இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயர சிலை ஒன்று எழுப்பத் திட்டமிடப்பட்டு நவம்பர் 1ஆம் நாள்இரும்புச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றது.உலகிலேயே உயரமான இச்சிலை நர்மதை அணையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை மாவட்டத் தில் கேவடியா என்ற தீவுப் பகுதி யில் 2,603 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. இது கட்டி முடிக்கப்பட்ட பிறகு உலகின் மிக உயர்ந்த சிலை என்ற சாதனை இந்தச் சிலைக்கே சொந்தம். இப்போதைக்கு உலகின் உயர்ந்த சிலைகள் விவரங்களை இங்கே பார்ப்போமே!!
தி மதர்லேண்ட் கால்ஸ்
ரஷ்யாவின் வால்காகிராட் பகுதியில் உள்ள இந்தச் சிலையின் உயரம் 279 அடி. 1967ல் இது கட்டி எழுப்பப்பட்டபோது உலகின் மிக உயரமான சிலையாக விளங்கியது. ஸ்டாலின்கிராட் என்னுமிடத்தில் நடந்த போரில் ரஷ்யா பெற்ற வெற்றியின் நினைவாக அமைக்கப்பட்ட இந்தச் சிலை தாய்நாட்டைக் குறிக்கும் விதமாகப் பெயரிடப்பட்டது. வாளை வீசிப் போரிடும் ஒரு பெண் போன்றிருக்கும் இந்தச் சிலையின் அமைப்பு, இன்றுவரை சிலைக் கட்டுமானங்களில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகிறது.
ஆப்ரிக்க மறுமலர்ச்சி சின்னம்
ஆப்ரிக்காவில் உள்ள செனகல் நாட்டின் தலைநகரம் டாகரில் இந்தச் சிலை 160 அடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கிறது. பிரான்ஸின் ஆதிக்கத்திலிருந்து செனகல் விடுதலை பெற்ற 50வது ஆண்டு நினைவாக இந்தச் சிலை 2010ம் ஆண்டு திறக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட இந்தச் சிலைதான் ஆப்ரிக்காவின் மிக உயரமான சிலை.
பீட்டர் தி கிரேட்
ரஷ்ய கப்பற்படை உருவாகி 300 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் இந்தச் சிலை மாஸ்கோவில் 1997ம் ஆண்டு திறக்கப்பட்டது. ரஷ்ய கப்பற்படையை உருவாக்கிய சக்கரவர்த்தி பீட்டரின் நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டது. 321 அடி உயரத்தில் கப்பல் வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிலை 1000 டன் எடை கொண்டது.
யான் மற்றும் ஹுவாங் சக்கரவர்த்திகள்
சீன வரலாற்றில் இருபெரும் சக்கரவர்த்திகளாக மதிக்கப்படுகிறவர்கள் யான் டி மற்றும் ஹுவாங் டி. அவர்களின் திருமுகத்தை மட்டுமே மிக பிரமாண்டமாக செதுக்கி அமைத்த சிலை இது. உயரம் 106 அடி என்றாலும் அகலம் மற்றும் அளவு அடிப்படையில் மிகப் பிரமாண்டமானது (ஒரே ஒரு கண் மட்டுமே 3 மீட்டர் நீளமாம்). சீனாவின் செங்சோவ் நகரில் அமைந்திருக்கும் இந்தச் சிலை திறக்கப்பட்ட ஆண்டு, 2007.
மீட்பர் கிறிஸ்து
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள இந்த இயேசு கிறிஸ்து சிலை, 1933ம் ஆண்டு எழுப்பப்பட்டது. உலகப் போரின் முடிவில் பிரான்சில் 'ஆர்ட் டெகோ' எனும் ஒருவகை அலங்காரக் கலை உருவானது. அந்தக் கலையைக் கொண்டு ஒவ்வொரு அங்குலமும் அழகுபடுத்தப்பட்ட சிலை இது. 98 அடி உயரம் கொண்ட இந்தச் சிலைதான் உலகிலேயே அதிக உயரமான 'ஆர்ட் டெகோ' சிலை!
ஸ்ப்ரிங் டெம்பிள் புத்தர்
சீனாவின் சௌகன் எனும் நகரத்தில் உள்ள இந்தச் சிலை, 2002ல் கட்டி முடிக்கப்பட்டது. 420 அடி உயரம் கொண்ட இதுதான் இன்று உலகின் மிக உயரமான சிலை. ஸ்பிரிங் என்பது நீர் ஊற்றைக் குறிக்கும். இந்தச் சிலையும் இதை ஒட்டிய கோயிலும் இயற்கை வெந்நீர் ஊற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்தப் பெயர். ஆப்கானிஸ்தானில் பாமியன் புத்தர் சிலையை தாலிபன்கள் உடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த சிலை நிறுவப்பட்டது.
அமைதி தேவதை
வெனிசுலா நாட்டில் உள்ள கன்னி மேரி சிலையான இதனை 'விர்ஜின் ஆஃப் பீஸ்' என்கிறார்கள். 1983ல் கட்டி முடிக்கப்பட்ட இந்த 153 அடி உயரச் சிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நின்று பார்க்கும் வசதி உண்டு. சிலை அமைந்துள்ள ட்ருஜில்லோ நகரம் முழுவதையும் இதன் மேலிருந்து பார்க்க முடியுமாம்.
சுதந்திர தேவி சிலை
கிட்டத்தட்ட அமெரிக்காவின் அடையாளம் இது. சிலையின் உயரம் 151 அடி என்றாலும் இந்தப் பட்டியலில் உள்ள மற்ற எந்தச் சிலையையும் விட இதன் 'புகழ் உயரம்' அதிகம். அமெரிக்க விடுதலையின் அடையாளச் சின்னமாக 1886 அக்டோபர் 28ம் நாள் இது அமெரிக்க மக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இன்றும் ஆண்டுக்கு 40 லட்சம் பார்வையாளர்களை ஈர்க்கிறது இந்தச் சிலை.
வீர அபய ஆஞ்சனேய ஹனுமான் சுவாமி சிலை
ஆந்திராவின் விஜயவாடா அருகே பரிதலா எனுமிடத்தில் உள்ள இந்தச் சிலைக்கு பெயரைப் போலவே உயரமும் நீளம் 135 அடி. 2003ல் திறக்கப்பட்ட இந்தச் சிலைதான் இப்போதைக்கு இந்தியாவின் மிக உயரமான சிலை. உலகெங்கிலும் உள்ள ஹனுமான் விஸ்வரூப சிலைகளில் அதிக உயரமானதும் இதுவே!
திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை பற்றி அய்யன் திருவள்ளுவர் சிலை என்பது திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு கன்னியாகுமரிக் கடலில், கடல் நடுவே, நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயரச் சிலை ஆகும்.
திருவள்ளுவர் சிலை பல கற்களைக் கொண்டு கட்டப்பட்ட பல மாடிக் கட்டிடம் போன்ற அமைப்பு கொண்டதாகும். உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. சிலையினுள் 130 அடி உயரம் வரை வெற்றிடம் உள்ளது. இந்த வெற்றிடம் சிலையின் ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்தும் நுட்பமுடையது. கல்லால் ஆன உத்திரங்களும், கட்டாயங்களும் பரவப்பட்டு சிலை எப்பக்கத்திலும் சாய்ந்து விடாது நேரே நிற்குமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது. மண்டபத்தின் உட்புறச் சுவற்றில் ஒவ்வொரு அதிகாரத்திலிருந்து ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும் அவற்றுக்கு நிகராக ஆங்கில மொழி பெயர்ப்பிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிலை குறிப்புகள்
மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்
சிலை அளவுகள்
முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு .அஜ்மல் கான்.
No comments:
Post a Comment