Saturday, 6 August 2016

இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான இந்திய வீரர்கள் ரியோ ஒலிம்பிக்கில்போட்டி!!


ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள்,நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே பிரேசிலின் இரண்டாவது மிகப் பெரிய நகரான ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.இன்று தொடங்கி மொத்தம் 17 நாட்கள் நடைபெறும் ரியோ ஒலிம்பிக் திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 206 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர்.

உலக வரலாற்றில் முதல் முறையாக அகதிகள் ஓர் அணியாக இணைந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து 118 பேர் கலந்து கொள்கின்றனர். இந்திய வரலாற்றில் ஒலிம்பிக்கில் அதிக அளவிலான வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் கவனிக்கத்தக்க முக்கிய 10 அம்சங்கள்:

* நாட்டின் பொருளாதார சரிவு, விலையேற்றம், ஜிகா வைரஸ் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு நடுவே ஒலிம்பிக் ரியோ ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சிகள், ரியோ டி ஜெனிரோவின் வரலாற்று சிறப்பு வாய்ந்த மரக்கானா மைதானத்தில் தொடங்கின. தொடக்க விழாவில் சுமார் 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் கலந்துகொண்ட பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவை பிரேசில் நாட்டின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன.

* ஒலிம்பிக்கின் பாரம்பரிய கருப்பொருளான அமைதி, இம்முறை மரங்கள் குறித்த விழிப்புணர்வாக மாறியிருந்தது தொடக்க விழாவில், ''பூமிக்கு தீங்குசெய்யும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தினால் மட்டும் போதாது; இயற்கையை குணப்படுத்த இதுவே சரியான நேரம். மரங்களை நடுவோம். மானுடத்தையும், இயற்கையையும் காப்பாற்றுவோம். இதுதான் நம்முடைய ஒலிம்பிக் செய்தி'' என்று கூறப்பட்டது.

* பிரேசில் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களின் உணர்வுபூர்வ விளையாட்டான கால்பந்தை ஒதுக்கி, பருவநிலை மாற்றத்தையும் இயற்கை வளங்களின் சிதைவையும் விழாவின் மையக்கருவாக மாற்றியிருந்தனர். பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா விழாவில் கோலாகலத்துடன் அரங்கேறியது.

* விழா 22 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முதல் 11 பகுதிகளில் பிரேசிலைப் பற்றியும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. முதல் 45 நிமிடங்கள் பிரேசில் வரலாறும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அதன் நிலை பற்றியும் கூறப்பட்டது. வடகிழக்கு பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளைப் பற்றியும் தகவல்கள் பரிமாறப்பட்டன. பின்னர் சமகாலத்திய பிரேசிலின் கட்டமைப்பும், அதன் நகரமயமாக்கலும் கூறப்பட்டன.

* அடுத்ததாக வீரர்கள் அணிவகுப்பு தொடங்கியது. ஒலிம்பிக்கின் பிறப்பிடம் கிரேக்கம் என்பதால் அந்நாட்டினர் முதல்வரிசையில் கொடியேந்திச் சென்றனர். அதைத் தொடர்ந்து மற்ற நாட்டினர் அணிவகுக்க கடைசியாக போட்டியை நடத்தும் பிரேசில் வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். இந்திய அணி 95-வது நாடாக அணிவகுப்பில் பங்கேற்றது. துப்பாக்கிச்சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா தேசியக்கொடியை ஏந்திச் சென்றார்.

* இந்திய வீரர்கள் அணிவகுப்பில் 70 வீரர்களும், 24 அதிகாரிகளும் கலந்துகொண்டனர். வீரர்கள் கடல் நீல வண்ண கால்சட்டையும், மேல்சட்டையும் அணிந்திருந்தனர். வீராங்கனைகள் பாரம்பரிய புடவையையும், நீல மேல்சட்டையும் அணிந்திருந்தனர். தனது 7-வது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் லியாண்டர் பயஸ், மக்கள் கூட்டத்தில் உற்சாகத்துடன் காணப்பட்டார். பேட்மின்டன் வீராங்கனைகள் ஜ்வாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகரையும் காண முடிந்தது.

* ஸ்பானிய, பிரிட்டிஷ் நாடுகளின் அணிவகுப்பு, பிரபல வீரர்களான ரஃபேல் நடால் மற்றும் ஆண்டி முர்ரேவின் முன்னெடுப்போடு களைகட்டியது. 60 உறுப்பினர்களைக்கொண்ட ஜமைக்கா குழு, உலக சாம்பியனான உசேன் போல்ட் இல்லாமலேயே நடந்து சென்றது. நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையில், 500 உறுப்பினர்களோடு அமெரிக்க அணி உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சிவப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் அணிவகுத்துச் சென்றது.

* வீரர்களின் அணிவகுப்புக்குப் பிறகு, சர்வதேச ஒலிபிக் கவுன்சில் தலைவரும், முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனுமான தாமஸ் பாச் நீண்ட உரையாற்றினார். அதில், ''ஒலிம்பிக் அமைதியை வளர்க்கிறது. நாம் நிலையில்லாத, அவ நம்பிக்கை கொண்ட, நெருக்கடியான உலகத்தில் வாழ்கிறோம். உலகின் தலைசிறந்த 10,000 வீரர்கள் ஒற்றை ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி, தங்களின் உணவையும், உணர்வையும் பகிர்ந்து வாழ்கின்றனர். இந்த ஒலிம்பிக் உலகில், எல்லோருக்கும் ஒரே விதிதான். எல்லோரும் சமம் என்பதே அது.

இந்த விழாவில் புதிதாக இணைந்துள்ள அகதிகள் ஒலிம்பிக் அணியை முழுமனதோடு வரவேற்கிறேன். நீங்கள் உலகில் இருக்கும் அனைவருக்கும் இதன்மூலம் செய்தி அனுப்புகிறீர்கள். நீங்கள் சமுதாயத்துக்கு சிறந்த பங்கை அளித்திருக்கிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

* ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறித்த முறையான அறிவிப்புக்குப் பிறகு, பார்வையாளர்களின் பலத்த கரவொலிக்கிடையில், முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரரும், மூன்று முறை ஃப்ரெஞ்ச் ஓப்பன் பட்டம் பெற்ற பிரேசில் வீரருமான கஸ்டாவோ குயர்டன் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திவந்தார்.

* 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்ஸில் மாரத்தான் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற பிரேசில் வீரரான வெண்டர்லி டி லிமா, ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். ஒலிம்பிக் ஜோதியை ஏற்றுவதாக இருந்த கால்பந்து லெஜண்ட் பீலே உடல்நிலையைக் காரணமாகக் கொண்டு விலகியது குறிப்பிடத்தக்கது.


> ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான். அதன் விவரம்

அரியானா (23), பஞ்சாப் (13) மாநிலங்களில் அதிகளவில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் அஜந்தா சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), சதீஷ் சிவலிங்கம் (பளுதுாக்குதல்), ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் (ஹாக்கி), கணபதி, ஆரோக்கிய ராஜிவ் (தடகளம்) உட்பட மொத்தம் 12 பேர் பங்கேற்கின்றனர். இதில் சரத் கமல் 2004, 2008ஐ தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக களமிறங்குகிறார். இவர், 2006 (2), 2010 (1) காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் வென்றுள்ள போதிலும், ஒலிம்பிக் பதக்கம் மட்டும் பிடிபடாமல் உள்ளது.


வெல்வாரா சதீஷ்:கடந்த 2014, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 77 கி.கி., எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதித்தவர் தமிழத்தின் வேலுாரை சேர்ந்த சதீஷ் சிவலிங்கம். பின் நடந்த ஆசிய விளையாட்டில் இவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. ஒலிம்பிக்கில் என்ன செய்வார் என பொறுத்திருந்து காணலாம்.


ஆண்கள் தொடர் ஓட்டத்தில் (4*400 மீ.,) பங்கேற்கும் திருச்சியின் ஆரோக்கிய ராஜிவ், திருப்பூரின் தருண், மற்றும் மாற்று வீரர் மோகன் குமார் சிறப்பாக செயல்பட வாழ்த்துவோம்.

இதேபோல 20 கி.மீ., நடை போட்டியில் கிருஷ்ணகிரி வீரர் கணபதி கிருஷணன் பங்கேற்கிறார். ஹாக்கி அணி கேப்டன் ஸ்ரீஜேஸ், ருபிந்தர் பால் சிங் இருவரும் தமிழகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்கள் தான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment