''தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஆய்வு அறிக்கை ஒன்று, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 'இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும்’ சொல்கிறது அந்த அறிக்கை.
2011-ம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்துச் செய்யப்பட்ட ஆய்வில், உலக அளவில் இந்தியாவும் மாநில அளவில் தமிழகமும் முதலிடத்தில் உள்ளன. மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் மாணவர்களால் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை செக்ஸ் என்பது தான்'' இதுபோன்ற அதிர்ச்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார் 'வெளிச்சம்’ என்ற அமைப்பை நடத்திவரும் ஷெரின். 'மாணவர்களே காதலியுங்கள்’ என்ற வித்தியாசமான புத்தகம் மூலம் இளைய தலைமுறையினரின் கவனத்தை ஈர்த்திருக்கும் அவரிடம் பேசினோம்.
''படிப்பைவிட, பாலியல் பிரச்னைதான் பெரும்பாலான மாணவர்களுக்குச் சிக்கலாக இருக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பல பள்ளிக்கூடங்களில் நடந்த மருத்துவப் பரிசோதனையில், 320 மாணவிகள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. முகமே தெரியாத ஒருவரை விரும்பும் காதல், புத்தகத்தோடு கர்ப்பத்தையும் சுமக்கும் மாணவிகள், காதல் என்றால் என்னவென்று புரியாமல், அதில் தோல்வி கண்டு தற்கொலைக்கு ஆளாகும் மாணவிகள் என்று தினமும் பல சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.
புரிதல் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்வதற்காகவும் வசதி இல்லாத குழந்தைகளைப் படிக்க வைக்கவும் ஹெல்ப் லைன் ஆரம்பித்தோம். அதில் 90 சதவிகிதம் மாணவர்கள் காதல் சந்தேகங்களைத்தான் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்கள். 'எனக்கும் என் காதலிக்கும் சண்டை. நான் ஐ-பாட் கேட்டும் தரவில்லை என்றதால் காதலியைக் கைகழுவி விட்டேன்’ என்று கேஷுவலாக சொல்கிறார்கள்.
ஒரு மாணவி தன் மாமாவுடன் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத சென்னைக்குச் சென்றாள். ரூம் எடுத்துத் தங்கி தேர்வுக்குப் புறப்பட்டாள். தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி டி.வி. பார்க்க உட்கார, அதில் ஆபாசப் படம் ஓடுகிறது. 'என்ன மாமா அசிங்கமா இருக்கு’ என்று வாயைத் திறக்கும்முன் இழுத்து அணைத்த மாமா, பாலியல் தொந்தரவு செய்கிறார். தப்பித்து வீடு வருகிறார் மாணவி. அம்மாவிடம் நடந்ததைச் சொல்ல நினைப்பதற்குள், 'இப்போதான் மாமா போன் செஞ்சார். பஸ் ஏத்திவிட்டேன். பத்திரமா வந்தாளான்னு அக்கறையா விசாரிச்சார். உன்மேல மாமாவுக்குத்தான் எத்தனை அக்கறை’ என்று தன் அண்ணனை மெச்சுகிறாள் அந்தத் தாய். தனக்கு நேர்ந்த கொடுமையை அம்மாவிடம் சொல்ல முடியாமல்... அப்பா விடமும் பேச முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கிறாள். இது ஒரு சாம்பிள்தான்... இப்படி நிறையவே நடக்கின்றன.
காதல், செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று பெற்றோர் நினைக்கின்றனர். அதைப்பற்றி விவாதிக்கவே கூடாது என்று கல்விநிறுவனங்கள் கருதுகின்றன. பாலியல் கல்வி தரமறுக்கும் சமூகத்தில்தான் அந்தரங்க ரகசியங்களைச் சொல்லும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பகிரங்கமாக ஒளிபரப் பாகின்றன. அப்பாவும் அம்மாவும் கற்றுத்தராத சாட்டிங், காதல் பாடங்களை மாணவர்கள் ஊடகங்கள் மூலமாக தாங்களாகவே கற்றுக்கொள்கிறார்கள். 'அவன் நல்லவன் என்று நம்பி ஏமாந்துவிட்டேன். நான் சாகப்போகிறேன்’ என்று, தற்கொலைக்கு முயற்சி செய்த ஏராளமான மாண விகளை எனக்குத் தெரியும்.
இந்தச் சூழலில் சிக்கிய மாணவிகள், தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தானாகவோ, நண்பர்கள் மூலமோ பெற்றோரிடம் நடந்ததைச் சொல்லவேண்டும். பாலியல் தொந்தரவை நினைத்து வலிகளோடு, மனஅழுத் தத்தில் வாழ்வதைவிட அநீதியை எடுத்துச் சொல்வதில் தவறில்லை. அத னால் மாணவ- மாணவிகளுக்கு பாலியல் குறித்த புரிதல் தேவையாக இருக்கிறது. பிரச்னைகளை எப்படிக் கையாள்வது என்பதையும் அவர்களுக்குச் சொல்லித்தரவேண்டும்.
பள்ளிகளில் நீதிவகுப்புகள் எடுத்தால் மட்டும் போதாது. பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்ற சுயஆராய்ச்சியை வளர்த்தெடுக்கவேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா போன்றவற்றில் சித்தி ரிக்கப்படும் பாலியல் தூண்டல்களையும், பழிக்குப்பழி வாங்கும் உணர்வுகள் பற்றியும் விவாதத்துக்கு உட்படுத்தினால் அதைப் பின்பற்ற மாட்டார்கள். மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்கள் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றி புரிகிற மாதிரி பக்குவமாக விளக்கவேண்டும். காதல் என்பது ஒரு ஆண், பெண்ணைக் காதலிப்பது மட்டுமல்ல. தேசம், மொழி மீது செலுத்தும் அன்பும் காதல்தான் என் பதை மாணவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
'உன்னை நீயே காதலி, உன் திறமை களைக் கண்டுகொள்வாய். அறிவைக் காதலி, புத்தகங்களில் இடம் பெறுவாய். பெற்றோரைக் காதலி, பாசத்தைக் உணர்வாய் இயற்கையைக் காதலி, தலைமுறை உன்னை வணங்கும். தேசத்தைக் காதலி, வரலாறு உன்னைப் போற்றும்... என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரி யர்களும் கல்வியைத்தாண்டி கவனம் செலு த்தினால் பிள்ளைகள் வாழ்வு பாழாகாது'' என்கிறார் அக்கறையுடன்.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் முதலில் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும்!
நன்றி: ஜூனியர் விகடன்.
No comments:
Post a Comment