Wednesday 9 January 2019

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தவறு: சமூக நிலையே சரியான அளவீடு!


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும்; இதற்காக இடஒதுக்கீட்டு உச்சவரம்பு இப்போதுள்ள 50 விழுக்காட்டிலிருந்து 60% உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு அளவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% என மொத்தம் 49.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்போது இந்த பிரிவினருடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்குவதென பிரதமர் தலைமையில் தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கு மிகக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இந்த இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அதை 60% ஆக உயர்த்தவும் அரசு முடிவு செய்திருக்கிறது.

எந்தப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை பா.ம.க எதிர்க்கவில்லை. மாறாக, அதற்காக கடைபிடிக்கப்படும் வழிமுறைகளைத் தான் எதிர்க்கிறது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4) ஆவது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை’’ என்று தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வசதியாக அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதன்மூலம் இடஒதுக்கீட்டுக்கான அடிப்படையை வேண்டுமானால் மாற்றியமைக்கலாம். ஆனால், சமூகப் படிநிலையை மாற்ற முடியாது.

இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைத் தூக்கி விடுவது தான். இந்தியாவில் காலங்காலமாக சமூகப் படிநிலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு கொடுமைகளும், இழிவும் இழைக்கப்பட்டு வந்ததே தவிர, பொருளாதார அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு செய்யப்படும் பரிகாரம் தான் இட ஒதுக்கீடு. இது அப்பிரிவினருக்கு வழங்கப்படும் சலுகை அல்ல, உரிமை ஆகும்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற தத்துவத்தை உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை. 1991-ஆம் ஆண்டில் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்மராவ் அதே ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆனால், அத்தகைய ஒதுக்கீடு செல்லாது என்று அறிவித்து 1992-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. பல மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கி ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும் அவற்றை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

சமூக நீதி தழைத்தோங்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இத்தகைய இட ஒதுக்கீடு மக்கள் மன்றத்திலும் செல்லுபடியாகவில்லை. 1980-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், குடும்ப ஆண்டு வருமானம் 9000 ரூபாய்க்கு குறைவாக உள்ள அனைவருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்; அதற்கு சாதி தடையாக இருக்காது என்று ஆணையிட்டார். ஆனால், அதை மக்கள் ஏற்றுக் கொள்ளாததால் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனால், உடனடியாக பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்து விட்டு, பழைய முறையை மீண்டும் கொண்டு வந்தார்.

மத்திய அரசு செய்யவுள்ள திருத்தத்தின்படி, ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ள உயர்சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கிரீமிலேயர் என்ற பெயரில் ரூ.8 லட்சத்துக்கு கூடுதலான வருமானம் கொண்டவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்டவர்களுக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இவ்வாறாக இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படைத் தகுதியை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், உயர்சாதியினருக்கும் ஒரே அளவில் தீர்மானிப்பது எந்த வகையான சமூக நீதி? இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மற்ற பிரிவினருக்கும் காட்டப்படும் பெரும் பாகுபாடு ஆகும்.

உண்மையான சமூக நீதி என்பது அனைத்து சமுதாயங்களுக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். எனவே, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். மாறாக, 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

No comments:

Post a Comment