மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக ரகுராம் கோவிந்த் ராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மத்திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் பதவிக்கு நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகர் ரகுராம் கோவிந்த் ராஜன்(50) நியமிக்கப்பட்டார். இதையடுத்து ராஜன் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக இன்று பொறுப்பேற்றார். மும்பை மின்ட் தெருவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு வந்த ராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனது பொறுப்புகளை முன்னாள் கவர்னர் சுப்பாராவ் ஒப்படைத்தார்.
ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார். ரிசர்வ் வங்கியின் இளம் கவர்னர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழரான ராஜன் டெல்லி ஐஐடி, அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் ஆகிய இடங்களில் படித்துவிட்டு அமெரிக்காவில் உள்ள மசாசுசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிஹெச்டி பட்டம் பெற்றவர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் நிதி அமைச்சகத்தில் சேர்ந்தார். கடந்த 2003ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை அவர் சர்வதேச பொருளாதார நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக இருந்துள்ளார். முன்னதாக பண வீக்கத்தை கட்டுப்படுத்த அவர் அளித்த பரிந்துரைகளை மத்திய ரிசர்வ் வங்கி ஏற்று அமல்படுத்தியது. அவர் ஏற்கனவே பல பொருளாதார ஆலோசனைக் குழுக்களில் இருந்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் அவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக பொறுப்பேற்றுள்ளார். அவர் இந்திய பொருளாதாரத்தை சீர்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று நம்பப்படுகிறது.
'தற்போது நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண பல திட்டங்கள் உள்ளன. ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அனைவருக்கும் வங்கிச் சேவை, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு ஒரேநாளில் தீர்வு காண மாய மந்திரகோல் எதுவும் நம்மிடம் இல்லை. அதேநேரத்தில் இந்த பிரச்னைகளுக்கு ரிசர்வ் வங்கியால் தீர்வு காண முடியும். ஒவ்வொரு பிரச்னையாக படிப்படியாக தீர்த்து வைக்க திட்டமிட்டுள்ளோம்" என்று ரகுராம் ராஜன் கூறினார்.
தொகுப்பு :மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment