Monday 11 November 2013

சிரியா உள்நாட்டுப் போரில் 11 ஆயிரம் குழந்தைகள் பலி !!

ஆசியா கண்டத்தில் சிரியா நாடு உள்ளது. தென்மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான இது எண்ணை வளம் மிக்கது. இதன் மொத்தபரப்பளவு 71,500 சதுர மைல். வடக்கில் துருக்கியும், மேற்கில் இஸ்ரேல், லெபனானும், கிழக்கில் ஈராக்கும், தெற்கில் ஜோர்டானும் எல்லைகளாக உள்ளன. சிரியாவின் அதிபராக பஷர் அல்–ஆசாத் உள்ளார். கடந்த 1971–ம் ஆண்டு முதல் கடந்த 42 ஆண்டுகளாக இவரது குடும்பத்தினர் அதிபராக பதவி வகித்து வருகின்றனர். அவர்களின் சர்வாதிகார போக்கு மக்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் கோபம் நீறுபூத்த நெருப்பாக தகித்து கொண்டிருந்தது. கடந்த 2010–ம் ஆண்டு டிசம்பரில் துனிசியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வெடித்தது. அது படிப்படியாக வலுவடைந்து 2011–ம் ஆண்டு பிப்ரவரியில் கலவரமாக மாறியது. அதே போன்று அண்டை நாடுகளான எகிப்து, லிபியாவுக்கும் பரவி அது உள்நாட்டு போர் ஆக உருவானது. மக்கள் சக்தியை தாக்கு பிடிக்க முடியாமல் துனிசியா, எகிப்து நாடுகளின் அதிபர்கள் ஷின் எல் அபிடினே பென் அலி, ஹோஸ்னி முபாரக் ஆகியோர் பதவி விலகினர். லிபியாவில் அதிபர் மும்மர் கடாபி புரட்சிபடையினரால் அடித்துக் கொல்லப்பட்டார். தற்போது அங்கு குடும்ப ஆட்சி மறைந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. அதே நிலை சிரியாவிலும் தொடர அந்நாட்டு மக்கள் விரும்பினர். அதை தொடர்ந்து அரபுநாடுகளில் ஒன்றான சிரியாவிலும் கடந்த 2011 மார்ச் 15–ந்தேதி மக்கள் புரட்சி வெடித்தது. தொடக்கத்தில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. அது மாபெரும் புரட்சியாகி 2011 ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அளவில் போராட்டம் வெடித்து கலவரமாக மாறியது. தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், அலெப்போ உள்ளிட்ட நாட்டின் அனைத்து நகரங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அரசுக்கு எதிராக சிரியா சுதந்திரப்படை என்ற மக்கள் புரட்சி படை கடந்த 2011 ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. அதில், அரசின் நடவடிக்கை பிடிக்காத ராணுவவீரர்கள், ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் சேர்ந்தனர். இதனால் அப்படை வலுவடைந்தது. அவர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து ராணுவத்தை எதிர்த்து போரிட்டனர். கலவரத்தை அடக்க ஆசாத் தனது ராணுவத்தை ஏவி விட்டார். அவர்கள் நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்களால் குவியல் குவியலாக பொதுமக்கள் கொல்லப்பபட்டு வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் வரை சுமார் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிரியா உள்நாட்டுப் போரில் இதுவரை 11 ஆயிரத்து 420 குழந்தைகள் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவலை லண்டனை சேர்ந்த ஆக்ஸ்பர்ட் ஆய்வு குழுவினர் வெளியிடடுள்ளனர். இவர்கள் அனைவரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 128 குழந்தைகள் 21-8-2013 அன்று நடத்தப்பட்ட ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அகதிகள் நிவாரணத்துக்கான தூதர் அண்டானியோ கட்டரர்சின் கணிப்புப்படி, உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவைச் சேர்ந்த 6 ஆயிரம் பேர் தினசரி அகதிகள் ஆகும் நிலை உள்ளதாகவும், குறைந்தபட்சம் 68 லட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் அவசியம் என்றும் கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் 42 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
சர்வதேச உணவுத் திட்ட அமைப்பின் ஆய்வுப்படி, சிரியாவில் 40 லட்சம் பேர் அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுவது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment