Wednesday, 25 September 2013

ரஞ்சன்குடி கோட்டை சுற்றுலாத்தலம்!! ஒரு பார்வை...


undefined
பெரம்பலூர் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பழங்கால நினைவுச் சின்னமாக விளங்கும் துருவக்கோட்டை என்றழைக்கப்படும் ரஞ்சன்குடி கோட்டையை சுற்றுலாத்தலத்தை  பற்றி இன்று பார்ப்போமே!!



போதிய பராமரிப்பு இன்றி, சிதிலமைடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக இந்தப் பாரம்பரியமிக்க கோட்டை மீண்டும்  மாறி  வருகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, பெரம்பலூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் கம்பீரமாக அமைந்துள்ளது இந்த ரஞ்சன்குடி கோட்டை.
44 ஏக்கர் பரப்பளவில் 17-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் முகமது அலியால் கட்டப்பட்ட இந்த கோட்டையைச் சுற்றி அகழி, கண்காணிப்புக் கோபுரங்கள், பதுங்கு குழிகள், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு ஆகியவை இருக்கின்றன. மதில் சுவர்கள், சூரிய, சந்திரக் குளியலுக்காக கோட் டையின் உச்சியில் ராஜா ராணி குளம் மற்றும் மரண தண்டனைக் கிணறு ஆகியவையும் உள்ளன. சுவர்களில் கலைநயம் கொஞ்சி விளையாடுகிறது என்றாலும் கோட் டையின் பெரும்பாலான பகுதிகள் சிதிலம் அடைந்து கிடந்தது.
பகைவர்கள் ஊடுருவலைத் தடுக்கும் வகையில், கோட்டையைச் சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு, உயரமான மதில் சுவர்களுடன் காட்சியளிக்கும் இந்தக் கோட்டை, செஞ்சி கோட்டையை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
போதிய வரலாற்று ஆதாரங்கள் கிடைக்காத நிலையில், பல்வேறு கால கட்டங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கோட்டையின் வரலாறு வெளியிடப்பட்டுள்ளது.  
கோட்டையின் மேல்புற மதில் சுவரின் நான்கு திசைகளிலும் பீரங்கி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டைச் சுவர்களில் மீன் சின்னமும், போர் வாளும் பொறிக்கப்பட்டுள்ளன.
கோட்டையின் முதல் தளத்தின் வழிபாட்டு மண்டபத்தில் உள்ள தூணில் சிவபெருமானை பசு வணங்குவது போன்ற சிற்பமும், பல்வேறு வகையிலான சிறு, சிறு சிற்பங்களும் உள்ளன. மேலும், இதே பகுதியில் முஸ்லிம் மக்கள் தொழுகை நடத்துவதற்காக பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. இரு மதத்தவர் தொடர்புடைய விஷயங்கள் இக் கோட்டையில் இருப்பது, வரலாற்று ஆய்வாளர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் புரியாத புதிராக உள்ளது.
கோட்டையின் மேல்புறத்தில் ராணியின் அந்தப்புறம், இதையொட்டி நீச்சல் குளம், ஆயுதக் கிடங்கு, சுரங்கப் பாதைகள் என முடியாட்சி மன்னர்களின் அடையாளமாக விளங்கும் இக் கோட்டை, நவீன கால கட்டடக் கலை வல்லுநர்களை வியக்க வைக்கிறது.
கி.பி 1751-ல் பிரெஞ்சுகாரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஆங்கிலேயர்கள் தோல்வியுற்றனர் என்பதும், ஜாகீர்தார்கள் இக் கோட்டையை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் என்பதும், அதன்பிறகு கந்தாசாகிப் என்ற மன்னர் வசம் இக் கோட்டை இருந்ததும் படிப்படியாக கிடைத்த வரலாற்று ஆதாரங்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், இக் கோட்டையின் முழு வரலாறு இதுவரை கிடைக்கவில்லை.
தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பீரங்கிக் குண்டுகள், பழங்கால நாணயங்கள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்கள் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கட்டடக் கலையின் சிறப்பை பறைசாற்றும் இந்த நினைவுச் சின்னத்தைச் சீரமைத்து, சுற்றுலாத் தலமாக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாகவும், காதலர்கள் பொழுதுபோக்கும் கேளிக்கை விடுதியாகவும் இக் கோட்டை மாறியது. இதன் காரணமாக இக் கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது..
இந்தக் கோட்டையை 2003-ல் சுற்றுலா ஸ்தலமாக அரசு அறிவித்து, கோட்டை பராமரிப்பு பணிக்காக லட்சம் ஒதுக்கியது. ஆனால், கோட்டையில் ஒரு டியூப் லைட் கூட போடாமல் அரியலூர்- கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு அந்தப் பணத்தை முழுமையாக செலவு செய்து விட்டார்கள். அதுக்குப் பிறகு இரண்டு முறை கோட்டைக்கு பணம் ஒதுக்கீடு செய்தும், தொல்பொருள் ஆய்வுத் துறை அனுமதி கிடைக்கலை என்று காரணம் சொல்லி, அந்தப் பணத்தை வேற செலவுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒவ்வொரு கலெக்டரும் வந்து கோட்டையை சுத்திப் பர்த்துட்டு, அதோட மறந்துடுவாங்க. 
காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னத்தை காப்பது அரசின் கடமை என்ற வகையில், இந்தக் கோட்டையைச் சீரமைத்து பெரிய  சுற்றுலாத் தலத்திரிக்கு தேவையான அதிக நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுலா பயணிகளின் நலனுக்காக குடிநீர், சுகாதாரம், விளையாட்டு அரங்கம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதுடன், பழமைகால மரபு சின்னங்கள் அழியாமல் பாதுகாக்க  வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு....
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment