Friday 1 March 2019

வீடு வாங்கும் முன் பில்டரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் !!




நம்மில் பலருக்கு வீடு வாங்குவது என்பது வாழ்நாள் முதலீடு. புது புது கட்டுமானங்கள், புதிய மற்றும் தேர்ந்த பில்டர்ஸ் வழங்கும் பல தரப்பட்ட கட்டுமானங்கள், வசதிகள் என ஒவ்வொரு ப்ராஜக்ட்டிலும் தனித்தன்மைகளுடன் ஏராளமான சாய்ஸ் உள்ளது. அடுக்கு மாடி குடியிருப்போ, வில்லாவோ எதுவாகயிருந்தாலும் வீடு வாங்கும் முன் பில்டரிடம் சில அடிப்படை கேள்விகளுக்கு விடை அறிந்து கொள்வது மிக அவசியம்.
முந்தைய ப்ராஜக்ட், வாடிக்கையாளர்கள் பற்றி

தற்போதுள்ள சூழலில், ரியல் எஸ்டேட் துறையில் தினந்தோறும் புது புது பில்டர்ஸ் வருவதை காணலாம்.  இந்த துறையில் உள்ள சவால்கள், நுணுக்கங்கள் போன்றவற்றை பற்றி சரிதான புரிதல் இல்லாமல், குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலர் இந்த துறையில் ஈடுபட வாய்புகள் அதிகம். நீங்கள் வீடு வாங்க முன் பணம் செலுத்தும் முன் பில்டரின் முந்தைய கட்டுமானத்திற்கு சென்று அதன் தரம், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டதா என்பதை அந்த ப்ராஜக்ட்டின் வாடிக்கையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நேர்மையான எந்தவொரு பில்டரும் ஒப்பந்தக்காரர்கள் பற்றிய விவரங்கள், நிதியளித்தவரகள் என எல்லா விவரங்களையும் அளிக்க தயங்குவதில்லை.

வாங்கும் வீட்டில் சிறிய மாற்றங்கள் செய்ய இயலுமா?

நமக்கு தேவையான வசதிகளை முன்பே தெரிவிக்க வேண்டும் என்று பொதுவாக பில்டர்ஸ் வலியுறுத்திவிடுவார்கள். இருப்பினும் சில சமயம் நம் எண்ணங்களின் மாற்றமோ அல்லது அழகு வேண்டி சில மாற்றங்களை நாம் செய்யவேண்டும் என நினைப்பதுண்டு. அத்தகைய சூழ்நிலை எழுந்தால் உங்களின் ப்ராஜக்ட் மேலாளர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதிலிருந்தே பில்டரின் உண்மைதன்மையை அறிந்து கொள்ளலாம். உங்கள் பில்டரிடம் முன்பே இது போன்ற கடைசி நேர மாற்றங்கள் கூடுதல் தொகையில்லாமல் செய்து கொள்ள முடியுமா என்பதை கேட்டறிந்து கொள்ளுங்கள்.


குறித்த நேரத்தில் கட்டுமானம் முடியாவிட்டால்?

இந்த கேள்வியை பல பில்டர்ஸ் விரும்புவதில்லை, அவர்களிடம் எழுத்து பூர்வமாக இதை பெறுவதும் கடினம் தான். ஆனால் நேர்மையான் அணுகுமுறை கொண்ட பில்டரின் ப்ராஜக்ட் தாமதானால் அதற்குரிய தீர்வு மற்றும் இழப்பீட்டு தொகை ஆகியவற்றை பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். நம்பிக்கையான பில்டரிடம் தான் உங்களின் முதலீடு செல்கிறது என்பதற்கு இது சான்றாகும்.

கட்டுமானத்திற்கு உத்திரவாதம்

லட்சக் கணக்கில் முதலீடு மட்டுமில்லாமல் வாழ்நாளில் பாதி வட்டி கட்டி கனவு இல்லம் வாங்கும் பொழுது, அதன் தரம் மற்றும் உபயோகப்படுத்தப்படும் ஃபிட்டிங்ஸ் ஆகியவை தரமானதா என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஸ்டீல், செங்கல், சிமன்ட், பைப், எலெக்ட்ரிகல் வயரிங், ஸ்விட்ச், குழாய் என எல்லாவற்றை பற்றியும் தெளிவாக பில்டரிடம் எழுதி வாங்கிக்கொள்வது நலம், இதன் மூலம் தரமான பொருட்களையே உங்களின் வீட்டில் உபயொக்கிறார்கள் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.

பொது மற்றும் பில்ட் அப் அளவின் தெளிவான வரையுறுத்தல்

அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கும் பொழுது பொது பகுதி மற்றும் பில்ட் அப் பகுதி ஆஅகியவற்றிர்கான வித்தியாசத்தை அவசியம் அறிந்திருத்தல் வேண்டும். வெளிப்புற சுவர்களுடன் உங்கள் வீட்டின் அளவை பற்றி தெரிந்து கொள்ள பில்ட்அப் பகுதி உதவும் என்பதால் ஏமாற்றமிருக்காது. ரியல் எஸ்டேட் துறையின் சில சொற்களை அறிந்து கொண்டால், ஏமாற்றத்தை தவிர்ப்பதோடு நம் முதலீட்டிற்கேற்றார் போல் சரியான சதுரடி அளவிலான வீட்டையும் பெறலாம்.













கட்டுமான துறை விளம்பரங்களில் பயன்படுத்தப்படும்  சொற்களும் அதன் பொருளும் உங்களுக்காக.

கார்பெட் ஏரியா (Carpet area)
இது வீட்டின் பயன்படுத்தக்கூடிய பகுதியை குறிக்கும் சொல்லாகும். இது ஒரு வீட்டின் வெளிப்புற மற்றும் உட்புற சுவறுக்கிடையே இடம்பெற்றுள்ள இடத்தை குறிக்கும். இதில் பால்கனியும் அடங்கும். சுவர் ஆக்கரமித்துள்ள பகுதி இந்த அளவீடில் வராது. நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவைதான் கார்பெட் ஏரியா என்று சொல்வார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் ஒரு கார்பெட்டை விரித்தால் எவ்வளவு இடத்தை அது அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா. கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்த்து பிளின்த் ஏரியா என்று சொல்வார்கள்.

கட்டடப்பரப்பு (Built-up area)

உள் மற்றும் வெளிப்புறச் சுவர்களில் இருந்து தரை, மாடிப்பகுதி மற்றும் பால்கனியில் உள்ள வீட்டின் சதுர அங்குலத்தை இந்த வார்த்தை குறிக்கிறது. சில பகுதிகளில், இது பீடம் பகுதி என குறிப்பிடப்படுகிறது, இது பொதுவாக, கார்பெட் ஏரியாவை விட 10-20 சதவிகிதம் கூடுதலாக இருக்கும்.

சூப்பர் பில்ட் அப் ஏரியா (Super built-up area)

பிளின்த் ஏரியா அளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதே சூப்பர் பில்ட்அப் ஏரியா. அதாவது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை எல்லாம் சேர்ந்தது பில்ட் அப் ஏரியா. இந்த அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட் அப் ஏரியா கணக்கிடப்படும்.

ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டக்ஸ் (Floor space index)

பில்ட் அப் ஏரியாவுக்கும், கட்டமைப்பிற்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பகுதிக்கும் இடையில் இருக்கும் இடத்தை இது குறிக்கிறது. FSI உயர்ந்தால், கட்டும் பகுதி கூட பெரியதாக இருக்கும். இது Floor Area Ratio என்றும் அழைக்கப்படுகிறது.

ஒரு சதுர அடி விலை (Per square foot rate)

இது பில்டர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட சூப்பர் கட்டடப் பகுதியின் சதுர அடி விகிதத்தை குறிக்கும் சொல்லாகும். விற்பனையாளருக்கு பிளாட் விலையைக் குறிப்பிடுவதற்கு பில்டரால் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும். இந்த விகிதம் கார்பெட் ஏரியா மற்றும் சூப்பர் பில்ட்அப் ஏரியா பகுதி உள்ளடக்கியதாகும்,

ஃப்ரீஹோல்ட் பிராபர்டி (Freehold property)

ஒரு சொத்தின் உரிமையாளர் அந்தச் சொத்துக்களை வேறு நபரிடம் விற்க அல்லது மாற்றுவதற்கான உரிமையை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் மற்றவர் பெயரில் மாற்றி தருவதை குறிக்கும் சொல்.

கன்வேயன்ஸ் (Conveyance)

ஒரு சொத்தை வாங்குபவருக்கு ஆவணத்தின் உரிமையாளர், உரிமைகள், அந்த சொத்து சம்பந்தமான அனைத்து சொத்துரிமை நலன்களையும் வெளிப்படுத்தும் செயல்முறையை இது குறிக்கிறது.

கிரெடிட் ஸ்கோர் (Credit score)

இது ஒரு தனிநபரின் கடன் தகுதி அளவீடு ஆகும், இது புள்ளிவிவர அடிப்படையில் அவரது / அவரது கடந்த கால பதிவுகளிலிருந்து நிதிசார் அமைப்புகளுடன் இருக்கும் தொடர்பை பற்றி தெரிவிக்கும்.

வசிப்பதற்கான சான்றிதழ் (Certificate of occupancy)

ஒரு கட்டிடம் உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு கட்டப்பட்டுள்ளது என உறுதிசெய்த பிறகு, ஒரு வீட்டின் உரிமையாளருக்கு உள்ளூர் நகராட்சியால் வழங்கப்படும் ஒரு முக்கியமான ஆவணமாகும்.

ஒதுக்கீட்டு கடிதம் (Allotment Letter)

குடியிருப்பு பகுதியில் வீடு வாங்குபவருக்கு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி அல்லது அபார்ட்மெண்ட் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என பிலடர் கொடுக்கும் கடிதத்தை குறிப்பதாகும்.



தொடக்க சான்றிதழ் (Commencement certificate)


ஒரு இடத்தில் கட்டிடம் எழுப்புவதற்கு முன் நகராட்சி / மாநகராட்சியில் அவசியம் பெற வேண்டிய சான்றிதழாகும். அடுக்குமாடி குடியிருப்பை முன்பதிவு செய்கிறீர்கள் என்றால், கட்டுமான நிறுவனத்தால் இந்த சான்றிதழ் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின் ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது.

பொதுவான பகுதிகள் (Common areas)

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு அல்லாது பொதுவாக அமைந்திருக்கும் இடம். அடுக்குமாடி குடியிருப்புகளில் பெரும்பாலும் இந்த இடங்களில் விளையாட்டு மைதானம், நீச்சல் குளம் போன்ற பொது உபயோகத்திற்கான வசதிகள் இருக்கும். குடியிருப்பவர்களிடமிருந்து பொதுவான பரமாரிப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு இது அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்களால் நிர்வாகிக்கப்படும்.
உத்திரவாத சான்றிதழ் (Encumbrance certificate)

கட்டிடம் எழுப்பபடவிருக்கும் அந்த நிலம் எந்த வித வில்லங்கமும் இல்லாத இடம் என்பதை உறுதிபடுத்தும் சான்றிதழாகும்.

முத்திரை வரி (Stamp duty)

அரசு ஒவ்வொரு சொத்துக்கும் முத்திரை தாள் வழியில் வரி வசூலிக்கும். இது விளைநிலம், விளையாத நிலம், தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு என அனைத்து வகை சொத்துகளுக்கும் பொருந்தும். இந்த வரியை சொத்தை வாங்குபவர்கள் செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment