சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே காமராஜர் சாலையின் நடைமேடையிலும், இணைப்புச் சாலையிலும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை காலை திடீரென போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்தப் போராட்டத்தில் முதலில் குறைந்தளவு இளைஞர்களே காணப்பட்டனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நண்பகலுக்கு பின்னர் போராட்டத்தில் பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும், பீட்டா அமைப்பை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சிக் கூட்டத்தை மட்டுமே பார்த்து பழகிப் போன தமிழக மக்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது சமூக ஊடகத்தின் வலிமை முழுமையாகப் புரிந்தது.
இப்போது ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்த அளவுக்கு வீரியமிக்க அளவுக்கு வளர்ந்தற்கு சமூக ஊடகங்கள் தான் காரணம்.
#JusticeForJallikkattu #Jallikkattu உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து அது ட்விட்டரில் தேசிய அளவில் அதிகம் பேரால் பேசப்பட்ட ட்ரெண்டாக இன்று மாறியது.
சென்னை மெரினாவில் கடந்த 8ம் தேதி கூடிய கூட்டம் முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை ஊடக விளம்பரத்தாலோ, துண்டு பிரசுரங்கள் அல்லது வால் போஸ்டர்கள் மூலமாகவோ கூடிய கூட்டம் அல்ல. முழுக்க முழுக்க சமூக வலைதளங்கள் மூலம் தகவல்களைப் பெற்ற இளைஞர்கள் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஸ்மார்ட்போன் பயன்பாடும், இணையத்தின் அசுர வளர்ச்சியும் இந்த போராட்டத்தில் பங்கேற்றோரின் எண்ணிக்கையை அதிகரித்தது. அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலும் சமூகவலைதளங்கள் மூலமாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. சமூகவலைதளங்கள் மூலமாகவே இந்த செய்தியை அறிந்துகொண்ட இளைஞர்கள் சென்னை மெரினாவில் இரண்டாவது முறையாக ஒன்று கூடினர்.
No comments:
Post a Comment