மனிதனுக்கு மட்டும் உள்ள சிறப்புத்தன்மை பேச்சு. இது வரை எவ்வளவோ நாம் பேசியிருப்போம், கேட்டும் இருப்போம். நம்மை சுற்றி எங்கும் பேச்சு தான் நிறைந்து இருக்கிறது. வகுப்பறையில் வாத்தியார் பேசியே தூங்கவைக்கிறார். ஆபீஸில் மேலதிகாரி பேசி கடுப்பேத்துகிறார், இரவு மனைவி காதருகே கிசுகிசுத்து பட்டுப் புடவை சம்பாதித்து விடுகிறாள். காதலர்கள் கைப்பேசியில் பொய் பேசியே டைம் பாஸ் பண்ணுகிறார்கள். டிவியை போட்டால் அங்கேயும் பேச்சு தான். நாலு பேர் கூடினாலே நாக்குக்குத் தான் வேலை. எல்லோரும் அலட்சியமாகக் கொட்டும் வார்த்தைகளில் சில பேரழிவு ஏற்படுத்தும், சில ஆளை காலியாக்கும், சில வழி கெடுக்கும், சில வழி காட்டும், சில நன்மை தரும், சில நோய் வாய்ப்படுத்தும, சில குணமாக்கும். எனவே கம்யூட்டருக்கு உள்ளது போல் நம் மூளக்கும் ஒரு ஃபயர்வால் தேவை. இல்லாவிட்டால் நச்சு வார்த்தைகள் நம்மை நாசம் செய்து விடும்.
மனதை தகர்க்கும் பேச்சு:
குழந்தைகள் கேட்க நேரும் வார்த்தைகள் ,டிவி,சினிமாக்களின் வசனங்கள் அவனை எப்படி எல்லாம் பாதிக்கும் என்று யார் கவலைப்படுகிறார்கள்.
"என் மகன் சாப்பிடுவதே இல்லை" என்று சொல்லி கவலைப்படும் அன்னயின் சிம்பதியை பெற வேண்டி அவன் சாப்பிட அடம் பிடிப்பான்.
"உன் தம்பியப் பாரு எவ்வளவு நல்லா படிக்கிறான் நீ என்னடா மக்கு, சோம்பேறி மாடு மேய்க்கத்தான் லாயக்கு" என்று ஒரு தாய் அடிக்கடி திட்டுவதே அவனை மக்கு பிள்ளையாக்கி விடும்.
"மூணு கண்ணன் வரான், பூச்சாண்டி வரான் சாப்பிடு" என்று பயப்படுத்துவது அவர்களை கோழையாக்கும்.
"அவன் பிடிவாதக்காரன்","தலை போனாலும் அவன் பால் சாப்பிட மாட்டான்","சோம்பேறி" ,"முட்டாள்,"தூங்கு மூஞ்சி" என்று திரும்பத் திரும்ப பிள்ளைகளை பார்த்து கூறினால். அவர்களும் அப்படியே ஆகி விடுவார்கள். எதிர் மறையான பேச்சுக்கள் தன்னம்பிக்கையை இழக்கச்செய்யும்.சுய மரியாதயை பலவீனமாக்கும்.
நோயாளியை பார்க்கப் போகும் போது..
"அட கடவுளே உனக்கா இப்படி வரவேண்டும்?"
"எதற்கும் ஸ்கேன் எடுத்துப் பாரு ப்ரெய்ன் ட்யூமராயிருக்கப் போகுது"
"இப்படித் தான் என் மாமனாரின் தம்பி பையனுக்கு லேசா வயித்து வலிதான் வந்தது, மூணாம் நாளே ரத்தம் ரத்தமா வாந்தி எடுத்து செத்துப் போனான், கேன்சராம்"
"நெஞ்சு வலி வந்தா இங்க்லீஸ் டாக்டரிடம் போனால் அறுத்து தைத்து விடுவான். பெரியப்பாவுக்கு அட்டாக் வந்தபோது நம்மூர் வைத்தியருகிட்ட ஒரு தடவை தான் கஷாயம் குடிச்சாரு அப்புறம் வரவே இல்லை"
தாயத்து கட்டிக்கோ, காத்து கருப்பு அடிச்சிருக்கும், சாமி குத்தம், அம்மன் விளையாட்டு என்று எத்தனையோ அபத்தங்களை உளறிக் கொட்டி நோயாளியின் BP எகிறச்செய்து குழியில் தள்ளி மண்ணை மூடுகிறார்கள்.
"என்ன உடம்புக்கு இளைச்சிருக்கே, அன்னிக்கு பாத்தப்போ நல்லாத் தானே இருந்தே"
"என்ன கலர் ட்ரெஸ் இது நல்லாவே இல்ல,எங்கெயிருந்து எடுத்தே விலை அதிகம்"
"இது பழைய மாடல் கார் உன் தலையிலே கட்டிட்டான்"
இனி தப்பாது , எழவு, நரகம், பிரயோஜனமில்லை, நடக்காது , சான்சே இல்லை. சுத்த வேஸ்ட். வீணா ட்ரை பண்றே ,அவளாவது உன்னப் பாக்கிறதாவது. இதப் பாருடா காமடியெ .பொளைக்கிறது கஸ்டம் தான். இது போன்ற வார்த்தைகள் முயற்சிக்கு முட்டுக் கட்டையிடும்
வளைந்த பேச்சுகள்:
என்னதான் நடுநிலை செய்தித் தாளானாலும் தொலைக் காட்சியானாலும் அதில் வரும் செய்திகள் பெரும்பாலும் மதம் அரசியல,மொழி இன சாயம் பூசித்தான் வரும். குறைந்த பட்சம் அந்த செய்தி ஆசிரியரின் கண்ணோட்டத்தில் தான் இருக்கும். செய்திகளில் அவர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளை வளைத்து எழுதுவார்கள.சாதகமானதை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்திலும் பாதகமானதை மூலையில் பொடி எழுத்திலும் போடுவார்கள். சில செய்திகள் மத, இனக் கலவர நெருப்பை பற்ற வைக்கும், எண்ணெய் ஊற்றும். வளைத்து எழுதப்படும் வார்த்தைகளால் அரசியல்வாதிகள் தமக்குள் அடித்துக்கொள்ள நேரிடும். சில செய்திகள் பங்கு வர்த்தகத்தை பாதிக்கும். தவறான,கற்பனையான செய்திகள் உங்கள் நம்பிக்கைகளத் திசை திருப்பிவிடக் கூடும். கேட்கும் எதையும் அப்படியே நம்பி விடக்கூடாது. நாம் தான் அதன் உண்மையை சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
வானிலை அறிக்கை, தேர்தல் ஆரூடம், ராசிபலன் , வக்கீலின் வாதம் எல்லமே ரப்பர் பேச்சுகள் தான்.
நெருப்புப் பொறிகள்:
சில மாமியார் மருமகள் பேச்சு, தொழிலாளி முதலாளி பேச்சு, எல்லை தகராறு பற்றிய பேச்சு வார்த்தை முள் மேல் சேலை தான்.
"நான் என்ன அவனப் போய் பாக்குறது, அவன் வேணுமின்னா என்ன வந்து பாக்கட்டும்""என் குடும்ப மென்ன பாரம்பரியமென்ன" "அவர் முதல்ல பேசட்டும் அப்புறம் நாம பேசலாம்" போன்ற ஈகோ பேச்சுகளால் இழப்புகள் தான் உண்டாகும்.
சின்ன சின்ன வார்த்தைகளுக்கு விபரீத அர்த்த்ங்கள் எடுத்துக்கொண்டு "என்னை பார்த்து எப்படி அவன் அந்த வார்த்தையை சொல்லலாம்"."இதை குத்திக் காட்டத்தான் அப்படி பேசினான்" என்று மல்லுக்கு போவது. இது போல சில தீப்பொறி வார்த்த்தைகளால் பஞ்சு பொதிகள் பற்றிக்கொண்டு வெட்டு குத்து, கொலை, கோர்ட், கேஸ், ஆயுள் தண்டனை வரை போய் கடைசியில் அன்று அப்படி பேசாதிருந்தால் இன்று இப்படி களி தின்ன வேண்டி வருமா என்று தாமதமாக யோசிப்பார்கள். சிலர் அலட்சியமாக சிந்தும் வார்த்தைகளால் அன்னியோனியமாக பல வருடம் குடும்பம் நடத்திய கணவனும் மனைவியும் டைவோர்ஸ் கேட்டு கோர்ட் வாசலில் ஏறி இறங்குவார்கள். பிள்ளைகள் அனாதைகளாகும்.
பொறுப்பற்ற பேச்சு:
சில தலைவர்கள் விடும் பொறுப்பற்ற அறிக்கைகள் மக்கள் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி விடும். அமெரிக்க அதிபரின் வார்த்தைகள் உலக பொருளாதாரத்தைப் பாதிக்கும். ஒபாமாவின் அறிக்கையால் நம்மூர் சந்தையில் காய்கறி விலை எகிறக்கூடும் .இந்திய அரசியலில் பேசிப் பேசி நாட்டைக் கெடுத்தவர்களும், பேசாமலேயே நாட்டைக் கெடுத்தவர்களும் உண்டு. சில தலைவர்களின் திமிர் பேச்சால் போர் ஏற்பட்டு நாடு அழியும். அவர்களும் அழிவார்கள்.
மோசடிப் பேச்சு:
சாமியார்கள், மத குருக்கள, ஜோசியக்காரர்கள் சொல்வதை கண்னை மூடிக்கொண்டு கேட்கலாம் ஆனால் அறிவை மூடிகொண்டு அல்ல.இது தான் சத்தியத்தின் பாதை என்று தவறாக வழி காட்டும் போலி ஆன்மீக வாதிகளின் கவர்ச்சி பேச்சுகளில் கற்பழிப்பின் லட்சியங்கள் மறைந்திருக்கலாம்.
சமயவாதிகளின், அரசியல் வாதிகளின் சாதுரியப் பேச்சுகள் இளைய சமுதாயத்தை பலிகடாக்களாக மாற்றக்கூடும் .மதங்கள் உருவாக்கும் பயத்தையும், பக்தியையும், சற்று ஒதுக்கி வைத்து விட்டு தர்க்க அறிவின் ஒளியில் பார்த்தால் எல்லா மதத்திலும் அடியில் பெரும் ஓட்டை தான் தெரியும்.
மந்திரவாதி "உனக்கு பக்கத்து வீட்டுக்காரன் சூனியம் வைத்திருக்கிறான் நாற்பது நாளில் கை கால் விளங்காமல் போவாய் ’என்று சொல்வதை நீங்கள் நம்பினால் உங்கள் மனம் அதை உண்மயாக்கும.
குடுகுடுப்பைக்காரன் " நீ ரத்தம் கககி சாவாய்" என்று சொன்னால் அவன் சொல்லுக்கு அந்த பவர் உண்டு என்று மனம் நம்பி விட்டால் பயத்தில் உடனே அட்ரீனலின் சுரக்கும் இதயத்துடிப்பு தாறு மாறாகும், இரத்த அழுத்தம் கூடும்,தாக்குப் பிடிக்காமல் ஏதோ ரத்தக்குழாய் வாய் பிளக்க அவன் வார்த்தை பலித்து விடும்.
சின்ன காஸ் ட்ரபுளை பல மருத்துவ வார்த்தைகளை சொல்லி பயமுறுத்தி ஹார்ட் அட்டாக்காக நம்ப வைத்து பணம் கறக்கும ஒருசில மருத்துவர்களின் வார்த்தைகள் அது போன்றது. ஜோதிடர்களின் பேச்சைக் கேட்டு வாழ்கையை பாழக்குபவர்கள் எத்தனை பேர்கள். நம்பிக்கையை சிறிது மாற்றி வைத்து விட்டு சிறிது சிந்தித்துப் பார்த்தாலே தெரியும் அவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காகவே உங்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று்.
நீர் குமிழிகள்:
குடிகாரன் பேச்சு, கடன் கேட்பவர்கள் பேச்சு, காதலன் பேச்சு, அரசியல்வாதியின் வாக்குறுதி, சீட்டுக்கம்பனி வாக்குறுதி எல்லாவற்றுக்கும் அற்ப அயுள் தான்.
உயர்வு நவிற்சி:
கல்யாணத் தரகரின் பேச்சு, வியாபாரியின் பேச்சு, சேல்ஸ் ரெப்பின் பேச்சு, ரசிகர்கள் பேச்சு, முகஸ்துதி பேச்சு, அடிவருடி பேச்சு ,மாப்பிள்ளை தந்தையின் பேச்சு ,பிள்ளைகளைப் பற்றி பெற்றோர்களின் பேச்சு, ரியல் எஸ்டேட் காரர்கள் பேச்சு எல்லாமே 70 mm ல் DTS effect உடன் இருக்கும். அப்படியே நம்புவோர்க்கு நாமம் தான்.
வஞ்சப் புகழ்சி: சிலர் தமாஷ் பண்ணுகிறேன் என்று கூட இருப்பவர்களையே குத்திக் காட்டுவார்கள். நையாண்டி அடிப்பார்கள் இந்த நகைச்சுவைத் திலகங்கள் நளை வாழ்வின் சறுக்குப்பாதையில் சறுக்கி கீழே போகும் போது அனாதைகளாக மற்றவர்களின் நைய்யாண்டிகளுக்கு கதா பாத்திரமாவார்கள்.
மூடப் பேச்சுகள்:பூனை குறுக்கே போனால்,விதவை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை.பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.போன்ற மூட நம்பிக்கைகளை தனிப் பதிவுதான் போட வேண்டும்.முன்னோர்களின் சாத்திர சம்பபிரதாயாங்கள் அவர்கள் காலத்தில் எதோ ஒரு தேவைக்கு உருவாக்கப்பட்டது,அதை கண்மூடி பின் பற்றாமல் ஏன் எதற்கு எப்படி என்று கேட்டு இப்போதும் அந்த தேவை உண்டா என் ஆய்ந்து அவற்றின் உண்மையான நோக்கமறிந்து செயல் படவேண்டும்.
காதல் பேச்சு:காதலிப்பதை சொல்லி கெட்டவர்களை விட சொல்லாமலேயே கெட்டவர்கள் அனேகம் ."உன்னை விட அழகி யாரும் இல்லை", "நீ தான் நான் பார்த்த முதல் பெண்", "உனக்காக உயிரையும் தருவேன்", நீயின்றி நான் இல்லை" இப்படி எத்தனை பொய்களில் காதலை கட்டி எழுப்புவார்கள், கல்யாணம் என்றால் காணாமல் போவார்கள். அப்படியே கல்யாணம் செய்து கொண்டால் பொய்கள் எல்லாம் சாயம் வெளுக்கும் போது காலம் கடந்திருக்கும்.
குதர்க்கப் பேச்சு: தர்க்கம் ஆரோக்கியமானது,ஆனால் முயலுக்கு மூணுகால் பார்ட்டிகளின் "அதான் அந்த இன்னொரு வாழைப்பழம்" டைப் குதர்கங்களை விட்டு விலகுவது நேரம் மிச்சப்படுத்தும்.
கோபப்பேச்சு: திருத்தும் நோக்கம் கொண்ட கோபம் தேவையானது, நல்லது. தன்னையும் பிறரையும் அழிக்கும் கோபம் தவறானது. கோபமாக பேசுபவர் நம் தவறை திருத்தும் நோக்கத்தில் உரிமை எடுத்துக் கொண்டு கோபப் படலாம். அப்படி ஒருவர் நம்மிடம் கோபமாக பேசும்போது அவரைப் பேச விடாமல் எதிர்த்து பேசக்கூடாது. அவர் நாம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என கருதி நி்றுத்திய பின் உங்கள நியாயத்தை சொல்லிப்பாருங்கள். கோபம் பாசமாகிவிடும்.
சவால் பேச்சு: ஏதோ ஒரு வேகத்தில் பெரிய சவால்கள் விடும்போது அதை நிறைவேற்றும் சக்தி இருக்கிறதா என்று யோசிப்பதில்லை.பின்னர் பெரும் விலை கொடுத்து சவாலை ஜெயிப்பது அல்லது சவால் பிசு பிசுத்து முன்னை விடக் கேவலமாக உணர்வது தேவைதானா?
வசைப் பேச்சு: வசை பாடுவது, திட்டுவது எல்லாம் இயலமையை பறை சாற்றும் வார்த்தைகள்
பொய் : எதெற்கெடுத்தாலும் பொய் பேசுபவர்கள் வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். பின்னர் அவர்களால் எங்கே யாரிடம் என்ன பொய் சொன்னோம் எனறு மறந்து பலரிடம் வகையாய் மாட்டிக்கொள்வார்கள். எல்லோரிடம் "பொய்யன்" என்று சர்டிஃபிகேட் வாங்கிய பின் தனிமைப் படுத்தப்பட்டு மதிப்பிழந்து சிறுமைப் படுவார்கள்.
அதிகமான கெட்ட பேச்சுகள் இருப்பதனால் பதிவு பெரிதாகி விட்டது மன்னிக்கவும். இன்னும் வாழ்வில் தவிர்க்க வேண்டிய பேச்சுகள் ஞாபகம் வந்தால் எழுதுவேன்.உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள். பேச வேண்டிய நல்ல விசயங்கள் பற்றி அப்புறம் சின்னதா ஒரு பதிவு போடலாம்.
ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment