
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்,,,ராஜா!!!
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment