ஒரு குழந்தை கடவுளிடம் கேட்கிறது.
“கடவுளே என்னை நீங்கள் நாளைக்குப் பூமிக்கு அனுப்பப்போவதாய் எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள்.. இவ்வளவு சின்னதாக இருக்கும் என்னைத் தனியாகப் பூமிக்கு அனுப்புகிறீர்களே? எனக்கு மிகவும் பயமாக இருக்கிறதே..”
“பயப்படாதே அங்கே உனக்காக ஒரு தேவதை காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் உன்னை அக்கறையோடு கவனித்துக் கொள்வாள்.”
“இங்கே பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ச்சியோடு இருக்கின்றேனே?”
“ அங்கே உன் தேவதை உனக்காக பாடுவாள்.. உனக்காக சிரிப்பாள். அவளது அன்பை நீ உணர்ந்து கொண்டு நீ சந்தோஷப்படுவாய்.”
“ஆனால் கடவுளே.. அவர்களின் மொழி தெரியாமல் ,அவர்கள் பேசுவதை நான் எப்படி புரிந்து கொள்ள முடியும்? அவர்கள் மொழியை எனக்கு பேசவும் தெரியாதே?”
“நீ இதுவரை கேட்காத இனிமையான அழகான அன்பு வார்த்தைகளையெல்லாம் உன் தேவதை உன்னிடம் பேசுவாள். . உனக்குப் பசியெடுத்தால் அவள் துடித்துப் போவாள். உனக்கு பேசுவது எப்படி என்று பொறுமையாகச் சொல்லித் தருவாள்”.
“கடவுளே உன்னிடம் பேச வேண்டும் என்று நான் விரும்பினால் உன்னை எப்படித் தொடர்பு கொள்வது?”
“கவலைப் படாதே. உன் இருகைகளையும் பிடித்து என்னை எப்படி வணங்குவது என்று அவளே சொல்லித் தருவாள்.. நீ என்னுடன் பேசுவதை நான் கேட்பேன்.”
“ஆனாலும் கடவுளே உன்னைக் காணாமல் நான் மிகவும் வருத்தப்படுவேனே?”
“நீ என்னை எப்படி அடைவது என்பது பற்றியெல்லாம் உன் தேவதையே உனக்குக் கற்றுத் தருவாள். அது மட்டுமல்ல.. எப்போதும் நான் உன்னைக் கவனித்துக் கொண்டுதானிருப்பேன் கவலைப்படாதே”.
அப்போது சொர்க்கத்தில் திடீரென அமைதி நிலவியது. பூலோகத்தில் கசமுச என பேசும் குரல்கள், அங்கேக் கேட்டது.. தான் புறப்படும் வேளை இது என்பதைப் புரிந்துக் கொண்ட குழந்தை..
அவசர அவசரமாகக் கடவுளிடம் கேட்டது.. “ கடவுளே என் தேவதையின் பெயரை இன்னும் நீங்கள் என்னிடம் சொல்லவில்லையே?”
கடவுள் உடனே குழந்தையின் காதுகளில் உச்சரித்தார்..
“உன் தேவதையின் பெயர் அம்மா!
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment