நீட் தேர்வில் முழு மதிப்பெண்ணைப் பெறும் வகையில் பாடத்திட்டத்தை வடிவமைத்திருப்பதாகப் பெருமைகொள்கிறது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. இந்த ஆண்டு நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும்பாலும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்திருப்பதே பெருமைக்கான காரணம்.
தமிழக மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். இதற்குக் காரணம் 12 வருடங்களாக மாற்றப்படாமல் இருக்கும் பாடத்திட்டங்களே' என்று கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
கடந்த மாதம் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதர வகுப்புக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 11-ம் வகுப்புப் பாடப்புத்தகங்களில், நீட் தேர்வுக்கான கேள்விகள் எத்தனை இடம்பெற்றிருக்கின்றன என்பது குறித்து தமிழகப் பள்ளிக்கல்வித்துறை ஆராய்ந்தது.
பொதுவாக, நீட் தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிலிருந்து சம அளவில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேட்கப்படும் 80 கேள்விகளில் தலா 45 கேள்விகள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திலிருந்தும், 90 கேள்விகள் உயிரியல் பாடத்திலிருந்தும் கேட்கப்படுகின்றன. இதில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில், பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விகளில் 100 சதவிகிதமும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடப்புத்தகத்திலிருந்து 99 சதவிகித கேள்விகளும் இடம்பிடித்துள்ளன.
இதுகுறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், ``புதிதாகத் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் எந்தளவுக்குப் போட்டித்தேர்வுக்கு உதவும் என்பதை நடந்து முடிந்த நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கொண்டு ஆய்வு செய்தோம். பதினொன்றாம் வகுப்பிலிருந்து கேட்கப்படும் கேள்விகளில் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்திலிருந்து 100 சதவிகிதமும், உயிரியல் பாடத்திலிருந்து 99 சதவிகித கேள்விகளும் புதிய பாடப்புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. போட்டித்தேர்வுகளுக்குப் புதிய பாடத்திட்டம் உதவுமா என்ற முதல் தேர்வில் நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். `நீட்' தேர்வைத் தவிர, இதர தகுதித்தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், மாணவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துகளும், உதாரணங்களும் புதிய பாடத்திட்டத்தில் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் பயன்பாட்டு வகையில் கேட்கப்படும் கேள்விகளும் சேர்த்துள்ளோம்" என்றார்.
ஐ.ஐ.டி மற்றும் இதரப் போட்டித்தேர்வுகளில் இடம்பிடித்துள்ள கேள்விகள் குறித்தும் பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வில் புதிய பாடப்புத்தகத்திலிருந்து எத்தனை கேள்விகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் கேட்கப்பட்டிருக்கின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது, பள்ளி ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த கையேடு தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது பள்ளிக் கல்வித்துறை.
மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கச் செல்லும்போது, தேர்வில் தோல்வியடையாமல் இருக்கும் வகையில் பாடத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பாடங்கள் குறித்து இணையதளங்களில் கூடுதல் தகவலையும், வீடியோக்களையும் பெறும் வகையில் QR கோடு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
``நீட் தேர்வில் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இயற்பியல் பாடநூலில், இயக்கவியல் பாடத்திலிருந்துமட்டும் 11 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 13 கேள்விகள் இரண்டாவது பகுதியிலிருந்து கேட்கப்பட்டிருக்கின்றன" என்கிறார் இயற்பியல் பாடநூல் தயாரிப்பில் வழிகாட்டியாக உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறையின் இணை பேராசிரியர் ரீட்டா ஜான்.
உயிரியல் பாடத்திட்டங்களை வடிவமைத்த முன்னாள் பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில், ``பயோடெக்னாலஜி, ஜெனடிக்ஸ் மற்றும் குளோனிங் குறித்தும், இதுகுறித்த தற்போதைய ஆய்வு நிலைகள் குறித்தும் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது மாணவர்களுக்கு உயிரியல் பாடம் சார்ந்த அறிவை மேம்படுத்துவதுடன், ஆராய்ச்சி குறித்து யோசிக்கவும் வைக்கும். புதிய மாற்றங்களைப் பள்ளி ஆசிரியர்கள் உள்வாங்கும் வகையில் தமிழக அரசு தொடர் கருத்தரங்கு கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் அறிவு நிலை மேம்படுத்தப்படும்" என்றார்.
தமிழக மாணவர்கள் அதிகளவில் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றால் அது புதிய பாடத்திட்டத்தின் வெற்றியே!
நன்றி : விகடன்
No comments:
Post a Comment