தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.
குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.
கடலைப்பருப்பு சுய்யம்
தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
தேங்காய் சுகியன்
தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.
உக்காரை
தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், வெல்லம் - 250 கிராம், நெய் - 100 கிராம், வறுத்த முந்திரி - 25 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, பாசிப்பருப்பை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு, ரவை ரவையாக அரைத்து (நீர்விடக் கூடாது) வழித்தெடுக்கவும். வெல்லத்தை ஒரு கரண்டி (50 மில்லி) நீர் விட்டு கரைத்து வடிகட்டவும். வாணலியில் நெய் விட்டு சூடானதும் அரைத்த பருப்பு சேர்த்துக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). வெந்த பின்பு வெல்லக் கரைசல் சேர்த்து கட்டிதட்டாமல், அடிபிடிக்காமல் நன்கு உதிராக வரும் வரை கைவிடாது கிளறி இறக்கி, ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்க்கவும்.
மூங்தால் ஃப்ரை
தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: பாசிப்பருப்பைக் கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, ஈரம் போக நிழலில் உலர்த்தி எடுக்கவும். இதனை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கவும்.
இது ஒரு மாதம் வரை கெடாது.
சன்னா தால் ஃப்ரை
தேவையானவை: கடலைப் பருப்பு - 200 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள் - தேவை யான அளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.
செய்முறை: கடலைப்பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்த பிறகு கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக போட்டு வறுத்து எடுக்க வும். மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.
டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி
தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
மைசூர் பாகு
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.
குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.
காராபூந்தி
தேவையானவை: வீட்டில் அரைத்த கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவு, உப்பு, அரிசி மாவை ஒன்றுசேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூந்தி கரண்டியில் மாவை விட்டு, எண்ணெயில் விழும்படி தேய்த்து சிவக்க பொரித்துக் கொள்ளவும். இத்துடன் பொரித்த வேர்க்கடலை, மிள காய்த்தூள் சேர்க்கவும். கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து நன்கு கசக்கி இந்தக் கலவையுடன் சேர்ந்து நன்றாக குலுக்கிவிட்டால், மொறுமொறு காராபூந்தி தயார். இதை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
இஞ்சி முரப்பா
தேவையானவை: சுக்குப் பொடி - 50 கிராம், சர்க்கரை - 100 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வில்லைகள் போடவும்.
குறிப்பு: சுக்குப் பொடி கடைகளில் கிடைக்கும். கிடைக்காதபட்சத்தில் சுக்கு வாங்கி, நன்கு நசுக்கி, மிக்ஸியில் பொடித்து, சலித்து உபயோகப்படுத்தவும். பட்சணங்கள் அதிகமாக சாப்பிடும்போது ஏற்படும் வாயுத்தொல்லைக்கு இது நல்ல நிவாரணம் அளிக்கும்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.
மோகன் தால்
தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.
கோதுமை அல்வா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்
செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.
தேன்குழல்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
பாதாம் டிலைட்
தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.
மகிழம்பூ முறுக்கு
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழ லில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு, எண் ணெய் - கால் கிலோ, பெருங் காயத்தூள் - சிறிதளவு, காய்ச்சிய எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்த பின் எடுக்கவும்.
சீப்பு ரோல்ஸ்
தேவையானவை: பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம், பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், தேங்காய்ப்பால் - கால் கப், வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த் தூள் - தேவையான அளவு, தேங்காய் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை: பாசிபருப்பை வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மாவாக்கிக்கொள்ளவும். மாவுடன் வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துப் பிசிறவும். பிறகு, தேங்காய்ப்பால், தேவையான நீர் விட்டுப் பிசையவும். நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து சிப்ஸ் தேய்க்கும் கட்டை / எவர்சில்வர் சிப்ஸ் கட்டரின் பின்புறம் (வரிவரியாக இருக்கும்) மாவை அழுத்தி தேய்த்து உருட்ட, சங்கு போல் சுருண்டு வரும். இதை சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால்.. மணம் மிக்க, ருசியான சீப்பு ரோல்ஸ் தயார். சோழி வடிவத்தில் இருக்கும் இது, சீப்பு சீடை என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர்
தேவையானவை: கெட்டி அவல் - 200 கிராம், பொடித்த சர்க்கரை - 3 டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் - தலா 25 கிராம், வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன், நறுக்கிய கொப்பரைத் துண்டுகள் - சிறிதளவு (நெய்யில் வறுக்கவும்), எண் ணெய் - 250 கிராம், நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: அவலை சுத்தம் செய்து, எண்ணெயில் (நிறம் மாறாது) பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் நீக்கவும். 2 டீஸ்பூன் நெய்யில் பொடித்த சர்க்கரையை கரையவிட்டு அடுப்பை அணைத்து, அவல் உள்ளிட்ட மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளற... ஸ்பெஷல் ஸ்வீட் மிக்ஸர் ரெடி.
குறிப்பு: நெய் - சர்க்கரை கலந்த சூடான கலவையில் மற்றவற்றைப் போட்டால்தான் இனிப்பு சுவை நன்கு கிடைக்கும். இல்லாவிட்டால், மிக்ஸர் அவ்வளவு இனிப்பாக இருக்காது.
ஜாங்கிரி
தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.
துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
ரவா லாடு
தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.
ஓமப்பொடி
தேவையானவை: கடலை மாவு (கடலைப்பருப்பை வெயிலில் உலர்த்தி மாவாக்கியது) - அரை கிலோ, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு, பச்சரிசி மாவு - 100 கிராம், ஓமம் - 2 டீஸ்பூன் (மிக்ஸியில் நீர்விட்டு அரைத்து வடிகட்டவும்), எண்ணெய் - அரை கிலோ.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் (எண்ணெய் நீங்கலாக) சிறிது நீர் விட்டு பிசைந்து, ஓமப்பொடி அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், சிறிதளவு மிளகாய்த்தூள் / மிளகுத்தூள் சேர்த்து செய்யலாம்.
டூ இன் ஒன் லட்டு
தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.
டபுள் கலர் மைதா கேக்
தேவையானவை: மைதா - 150 கிராம், சர்க்கரை - 250 கிராம், நெய் அல்லது வனஸ்பதி - 100 கிராம், பச்சை ஃபுட் கலர் - சிறிதளவு, வெனிலா எசென்ஸ் - சில துளிகள், பால் பவுடர் - 50 கிராம்,
செய்முறை: நெய் (அ) வனஸ்பதியை வாணலியில் நன்கு சூடாக்கிக்கொள்ளவும். மைதா, பால் பவுடரை சேர்த்து நன்கு சலித்து, உருக்கிய நெய் / வனஸ்பதியில் விட்டு, இட்லி மாவு பதத்தில் தயாரித்துக்கொள்ளவும். இதை இரண்டு சரிபாகமாக பிரிக்கவும். சர்க்கரையில் பாதி அளவு எடுத்து சிறிதளவு நீர்விட்டுக் காய்ச்சி, நன்கு நுரைத்து வருகையில் பாதி மைதா மாவு கலவை சேர்த்து நன்கு கிளறவும். இது இறுகி வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பவும்.
மீதி சர்க்கரையுடன் சிறிதளவு நீர் விட்டு, பச்சை ஃபுட் கலர் சேர்த்து நுரைத்து வரும்போது, மீதி உள்ள மைதா கலவை சேர்த்து நன்கு கிளறி, இறுகும்போது வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். இதை நெய் தடவிய தட்டில் இருக்கும் மைதா கலவை மீது நன்கு பரவலாக சேர்த்து, சமன் செய்து, லேசாக சூடு இருக்கையில் விரும்பிய வடிவில் வில்லைகள் போடவும்.
கேஷ்யூ ஃப்ரை
தேவையானவை: பாதியாக இருக்கும் முந்திரி - 200 கிராம், கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு (சேர்த்து) - அரை கப், ஒன்றிரண்டாக நசுக்கிய இளம் இஞ்சி - பச்சை மிளகாய் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், இளம் கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - சிறிது, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ.
செய்முறை: ஒரு பெரிய பேஸினில் மாவு வகைகள், முந்திரி, கறிவேப்பிலை, உப்பு, மிளகாய்த்தூள், நசுக்கிய இஞ்சி - பச்சை மிளகாய், உருக்கிய சூடான நெய் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறவும் (பிசையக் கூடாது). எண்ணெயை சூடாக்கி, மாவை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, சிவக்க பொரித்து எடுக்கவும்.
பாதுஷா...
தேவையானபொருட்கள்...
மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
செய்முறை...
உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.
பாதாம்மில்க்அல்வா...
தேவையானபொருட்கள்...
பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.
#செய்முறை...
பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.
காராசேவ்...
தேவையானபொருட்கள்...
கடலை மாவு - 200 கிராம், பச்சரிசி மாவு - 50 கிராம், மிளகுத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, ஓமம் - சிறிதளவு, எண்ணெய் - கால் கிலோ, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.
செய்முறை...
கடலை மாவு, பச்சரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு, ஓமம் ஆகியவற்றுடன் 2 டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய், ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நீர்விட்டு கெட்டியாக பிசையவும். எண்ணெயைச் சூடாக்கி, மாவை காராசேவ் கரண்டியில் போட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, பொரித்து எடுக்கவும்.
இதன் கலர் சிவக்காது மஞ்சளாகத்தான் இருக்கும். மிளகாய்த்தூள் சேர்த்தால் காராசேவ் சிவக்கும்.
பந்தர்லட்டு...
தேவையானபொருட்கள்...
கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை...
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.
டிரைஃப்ரூட்அல்வா...
தேவையானபொருட்கள்...
விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை...
பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
அசோகாஅல்வா...
தேவையானபொருட்கள்...
பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை...
சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
நவதானியஅப்பம்...
தேவையானபொருட்கள்...
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
செய்முறை...
நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்.
வீட்டிலேயே பஜ்ஜி மாவு தயாரிப்பது எப்படி?
கடலைப்பருப்பு – 2 கப், பச்சரிசி – கால் கப், காய்ந்த மிளகாய் – 8. இவற்றை நன்கு வெயிலில் காயவைத்து, மிஷினில் கொடுத்து
அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.
அரைத்துக்கொள்ளுங்கள். இதனுடன், கால் கப் மைதா, (விருப்பப்பட்டால்) அரை டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்துக் கலந்து சலித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவை என்றால் கலர் பவுடர் சேர்க்கலாம். தேவையானபோது, இந்த மாவில் சிறிது எடுத்துக் கரைத்து, வேண்டிய காய்களை சேர்த்து பஜ்ஜி போடலாம்.
எப்போதுமே, பஜ்ஜிக்கும் பக்கோடாவுக்கும் எண்ணெய் நன்கு ‘சுருக்’கென்று காயவேண்டும். ஆனால், புகைவரும் அளவு காய்ந்துவிடக் கூடாது. எண்ணெய் காயாமல் போட்டால், பஜ்ஜி, பக்கோடா ‘சதசத’வென்று ஆகிவிடும்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .
No comments:
Post a Comment