Thursday, 30 November 2017

மாடுலர் கிச்சன் பற்றிய ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி..

ஒரு வீட்டில் சமையலறை என்பது மிகவும் இன்றியமையாதது. இல்லத்தின் பெண்கள் அதிக நேரம் புழங்கும் இடம் என்பதாலும், குடும்பத்தினரின் பசியைத் தீர்த்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் இடம் என்பதாலும் சமையலறை வீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றது.

பெண்கள் தங்களுடைய அதிகமான நேரத்தைச் சமையலறைகளில் செலவழிக்கின்றனர். சமையலறை வடிவமைப்பை அவர்கள் சமைப்பதற்கு ஏதுவாக அமைப்பதால் அவர்களுக்கு நேரம் சேமிக்கப்படும். நேர்த்தியாக வடிவமைத்தால் இடமும் சேமிக்கப்பட்டு கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலறை பழமையானதாக இருந்தாலும் கையாளுவதில் எளிமை இருந்தால் அனைவரும் விரும்புவர்.


உள் அலங்காரத்தின் சாத்தியங்கள் வீட்டு வரவேற்பறையோடு முடிந்து விடவில்லை. சமையலறையிலும் உள் அலங்காரம் சாத்தியமே. நவீன வடிவமைப்புகளோடு தயாரிக்கப்படும் ‘மாடுலர் கிச்சன்’ பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு பயன்படுத்துவதற்கும் எளிதாக இருக்கிறது.


விதவிதமான வடிவங்கள்

மாடுலர் கிச்சன் அமைப்புகள் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை சமையலறையின் பரப்பளவுக்கு ஏற்றவகையிலும் விருப்பமான வடிவமைப்பிலும் தேர்வு செய்யலாம். இவை நீளமான செவ்வக வடிவத்தில் மட்டுமின்றி எல் வடிவத்திலும் யு வடிவத்திலும்கூட கிடைக்கின்றன. எனவே அறையின் வடிவத்திற்கு தகுந்தபடி மாடுலர் கிச்சனை வாங்கமுடியும்.

சமையலறை பொருட்களை வகைபிரித்து அடுக்குவதன் மூலமாக குறைவான இடத்தில் அதிக பொருட்களை அடுக்க முடியும். எனவே இடத்தை மிச்சப்படுத்த முடியும். நகர வாழ்க்கையில் சமையறைக்காக அதிக இடத்தை ஒதுக்க முடியாதவர்கள் மாடுலர் கிச்சனை பயன்படுத்தி இடப்பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

எளிதில் இடம் மாற்றலாம்


வழக்கமான சமையலறை வடிவமைப்புகள் நிலையானதாக இருக்கும். அவற்றை இடம் மாற்ற முடியாது. ஆனால் மாடுலர் கிச்சனை பகுதி பகுதியாக பிரிக்கவும் மீண்டும் இணைக்கவும் முடியும். இதனால் அடிக்கடி பணியிடம் மாறுபவர்களும் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மாடுலர் கிச்சன்களை பயன்படுத்தலாம். பகுதி பகுதியாக பிரித்தெடுக்க முடியும் என்பதால் ஏதாவது ஒரு பகுதி பழுதடைந்தால் அதை பிரித்தெடுத்து எளிதாக பழுது நீக்கி மீண்டும் பொருத்தலாம்.

இந்த அமைப்பில் மளிகைப் பொருட்கள், பருப்பு வகைகள் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான அடுக்குகள் இருக்கின்றன. மேலும் குப்பைகளை போடுவதற்கான தொட்டியும் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு எளிதானது.

பொருட்களை அடுக்கும் முறை

சமையறையில் பொருட் களை சரியாக அடுக்குவதன் மூலமாக பெருமளவில் சிரமங்களை தவிர்க்க முடியும்.

அடிக்கடி பயன்படுத்தும் எடை குறைவான பொருட்களை தோள் மட்டத்தின் உயரத்தில் அடுக்கி வைக்க வேண்டும். தினந்தோறும் பயன்படுத்த வேண்டிய ‘மிக்ஸி ஜார்’ போன்ற சற்று எடை அதிகமான பொருட்களை இடுப்பளவு உயரத்தில் வைக்க வேண்டும். இதன்மூலம் குனிந்து அவற்றை தூக்குவதை தவிர்க்கலாம்.

எப்போதாவது பயன்படுத்தும் எடை அதிகமான பொருட்களை அலமாரியின் அடியில் உள்ள அடுக்கில் வைக்கலாம். மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்படாத பலவகையான பொருட்களையும் அலமாரியின் மேல் அடுக்கில் வைக்கலாம்.


ஒரு முழுமையான பர்ச்சேஸ் வழிகாட்டி!

‘ஒழுங்கா எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் சொல்லு... ஏதாவது கேட்டா விரல் நுனியில் வச்சு அசத்தணும்’ என தோழிகள் சொல்லவே, ‘இன்ஸ்பையர் இன்டீரியர்’ வினோத்திடம் இன்னும் விவரங்கள் வாங்கினேன்...

மாடுலர் கிச்சனுக்கு ஒரு லட்சம் முதல் 20 லட்சம் வரை... ஏன் 50 லட்சம் ரூபாய் செலவு செய்பவர்கள் உண்டு. எனவே, நம் பட்ஜெட்டுக்கு ஏற்ப திட்டமிடுவது மிக அவசியம். மாடுலர் கிச்சனை மரத்தில் செய்த காலம் மலையேறி விட்டது. சொற்பமாக சிலர் செய்தாலும், பெரும்பாலும் MDF, HDF, மெம்பரைன், பிளைவுட், பார்ட்டிகிள் போர்டு என்று பல வகைகளில் இதன் மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. ‘மரைன் பிளை (Marine ply) போட்டால் கப்பல் போல தண்ணில கிடந்தாலும் ஒன்றும் ஆகாது’ என்று கூட கேள்விப்பட்டு இருப்போம். நிஜம் என்ன என்று பார்ப்போம்.






இதில் இரு வகை உண்டு. உள்ளே அலமாரி செய்யும் பெட்டி. அடுத்து ஷட்டர்ஸ் எனப்படும் கதவுகள். கதவுகளுக்கு அலங்கார அமைப்பு தேவைப்படும். உள்ளே உறுதியான மூலப்பொருளில் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

பிளைவுட் (Plywood)


மரங்களில் மட்டுமே நாம் தயாரித்துக் கொண்டு இருந்த போது, அதற்கு மாற்றாக இது உள்ளே வந்தது. மரங்களை ஷா மில்லில் கொடுத்து மிகச் சிறியதாக - அதாவது, உருளைக்கிழங்கை சிப்ஸுக்கு சீவுவது போல சீவி படிவம் படிவமாக எடுப்பார்கள். அவை வெநீர் (Veneer) தகடுகள் எனப்படும். இவற்றை நாம் ஒட்டி மேலே பாலீஷ் போட்டால் மரத்தில் செய்த மரச் சாமான்கள் போலவே இருக்கும். கடைகளில் veneer தகடுகள் பல தரங்களில் விற்கப்படுகின்றன.

இதுபோன்ற பல தகடுகளை ஒட்டி செய்யப்பட்டதே பிளைவுட். மரத்தில் சுருங்கி விரியும் தன்மை இருப்பது போல இவற்றில் இருப்பதில்லை. ஆனால், இது மரத்தின் துகள்களை வைத்தே வடிவமைக்கப்படுகிறது. முதன்முதலில் 1797ம் ஆண்டிலேயே வெநீர் தகடு தயாரிக்கப் பட்டு விட்டது. 1880லேயே நியூயார்க் நகரத்தில் ஓவியர்களுக்கு பிளைவுட் சிறு பலகைகள் விற்று இருக்கிறார்கள். பிளைவுட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஹார்ட்வுட், டிராபிகல் வுட், சாஃப்ட் வுட், ஏர் கிராப்ட் பிளைவுட், ஃப்ளக்சிபில் மற்றும் மரைன் மற்றும் சில வகைகள்.

இதில் மரைன் பிளைவுட் பூஞ்சை அதிகம் பிடிக்காது. அதே நேரம் ஈரத்தன்மையை அதிகம் தாங்கும் சக்தி உண்டு. விலையும் சற்று அதிகம். தரம் அடுத்து. ஒவ்வொரு பிளைவுட்டிலும் தர வேறுபாடு உண்டு. A கிரேடு என்றால் இரு பக்கமும் எந்தப் பொக்கும் குறையும் இல்லாத வெநீர் தகடுகளால் ஆனது.


A/BB கிரேடு என்பது பின் பக்கத்தில் முடிச்சுகள், சிறிது பொக்குகள் உள்ள வெநீர் தகடுகளால் ஆனது B கிரேடு... இரு பக்கமும் சிறிது முடிச்சுகளும், சிறிது நிறம் வெளிறியும் இருக்கக் கூடும். B/BB.B.C/D ஆகிய குறியீடுகளில் தரம் குறைந்து கொண்டே இருக்கும். WG என்றால் ஓட்டைகள் சரி பார்க்கப்பட்டு இருக்கும்.

X என்றால் எல்லா பிரச்னைகளும் (நாம் எதுவும் கேள்வி கேட்க முடியாது!) அனுமதிக்கப்பட்டு இருக்கும். WBP குறியீடு எனில் மரைன் பிளை. தட்பவெப்பம் மற்றும் நீராவிக்கு எதிராக பதப்படுத்தியது. பொதுவாக 40 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை பல்வேறு தரத்தில், விலையில், பிராண்டுகளில் கிடைக்கும். ப்ரீ-லேமினேட்டட் பிளைவுட் வகை என்றால், அழுத்தத்தில் சன்மைக்கா எனப்படும் லேமினேஷன் ஒட்டப்பட்டு இருக்கும். நாமே ஒட்டும்போது சில நேரம் பிய்ந்து வரும் வாய்ப்புகள் அதிகம்.

பார்ட்டிகிள் போர்டு (Particle Board)


இவை சிப் போர்டு எனவும் அழைக்கப்படுகின்றன. டிம்பர் டிப்போ எனப்படும் மரப்பட்டறைகளில் மிச்சம் இருக்கும் மரத் துகள்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்த போது பிறந்ததே பார்ட்டிகள் பலகை. விலை குறைவாகவும், மிகச் சீராகவும் இருக்கும். இதற்கான சிப்பிங் இயந்திரத்தில் மரக் கழிவுகள் மற்றும் மரச் சீவல்கள், பட்டைகள் போடும் போது சீரான தூள்கள் கிடைக்கும். இவற்றைப் பலகையாக மாற்றும் போது வாட்டர் ப்ரூஃப், ஃபயர் ப்ரூஃப் போன்ற விஷயங்களுக்கு சில வேதிப்பொருட்கள் சேர்ப்பார்கள்.

இப்படி கோந்து, வேதிப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டே அதிக அழுத்தத்தில் பலகைகளாக மாற்றப்படுகிறது. இவை மிக தக்கையாக எடை இல்லாமல் இருக்கும். இதன் மேல் தகடுகளை ஒட்டி தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்தலாம். பூச்சி எளிதில் பிடிக்காது. விலை மிக மிகக் குறைவு. விலைக் குறைவான மரச் சாமான்கள் இப்போது நிறைய கடைகளில் கிடைக்கிறது. அவை பெரும்பாலும் பார்ட்டிகிள் பலகைக் கொண்டே தயாரிக்கப் பட்டு இருக்கும்.

பல வீடுகளில் நவீன மரச் சாமான்கள் வாங்க காரணம் பார்ட்டிகிள் பலகை என்று கண்டிப்பாக சொல்லலாம். எல்லாருக்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையில் கிடைப்பது இவை மட்டுமே. ரெடிமேட் தக்கையான மர அலமாரிகள், கம்ப்யூட்டர் மேசைகள், பூஜை அறை, வரவேற்பறை அலமாரிகள், புத்தக அலமாரிகள் போன்றவை இவற்றில் விலை குறைவாக கிடைக்கின்றன. உடையாமல் பார்த்துக் கொண்டால் போதும். பூச்சி அரிப்பு, கரையான், நீரால் அளவு மாறும் பிரச்னைகள் இல்லை. இவற்றின் தேவை சிக்கனத்துக்கு தேவை.
MDF எனப்படும் Medium Density Board இதுவும் ரெடிமேட் பலகை வகையை சேர்ந்ததுதான். அடிக்கடி காதில் விழும் பெயராக இருக்கும். திடம் மற்றும் மென்மையான மரத்தின் மர நார்கள் அதிக வெப்பத்திலும் அழுத்தத்திலும் சில வேதியியல் பொருட்கள் சேர்ப்பதின் மூலம் கடின பலகையாக மாற்றப்படுகிறது. இவற்றிலும் சில வகைகள் உள்ளன. ஒன்று ஈரப்பதம் பாதிக்காமல் இருக்கும் வகை. அடுத்து ஃபயர் ரெசிஸ்டன்ட் எனப்படும் சூடு தாங்கும் பலகை. இதன் அடர்த்தி 500 kg/m3 (31 lb/ft3) - 1000 kg/m3 (62 lb/ft3) என இருக்கும். 

இது பார்ட்டிகிள் போர்டு போல வெறும் துகள்களில் இருந்து தயாரிக்கப்படுவதில்லை. ஆஸ்திரேலியா, தெற்கு அமெரிக்க பகுதிகளில் வளரும் பின் மரங்கள் கட்டையாக நறுக்கப்பட்டு, தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகின்றன. அவை சிறியதாக சீவப்படுகின்றன. இப்போது நாணல் போன்ற ஒரு தாவரம், மூங்கில் போன்றவற்றில் இருந்து கூட தயாரிப்பு நடைபெறுகிறது. இவை வேகமாக வளர்ந்து பலன் தருவதால், மரங்களை வெட்டுவது போல இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்காது.


இதில் பொக்கு, முடிச்சுகள், வளையங்கள் இருக்காது. மேலே வெகு நேர்த்தியாக இருக்கும். இதனால் மரச் சாமான்கள் செய்வது எளிது. பிளைவுட், வெநீர் தகடுகளை விட இன்னும் நன்றாக இருக்கும். விலை குறைந்த வகைகளும் உண்டு. ஈரத்துணியில் துடைக்கக் கூடாது. ஈரப்பதம் அல்லது நீர் புழங்கும் அறைக்கு நல்லதல்ல. மரத்தை விட விலை குறைந்தது. ஆனால், மரம் போல இஷ்டத்துக்கு ஆணி அடிக்க முடியாது. மரம் அளவுக்கு உறுதி இல்லாததே காரணம்.






HDF எனப்படும் High Density Fibre Board கிட்டத்தட்ட MDF பலகைகள் போலவேதான் இதன் தயாரிப்பும். இவை இன்னும் அதிக அழுத்தத்தில், வெப்பத்தில், அதிக உறுதியாக மேம்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. MDF, பார்ட்டிகிள் பலகைகளை விட தரம் வாய்ந்தது. இன்னும் நேர்த்தியாக இருப்பதுடன், தச்சு வேலைகளுக்கு இன்னும் உறுதியாக நிற்கும். நவீன மாடுலர் சமையல் அறைகளுக்கு மிகப் பொருத்தமானது. விலை மிக அதிகம் அல்ல. தரமும் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கும்.

இதையும் ஈரப்பகுதியில் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. ஈரத்துணியில் துடைப்பதும் அத்தனை நல்லதில்லை. நாம் மேலே ஒட்டும் லேமினேஷன் தரத்தை பொறுத்தே, அதன் பராமரிப்பு தேவைகள் இருக்கும். மரம் அளவுக்கு ஆணிகள் அடிக்க முடியாது. அதில் மட்டுமே மரத்தில் இருந்து வேறுபடுகிறது.
பிளாக் போர்டு (Block Board) இது மரத்துண்டுகளால் ஆனது. மரத்துண்டுகளை வெப்பத்திலும் அழுத்தத்திலும், வேதியியல் பொருட்கள் சேர்த்து இணைக்கப்படுகிறது. மரம் போல் கோடுகள் அமைப்பு இருக்காது. மரத்தின் வடிவு தேவை என்றால், மேலே வெநீர் தகடுகள் ஒட்டி பாலீஷ் செய்யலாம். இதன் மேல் நேரடியாக மேட் ஃபினிஷ் பெயின்ட் அடிக்கலாம். இதையும் நீரின் அருகில் அதிக நேரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தச்சு வேலைகளுக்கு மிக எளிது. இந்த முறையில் கதவுகள் மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் உள்ள ஒரு பிரச்னை... மற்ற பலகைகளை விட விலை அதிகம் என்பதே.



ரப்பர் வுட்


இப்போது கடைகளில் ரப்பர் வுட் எனப்படும் மரத்தில் பல மரச்சாமான்கள் வருவதை பார்க்கலாம். வேதியியல் பொருட்களில் ஈரப்பத பாதுகாப்பு, பூச்சித் தடுப்பு எல்லாம் செய்து பாலீஷ் போட்டு விற்கப்படுகிறது. இவற்றிலும் மாடுலர் கிச்சன் செய்யலாம். கொஞ்சம் விலை அதிகம். இதுபோன்று தேக்கு மரங்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன.


வெநீர் தகடுகள் (Veneer)

மரத்தை மெல்லிய தகடுகளாக மாற்றிப் பயன்படுத்துவதை வெநீர் தகடுகள் என்கிறோம். இவற்றில் பட்டைகளும் உண்டு. இவற்றை ஒட்டி மேலே பாலீஷ் செய்தால் நிஜ மரத்தில் செய்தது போலவே தோற்றம் வரும்.


அலங்கார தகடுகள் (lamination Sheets)

பிளைவுட், பார்ட்டிகிள் போர்டு மேலே ஒட்டும் தகடுகள். வேதியியல் பொருட்கள். சிறு எச்சரிக்கை. மரத்தை விட இவை எத்தனையோ சிறப்புகள் பெற்று இருந்தாலும், ஒரு பிரச்னை உண்டு. பெரும்பாலான பிளைவுட் அல்லது போர்டுகள் தயாரிக்கும் போது உபயோகிக்கும் வேதிப்பொருள் Formaldehyde. இது பெரும்பாலும் ஈரப்பதம் தாங்க உபயோகப்படுத்தப்படுகிறது. வேறு சிறப்பம்சங்கள் தேவை என்றால் (Water resistant, Fire resistant), அதற்குரிய வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.


ஃபார்மல்டிஹைட் வேதிப்பொருளானது, வெளியே அதிக அளவில் கலக்கும்போது புற்று நோயை உருவாக்கும் (Carcinogenic) தன்மையை கொண்டிருக்கிறது. இதனால் இந்தப் பலகைகளை உபயோகிக்கும்போது மிகக்கவனமாக எல்லா இடங்களும் சரியாக லேமினேட் செய்து ஒட்டப்பட்டு இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். நீண்ட கால உபயோகத்தில் இந்த வேதியியல் பொருள் காற்றில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. சரியாக அனைத்துப் பக்கங்களிலும் மூடப்பட்டு இருந்தால் கவலை இல்லை.
இந்த வேதி்ப்பொருள் இல்லாமலும் தயாரிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். அவையும் சரியான வேதிப்பொருளாக இருக்க வேண்டும் என்பதே வருங்கால பிரச்னை. இயற்கையை மீறி வாழும் வாழ்வுக்கு, தகுந்த கவனம் இல்லாவிடில், ஆரோக்கியம் என்ற விலையை கொடுத்தே ஆக வேண்டி இருக்கிறது. பேசாமல் ஒரு குடிசை வீட்டுக்கு போய் விவசாயம் பார்க்கலாம் என்றால், விதர்பா விவசாயிகள் முதல் டிராக்டருக்கு கடன் வாங்கி தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் வரை கண் முன் வந்து பயமுறுத்தி விட்டு செல்கிறார்கள்.

எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது... அப்பா பூவரசு, வேம்பு போன்ற மரங்களை தோட்டத்தில் இருந்து வெட்டி போட்டு இருப்பார். வீட்டுக்கு தச்சர் வந்து எல்லாம் செய்து கொடுத்துவிட்டுப் போவார். எங்கள் டிரஸ்ஸிங் டேபிள் முதல் கட்டில் வரை இப்படி செய்யப்பட்டவையே. அதன் மேல் சன்மைக்கா என்று சொல்லும் லேமினேஷன் ஒட்டுவார்கள். பிறகு பிளைவுட்டில் இந்த லேமினேஷன் செய்யும் முறை வந்து, அது அடுப்பங்கரை அலமாரி கதவுகளாக மாறின. மாடுலர் கிச்சன் என்பதை விட மூடிய அலமாரிகள் என்கிற கான்ெசப்ட் எனச் சொல்லலாம்.


இப்போது பிளைவுட் மற்றும் பார்ட்டி கிள் போர்டு வைத்து லேமினேஷன் செய்து மாடுலர் அடுப்பங்கரை செய்பவர்கள் உள்ளனர். இதில் கையால் ஒட்டுகிற லேமினேஷனில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் - ஒட்டும் வேதிப் பொருள். இவை தரமானதாக இல்லாவிடில் பிய்த்துக் கொண்டு வந்துவிடும். மரத்தில் ஆன வெநீர் தகடுகளை ஒட்டி பாலீஷ் செய்தால் நிஜ மரத்தில் செய்தது போலவே தோற்றம் வரும். பார்வைக்கு நன்றாகவும் இருக்கும்.
ப்ரீ-லேமினேட்டட் போர்டு (Pre-laminated Board)

அடுத்து அறிமுகம் செய்யப்பட்டதே ப்ரீ-லேமினேஷன் எனப்படும் தொழிற்சாலையில் ஒட்டப்படும் விஷயம். மிக மெல்லியதாக இருக்கும். ஒரு பக்கம் வெள்ளையாக ஒட்டுவார்கள். வெளியே கதவுப் பக்கம் எப்படி வேண்டுமோ, அந்த நிறத்தில் வைத்துக் கொள்ளலாம். இப்படி லேமினேட் செய்யும்போது உள்ளே சுத்தம் செய்ய எளிதாக இருக்கும். ஏற்கனவே வாட்டர் ப்ரூஃப், ஃபயர் ப்ரூஃப் போன்ற விஷயங்களுக்கு வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு, மெல்லிய லேமினேஷன் தகடு அதிக வெப்பத்திலும் அழுத்தத்திலும் வைக்கப்படும்போது, பிரிக்க முடியாமல் போய் விடும்.
பார்ட்டிகிள் போர்டு, HDF, MDF, பிளாக் போர்டு ஆகிய எல்லாவற்றிலும் ப்ரீ-லேமினேஷன் உபயோகிக்கலாம். இந்தியா முழுக்க இதுபோன்ற ப்ரீ-லேமினேட்டட் வகைகளே உபயோகம் ஆகின்றன. இவற்றையே பெரும்பாலும் உள் அலங்காரம் மற்றும் வெளியிலும் பயன்படுத்துகிறார்கள். மாடுலர் கிச்சன் உள் கட்டமைப்பில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. முதலில் பாக்ஸ் அமைப்பு செய்து கொள்வார்கள். பிறகு கதவு பொருத்துவார்கள். 
கதவுகள் (Shutters)

கதவை அடிப்படையாக முன்பே சொன்னது போல பிளைவுட் அல்லது வேறு பலகைகள் வாங்கி லேமினேஷன் விருப்பப்பட்ட நிறத்தில் தேர்ந்து எடுத்து ஒட்ட வேண்டும். அப்படி ஒட்டும்போது மூலைகளில் சரியாக கை கால்களை பதம் பார்க்காமல் இருக்க எட்ஜ் பேன் டேப் வாங்கி ஒட்டி, ஓரங்களில் தட்டையாக லேமினேஷன் அல்லது வெநீர் அல்லது பிளாஸ்டிக் பட்டைகள் ஒட்டிச் செய்யலாம். இந்த லேமினேஷன்கள் பல நிறங்களிலும் தரங்களிலும் விலைகளிலும் கிடைக்கின்றன. 


கதவுகளில் ப்ரீ-லேமினேஷன் அதாவது, தொழிற்சாலையில் தயாரித்துத் தருவார்கள். முன்பெல்லாம் இறக்குமதியில் மட்டும் இருந்தவை. இப்போது ஊருக்கு இரண்டு பட்டறைகளில் லேமினேஷன் அழுத்தத்தில் ஒட்டிக் கொடுக்கிறார்கள். இவற்றை வாங்கினால் சாதாரண தச்சு வேலை போல செய்ய முடியாது. சரியான இன்டீரியரிடம் கொடுத்து அதற்குரிய உபகரணங்கள் மூலமே பொருத்த வேண்டும். இல்லாவிடில் ஆணிகள் சில நாட்களிலேயே வெளியே வந்து விடும். லேமினேஷன் வீணாகும்.



சமையலறைகளில் பல விதம்
U வடிவ சமையலறை, L வடிவ சமையலறை, G வடிவ சமையலறை, ஒற்றைச் சுவர் சமையலறை, தாழ்வான சமையலறை மற்றும் தீவு அம்சம் என்பனவாகும். ஒவ்வொன்றுமே அதனதன் சௌகர்யங்களின் படி தனித்தன்மை வாய்ந்தது. எல்லா வகையான சமையலறையிலும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். உங்கள் சமையலறை தனித்துவமாய்த் தெரிய வேண்டுமெனில் அதை நீங்கள் பாங்குடன் அலங்கரித்தல் மற்றும் கையாளுவதில்தான் இருக்கிறது.

வொர்க் டிரைஆங்கிள் (work triangle) என்று அழைக்கப்படும் மூன்றையும் நேர்த்தியாக இலகுவாகக் கையாளும் வண்ணம் சமையலறை அமைப்பது அவசியம். அருகருகே அமைத்து ஒழுங்கற்ற தோற்றம் கொடுக்காமல் போதுமான தொலைவில் அமைத்து நடப்பதற்குத் தோதான இடம் அளிக்க வேண்டும். சிங்க் வலது கை பக்கத்தில் அமைத்தல் நலம், மேலும் அறையின் மூலையிலும் அமையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

குளிர் சாதனப்பெட்டி திறந்து மூடத் தோதான வகையில், வைப்பதற்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டிஷ் வாஷர் போன்ற உபகரணங்களும் அதிக புழக்கத்துக்கு வந்துள்ள படியால் அவற்றிற்கும் தோதான இடம் அமைத்து சமையலறையை வடிவமைக்க வேண்டும். மின் சாதனங்கள் புழங்குகின்றபடியால் அதற்கேற்றபடி முதலிலேயே மின் இணைப்பு மற்றும் மின்விசைகளை அமைக்க வேண்டும்.

குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு அச்சாரம் இடும் இடம் என்பதால் சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம். புகை மற்றும் தூசி வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி (exhaust fan) அமைக்க வேண்டும். பழங்காலங்களில் விறகடுப்பைப் பயன்படுத்தியபோது புகைபோக்கி என்பது கட்டாயமான ஒன்றாகத் திகழ்ந்தது.

இன்றைய நவநாகரீகமான உலகில் எலெக்ட்ரிக் சிம்னி வந்து விட்டது. இதன் மூலம் புகையற்ற ஆவியற்ற சமையலறையைப் பெறலாம். அதே போல கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் இயற்கை நமக்கு அளித்துள்ள கிருமிநாசினியான சூரிய ஒளி நன்றாக விழும்படி சமையலறையை அமைக்க வேண்டும்.

சமைப்பது என்பது நான்கு முக்கியச் செயல்களைக் கொண்டது. அந்த நான்கையும் திறம்பட எவ்வித இடையூறும் இல்லாமல் போதிய இடைவெளியோடு செய்ய வேண்டியது அவசியம். சமையல் செய்வதற்கு முன் காய்கறி அரிவது போன்ற முஸ்தீபுகள், அடுப்பில் சமையல் செய்வது, சாப்பிடத் தோதான வகையில் சமைத்த பொருளை அடுக்குவது, பின் பாத்திரங்களை சிங்க்கில் சுத்தம் செய்வது. இதற்கேற்ப சமையலறை மேடையை நேர்த்தியாக அமைக்க வேண்டும்.

பொதுவாக இதன் உயரம் 32 “அகலம் 24 “என்று அமைப்பர். நீளம் நாம் எந்த வகையான சமையலறையைத் தேரந்தெடுக்கின்றோமோ அதைப் பொறுத்து அமையும். சமையலறை மேடை கிரானைட், கடப்பா, மார்பிள், டைல்கள் மரம்,ஸடீல் என்று எவற்றினாலும் நமது பட்ஜெட்டிற்கேற்ப அமைக்கலாம் என்றாலும் பயன்படுத்த எளிது மற்றும் நீண்ட கால உழைப்பு போன்றவற்றை மனதில் கொண்டு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சமைப்பதற்கு ஏராளமான மூலப் பொருட்களும் , இயந்திரங்களும் இன்றைய காலகட்டத்தில் தேவை. இவை தவிர பரிமாறப் பயன்படும் பொருட்கள் வேறு உண்டு. இவை அனைத்தையும் தன்னுள்ளே சேமித்துக் கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப்கள் அவசியம். இவற்றை மேடையின் கீழும் அமைக்கலாம் , அருகிலும் அமைக்கலாம்.

அடுப்பின் பின் உள்ள சுவரில் அழகிய டைல்கள் அமைத்து சமையலறைக்கு இனிய கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கலாம். மேலும் சமையல் செய்யும்போது பாழாவதைச் சுத்தப்படுத்துவதும் எளிது என்பதால் கட்டாயம் டைல்ஸ் பதிக்கின்றனர்.

நவீன சமையலறை


இன்றைய நவ நாகரிக உலகில் மாடுலர் கிச்சன் எனப்படும் நவீன சமையலறை முண்ணனியில் உள்ளது. சந்தையில் உங்கள் வீட்டின் சமையலறையின் அளவிற்கேற்ப நீள அகலங்களில் மாடுலர் கிச்சன் கிடைக்கின்றது. இதனை அமைத்துவிட்டால் அழகிய தோற்றமும் கிடைத்துவிடும், பல்வேறு விதமான பொருட்களை பாங்குடன் அடுக்கி வைப்பதற்கு தோதான இடமும் கிடைத்து விடும். பழங்காலங்களில் அமைக்கப்பட்ட சமையலறைகளில் உள்ள குறைகளைக் களைந்து நவீனமாக்கப்பட்டு இன்றைய நாகரிக யுவதிகளுக்கு ஏற்றவாறு இவை அமைக்கப்படுகின்றன.

பளீரென்ற வண்ணங்களிலும் இவை கிடைக்கின்றன. இயற்கையான வெளிர் நிறங்களிலும் இவை கிடைக்கின்றன. வீட்டின் பிற பகுதிகளை நாம் வடிவமைத்திருக்கிறோமோ அதை மனதில் கொண்டு இதன் வண்ணத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் பிற பகுதிகளுடன் இணைந்து சமையலறை தெரிய வேண்டும் என்பதில் கவனம் தேவை. அதே போல சமையலறையில் அமைக்கப்படும் தரைத்தளம் மற்றும் பூசப்படும் வண்ணம் ஆகியவற்றையும் வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.

சமீப காலங்களில் சமையலறையையும் சாப்பாட்டு அறையையும் இணைத்து பெரியதாக அமைக்கிறார்கள். அறையின் ஒரு பகுதியில் சாப்பாட்டு மேஜை அமைத்து அங்கேயே உணவு உண்ணும் வகையில் அறையின் நீள அகலத்தை அதிகப்படுத்துகின்றனர்.

ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பம் நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உள்ளடக்கியது, நீண்ட நேரம் தொடர்ந்து சமையலறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமையும் எனில் அதற்கேற்றவாறு பெரியதாக அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும். மிகச் சிறிய குடும்பம் என்றால் அதற்கேற்றாற் போலச் சிறியதாக அமைக்கலாம்.

என்றுமே எளிமை நலம். பார்த்துப் பார்த்து மாளிகை போன்ற ஒரு வீட்டை வடிவமைத்தாலும் சமையலறையில் குற்றம் குறை இருப்பின் பெண்கள் மனம் நிறைவடையாது. ஆதலால் சமையலறையை அவர்கள் மனம் விரும்பும்படி அமைக்க வேண்டு


ஆக்கம்  மற்றும்  தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

நாகர்கோவில் நகரின் மிக பிரமாண்டமான RMKV மாடுலர் கிச்சன் பர்னிச்சர்ஸ்

No comments:

Post a Comment