Saturday, 8 August 2009

அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?


அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.

அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு, எனக்கும் இதை போல பல நடந்துள்ளது, குறிப்பாக முன்பு பதிவுலகத்தில். அப்போதெல்லாம் அடைந்த மன உளைச்சல்கள் கணக்கில்லாதது, அந்த சமயத்தில் சரியான அனுபவம் இல்லாததால் அதிகளவில் கோபமே ஏற்பட்டது, புறம் தள்ள தெரியவில்லை.

பொதுவாக எனக்கு கஷ்டப்படுவது பிடிக்கும் அல்லது சவால்களை எதிர் கொள்வது பிடிக்கும். எனக்கு எதிரில் இருக்கும் சவாலை பொறுமையுடன் எதிர்கொள்வேன். பதிவுலகம் வந்த போது அதிகளவில் இந்த அனுபவம் கிடைத்தது. தற்போது ஓரளவு பக்குவம் அடைந்து விட்டேன். எதிலும் அவசரப்படக்கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பதும் நான் தெரிந்து கொண்டதில் குறிப்பிடத்தக்கது. நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.

நம்மை கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்து காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத வேண்டும், நான் அப்படி தான். நான் எதையும் பேச மாட்டேன், யாரை பற்றியும் கூற மாட்டேன். என்னை பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம். எனக்கு இதில் நல்ல ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான். ரஜினி சந்திக்காத பிரச்சனைகளா! அவமானங்களா!! எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதியாக இருப்பார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

நம்மை கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது, நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம். நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள். நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள்.

நான் இணையத்தில் படித்து கொண்டு இருந்த போது லேனா தமிழ்வாணன் அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. இதில் என் மனதில் இருந்ததை அப்படியே கூறியது போலவே இருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். இதை நான் கூறியதாகவே கூறி இருக்கலாம் இருந்தாலும் அனுபவம் மிக்க ஒருவர் இதை கூறுவதை கேட்கும் பொழுது அதற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.

இனி லேனா தமிழ்வாணன் அவர்கள்

"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.

ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.

நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!

அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?

அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.

அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.

வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"

THANKS TO SOURCE: http://www.giriblog.com/2009/07/blog-post_27.html

No comments:

Post a comment