயணம்

வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், அங்கு வேலை இழந்த இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். இதைப்போல மந்திரி எம்.ஜே.அக்பரும் இந்த பிரச்சினை குறித்த சவுதி மற்றும் குவைத் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
இந்தியா திரும்ப ஏற்பாடு

இந்த நிலையில் சவுதியில் வேலை இழந்து வாடும் இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதற்காக அடுத்த சில நாட்களில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


அங்கு வேலை இழந்த எந்த இந்தியரும் உணவின்றி விடப்படமாட்டார் என்று
சுஷ்மா சுவராஜ் கூறி இருந்தார்.குறிப்பாக விரைவில் தொடங்க இருக்கும் ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு புனித பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் திரும்பி வரும்போது பெரும்பாலும் காலியாகவே வரும். அவ்வாறு வரும் விமானங்களில் இந்த தொழிலாளர்களை ஏற்றிவர மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Friday, 29 July 2016

இஸ்லாமிய கணவன்மார்களுக்கு சிறந்த 100 அறிவுரைகள்!!

கணவன்மார்களுக்கு 100 அறிவுரைகள் பார்க்க மறவாதிர்கள்இதை ஆழ்ந்து முழுமையாகப் படிக்க குறைந்தது பத்து நிமிடம் ஆகலாம்.நம் வாழ்க்கை சீர்திருத்தத்துக்காக முழுமையாக படித்துணருங்கள்.


01) மனைவியை சந்திக்கும்போது எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருங்கள்.அதுசதகாவகும்.
02) வீட்டினுள் நுழையும்போது சலாம் சொல்ல மறந்துவிட வேண்டாம். சலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட. அது ஷைத்தானை வீட்டிலிருந்து விரட்டிவிடும்.
03) நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். நாவைப் பேணுவது அவசியம்.அதன் தீய விளைவுகளே அதிகமானது.
04) எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். விவாதம் வேண்டாம். அது திருமண வாழ்க்கைக்கு நஞ்சு போன்றது.
05) உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள். மனைவியின் கருத்துக்களை செவிசாயுங்கள்.
06) தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
07) மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழையுங்கள். நபியவர்கள் தம் மனைவி ஆயிஷா நாயகியை “ஆயிஷ்” என்று செல்லமாக அழைத்தார்கள்.
08) நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
09) நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்னைகளை மறக்கடியுங்கள்.
10) அவளது இன்பத்தில் மட்டுமல்லாது துன்பத்திலும் பங்கு கொள்ளுங்கள்.
11) பிள்ளைகளைப் பராமரிக்கும் விஷயங்களில் அவளுக்கு உதவியாய் இருங்கள்.சிலர் பிள்ளை பெறும்வரைதான் நமது கடமை அதன் பின் மனைவிதான் பொறுப்பு என அலட்சியமாய் இருக்கின்றனர். அதனால் நம் மீதும், பிள்ளை பெறுவதிலும் மனைவிக்கு வெறுப்பு ஏற்படலாம்.
12) இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை பார்ப்பதற்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.
13) அவள் நோயுற்று களைப்படைந்து இருந்தால் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள்.
14) குடும்ப விஷயங்களை உங்கள் மனைவியின் ஆலோசனை பெற்ற பின்பே செய்யுங்கள்.
15) நீங்கள் வெளியில் இருக்கும் போது எந்நேரமும் மனைவியுடன் தொடர்பாகவே இருங்கள். (டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக)
16) குடும்பச் செலவுக்குத் தேவையான பணத்தை ஓரளவேனும் அவளது கையில் கொடுத்துவிடுங்கள்.
17) திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக் கொண்டு வாருங்கள்..
18) திருமணம் முடித்தபின் தன் மனைவியை அடிமை என நினைத்துக்கொண்டு அவளை துன்புறுத்தக்கூடாது. அவளது சிறந்த நண்பன் என கருத்திற்கொண்டு நெருக்கமாக பழகுங்கள். தன் கணவன் தனக்கு அல்லாஹ்வினால் கிடைத்த அருட்கொடை என நினைத்து அவள் மகிழ்ச்சியடைவாள்.
19) எல்லா காரியங்களிலும் அவளுக்கு முன்மாதிரியாக இருங்கள். அவள் மதிக்கும்படியாக நடந்துகொள்ளுங்கள்.
20) விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளுங்கள். விவாதம் வேண்டாம் அது குடும்ப வாழ்க்கைக்கு நஞ்சாகும்.
21) அழகாக காட்சியளியுங்கள். சுத்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். அவை உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
22) மனைவியை மிக்க கவனமாக கையாளுங்கள். அவள் ஒரு கண்ணாடி பாத்திரம் போன்றவள். அவள் மனது எளிதில் உடைந்துவிடக் கூடியது.
23) வீண் சந்தேகம் வேண்டாம். அது உங்கள் இருவரையும் தூரமாக்கிவிடும். அவளது குறைகளை துருவித்துருவி ஆராயாதீர்கள்.
24) அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லோரிடமும் குறைகள் உள்ளன. நபியவர்கள் நவின்றார்கள் ( பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப் பட்டவர்கள்.அதன் மேற்பகுதி வளைந்திருக்கும். அதை நேராக்கப் போனால் உடைந்துவிடும், அவ்வாறே விட்டோம் என்றால் வளைந்ததாகவே இருக்கும். எனவே பெண்கள் விடயத்தில் நடுத்தரமாக நடந்து கொள்ளுங்கள்).
25) தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள். கடினமாக நடந்து கொள்ளாதீர். நபியவர்கள் கூறினார்கள் “நான் என் மனைவியருக்கு மிகச் சிறந்தவன்”.
26) அவளுக்கு விருப்பமில்லாத விஷயங்களை அவள் முன்னிலையில் செய்ய வேண்டாம்.
27) அவளுக்கு அறிவுரை வழங்கும்போது தனிமையில் அறிவுரை வழங்குங்ககள். பிறர் முன்னிலையில் அவளது குறைகளை எடுத்துக்கூறாதீர்கள். அனைவரிடமும் குறைகள் உண்டு. அவளது குறைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
28) வீண் கோபம் வேண்டாம். கோபத்தை தணித்துக்கொள்ளுங்கள்.
29) அதிர்ச்சியூட்டக்கூடிய சந்தோஷங்களை கொடுங்கள். அவளுக்கு மிக விருப்பமான ஒன்றை செய்யலாம்.
30) உங்களது இன்பத்திலும் துன்பத்திலும் அவளிடம் ஆலோசனை கேட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்.
31) எப்போதும் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெளியில், கடைத்தெருவில் ஏதாவது சாப்பிட நேர்ந்தால் அதே போன்று அவளுக்கும் வாங்கிக்கொண்டு செல்லுங்கள்.
32) அவ்வப்போது அவளுக்கு உணவுகளை ஊட்டியும் விடுங்கள்.
33) உங்களுக்கு இருக்கும் அந்தஸ்தில் அவளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய குதிரையில் அவளையும் உட்கார வைக்கலாம். அது அவளது உள்ளத்தை குளிரவைக்கும்.
34) உங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவு வேண்டாம். அதன் விளைவு கொடியது.
35) எல்லா நல்ல விஷயங்களிலும் அவளைப் பாராட்டுங்கள். உங்கள் பாராட்டைச் செயலிலும் காட்டுங்கள்.
36) அவளது குடும்பத்தாருடன் நல்லுறவு வைத்திருங்கள். அவர்களை மதித்துப் பழகுங்கள்.
37) அவளது குடும்பத்தார் முன்னிலையில் அவளைப் பாராட்டிப் பேசுங்கள்.
38) அவள் தனக்கு கிடைத்த அருட்கொடை என்பதாக அவளுக்கு உறுதிப்படுத்துங்கள்.
39) இருவரும் அவ்வப்போது பரிசுகளை, அன்பளிப்புக்களை பரிமாறிக் கொள்ளலாம். பரிசுகள் அன்பை வளர்க்கும் என நபியவர்கள் கூறினார்கள்.
40) முக்கியமாக இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் செயல்பட வேண்டும். புரிந்துணர்வு தவறும் போதே பிரச்சினை உருவாகிறது.
41) அவளுக்காக எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள்.
42) சிறு சிறு பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை.
43) வெளியில் உமக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், நஷ்டங்கள் காரணமாக அவற்றின் விளைவுகளை மனைவியிடம் காட்ட வேண்டாம்.
44) வீட்டை விட்டு வெளியே போகும்போது எங்கு போகிறோம் என்றும் திரும்பி வீட்டுக்கு வரும்போது என்று வருகிறோம் என்றும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.
45) வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் விவாகரத்து செய்யப்போவதாக அவளை மிரட்ட வேண்டாம்.
46) இருவரும் ஒருவருக்கொருவர் இறைவனுக்கு இணங்கிவாழும் (இபாதத்) விஷயத்தில் உதவி ஒத்தாசையாய் இருங்கள். (நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் மனைவியையும் தொழுவதற்காக எழுப்பி அவள் மறுத்தால் அவளது முகத்தில் தண்ணீர் தெளித்துவிடும் கணவனுக்கும், தான் இரவில் விழித்து தொழுதுவிட்டு தன் கணவனையும் தொழுவதற்காக எழுப்பி அவன் மறுத்தால் அவனது முகத்தில் தண்ணீர் தெளித்து விடும் மனைவிக்கும் அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக).
47) முடிந்த வரை உங்கள் வேலைகளை நீங்களே செய்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
48) அவளது விருப்பத்திற்கு இணங்க விடுமுறை நாட்களில் அவளது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள், அங்கு தங்கவும் அனுமதி வழங்குங்கள்.
49) வெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்கள், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். அதற்காக நம் மனைவியை சந்தேகக் கண் கொண்டு பார்த்துவிடவும் கூடாது. அதனால் வாழ்க்கையில் நிம்மதியை இழந்து விடுவீர்கள். நம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காக எல்லா வாசல்களையும் திறந்துவிடுவது முட்டாள்தனம். அதாவது அவள் நம்பிக்கைக்கு துரோகம் செய்வதற்கான வழிமுறைகளை நாமே ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது.
50) நம் உயிர் தோழனாக இருந்தாலும் மிகவும் அத்தியாவசிய தேவைக்கன்றி நம் மீது அன்பாக இருக்கும் மனைவியுடன் அறிமுகப்படுத்தி வைப்பது கூடாது. அதனால் ஷைத்தான் குழப்பம் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
51) அடிக்கடி (தலைவலி தராத) நல்ல வாசனைத் திரவியங்களை பூசிக் கொள்ளுங்கள். நல்ல வாசனையை பெண் விரும்புவாள்
52) காலையில், மாலையில், இரவு வேளைகளில் பற்களை துலக்கவும். குறைந்த பட்சம் இருமுறையாவது துலக்கவும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் மனைவியன் பக்கத்தில் சென்று பேசும் போது வாய் துர்நாற்றம் வீசாது.
53) தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சகல விதத்திலும் சுத்தமாக இருங்கள். முக்கியமாக நாற்பது நாட்களுக்கு ஒருமுறையேனும் மர்ம உறுப்பு, அக்குள் ஆகியவற்றிலுள்ள முடிகளை அகற்றி சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
54) நீங்கள் அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிட வேண்டாம். ((மனைவிக்கு கணவன் செய்ய வேண்டிய கடமைகள் யாவை? என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது.அதற்கு நபி (ஸல்) அவர்கள் : நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும், நீ அணியும் போது அவளையும் அணியச்செய்வதும், அவளது முகத்தில் அறையாமல் இருப்பதும், அவளை இழிவு படுத்தாமல் இருப்பதும், வீட்டில் தவிர அவளை வெளியிடங்களில் எல்லோர் முன்னிலையிலும் கண்டிக்காமல் இருப்பதும் கணவனின் கடமை என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.)
55) அறியாமைக்கால நடைமுறை போன்று அவளை மாதவிடாய் காலங்களில் அன்றாட கூட்டுப்பணிகளில் ஒதுக்கி விட வேண்டாம்.
56) மனைவி ஆசையோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு தன்னை நெருங்கும் போது நீங்கள் எப்படிப்பட்ட களைப்பில் அசதியில் இருப்பினும், உங்களின் பிரச்சினையை அறியாத அந்த அழகிய மனைவியின் ஆசைக்கு கொஞ்ச நேரம் ஈடு கொடுங்கள்.
57) தாம்பத்தியத்தில் மனைவி திருப்தி கண்ட பிறகு தான் ஓய்வெடுக்க வேண்டும். அவளின் ஆசையை நிறைவு செய்யும் போது ஏற்படும் சுகம் கணவனுக்கு அதிகமாக இருக்கும். எனவே, முதலில் அவளின் தேவையை பூர்தி செய்ய வேண்டும்
58) “பிஸ்மில்லாஹ்” சொல்லி எல்லா விஷயங்களையும் ஆரம்பியுங்கள். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போதுகூட ‘பிஸ்மில்லாஹ்”வுடன் சேர்த்து அதற்கான துஆவையும் ஓதிக்கொள்ளலாம். அதனால் பிறக்கும் குழந்தை ஷைத்தானை விட்டும் பாதுகாக்கப்படுகிறது.
59) உங்கள் மனைவியின் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, மற்றும் அவளுடைய குடும்பத்தாரைப்பற்றி குறைவாகவும் ஏளனமாகவும் பேசாதீர்கள். அவ்வாறு தவறு ஏதாவதை சுட்டிக்காட்ட வேண்டுமாயின் அதனை பக்குவமாக எடுத்து அன்பாக விளக்கிக்கொடுங்கள்.
60) உங்கள் குடும்பத்தாரிடம் அவளைப் பற்றி பெருமையாக பேசுங்கள்.அதனால் உங்களது குடும்பத்தினர் அவளை மதிப்பார்கள். அவளைப் பற்றி அவர்களிடம் ஏளனமாக பேசும்போது அவர்கள் அவளை மதிக்கத் தவறுவார்கள்.
61) வருடத்திற்கு ஒரு முறையேனும் புதிய இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். மாதம் ஒரு முறை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இஸ்லாம் அனுமதிக்கும் விஷயங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லுங்கள்.
62) வாரம் ஒரு முறை தனியாக வெளியில் சென்று அவளோடு மனம் விட்டுப் பேசுங்கள்.
63) மனைவிக்குத் தேவையான ஆடைகள், ஆபரணங்கள், மற்றும் ஏனைய பொருட்களை அவளுடன்
சென்று அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
64) வெளியில் சென்று இரவில் நேரம் தாமதம் ஆகாமல் வீட்டுக்கு வர முயற்சி செய்யுங்கள். பொதுவாக மனைவி தன் கணவன் வீட்டுக்கு வரும்வரை சாப்பிடாமல் காத்துக்கொண்டிருப்பாள். இதுவே கணவனுக்கு மாத்திரம் கிடைக்கும் ஒரு சந்தோஷமாகும்.
65) தனக்கு பிடித்ததுதான் அவளுக்கும் பிடிக்கும் என்று எண்ணாதீர்கள். அவளுக்கும் ஆசைகள் பல இருக்கும். அதனை நிறைவேற்றுங்கள். அவ்வாறு இருவருக்கும் பிடித்திருப்பது ஒன்றென்றால் அது நீஙகள் செய்த பாக்கியம்.
66) திருமணத்தின் பின்னுள்ள வாழ்க்கையில் கருத்து முரண்பாடு ஏற்படுவது வழக்கம். அதில் நீங்கள்தான் வெல்ல வேண்டும் என்று எண்ணினால் நீங்கள் இருவருமே வாழ்க்கையில் தோற்று விடுவீர்கள். அதனால் அவளது கருத்து பிழை என்ற போதிலும் மௌனமாக இருந்து பின்னர் ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அந்த விஷயத்தைப்பற்றி மறைமுகமாக உங்களின் கருத்தை தெரிவியுங்கள். ஏனென்றால் பெண்கள் பொதுவாக அனைத்திலும் தான் செய்வதுதான் சரி என்று எண்ணும் இயல்பு. உடையவர்கள். அதனை நேரடியாக சொன்னால் சில சமயங்களில் கோபம் அதிகமாகும். அதன் விளைவு விவாகரத்துவரைகூட செல்லலாம்.
67) வெளியில் நீங்கள் எவ்வாறான பிரச்சினைகளை சந்தித்தாலும் வீடு திரும்பும் போது அழகிய புன்னகையோடு சலாம் சொல்லி விட்டிற்குள் நுழையுங்கள். கைகளை பற்றிப்பிடியுங்கள்.
68) திருமணம் முடித்த பின் மனைவியின் விஷயத்தில் மட்டுமல்லாது அவளது குடும்ப விஷயங்களிலும் பொறுப்பாக செயல்படுவது சிறந்தது.
69) உங்களால் முடிந்தால் வீடு திரும்பும்போது மனைவிக்கென்று ஏதாவது அவள் விரும்பிய உணவை அல்லது பானத்தை வாங்கிச்செல்லுங்கள்.
70) வாரத்திற்கு ஒருமுறையேனும் வெளியில் சென்று சாப்பிடுங்கள்.
71) அவளுடைய ஆசைகளை மறுக்காமல் கேளுங்கள். அதில் தவறு இருப்பின் உடனே கூறாமல் சற்று தாமதமாக்கி எளிமையான வார்த்தைகளைக் கொண்டு அதை சுட்டிக்காட்டுங்கள்.
72) மனைவியோடு பேசுவதற்காக நேரம் ஒதுக்குங்கள். காலையில் வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி இரவு நேர சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு டீவியை பார்த்து பிறகு தூங்குவது கூடவே கூடாது. மனைவியிடம் அன்பாக பேச வேண்டும். அவ்வப்போது உடல் நலம் போன்றவற்றை விசாரிக்கவும்.
73) மனைவி தலைவலி, இடுப்புவலி, கால் வலி போன்ற நோய்களோடு இருக்கும் போது தனது ஆசையை பூர்த்தி செய்தாகவே வேண்டும் என்று எண்ணலாகாது. மாறாக அவளின் நோய்க்கு நிவாரணம் அளிக்க வேண்டும். ஊதாரணமாக, தலைவலி என்றால் தலையை சற்று பிடித்து விடலாம்.
74) மனைவியோடு சில சில மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விளையாட்டுக்களை விளையாடலாம். “நபி (ஸல்) தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோடு விளையாடுவார்கள். இரு முறை ஓட்டப் பந்தயமும் நடந்தது”
75) தனது வருமானத்தைப் பற்றியும், அதிலிருந்து தான் செலவளிப்பதன் விவரம் பற்றியும் மனைவியிடம் பகிர்ந்துகொள்வது சிறந்தது. உங்கள் மனைவி ஸாலிஹாண (நல்ல) ஒருவராக இருந்தால் அதை எண்ணி மிகவும் சந்தோஷப்படுவாள்.
76) நீங்கள் வெளிநாட்டிலும், மனைவி தாய் நாட்டிலும் இருந்தால் அவளோடு பேசுவதற்காக கணினியை பயன்படுத்துவது வழக்கம். அப்போது பேஸ்புக், டுவிட்டர், யாகு சட், போன்ற சமுக வலையமைப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் போக வேண்டாம் என்று அன்பாகக் கட்டளையிடுங்கள்.
77) மனைவியிடம் நம் நண்பர்களான பிற ஆண்களைப் பற்றி புகழ்ந்து, வர்ணித்து பேசாமல் இருப்பது மிக முக்கியமாகும். அதன் விளைவாக அன்பு அந்தப் பக்கம் திரும்பலாம். இதன் விளைவு கணவனுக்கே எதிராகலாம். இது குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.
78) அவளுடைய குறைகளை மற்றவர்களிடம் கூற வேண்டாம். முக்கியமாக உடலுறவுடன் சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும் கூறாதீர்கள். உடலுறவில் அவளுக்கு இருக்கும் குறைபாடுகளை நண்பர்களிடம் ஏன் பெற்றோர்களிடமும் கூறவேண்டாம். அது அவளுக்கு செய்யும் மிகவும் கேவலமான துரோகமாகும்.அதற்கான ஆலோசனைகளை இருவருமாக சேர்ந்து மருத்துவரை அணுகி பெற்றுக்கொள்ளலாமே.
79) நீங்கள் கேட்கும் பயான்கள், ஹதீஸ்கள், நபித்தோழர்களின் வரலாறுகள், நல்ல விஷயங்கள் போன்ற அறிவுரைகளை அவளுக்கும் கூறுங்கள். முழுக்க முழுக்க மார்க்க அறிவுரைகளை ஆவலுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
80) முறையாக மனைவியை மற்றவர்களிடத்திலிருந்து மறைத்துக் கொள்ளுங்கள்.
81) இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட அழகிய ஆடைகளை அணியவையுங்கள், வாங்கி கொடுங்கள்.
82) திருமணம் செய்யத் தடைசெய்யப்பட்ட மஹ்ரமான ஆண்களோடு பேசுவதற்கும் பழகுவதற்கும் அனுமதிக்கலாகாது. இதில் மிகவும் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
83) பெரிய தவறுகளுக்காக மட்டும் விசாரணை நடத்துங்கள். சிறு சிறு தவறுகளை இனிமேலும் செய்ய வேண்டாம் என்று பாசத்தோடு சொல்லுங்கள்.
84) பெண்கள் அதிகமாக நோய்வாய்படக்கூடியவர்கள். அவர்களுக்கு அடிக்கடி பலவீனம்ஏற்படும்போது ‘உனக்கு ஒரே நோய்தான், நோயாலயா ஒன்ன பெத்தாங்க” என்று எரிச்சலடையக்கூடாது. பாசத்தோடு அவளுக்கு தேவையான மருந்தை கொடுக்க வேண்டும் அல்லது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
85) ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அதற்கு பகராக இதுதான் சரி என்பதை அவள் பார்க்கும் விதத்திலும் புரிந்து கொள்ளும் விதத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
86) உணவில் உப்பு அதிகம் என்றாலோ ருசி இல்லை என்றாலோ மனைவியை திட்டாதீர்கள். அதனை நீங்கள் உண்டு முடியுங்கள். உறங்கப்போகும்போது அவளிடம் அந்த உணவின் நிலை பற்றி கூறி மறந்து விடுங்கள். பின் அவள் அதனைப்பற்றி கேட்கும் போது ‘இருந்த போதிலும் என் மனைவி சமைத்தது நன்றாகத்தான் இருந்தது” என்ன்ற வார்த்தை அவளை ஆறுதல் படுத்தலாம். அடுத்த முறை மிகவும் ருசியாக சமைக்க முயற்சி செய்வாள்.
87) அவளுடைய ஆசைகளை அல்லது உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.
88) இரகசியமான முறையில் அவளின் பிரச்சினையை கேட்டறிந்து அதனை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
89) திருமணமான பின்பு மனைவியிடத்தில் தான் எதிர்பார்ப்பது இல்லையெனில் அதற்காக வருந்த வேண்டாம். அதனை அவளிடம் நல்லமுறையில் வேண்டுகோள் விடுங்கள். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவதற்கு முயற்சி செய்வாள். அப்போதும் அவளால் முடியவில்லையென்றால் அல்லாஹ்விற்காக பொறுமையோடு இருங்கள்.
90) தான் ஏதாவது தவறு செய்யும் போது அதனை ஏற்றுக் கொண்டு அவளிடம் வருத்தம் தெரிவியுங்கள். நிச்சயமாக அவளுடைய அன்பு அதிகரிக்கும்.
91) முந்திய காலங்களில் செய்த தவறுகளை அவளிடம் சுட்டிக்காட்ட வேண்டாம்.
92) மனைவி கோபமடையும் வேளை கணவன் அமைதியை கையாள வேண்டும் தானாகவே அவள் அமைதியாவாள்.
93) மனைவி கணவனைவிட அதிகமாகப் படித்திருக்கலாம், குறைவாகவும் படித்திருக்கலாம் .அவளுக்கு தெரியாத ஒரு விஷயம் பற்றி நம்மிடம் கேட்கும் போது “உனக்கு இது கூட தெரியாதா?” என்றெல்லாம் அவளை இழிவு படுத்தாமல் முறையாக அவளை நெருங்கி அன்பாக விளக்கலாமே. அதனால் அவள் நம் மீது வைத்திருக்கும் அன்பு அதிகரிக்கும்.
94) திருமண வாழ்க்கையில் பெரும்பாலும் மனைவிக்கும் கணவனின் தாய், சகோதரி ஆகியோர் இடையே பிரச்சினை வருவது சகஜம். அச்சந்தர்ப்பத்தில் கணவன் தன் தாய், சகோதரிகளின் பக்கம் மாத்திரம் சாய்ந்து பேசுவது முறையல்ல. நம்மை நம்பி வந்தவளே நம்மனைவி. அதனால் இரு தரப்பினருக்கும் நடுவராக நின்று பிரச்சினையை தீர்த்து வைப்பது அவசியமாகும். எத்தரப்பில் தவறு இருக்கிறதோ அதை அவர்களுக்கு உணர்த்தி இரு தரப்பினரையும் ஒற்றுமையாக்கி வைப்பது கணவன் மீது கட்டாய கடமையாகும். அதற்கான ஆற்றலை கணவன் பெற்றிருப்பது அவசியமாகும்.
95) விருந்துகளுக்கு அழைப்பு வந்தால் மனைவியையும் அழைத்துச் செல்லலாம். முக்கியமாக உங்களது குடும்ப விருந்துகளுக்கு கட்டாயமாக அவளையும் சேர்த்து அழைத்துச் செல்லலாமே. உங்களது குடும்பம் அவளை மதிக்க அது காரணமாக அமையும்.
96) வசதி படைத்தவர்கள் திருமணம் முடித்த பின் தம் குடும்பத்துடனோ, மனைவியின் குடும்பத்துடனோ ஒன்றாக வாழாமல் தனியாக ஒரு வீட்டை அமைத்துக்கொள்வது பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சிறந்தது. “விட்டு, விட்டு சந்தியுங்கள் அன்பை வளர்த்துக்கொள்ளலாம்” எனும் முதுமொழிக்கேற்ப ஒரு தனி வீட்டில் இருந்து அவர்களை விட்டு, விட்டு சந்தித்து நிரந்தரமாக பாசத்தை தக்க வைத்துக்கொள்வது முடியுமல்லவா!
97) பெண்ணின் இதயம் மிக மிக மென்மையானது. ஆனால் அது ஒரு பெரும் கடல். அதன் உள்ளே அன்பு, பன்பு, அமைதி, அழகு, கருணை, காதல், பாசம் இப்படியாக எண்ணற்ற நன்முத்துக்களைத் தேடி தேடி எடுக்கலாம். அது எடுப்பவர்களின் திறமையை பொறுத்தே அமைந்திடும். எனவே இவ்வாறான நற்குணங்களை மனைவியிடமிருந்து பிறக்கச் செய்வது கணவனின் கடமையல்லவா!
98) மனைவியின் சில குணங்கள் தமக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக, தாம் விரும்புவது போலவே அவளை மாற்றிட நினைப்பது “விலா எலும்புகள் எதுவும் வளைந்திருக்கக் கூடாது அவற்றை நேராக்கியே தீருவேன்” என்று நினைப்பது போலாகும். அப்படி நினைத்துச் செயல் பட்டால் அது அந்த எலும்புகளை முறித்து விடுவதில்தான் போய் நிற்கும். அதுபோன்றே ஒரு கணவர் தம் மனைவியை தாம் விரும்பியவாறு சீராக்க நினைப்பதும் விவாகரத்தில்தான் கொண்டுபோய் சேர்த்துவிடும்.
99) அல்லாஹ் ஒரு துஆவை கற்றுத் தந்துள்ளார்கள்.”யா அல்லாஹ்! எனது மனைவி, குழந்தை ஆகியோரில் எனக்கு கண்குளிர்ச்சியை தருவாயாக”, எனவே இந்த துஆவை நித்தமும் கேட்க நாம் தவறிவிடக் கூடாது.மனைவியை பார்க்கும் போது நமக்கு மனசந்தோஷம் கிடைக்க வேண்டும். மனைவியின் அழகு என்பது நிறத்தில் ஏற்பட்டது அல்ல.அவளை பார்க்கும் போது தனிப்பெரும் இன்பம் கிடைக்குமானால் அதுவே நபி (ஸல்) அவர்கள் கூறிய அழகு.
100) இறுதியாக மிக முக்கியமான ஒன்றை கூற விரும்புகிறேன், திருமண பந்தத்தில் இணையும் பெண்கள் இறுதிவரை குறிப்பிட்ட கணவனுடனேயே வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஒரு கணவன் தான் நேசிக்க வேண்டிய ஒரேயொரு பெண் தனது மனைவியாவாள். மாறாக அவன் கள்ளக் காதலிகளுடன் தொடர்ப்பு வைத்திருப்பது தனது மனைவிக்கு செய்யும் பாரிய துரோகமாகும்.
எப்போது அவன் கள்ளக்காதல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வானோ அப்போதே வாழ்வில் அவனது நிம்மதியை இழந்து விடுகிறான்.தன்னை நம்பி வரக்கூடிய பெண்ணுடன் இறுதிவரை வாழ்பவனே உண்மையான மனிதன். பொதுவாக பெண்கள் இலகுவில் ஒருவரை விரும்ப மாட்டார்கள், விரும்பினால் இறுதிவரை அவருடனேயே வாழவேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள்.ஆண்கள் அவ்வாறல்ல விவாகம் செய்த ஒரு பெண்ணை விவாகரத்து செய்து விட்டு இன்னொருத்தியை விவாகம் செய்யலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். விவாகரத்து செய்வது ஆகுமான ஒரு காரியம் தான். ஆனாலும் விவாகரத்து செய்யப்படக்கூடிய பெண்களது வாழ்க்கையின் நிலை என்ன ? அவர்களது பெற்றோர், சகோதரர்களது படும் பாடு ஆகியவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.இந்நிலை உங்கள் சகோதரி அல்லது மகளுக்கு ஏற்பட்டால் உங்கள் நிலை என்ன என்பதை காரணமே இல்லாமல் விவாகரத்து செய்யும் ஒவ்வொரு ஆண்களும் சிந்திக்க வேண்டும்.


*ஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மரணம் வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே*
. *ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.*
*கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது.*
*அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி தன் மனைவியோடு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கு சில ஆலோசனைகளை இங்கே தருகிறோம்*.
*அல்லாஹ் உங்களின் வாழ்க்கையை சீராகவும், சிறப்பாகவும், செழிப்பாகவும் வைப்பானாக.

ஆக்கம் மற்றும் தொகுப்பு :அ.தையுபா அஜ்மல்.

Wednesday, 27 July 2016

RADNUS DOWNLOADING SOFTWARE !!

எந்த ஒரு பாடலாக இருந்தாலும் சில வினாடிகளில் பதிவிறக்கம் செய்யலாம் !!
இன்டர்நெட் இன்றி சினிமா துறையில் பேசும் படங்கள் வந்த நாள் முதல் தற்போது உள்ள படங்கள் வரை எந்த படத்தின் பாடலாக இருந்தாலும்  இன்டர்நெட் உதவி இன்றியும்,CD & DVD யின் உதவி இன்றியும் எஒரே நொடியில் இன்டர்நெட் இன்றி DOWNLOAD செய்ய முடியும் ...!

மேலும்  RDS SONGS Downloading software நம்மால் பாடல்களை பதிவிறக்கம் செய்து Memory card ,CD & DVD ,Cellphone,Pendrive இவைகளில் பாடல்களை ஏற்றி கொடுக்கலாம்
இந்த சாப்ட்வேர் ஐ உபயோகிக்கும் முறை அனைத்தும் Single Windows ல் செய்து முடித்து விடலாம்
இந்த சாப்ட்வேர் இல் நாம் பாடல்களை டவுன்லோடு செய்ய இந்த முறைகளை பயன்படுத்தி டவுன்லோடு செய்யலாம்
1.படத்தின் பெயா்
2.பாடலின் முதல் வாா்தை
3.நடிகாின் பெயரை வைத்து
4.பாடலை எழுதியவர் பெயரை வைத்து 
5.இசையமைப்பாளர் பெயரை வைத்து 
6.பாடல்களை பாடியவா்களின் பெயரை வைத்து
7.படம் வந்த வருடத்தை வைத்து
இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி பாடல்களை உடனடியாக பதிவிறக்கம் செய்யலாம்
இது மட்டும் இல்லாமல்
1.தனி தனி நடிகா்களின் ஹிட்ஸ்
2.தனி தனி இசையமைப்பாளர் ஹிட்ஸ்
3.மெலோடி பாடல்கள்
4.சோக பாடல்கள்
5.குத்து பாடல்கள்
6.மோட்டிவேஸன் பாடல்கள்
7.பஸ் ஸ்பெஷல்
8.காா் ஸ்பெஷல்
9.பக்தி பாடல்கள்
10.பாடகா்கள ஹிட்ஸ் இப்படி பல வெரைட்டி பாடல்களை மொத்தமாகவும் பதிவிரக்கம் செய்யலாம்
மேலும் விபரங்களுக்கு 
உங்களை தொடா்பு கொள்ள
Vks.எழில், பாண்டிச்சேரி
போன் :8122273311

Saturday, 23 July 2016

முளையிலேயே கிள்ளவேண்டிய குழந்தைகளின்பிடிவாதம் !!


‘பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!’ என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
‘எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். ‘இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!
தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..’ என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..’
- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.
‘இந்தக் காலத்து குழந்தைகள் ‘சென்ஸிடிவ்’ ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். ‘இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..’ என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..’ என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு ‘நோ’ என்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்’ என்று ‘டேக்கன் ஃபார் கிரான்டட்’ ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்கு’ என்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..’ என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
உஷார் மம்மீஸ் உஷார்!
குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி கொடுத்த ‘பிராக்டிகல் டிப்ஸ்’..
குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..’ என்று சொல்லுங்கள். குழந்தை ‘இப்பவே வேணும்..’ என்று அழுதாலும், ‘நாளைதான்’ என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். ‘அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்’ என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.
நன்றி - விகடன் பொக்கிஷம் மம்மீஸ் கிளப்.

Thursday, 21 July 2016

சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த பியுஷ் மனுஷ் !! ஒரு விழிப்புனர்வு பார்வை..

இயற்கை ஆர்வலரான பியுஷ் மனுஷ்சேலத்தை சேர்ந்தவர். இவரது தாத்தா காலத்தில் ராஜஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்து நிரந்தரமாக தங்கிவிட்டனர். பியூஷ் மனுஷின் இயற் பெயர் பியூஷ் சேத்தியா. வட நாட்டு சாதியின் பெயரை குறிப்பதால், சேத்தியா என்பதை எடுத்துவிட்டு, மனுஷ் என்று தன் பெயருக்கு பின்னால் இணைத்துக் கொண்டார்.அவர் திடீரென முளைத்த சமூகப் போராளி கிடையாது. கல்லூரியில் படிக்கும்போதே கல்லூரி படிப்பின் தரம் மற்றும் கட்டணத்தை எதிர்த்து, கல்லூரி வளாகத்திலுள்ள மகளிர் கழிவறையின் முன்னமர்ந்து போராட்டம் செய்தவர். அதன்பின் நடைபெற்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். போராட்ட குணத்தை இயல்பிலேயே பெற்றிருப்பவர். 

இவர் விவசாயம், நீர் நிலைகள், இயற்கை காய்கறி, பழங்கள், இயற்கை
எரிபொருள் என சுற்றுப்புறச் சூழல் மீது அதிக அன்பும், கவனமும், அக்கறையும் கொண்டுள்ளவர். திடீரென கைதாகி சிறையில் போலீசாரால் துன்புறுத்தப்பட்டு, பின் பலரின் தூண்டுதலின் காரணத்தால் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியாகியுள்ளார்



  • சேலம் சிட்டிசன் ஃபாரம் என்ற அமைப்பை தொடங்கி. சில இயற்கை மற்றும் சுற்றுசூழல் மீது ஆர்வம் கொண்ட நபர்கள் இணைத்துக் கொண்டு கடந்த 2010-ம் ஆண்டு முதல் நிறைய நல்ல காரியங்கள் செய்து வருகிறார் 

  • தர்மபுரியில் உள்ள கஞ்சமலை எனும் இடத்தில நடந்துவந்த சட்டவிரோதமான தொழில்களை எதிர்த்து, பலர் இணைந்து நடத்தும் கூட்டுறவு காடு திட்டத்தை துவங்கி, ஏறத்தாழ 1,30,000 மரக்கன்றுகளை பல ஏக்கர் நிலப்பரப்பில் நட்டு ஓர் காட்டியே உருவாக்க கருவாக இருந்துள்ளார் 

  • இயற்கை மீது கொண்ட காதல் மற்றும், மனித நேயம் கொண்ட நெஞ்சத்தின் காரணத்தால் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் பியுஷின் உழைப்பால் உருவாகின. மேலும், மூங்கில், தேனீ, காளான் வளர்ப்பிலும் தொழில்களை உருவாக்கி இளைய சமுதாயத்திற்கு ஓர் முன்னோடியாக திகழ்கிறார் .

  • கன்னங்குறுச்சி எனும் இடத்தில் அமைந்தயுள்ள மூக்கனேரியை அரசின் எந்த உதவியின் இல்லாமல், மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட 50 லட்ச ரூபாய் கொண்டு மீட்டெடுத்து, ஓர் நீராதாரமாய் மாற்றியுள்ளார்.

  • கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஏறத்தாழ 35 கண்டைனர் மூலமாக நிவாரண பொருட்களை சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளார். இதற்கு சேலம் மக்கள் பெரும் உதவி செய்துள்ளனர்.

  • கவுத்தி மற்றும் கல்வராயன் என்ற இரண்டு மலைகளின் அடியில் இரும்பு கிடைக்கும் என மலைகளை வெடித்து இரும்பு எடுக்க முயன்ற நிறுவனத்தை விரட்டி, CNN-IBN-ன் 2015-க்கான சிறந்த இந்தியன் எனும் விருதை வென்றுள்ளார்.

  • சேலத்தில் மட்டுமே மூக்கனேறி, அம்மாபேட்டை, குடுகள், இஸ்மாயில்கான் எனும் நான்கு ஏரிகள் மற்றும் அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி எனும் இரண்டு குளங்களை சுத்தம் செய்து மீட்டெடுத்து நல்ல நீர் ஆதராமாக மாற்றியுள்ளார் 

இந்திய அரசியல் சட்டம் வழங்கும் பேச்சுரிமைக்கு உட்பட்டு ஜனநாயக ரீதியில் மக்களிடம் பிரசாரம் செய்த பியுஷ் சேத்தியா மீது தேசத்துரோக வழக்கு தொடர்வது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். இவ்வளவுக்கும் ஜனவரி 26ஆம் தேதிதான் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது. அன்றுதான் பியுஷ் கைது செய்யப்பட்டார் என்பதை நாம் பொருத்திப் பார்க்க தவறக்கூடாது.

இது பியுஷ் சேத்தியா என்ற தனிமனிதர் மீது ஏவப்படும் ஆயுதம் அல்ல. இந்திய மக்களுக்காகவும், இயற்கை மற்றும் சூழலை பாதுகாக்கவும் போராடும் அனைவருக்கும் அரசு விடுக்கும் அச்சுறுத்தல்.

இதை உணர்ந்து, இத்தகைய சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பது சூழல் குறித்த ஆர்வம் கொண்ட அனைவரது கடமை.

ஒரு தனி மனிதனால் இப்படி செய்ய முடியும் என்றால் தமிழக அரசு ஏன் செய்ய முடியாது.கடந்த 50 வருடங்களாக சென்னை கூவம் சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட நிதிகள் யாருடைய பெயரில் சென்று சேர்ந்தது. தமிழக மக்களே தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி குறைந்தது 100 கோடி ரூபாய் என்னவானது என்று அறிந்து கொள்ள முற்படுங்கள்!!


இவரை  (பியுஷ் மனுஷ்டன் ) தொடர்பு கொள்ள: 9443248582

இவரை பற்றி மேலும் அறிய..


https://www.youtube.com/watch?v=MmC3vUrcwrU

ஆக்கம்  மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Sunday, 17 July 2016

கல்வி முறை மற்றும்சமூக மாற்றம் பற்றிய அப்பா திரைப்படம் !! ஒரு சிறப்பு ஆய்வு..

நான் என் குழந்தை மற்றும் கணவருடன் சேர்ந்து அவரின் இந்த அரையாண்டு விடுமுறையில் பார்த்த ஒரு நல்ல படம் என்றே கூறலாம். கல்வி முறை குறித்து அறிவு தளத்தில் மிகப்பெரிய அளவில் விவாதம் நடந்து வருகிற சூழலில் சமான்ய மக்களிடம் அழுத்தமான பரப்புரையை அப்பா படக்குழு செய்திருக்கிறது. இயக்குனர் சமுத்திரக்கனி பாராட்டுதலுக்குரியவர். சமூக கொடுமைகளை எதிர்ப்பதற்காக, எங்கிருந்தோ அன்னா அசாரே போன்ற தலைவர்களும் அவர்களின் ஆலோசனையின் பேரில் இளைஞர் பட்டாளம் புரட்சி செய்வது போன்ற அபத்தமான கற்பனை இத்திரைப்படத்தில் இல்லை. அடித்தட்டு மக்களின் முகத்துடன், குணத்துடன், கோபத்துடன் நடுத்தர வயது கதாநாயகன் வருகிறார்.

சமூக மாற்றம் என்பது கல்வி முறை மாற்றத்துடன் தொடர்புடையது என்பதை இத்திரைப்படம் அழகாக சொல்லியிருக்கிறது. சாதி, பிற்போக்குத்தனம், மக்களின் அறியாமை இவை மூன்றும் எந்த காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அதிகார வர்க்கம் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆக,சமூக மாற்றம் குறித்து எந்த வித உணர்வும் மக்களுக்கு வந்துவிடக்கூடாது என்பதில் இன்றைய கல்வி முறை மிகத் தெளிவாக இருக்கிறது. பெரியாரையும் படி, மார்க்ஸையும் படி, ஆனால் மனப்பாடம் செய்து கொள். அவ்வளவுதான். எதற்கும் பயிற்சி எடு முயற்சி எடு.முழுமையடைந்து விடாதே இதுதான் இன்றைய கல்விச் சூழல்.

பள்ளிக்கூடங்களில் மழலைகளுக்குத் தரும் அலங்கார வேலைகள் குழந்தைகளின் புத்தாக்கத்திறனை வெளிப்படுத்தவா அல்லது வணிக நிறுவனங்களுடன் தனியார் பள்ளிகள் போடும் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவா என்கிற கேள்வியை இத்திரைப்படம் எழுப்புகிறது. முழுமையாக வணிக வளாகங்களாக மாறிப் போன நமது கல்வி வளாகங்களைப் பார் என்று அப்பா திரைப்படம் நமக்கு உரக்கச் சொல்கிறது.

சமூக மாற்றம் குறித்து சிந்திக்க கூடாது,தன் முன்னேற்றம் என்பதில் மட்டும் அக்கறையாக இருக்க வேண்டும்,இந்த கல்வி பந்தயத்தில் தன் மகன் எப்படியாவது வெற்றிப் பெறுகிற குதிரையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கதாபாத்திரம் தம்பி ராமையாவிற்கு. மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். அவர் வரும் அனைத்து காட்சிகளிலும் மக்கள் கை தட்டி சிரிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் அந்த கோமாளியாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற சமூக எதார்த்தை பார்வையாளர்கள் சுய விமர்சனத்துடன் ஏற்கிறார்கள்.ஏற்றுக் கொள்ள வைக்கிறார் சமுத்திரக்கனி.

அது மட்டுமல்ல, பேராசை பிடித்த தம்பி ராமையாவின் வீட்டில் சங்கராச்சாரியார் படம் மாட்டப்பட்டிருப்பதை இரண்டு முறை காண்பித்திருக்கிறார் இயக்குனர். அந்த காட்சிகளின் மூலம் மறைமுகமாக ஒரு நுட்பமான அரசியலை பேச விழைகிறார்.

சமுத்திரகனியின் மகன் நட்பு கொள்ளும் இசுலாமியப் பெண் கதாபாத்திரத்தை எதார்த்தமாக வடித்திருக்கிறார். ஏழை குடும்பத்துப் பெண்ணாக வரும் அவர்,எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் இயல்பாக இருக்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்களை பாலினமோ,மதமோ பெரிய அளவில் கட்டுபடுத்துவதில்லை.மனித திரளுடன் கலப்பதையே சமான்யர்கள் விரும்புகிறார்கள் என்கிற உண்மையை அந்த கதாபாத்திரம் காண்பிக்கிறது.

தம்பிராமையா, தனது மகன் வசதி வாய்ப்பு இல்லாத சராசரி பெண்ணை காதலிக்கிறான் என்று நினைத்து பேசும் வசனங்கள் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கின்றன. இல்லாதவர்கள் என்றால்,இயலாதவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் எப்படியும் பேசலாம் என்கிற உடைமைச் சமூக மனநிலையை அந்தக் காட்சி பிரதிபலிக்கிறது.

அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை ஒரு இடத்தில் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒழுக்க நெறிகளுக்கு முன்னுதாரணமாக மதநூல்களை மட்டுமே உபதேசித்து வந்த திரைப்படங்களுக்கு மத்தியில் இந்த காட்சி நல்ல துவக்கம்.

படத்தில் எழுந்து நின்று பாராட்ட வேண்டிய அம்சம் படத்தின் இறுதி பத்து நிமிடங்கள். உறைவிடப் பள்ளிகளின் உண்மை முகம் என்ன என்பதை பகிரங்கமாக காண்பிக்கிறது. ஆசிரியர்களும்,அலுவலர்களும் இருக்க வேண்டிய கல்வி வளாகம் அடியாட்களும்,வியாபரிகளும் உலவக் கூடிய இடமாக இருக்கிறது என்பதை மிகையில்லாமல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. கல்வி வளாகங்கள்,திருமண மண்டபங்கள்,மருத்துவ மனைகள் இவை அனைத்தும் யாரோ ஒரு தொழிலதிபர் வசம் இருக்கிறது. திருமண மண்பங்கள் எப்படி ஒரு தொழிலோ அது போல்தான் கல்விக்கூடங்களும், மருத்துவமனைகளும் மிகப்பெரிய வணிகச் சந்தை. இன்னும் சொல்லப்போனால் கல்விதான் இன்று மிகப்பெரிய வியாபரச் சந்தை. கல்வி நிறுவனம் நடத்தும் யாருக்கும் கல்வி குறித்தோ குழந்தை நலன் குறித்தோ எந்த வித அக்கறையும் அறிவும் கிடையாது. அப்படிபட்டவர்கள் கையில்தான் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் இயங்குகின்றன.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப்பண்ணை பள்ளிக்கூடங்களை கடுமையாக சாடியிருக்கிறது இத்திரைப்படம். கல்வி என்றாலே கற்பித்தல் என்கிற நிலை மாறி வெறும் படித்தல்,படித்தல், படித்தல் என்கிற நிலை வந்து விட்டது. எதையும் கேட்காமல், எதை பற்றியும் சிந்திக்காமல் படித்துக் கொண்டே இரு என்பதுதான் இது போன்ற பள்ளிகளின் தாராக மந்திரம்.

பயிற்றுவிப்பது (coaching) மட்டுமே ஆசிரியர் பணி. சொல்லிக் கொடுப்பது (teaching) கிடையாது. தேர்வு நடத்துவதும், அதை திருத்துவதும், மீண்டும் எழுத வைப்பது மட்டுமே இன்றைய ஆசிரியர்களின் பணி. இதில் யார் சிறந்தவர்கள் ? எந்த பள்ளி சிறந்த பள்ளி ? என்பதை வைத்துதான் தமிழகத்தின் முன்ணனி பள்ளிகள் உருவாக்கப்படுகின்றன. பெற்றோர்களின் பேராசை இது போன்ற பள்ளிகளுக்கு மூலதனமாக அமைகிறது.

கல்வி வளாகத்தில் மாணவர்கள் இறந்துவிட்டால் அல்லது பாதிக்கப்பட்டு விட்டால்,கல்வி வளாகம் எப்படி வினையாற்றுகிறது? .அந்த செய்தியை எப்படி திரித்து பேசுகிறது ? என்கிற உண்மையை அம்பலமாக்குகிறது அப்பா. இந்த காட்சியில் கல்லூரி வளாகங்களில் அடிப்படை வசதி கேட்டு போராடும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கல்லூரி துணைவேந்தர்கள் நம் கண்முன்னால் வந்து போகிறார்கள். 15 மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதன்மையான பல்கலை கழகத்தில் போராடிய மாணவர்கள் எந்த அளவிற்கு வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது நாம் அறிந்ததே.

சமூகத்தின் அவலங்களை மாற்றக்கூடிய, அழிக்கக்கூடிய, ஆற்றல் பெற்றவர்களாய் மாணவர்களை உருவாக்கக்கூடிய கடமை கல்விமுறைக்கு உண்டு. ஆனால்,நடக்கிற அனைத்து அவலங்களுக்கும் உடந்தையாக இருக்கக்கூடிய அல்லது பலியாகக்கூடிய ஜீவன்களாக மாணவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறது இன்றைய அமைப்பு. இந்த அவலத்தைதான் தோலூரித்துக்காட்டுகிறது அப்பா.

கல்வுி முறையில் மாற்றம் வேண்டும் என்கிற நவீன தத்துவத்தை பேசும் இயக்குனர், பெண் மகப்பேறு விசயத்தில் கற்காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். என்னதான் நவீன காலம் வந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும், வலியை தாங்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் செய்து கொள்ள வேண்டும் என்கிற கருத்தை அறிவுரையாக கூறுகிறார். மாணவர்களின் எதிர்காலத்தை அறிவுப்பூர்வமாக அணுகும் சமுத்திரக்கனி அவர்கள், பெண்கள் விசயத்தில் ஏன் இவ்வளவு பழமைவாதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை?.

பெண் ஒரு சக உயிர் என்று பாடம் எடுக்கும் சமுத்திரக்கனி,அந்த பெண்ணிற்கு தன் பிள்ளைப் பேற்றை தீர்மானிக்கும் உரிமை உண்டு என்பதையும் உணர வேண்டும். இந்த ஒரு அபத்தமான சிந்தனையை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அப்பா தமிழ் சமூகம் கொண்டாடப்படவேண்டியவர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.