Friday 17 May 2019

ஈரோடு மாவட்டத்தில் ஒரு இன்பச் சுற்றுலா !!


kodiveri_dame

தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது.
நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமாகவும் விளங்குகிறது.
1
வரலாற்றுச் சிறப்பு: தற்போதைய ஈரோடு மாவட்டம் பண்டைய கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகும். இங்குள்ள கொடுமணல் கிராமத்தில் நடந்த தொல்லியல் ஆய்வின் மூலம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே இப்பகுதியில் அறிவும், திறமையும் பொருளாதார வளமும் கொண்ட மக்கள் வாழ்ந்திருந்தது நிரூபணமாகியுள்ளது.
இங்குள்ள கோபிசெட்டிபாளையம் சங்க காலத்தின் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மன்னர் பாரி வள்ளலின் நாட்டின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. பின் வந்த காலங்களில் இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களிடம் இருந்து இப்பிரதேசத்தை ராஷ்டிரகூடர்கள் கைப்பற்றினர். அவர்களைத் தொடர்ந்து சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், மதுரை சுல்தான், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், மைசூர் பேரரசு, ஹைதர் அலி, திப்பு சுல்தான் என பலராலும் ஆட்சி செய்யப்பட்டுள்ளது.
1799-இல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர், கிழக்கிந்திய கம்பெனியர் வசம் வந்தது. அவர்கள் இந்நிலப்பகுதியை நொய்யல் ஆற்றை மையமாக வைத்து “நொய்யல் தெற்கு மாவட்டம்” மற்றும் “நொய்யல் வடக்கு மாவட்டம்” என இரண்டாகப் பிரித்தனர். பின்னர் 1804-இல் கோயம்புத்தூரை தலைநகரமாகக் கொண்ட மாவட்டமாக மாற்றி அமைத்தனர். அப்போதைய ஓலைச்சுவடி ஆவணங்களில் கோயம்புத்தூர் ஜில்லா பெருந்துறை தாலுகாவைச் சேர்ந்த ஈரோடு கிராமம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பின் 1979-இல் கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு பெரியார் மாவட்டம் உருவானது. அதுவே பின்னர் 1996-இல் ஈரோடு மாவட்டம் எனப் பெயர் மாற்றம் பெற்றது. 2009-இல் இம்மாவட்டத்தின் தாராபுரம், காங்கேயம் வட்டங்கள் புதிதாக உருவான திருப்பூர் மாவட்டத்தின் பகுதிகளாக மாறின.
10
மலை வளம்:
மாவட்டத்தின் வடபகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாக உள்ளதால், இங்கு 900 மீ முதல் 1700 மீ வரை உயரம் உள்ள தாளவாடி மலை, திம்பம் மலை, தல மலை, தவள கிரி, பவள மலை, பச்சை மலை, பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாச்சி மலை, அந்தியூர் மலை, வட்ட மலை, சென்னி மலை, எழுமாந்தூர் மலை, பாளையம்மன் மலை, எட்டி மலை, அருள் மலை, சிவகிரி, அறச்சலூர் நாக மலை, அரசனா மலை, திண்டல் மலை, விஜயகிரி, ஊராட்சி கோட்டை மலை என பல மலைகள் உள்ளது.
மேலும் வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறை பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பெரிய பள்ளங்களும் உள்ளன.
நீர்வளம்:
தமிழகத்தின் பெரிய நதிகளாகிய காவிரி, பவானி நதிகளுடன் நொய்யல் மற்றும் மோயாறு நதிகள் இம்மாவட்டத்திற்கு வளம் சேர்க்கிறது.
காவிரி: மேட்டூர் அணை மற்றும் ஸ்டான்லி நீர்த்தேக்கத்தைக் கடந்து தெற்கு நோக்கிப் பாயும் காவிரி ஈரோடு மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் இடையே எல்லைக்கோடாக பாய்கிறது. இங்குதான் பவானி நதி காவிரியுடன் கலக்கிறது.
பவானி நதி: காவிரி ஆற்றின் முக்கிய துணையாறுகளில் ஒன்று. இந்நதி 217 கி.மீ. தூரம் ஓடி காவிரியுடன் கலக்கிறது. தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி கேரள மாநிலத்திற்குள் பாய்கிறது.
இந்நதி கேரளம் நோக்கிச் செல்லும் பாதையில்தான், தமிழக – கேரள எல்லையில், மேல் பவானி அணையும், அதனையொட்டிய பக்தவச்சலம் சாகர் நீர்த்தேக்கமும் உள்ளது.
அணையைக் கடந்து கேரள மாநிலத்திற்குள் செல்லும் பவானி, அங்குள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் (பாலக்காடு மாவட்டம்) உள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை கிழக்கு நோக்கித் திரும்பி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்குள் வருகிறது. (இப்பொழுது கேரள அரசு 6 தடுப்பணைகள் கட்டி நீரைத் தடுக்க நினைப்பது இப்பகுதிக்குள்தான்).
மேட்டுப்பாளையம் (கோவை மாவட்டம்) அருகே சமவெளிப் பகுதிக்கு வரும் இந்நதியில் ஈரோடு மாவட்டத்தின் கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டும், அதனையொட்டிய பவானி சாகர் நீர்த்தேக்கமும் அமைந்துள்ளது. இந்த அணைப்பகுதியில்தான் மோயார் ஆறு பவானியுடன் சங்கமிக்கிறது. இங்கிருந்து கோபிசெட்டிபாளையம் வழியாக பவானி நகருக்கு அருகில் கூடுதுறையில் காவிரியுடன் கலக்கிறது. இங்கு அணை தோப்பு என்ற குட்டி அணையும், பழமையான அழகிய சங்கமேஸ்வரர் கோயிலும் உள்ளது.
இந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையும், நதி நீரைக் கொண்டு செல்வதற்காகக் கட்டப்பட்ட காளிங்கராயன் வாய்க்காலும் தனிச்சிறப்பும் பெருமையும் கொண்டது. இந்நதி ஈரோடு மாவட்டத்தில் 160 கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிப் பயணிக்கிறது.
11
மோயாறு: பவானி ஆற்றின் துணையாறு. நீலகிரி மாவட்டத்தில் மோயர் என்ற சிறுநகரில் தோன்றி முதுமலை வழியாக கிழக்கு நோக்கி 50 கி.மீ. தூரம் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. இந்நதி தன் பாதையில் 20 கி.மீ. தூரம் “மோயர் பள்ளத்தாக்கு” எனப்படும் மலைகளுக்கு இடையில் உள்ள இடுக்கு வழியாக பாய்ந்து “தெப்பகாடு’ என்ற இடத்தில் மோயர் அருவியாக கீழிறங்குகிறது. இந் நதி பந்திப்பூர், முதுமலை சரணாலயங்களைப் பிரிக்கும் இயற்கை எல்லையாகவும் இருக்கிறது.
நொய்யல் ஆறு: சங்க காலத்தில் காஞ்சிமாநதி என்றழைக்கப்பட்ட இந்த ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையின் வெள்ளியங்கிரி மலையில் தோன்றி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து நொய்யல் என்ற கிராமத்தில் காவிரியுடன் கலக்கிறது. தற்போது இந்நதி மிகவும் மாசடைந்து தன் சுயத்தை இழந்து காணப்படுகிறது.
இந்நதியின் சமவெளிப் பகுதிகளில் பழமையான மக்கள் குடியிருப்பு இருந்துள்ளது. இதனை வரலாற்று அறிஞர்கள் நொய்யல் ஆற்று நாகரிகம் என்று குறிப்பிடுகிறார்கள்.
அணைகள்: 
ஈரோடு மாவட்டத்தில் பவானி சாகர் அணை, கொடிவேரி அணை, வறட்டு பள்ளம் அணை, குண்டேரி பள்ளம் அணை, ஒரத்துப்பாளையம் அணை, பெரும்பள்ளம் அணை உள்ளிட்ட சில நீர்த்தேக்கத்துடன் கூடிய அணைகளும், பல தடுப்பணைகளும் உள்ளன. இவற்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
காளிங்கராயன் வாய்க்கால்: 
இந்த வாய்க்கால் உலக அளவில் நமக்குப் பெருமை சேர்த்த ஒரு பெரிய சாதனை. 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு மண்டலத்தின் தலைவராக இருந்த காளிங்கராயனால் 1271 – 1283-இல் இந்த காளிங்கராயன் அணைக்கட்டும் (தடுப்பணை), அதனையொட்டிய காளிங்கராயன் வாய்க்காலும் கட்டப்பட்டது.
இந்த வாய்க்காலின் சிறப்பே இது தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதுதான். இதற்காக இந்த வாய்க்கால் மட்டசரிவு மற்றும் பாம்புபோல் வளைந்து நெளிந்து செல்லும் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
பவானி ஆறு காவிரியுடன் கூடுவதற்கு கொஞ்சம் முன்னரே அணை கட்டி, பவானி ஆற்று நீரைத் தடுத்து, காளிங்கராயன் வாய்க்காலுக்குத் திருப்பி விடப்படுகிறது. இது ஆவுடையாப்பாறை என்னுமிடத்தில் நொய்யல் ஆற்றுடன் சேர்கிறது. இதனால் நதிகள் இணைப்பு திட்டமாகவும் உள்ளது. இரு இடங்களுக்கும் இடையில் உள்ள இயற்கையான தூரம் 36 மைல்கள்தான். ஆனால் வளைந்து வளைந்து செல்வதால் 56 மைல்கள் செல்கிறது. இந்த வாய்க்காலின் மூலம் 17,776 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது.
நவீன வசதிகள் இல்லாத அந்நாள்களிலேயே, சிறந்த நீர் மேலாண்மைத் திட்டத்திற்கு உதாரணமாகவும், இயற்கை சார்ந்த அறிவியல் திட்டமாகவும் காளிங்கராயன் வாய்க்கால் போற்றப்படுகிறது. இதை உலகின் பழமையான கால்வாய்களில் ஒன்றாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
கனவில் வந்த தீர்வு
காளிங்கராயன் அணை மற்றும் வாய்க்கால் கட்டப்பட்டது பற்றி பல்வேறு செவிவழி தகவல்கள் சொல்லப்படுகிறது. பரம்பரை பரம்பரையாய் வாய் வார்த்தைகளாகச் சொல்லப்படுவனவற்றில் பலரும் சொல்வது இந்த வரலாறுதான்!
காளிங்கராயன் கி.பி. 1240இல் பிறந்தவர். இவர் பாண்டிய மன்னர் “சத்தியவர்ம வீர பாண்டியன்’ 1265-1280) பிரதிநிதியாக கொங்கு நாட்டை ஆட்சி செய்தார். இவரின் சொந்த ஊர் வெள்ளோடு. வெள்ளோடு மேடான பகுதி என்பதால் ஆற்று பாசனம் கிடையாது. சுற்றிலும் காவிரியும், பவானியும், நொய்யல் ஆறும் பாய்ந்தோடியும் கிணற்று பாசனம் மட்டுமே. புன்செய் பயிர்கள் மட்டுமே விளைந்தது.
ஒரு சமயம் காளிங்கராயன் தன் மகனுக்கு பெண் கேட்பதற்காக தஞ்சைப் பகுதியில் வசித்த தன் சகோதரியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அந்த வீட்டின் சமையற்காரர் விருந்தினருக்கு(காளிங்கராயன் குடும்பத்தினருக்கு) சமையல் செய்ய பழைய அரிசி போடுவதா?…புதிய அரிசி போடுவதா? என்று சகோதரியின் குடும்பத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு “நெல் விளையாத தேசத்துக்காரர்களுக்கு எந்த அரிசியில் செய்தால் என்ன? என்று கேலி செய்து சிரித்திருக்கிறார்கள்.
இதனால் கோபமடைந்த காளிங்கராயன் தனது நாட்டின் புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக மாற்றி நெல் விளைவித்து காட்டுகிறேன் என்று சபதம் செய்திருக்கிறார்.
நாடு திரும்பிய காளிங்கராயன் பவானி ஆற்றின் நீரை தனது தேசமான மேட்டு நிலத்திற்கு கால்வாய் வெட்டி கொண்டுவர திட்டமிடுகிறார். பல ஆண்டுகள் ஆய்வுகள் பல செய்தும் அது சாத்தியம் இல்லை என்று பொறியாளர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதே சிந்தனையுடன் இருந்த காளிங்கராயனுக்கு ஒரு நாள் கனவு வருகிறது. அதில் ஒரு பாம்பு தாழ்வான பகுதியில் இருந்து மேட்டை நோக்கி வளைந்து நெளிந்து மேலேறுகிறது. விழித்துக் கொண்டபின் தண்ணீரையும் இதுபோல் கொண்டு செல்லலாம் என்ற யோசனை வருகிறது. அதன்படி தனது சொந்த செலவில் வாய்க்காலையும், பாம்பு போல் வளைந்து நெளிந்து கட்டி முடிக்கிறார். பவானியும் மேட்டுப் பகுதிக்குப் பாய்ந்து வந்து சேர்ந்தது. புன்செய் நிலங்கள் நன்செய் நிலமாகி நெல் விளையும் பூமியாகியது.

No comments:

Post a Comment