Friday, September 5, 2014

இட்லி செய்முறை பற்றி திருமதி தையுபாவின் அசத்தல் பேட்டி!! ஒரு சிறப்பு பார்வை..

இல்லத்தரசிகளின் பார்வையில் இம்சையான உணவும் எல்லோருக்கும் ஏற்ற எளிமையான உணவுநாம் அடிக்கடி சாப்பிடும் டிபன்  இட்லிதான். இட்லி என்பது எப்போதாவது  தான் அதன் லட்சணங்களுடன் வந்து அசத்தும். பல நேரங்களில் அது பந்து மாதிரி, கல் மாதிரி, இன்னும் ஏதேதோ மாதிரியெல்லாம் தன் அடையாளம்  இழந்து எரிச்சலைக் கிளப்பும். வெள்ளை வெளேர் நிறத்தில், பஞ்சு மாதிரியான, மெத்தென்ற இட்லி வீடுகளில் சாத்தியப்படாதா என்கிற பலரின்  ஆதங்கத்துக்குப் பதில் வைத்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த  என் மனைவி  திருமதி தையுபா. 

‘தரமான அரிசி, உளுந்தைத் தேர்ந்தெடுக்கிறதுலேர்ந்து, அரைக்கிறது, கரைக்கிறது வரைக்கும் இட்லி மிருதுவா வர பல விஷயங்கள் இருக்கு.  அதையெல்லாம் சரியா பண்ணினாலே, வீட்லயும் மெது மெது இட்லி வரும்’’ என்கிறார் திருமதி தையுபா. இவர் இரண்டு முறைகளில் இட்லி  செய்யும்  செய்முறையை இங்கே விவரிக்கிறார்..

முதல் முறை 1:

என்னென்ன தேவை...


தேவையானவை பொருட்கள்
இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி- 4 டம்ளர்
உடைத்த வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
அவல்- ஒரு கைப்பிடி


எப்படிச் செய்வது?
செய்முறை : 
1. இட்லி அரிசி என்றால் 5 மணி நேரம் ஊறினால் போதும், புழுங்கலரிசி என்றால் முந்தின நாள் இரவே ஊற விடவும்.
2. வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் போதும், ஊறின பிறகு பருப்பைக் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.
3. அரிசியைக் களைந்து மின் அரைப்பானில்(கிரைண்டர்) போடவும், இதனுடன் அவல், வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க விடவும்.
4. இருபத்தைந்து நிமிடங்கள் அரைபட வேண்டும்,(ஊறின நேரம் குறைவு என்றால் கூட நேரம்). அடிக்கடி தண்ணீர் விட்டு வர வேண்டும். நன்றாக மையாக அரைபட வேண்டுமென்ற அவசியமில்லை. பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் போட்டு விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைக் களைந்து போட வேண்டும்.
5. தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்,
6. பருப்பு வெண்ணெயாக அரைபடுவதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது.
7. பிறகு உப்பைப் அரைபட்ட பருப்புமாவில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
8. அரைத்த மாவையும் இந்த உளுத்தம்மாவையும் ஒன்று கலக்கவும், ஆற்றவும். தனித்தனிப் பாத்திரங்களில் முக்கால்வாசி அளவு வருமாறு(பொங்கும், புளிக்கும் என்பதால்) விட்டு வெளியில் வைக்கவும், குளிர்காலங்களில் புளிக்காது என்பதால் அவனில் வைத்துக் கொள்ளலாம்.
 முறை 2:   
தேவையானவை பொருட்கள் 
பச்சரிசி - 4 கப், 
ஜவ்வரிசி - 1 கப், 
ஆமணக்கு விதை - சிறிதளவு, 
உளுத்தம் பருப்பு - 1 கப், 
உப்பு - தேவையான அளவு, 
சமையல் சோடா - சிறிது.

செய்முறை :
1,பச்சரிசியையும் ஜவ்வரிசியையும் தனித்தனியே  3 மணி நேரம் ஊற வைத்து தனித்தனியே அரைத்துச் சேர்க்கவும். 
2,குடையக் குடைய அரைத்த உளுத்தம்  பருப்பையும், ஆமணக்கு விதையை யும் சேர்க்க வும். 
3,இவை அனைத்தையும் சேர் த்து உப்பு போட்டு கலக்கவும். 
4இட்லி வார்ப்பதற்கு முன் சமையல்  சோடா சிறிதளவு கலந்து அடித்துவிட்டுப் பிறகு வார்க்கவும்.
5. இரவு ஊற வைத்து காலையில் அரைத்தால் அரைத்த அன்று இரவு மாவு பொங்கி விட்டிருக்கும்,
6. மினி இட்லி தட்டுக்கள் அல்லது சாதா இட்லித்தட்டுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி மாவை விட்டு குக்கரில் வைத்து பத்து நிமிடங்களில் எடுக்க சுவையான மென்மையான மல்லிகைப்பூ இட்லிகள் தயார்.


இட்லி சாப்பிடுவதினால்  ஏற்படும் நன்மை !!

அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு என்று சமீபத்தில் ஒரு ஆய்வு மூலம்  உறுதிப் படுத்தியுள்ளன.

அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்றஅமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்றஅமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.

இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.

லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.

இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,முருங்கைக்காய்  சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக இருக்கிறது.

அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.


கேழ்வரகு கோதுமை ரவை இட்லி

கேழ்வரகு சாப்பிட்டால், உடல் நன்கு வலிமையோடும், வாய் துர்நாற்றம் எடுக்காமலும் இருக்கும். ஆகவே தான் அக்காலத்தில் எல்லாம் மக்கள் காலை வேளையில் கேழ்வரகை கஞ்சி போன்று கரைத்து சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது கேழ்வரகு சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதற்கு காரணம், கேழ்வரகின் நன்மைகளைப் பற்றி பலருக்கு தெரியாதது தான். மேலும் கேழ்வரகை கஞ்சி செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், இதனை இட்லிகளாக ஊற்றி சாப்பிடலாம். இங்கு கேழ்வரகை கோதுமை ரவையுடன் சேர்த்து எப்படி இட்லி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா...தேவையானவை பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 1 கப் 

கோதுமை ரவை - 1 கப் 
கெட்டியான தயிர் - 3 கப் 
கேரட் - 1 கப் (துருவியது) 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் 
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன் 
முந்திரி - சிறிது 
வேர்க்கடலை - சிறிது 
கறிவேப்பிலை - சிறிது 
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட் மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.


 பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!! 


குறிப்பு: வேண்டுமானால், இத்துடன் ஓட்ஸை பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா ரவை இட்லி 
மசாலா ரவை இட்லி என்பது ரவையை வைத்து செய்யப்படும் ஒரு ஆரோக்கியமான காலை உணவு. இந்த உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக இட்லியானது அரிசி மாவு மற்றும் ஊளுத்தம் பருப்பு மாவு கொண்டு தான் செய்வார்கள். ஆனால் இந்த இட்லியானது ரவையை மையமாக கொண்டு செய்வதால், இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்:
ரவை – 2 கப் (வறுத்தது)
புளித்த தயிர் – 2 கப்
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
இஞ்சி – 1 துண்டு (துருவியது)
கொத்தமல்லி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
முந்திரி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிப்பதற்கு:
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

ஒரு பௌலில் புளித்த தயிர், வறுத்த ரவை மற்றும் உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கலந்து, குறைந்தது 1-2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு துருவிய கேரட் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனை ஊற வைத்துள்ள ரவையில் ஊற்றி கிளறி விட வேண்டும்.

பின் சுவை பார்த்து, உப்பு போதவில்லை என்றால், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் கொதிப்பதற்குள், இட்லி தட்டில் ரவை கலவையை இட்லிகளாக ஊற்றி, அதன் மேல் முந்திரியை வைக்க வேண்டும்.

இறுதியில் இட்லி பாத்திரத்தை திறந்து, அதில் இந்த இட்லி தட்டை வைத்து, மீண்டும் மூடி 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா ரவை இட்லி ரெடி.


ஓட்ஸ் ரவா இட்லி

என்னது ஒட்ஸ் இட்லியா???இது எல்லாம் கொஞ்சம் ஒவராக தெரியவில்லையா…...என நான்  கேட்டவுடன் “ஆமாம்!! ஆமா…சாப்பிட்டு பாருங்கள்..”என்று சொன்னால். அதை சாப்பிட்டுவிட்டு நாணும்  நன்றாக இருக்கின்றது என்று 
சொன்னேன்.

எப்பொழுதும் அரிசியில் இட்லி செய்து போரடித்துவிட்டால் இப்படி எதாவது விதவிதமாக் செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த ஒட்ஸ் இட்லியினை நீங்களும் செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும். 

அதிலும் முக்கியமாக உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் இதனை செய்து சாப்பிடலாம்.

இதனை சட்னியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கு
ம்

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 1 கப் 
கோதுமை ரவை - அரை கப் 
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடுகு - கால் தேக்கரண்டி 
ப.மிளகாய் - 2 
கருவேப்பிலை - சிறிதளவு 
இஞ்சி - சிறிய துண்டு 

செய்முறை :  

• முதலில் ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு 3 நிமிடம் வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.

• கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வறுத்துக் கொள்ளவும் 


• இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், வறுத்த ரவை, தயிர், தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி, ப.மிளகாயை போட்டு தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் கொட்டி நன்றாக கலக்கவும். 

• மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

• சுவையான, சத்தான ஓட்ஸ் ரவா இட்லி ரெடி. 
இட்லி
மஞ்சூரியன் காலையில் செய்த இட்லி மீந்துவிட்டதா? இந்த மஞ்சூரியனை செய்து பாருங்கள். மாலை நேர டிப்பனுக்கு இந்த இட்லி சூப்பராக இருக்கும்.தேவையான
பொருட்கள் : 
இட்லி – 8
மைதா மாவு – 2 ஸ்பூன்
சோள மாவு – 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
வெங்காயம் – 1/2 கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
சோயா சாஸ், தக்காளி சாஸ் – தேவைகேற்ப
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப..

செய்முறை :
இட்லியை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து இதில் இட்லி துண்டுகளை நன்றாக பிரட்டி பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்
இதனுடன் மிளகாய் தூள், சோயா மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கிரேவியாக சமைக்கவும்.

இந்த கிரேவியில் ஏற்கனவே பொரித்து வைத்த இட்லியை சேர்த்து 2 நிமிடங்கள் சமைத்தால் சூடான, சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.இட்லி பற்றிய முக்கிய  குறிப்புகள்:

1. துணியில் மாவு இட்டு செய்யும் இட்லிகள் எண்ணெயே குடிக்காமல் இன்னும் சுவையாக இருக்கும். அப்படியும் செய்யலாம்.
2. இட்லிக்குத் துவையல், சட்னி, சாம்பார் செய்து பரிமாறலாம்.
3. இட்லிக்குத் தனியாக, தோசைக்குத் தனியாக என்று அரைக்க முடியாதவர்கள், அடி இட்லி மாவையே தோசைக்குப் பயன்படுத்தலாம்.
4. தோசை மாவிற்கு என்றால் அரிசி, பருப்பை ஒன்றாகவே அரைக்கலாம், ஆனால் கணிசம் மேற்கூறிய முறையில் தான் அதிகம் கிடைக்கும்.
5. தோசைக்கு நன்றாக அரைபட வேண்டும் என்ற மெனக்கெடல் இல்லை, நற நற பதமே போதுமானது.
6.சிலர் மேற்கூறிய முறையில் வெள்ளை உளுத்தம்பருப்பை அதிகம் சேர்ப்பார்கள், அவ்வாறு செய்வது இட்லிக்கு நல்லதாக இருக்கும், அதே மாவில் தோசை கல்லை விட்டு எடுக்க வராது.
7. குளிர்சாதனப்பெட்டியில் பருப்பை வைக்க நேரமில்லாதவர்கள் ஐஸ்கட்டிகளைப் போட்டு அரைக்கலாம். அவல் இட்லிக்கு மென்மையைத் தருகிறது.
8. இட்லி சரியாக வரவில்லை என்றால் ஒன்று பொங்கியிருந்திருக்காது, இல்லையென்றால் ஏதேனும் செய்முறையில் தவறுகள் நிகழ்ந்திருக்கலாம், ஒரு வேளை சொதப்பும் சூழல் நேரிட்டால் தோசைக்கு மாவைப் பயன்படுத்தலாம்.

மதுரை  இட்லி, மல்லிகை பூ ,குஷ்பூ,ஜோதிகா, ஹன்சிகா இட்லிகள் என்று பெயரையும் சூட்டி விடுங்கள், எனக்கு, உனக்கு என்று காலியாகும், கண்டிப்பாகத் தொட்டுக் கொள்ள துவையலோ(சட்னி), சாம்பாரோ பண்ணி அசத்திவிடுங்கள்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment