Saturday, 13 December 2008

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள் பற்றிய சிறப்பு பார்வை

கொழுப்புச் சத்தில் நல்லது, கெட்டது என இரண்டு வகை உண்டு. "மோனோ சாச்சுரேடட்" கொழுப்புச்சத்து உடலுக்கு நல்லது. அதே சமயம், கொலஸ்ட்ரால் போன்றவை கெட்டது.  ஆலிவ் எண்ணெய் இந்த நல்ல கொழுப்பை நமக்கு அளிக்கிறது.  கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் ஆலிவ் எண்ணெயைத் தொடர்ந்து பயன் படுத்த, நமது இளமை நீட்டிக்கப்படும்.ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும்.

கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.

காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. 

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்..


ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது.
லிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்..
ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது.வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.


உடல்நல நன்மைகள்...
நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ்,
மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்..

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ...
தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.
ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்...
மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும்.பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து.

புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர்.

அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார்.

உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர்.


ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார்.

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.அது மட்டுமல்ல......

  1.  கேன்சர், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களின் ஆபத்திலிருந்து நம்மைக் காக்கிறது.
  2.  ஆலிவ் ஆயில் அல்சர், வாயுக் கோளாறைச் சரிசெய்யும். மூளை, எலும்பு வளர்ச்சியை வேகப்படுத்தும்.
  3. ஆலிவ் ஆயில் வைட்டமின் ஏ.சி, ஈ போலிக் ஆசிட், செலினிய, துத்தநாக சத்துக்களின் செழுமை கொண்டதால் சருமம் மினுக்கும், கூந்தல் மிளிரும்
  4. சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது
  5. ஆரஞ்சுப் பழச்சாற்றில் ஆலிவ் எண்ணெய் சில சொட்டுகள் விட்டுக் கலக்கி, தினம் மூன்று வேளை சாப்பிட்டு வர நுரையீரல் பாதிப்புக்கள் தீரும்.
  6. ஆலிவ் எண்ணெயில் கருஞ் சீரகத்தைப் பொடி செய்து போட்டு, அதை முகம் முழுவதும் தடவி,பத்து நிமிடத்திற்குப் பிறகு கழுவினால், முகம் அழகு பெறும்.
  7. ஆலிவ் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய் கலந்து கண்ணின் கீழ் பூசி வர கருவளையம் மறையும்.
  8. தலைமுடி உதிரும் தொந்தரவு உள்ளவர்கள் இளஞ்சூடான ஆலிவ் எண்ணெயைத் தலையில் நன்றாக மசாஞ் செய்து, ஊறிய பின் குளித்தாள், முடி உதிர்வது நிற்கும்.
  9. கைகள் சொரசொரப்பாக, பார்ப்பதற்கு அழகற்றுக் காணப்படுகின்றதா? ஆலிவ் எண்ணெய்யுடன், சிறிது பொடி உப்பைக் கலந்து கைகளில் நன்கு தேய்த்தால், கைகள் மென்மை பெறும்.
  10. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

Thursday, 11 December 2008

சங்ககால தமிழரின் நீர் மேலாண்மை பற்றிய வரலாற்று பார்வை..

மழைநீர் சேகரிப்பு என்பது இந்தியாவில் மிக பழமையானது.கி.மு.4500 ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட மகத்தான நீர்தேக்க திட்டங்களே மழை நீரை தேக்கி பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவின் பசுமை பிரதேசங்களை ஒட்டியே பல எளிய வடிவிலான நீர்தேக்க திட்டங்கள் வளர்ந்து வந்து உள்ளன. ஓடி வரும் வெள்ளத்தை தேக்கி வைத்து பரமாரிப்பதோடு,புயல் மழை வெள்ளம்,நிலத்தடி நீரோட்டம், நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆறுகள் ஆகியவற்றை அறிந்து அதை வெகு சிறப்பாக பயன்படுத்திய 'பள்ளர்கள்' (நீர் மேலாளர்கள்) பல ஆயிரம் வருடங்களாக மிகுந்த மரியாதை செய்யப்பட்டு வந்து உள்ளனர். (ஆற்றுக்காலாட்டியார்,மடை வாரியார்,நீராணிக்கர்,நீர்கட்டியார் என்று பல்வேறு பள்ளர் பிரிவுகள் வழக்கில் இருந்து உள்ளனர்.). நீர் மேலாண்மை என்பது இந்தியாவை பொருத்தவரை மிக பழமையான தொழில் நுட்பமாகும். அதுவே இந்தியாவின் முக்கிய அடையாளமும்,கலாச்சார வடிவமும் ஆகும். இந்த தொழில் நுட்பம் இல்லை எனில் இந்தியா என்ற பிரதேசம் இருந்திருக்காது.இந்தியாவின் நீர் மேலாண்மை வேத காலத்துக்கும் முந்தியது. காரணம் தார் மற்றும் ராஜஸ்தானில் உள்ள நீர் தேக்க திட்டங்கள் எல்லாம் ஹரப்பா நாகரிகத்திற்கும்(கி.மு.2600) முந்தியது.

வீட்டு கூரை,வெட்ட வெளி, கிணற்று பாசனம்,ஆற்று வெள்ளம் என வியக்கத்தக்க வகையில் பாசனத்துக்கும், புழக்கத்துமான நீரை பரமாரித்து வந்துள்ளனர். நீர் மேலாண்மையாளர்களே இந்த பெருமைக்கும், புகழுக்கும் உடையவர்கள் தாங்கள் வாழும் இடத்திற்கு தகுந்தார் போல தமது திறமைகளை பயன்படுத்துகின்றனர். தமிழர்கள் உலகில் உள்ள எந்த ஒரு பல்கலை கழகத்திலும் படித்து இந்த நீர் மேலாண்மை நுட்பத்தை கற்கவில்லை. தலை முறை தலைமுறையாக நீர் மேலாண்மை தொழில் நுட்பத்தை கற்றும், அதை செழுமை படுத்தியும், தாங்கள் கற்றதை தங்கள் தலைமுறைகளுக்கு கற்று கொடுத்து வந்துள்ளனர். வரலாற்றில் எப்போதெல்லாம் தண்ணீருக்கான தேவையும், அந்த தண்ணீருக்கான வாழ்வாதாரமும் இக்கட்டான சூழலில் மக்களின் வாழ்வை பாதித்து உள்ளதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் புத்தி கூர்மையும், அவர்களின் புதிது புதிதான நீர் மேலாண்மை உக்திகளும் தான் மக்களை காத்து உள்ளது என்பதை நுணுக்கி ஆராய்ந்தால் அறியலாம்.


தமிழரின் பாசன நுட்பங்கள் குறித்து மேலைநாட்டு அறிஞர்கள்..

செருமானி அறிஞர் எஃப். டபள்யூ. ஃபிளமிங் (F.W.Fleming) : 
தென்கிழக்கு ஆப்ரிக்கா, பிலிபைன்சு காணப்படும் நெல் சாகுபடி முறையிலும் பாசன அமைப்புக்களிலும் தமிழரின் தாக்கம் தெரிகின்றது.

ஆய்வறிஞர் பார்க்கர் (Parker) :
ஏரிகளுக்கு மதகு அமைப்பதை 2400 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வடிவமைத்தவர்கள். அய்ரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில்தான் மதகுகள் அமைக்கப்பட்டன என்று கூறுகிறார்.

சர் ஆர்தர் காட்டன்:
“ஏரிக்கரைகளை ஈரமான களிமண் கலவையில் அமைப்பது அவசியம் என்ற ஆங்கிலேய பொறியாளர்களின் கருத்துக்கு மாறாக பண்டைய தமிழர்கள் எல்லாவிதமான விளைநிலங்களின் மண் எடுத்து பல்லாயிரக்கணக்கான ஏரிகளை மண் கரை (Earthern Bund) கொண்டு கட்டியுள்ளனர்”.

தமிழ்இலக்கியத்தில் நீர் மேலாண்மை...

நீர்மேலாண் மையைப் பொறுத்தவரை பண்டையத்தமிழர்களின் பண்பட்ட அறிவும் ஆற்றலும் நம்மை வியக்க வைக்கின்றன .மேலும் இரண்டாயிரம் ஆண்டுகாலத்திற்கு முன்பே நீர் மேலாண்மை குறித்த தெளிவு தமிழர்களிடத்து இருந்துள்ளமையைச் சங்க இலக்கியம், கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து சான்றுகளை அறியலாம்..

  • நீரியல் சுழற்சி முறை:
வான் முகந்த நீர் மலைப் பொழியவும்
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்
மாரி பெய்யும் பருவம் போல்
நீரின்றும் நிலத்து ஏற்றவும்
நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்
அளந்து அறியாப் பல பண்டம்.
உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலை 126-131.

  • தமிழில் நீரைத் தேக்கும் அமைப்புத் தொடர்பாக முப்பதுக்கும் மேற்பட்ட சொற்கள் உள்ளன.
  •  நீரின் போக்கையும் நிலத்தின் தன்மையையும் அறிந்து நம் முன்னோர் நீர்த் தேக்கத்தை ஏற்படுத்தினர்.
  • இரண்டு பக்கப் பாறைகளை இணைத்து எட்டாம் நாள் பிறை போன்று குளக்கரை அமைத்தனர் (புறம். 118).
  •  கல்கொண்டு அணை கட்டப்பட்டதை ‘வருவிசைப் புனல் கற்சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமையாலும்’ (தொல். பொருள். 65) என்னும் தொல்காப்பிய நூற்பாவால் அறிகின்றோம்.
  • அரசன் பெயரில் குளம் இருந்ததைக் “கடுந்தேர்ச் செழியன் படைமாண் பெருங்குளம் மடைநீர்” (நற். 340) என்று நற்றிணை தெரிவிக்கின்றது.
  • குளங்களுக்குக் காவலர்கள் (மடை வாரியர்கள்,கண்மாய் குடும்பன்) நியமிக்கப்பட்டிருந்தனர் (அகம். 252).
  • “நீர் மோதும் மதகுகளை உடைய உறையூர்” (அகம். 237) என நீர் வளத்தோடு இணைத்து ஊரைச் சிறப்பிக்கும் முறையைச் சங்க இலக்கியங்களில் காணலாம்.

1000 ஆண்டுகளை கடந்த சில ஏரிகள்..

மதுரை மாவட்டத்தில் மட்டும் 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2000 ஆண்டுகளைக் கடந்தும் இவை பயன்பாட்டில் உள்ளன. 

செம்பரம்பாக்கம் ஏரி
தூசிமாமண்டூர் ஏரி
காவேரிப்பாக்கம் ஏரி
தென்னேரி
வீராணம் ஏரி
உத்திரமேரூர் ஏரி
இராசசிங்கமங்கலம் ஏரி
பெருமாள் ஏரி
மதுராந்தகம் ஏரி
கடம்பா குளம்

மேலும் திண்டுக்கல்லை அடுத்துள்ள ஆத்தூரில் உள்ள கருங்குளம் பகடைக்குளம் புல்வெட்டிக்குளம் என்ற மூன்றடுக்கு குளம் உள்ளது. 2100 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்குளம் இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.

ஆக்கம் மற்றும் 
தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

ஷிர்க் என்றால் என்ன?

ஷிர்க் எனப்படுவது பகிர்ந்து கொள்ளுதல், இணைந்து கொள்ளுதல் அல்லது கூட்டமைத்தல் என்று அர்த்தப்படும். இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஷிர்க் என்றால் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் செயல் ஆகும். ஷிர்க்கை மன்னிக்க முடியா பெரும் பாவம் என்று அல்லாஹ் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான் :
"அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை வைக்காதீர்கள்” (திருக்குர் ஆன் 4 :36)
“”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான். இதை தவிர மற்றதை தான் நாடியவர்களுக்கு மன்னிக்கிறான். யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெரும் பாவத்தையே கறபனை செய்கிறார்கள்” (திருக்குர்ஆன் 4 :48)

ஷிர்க்கின் வகைகள்
ஷிர்க் அர்ருபூபியா – அல்லாஹ்வின் ஆளுமையில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் அஸ்மாஃவஸ்ஸிஃபாத் – அல்லாஹ்வின் குணங்கள் மற்றும் தன்மைகளில் செய்யப்படும் இணைவைப்பு
ஷிர்க் அல் இபாதா – அல்லாஹ்வுக்கு உரித்தான வணக்க வழிபாடுகளில் செய்யப்படும் இணைவைப்பு
அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும் கப்ருகளை வணங்குவதும்
சூனியமும் ஜோசியமும்
ராசி பலன் பார்ப்பது தாயத்து கட்டுவது
இறந்தவர்களுக்காக!
ஈமானை பாழாக்கும் செயல்கள்
ரகசிய ஞானம்?
இணை வைத்தல் அன்றும் இன்றும்
சாத்தான் வேதம் ஓதுகிறது
இறைவனுக்குமா இடைத்தரகர்
மன்னிக்கப்படாத பாவம்
ஆயிரம் முறை அழைத்தால்
சமாதி வழிபாடு
நல்லடியார்கள்
இஸ்லாத்தின் பெயரால் போலிச்சடங்குகள்
அவ்லியாக்கள்
நல்லடியார்களின் கப்ருகளின்மீது...
உயிரே ஓடி வா!
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது




Saturday, 6 December 2008

இளைகர்களே!! வாழ்க்கையில் உங்களுக்கு பெண் பார்க்கும் போது என்ன செய்ய வேண்டும்?


திருமணம் செய்வதற்கு தனக்கு வாழ்க்கை துணைவியாக வரவிருக்கும் பெண்ணை நேரில் சென்று பார்ப்பது நபிவழியாகும். ஆனால் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் இந்த நடைமுறை மாற்றமடைந்து பெண் பார்ப்பதற்கு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரங்களில் சென்று பார்த்து விட்டு கடைசியில் பெண் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள்.

அதுவும்  வாழ்க்கையில் உங்களுக்கு பெண்  பார்க்கும்  போது  பிடிக்காதது மணமகனுக்கல்ல. அவனது குடும்பத்தினர்க்கு என்பது கசப்பான உண்மை. அதேபோன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் பெண் பார்த்துவிட்டு வந்ததன் பின் கடைசியாக மணமகன் பெண்ணை பார்த்துவிட்டு தனக்கு பிடிக்கவில்லை என்கிறான்.

இவ்வாறு பலமுறை பெண் பார்த்துவிட்டு கடைசியில் பிடிக்கவி ல்லை என்பதால் அந்தப் பெண் எவ்வளவு மனவேதனை அடை வாள் என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டாமா?அது மட்டுமல்லாமல் அந்த பெண் வீட்டினர் வசதியற்றவர்களாக இருந்தால் எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும், அவர்கள் சில வேளைகளில் கடன் பெற்றும் ஏற்பாடு களை செய்திருப்பார்கள்.

நாம் பலமுறை சென்று மூக்குமுட்ட சாப்பிட்டு விட்டு கடைசியில் பெண்ணை பிடிக்கவில்லை என்று சாதாரணமாகச் சொல்லிவிடுகிறோம். எனவே யார் மணமகனோ அவன் முதலிலேயே சென்று பெண்ணை பார்த்து சம்மதம் சொல்லவேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். திருமணம் என்பது ஊருக்கல்ல, எமது குடும்பத்திற்கல்ல. நாம்ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதென்றால் நாம்தான் பெண்ணை பார்த்து உறுதி செய்ய வேண்டும்.

பெண் பார்க்கும் இன்னுமொரு முறைதான் மணமகனின் ,மணமகளின் போட்டோவை பார்த்து முடிவெடுப்பது. இன்றைய காலகட்டத்தில் போட்டோக்களில் ஒருவரை எவ்வாறு வேண்டுமானாலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்.

எனவே ஒருவர் போட்டோவை பார்த்து சம்மதம் சொல்லிவிட்டு நேரில் பார்த்ததும் திகைத்துவிடுகின்றார். குறிப்பாக வெளி நாடுகளில் வேளை செய்பவர்கள் அங்கிருந்துகொண்டு இன்டர்நெட்டில், போட்டோவில் பெண் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவருடைய தோற்றத்தை நேரில் பார்ப்பதின் மூலமே மிகச் சரியாக அறிந்துகொள்ளலாம்.


பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.

பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....

"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,

"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.


எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????


பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

  •  பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.


  • ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.


  • 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது? ''பேசினா தப்பா நினைப்பாறோ??'அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

  • ஆனால் என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம."உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம..கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.


  •  முதல் முதலா கேட்கிற கேள்வி.?அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.....அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.


  • தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

  • [ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']


  • அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.


  • நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.                                              
  • வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்....


  • உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.


  • "கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!


  • பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
  • ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.


  • [ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]


  •  உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.

  • உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.



* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.


இதுவே ஒரு முஸ்லிம் ஆண், திருமணம் செய்யும் நோக்கத்தில் பெண்ணைப் பார்க்க சென்றால் பெண் மார்க்கப்பற்று உள்ளவளா என்பதைத் தான் பார்ப்பான், அதை விடுத்து சினிமா நடிகை போன்று இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பார்க்க சென்றால் அவன் முஸ்லிமாக நடிக்கும்பெயரளவு முஸ்லிம் என்பதில் சந்தேகம் இல்லை.


இளமையில் வழி தவறி விடக்கூடாது என்ற நோக்கமும் திருமணத்திற்கு முக்கியம் என்பதால் மார்க்கப்பற்றுள்ள ஒரு பெண் தேவை என்ற நோக்கம் முதலில் இருக்க வேண்டும்,பெண் மார்டனாக, ஸ்லிம்மாக, பேசியல் செய்த முகத்துடன் இருக்கவேண்டும்என்று எண்ணுபவன் பெண்ணை மணமுடித்து சினிமாவில் நடிக்கவைத்து சம்பாதிக்கப்போகிறானா? அல்லது மார்டன்செய்து கேட் வாக் செய்து சம்பாதிக்க வைக்கப்போகி றானா? ஹிஜாப் இன்றி ஜோடியாக கைகோர்த்து வெளியில் சுற்றி பார்க்கிறவர்களுக்கு அருமையான ஜோடியாக தெரிய வேண்டும் என்று எண்ணுகிறானா?


  • ஐவேளை தொழுகையை நிறைவேற்றி வரும் பெண் பேசியல் செய்து கொள்வாளா?


  • ஐவேளை உளூ செய்து வரும் பெண்ணின் முகம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானஇருக்கும் பொலிவு போதாதா?


  • அல்லாஹ்வை விட அல்லாஹ்வுக்கே சொல்லித்தரக்கூடியவர்கள் இந்த உலகில் உள்ளார்களா? 


  • சினிமா நடிகை போன்று ஸ்லிம்மாக திருமணம் செய்து ஒரு குழந்தை பெற்ற பின்குண்டாவது இயற்கை. குண்டாகிவிட்டால் தலாக் சொல்லி அனுப்பிவிடுவாயா?
  • ஆண்களும் கூட்டாக சேர்ந்து பெண்ணை பார்ப்பது கூடுமா? 


இஸ்லாமிய பெண் திருமணத்திற்காக தன்னை காண வரும் மணமகனுக்கு இஸ்லாம் வரையறுக்கப்பட்ட அளவில்தன்முகத்தைக் காட்டுவதற்கு அனுமதி இருக்கிறது ஆனால், அவனின் மாமன் மச்சான் எல்லாம்அப்பெண்ணை பார்க்க மார்க்கம் அனுமதிக்கிறதா என்றால் மார்க்கத்தில்அனுமதி இல்லை .

தலையை மறைத்து வைத்திருக்கும் பெண்ணை தலையில் இருந்து துணியை நீக்கச் சொல்லி மாப்பிள்ளையாக தன்னை எண்ணிக் கொண்டிருக்கும் மிருகத்தின் மாமன் மச்சான் எல்லாம் அன்னியப் பெண்ணை அப்படி பார்க்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

இதனாலேயே இஸ்லாம் ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள் என்று கட்டளையிடுகிறது என்பதை புரிந்து செயற்படுவோம்.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (நோக்கங்களு) க்காக ஒரு பெண் மணமுடிக்கப்ப டுகிறாள்:
1. அவளது செல்வத்திற்காக.
2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக.
3. அவளது அழகிற்காக.
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக.
ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)
கொண்டு வெற்றி அடைந்துகொள்!(இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 2905)

இளைகர்களே!! வாலிபர்களே ! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்..

Wednesday, 3 December 2008

ஈழத் 'தமிழர்கள்' குறித்து இனி பேசப்போவதில்லை !

ஏப்ரல் ஒன்றுக்காக எழுதவில்லை. தலைப்பு பொய்யையும் பேசவில்லை. பள்ளிக் கூடம் படிக்கும் போது நாம் எடுக்கும் உறுதி மொழி என்ன ? இந்தியனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன், எனது தாய் திருநாடான பாரதத்தை நேசிக்கிறேன். அதன் கண்ணியம் காப்பேன். நான் இந்தியனாகவே என்னை நினைக்கிறேன்.

நான் என்னை தமிழனாக நினைத்தால் நான் ஒரு பிரிவினைவாதி - இதுதானே அந்த உறுதி மொழியை ஏற்றுக் கொள்வதன் மூலம் நாம் மறைமுகமாக ஏற்றுக் கொள்வது ?

இலங்கையிலோ, மலேசியாவிலோ இந்திய வம்சாவளியினர் நசுக்கப்படும் பொழுது இந்தியாவில் வாழும் இந்தியர்கள் அவர்களை தமிழனாகப் பார்த்ததன் விளைவோ ? இவர்கள் பிரிவினை வாதிகள் என்று கூறி இந்தியாவில் தமிழர்கள் அல்லாத நாய் கூட அது குறித்து கவலைப்படுவதில்லை. தலிபான் தீவிரவாதி ஒரு விமானத்தைக் கடத்திச் செல்கிறான். அதில் ரூபன் கத்தியால் மற்றும் 100 பேர் இந்தியர்களாக பயணம் செய்தார்கள், அவர்களை இந்திக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டு இருந்தோமா ? அல்கொய்தாவின் பிடியில் சிக்கி அல்ஜெசிரா தொலைகாட்சியில் மரண பயந்துடன் தெரிந்த முகங்களுக்கெல்லாம் மாநில அடையாளத்தைப் பார்த்து தமிழர்கள் மகிழ்ந்தார்களா ? பிஜிதீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இந்திய வம்சாவளியினர் சிறைபிடிக்கப்பட்ட போது எந்த மாநிலத்துக்காரர்கள் அது தங்களுக்கு தொடர்பில்லாதது போல் பார்த்தார்கள் ?

வெளிநாட்டில் தமிழன் அவமானப்படுவது அவன் தலைவிதியாகவே இருக்கட்டும்? இந்தியாவுக்குள் ஏன் இந்த இழிநிலை ? காரணம் இந்தியாவுக்குள்ளும் தமிழன் இந்தியன் அல்ல, தமிழன் அடிவாங்கினால் இந்திய அரசாங்கமும் அதை கண்டுகொள்ளாது ?

இலங்கையிலும் சரி, மலேசியாவிலும் சரி இந்தியர்களுக்கு பிரச்சனை என்றால் இந்தியாவில் தமிழன் தவிர வேறு எவனும் அலட்டிக் கொள்வதே இல்லை. ஒருவேளை ஈழத்தமிழர்கள் என்று சொல்லாமல் ஈழவாழ் இந்திய வம்சாவளியினர் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசு இலங்கை அரசை அடக்கி வைத்திருக்குமோ? அது போல் மலேசிய தமிழர்கள் என்று சொல்லாமல் மலேசிய வாழ் இந்தியர்கள் என்று சொல்லி இருந்தால் இந்திய அரசாங்கம் வெகுவிரைவாக பேசி இருக்குமோ ? எங்கு தமிழனுக்கு பிரச்சனை என்றாலும் தமிழக முதல்வர்கள் ஞாபகப்படுத்தவில்லை என்றால் இந்திய அரசாங்கத்தையே எழுப்ப முடியாது என்றே நினைக்கும் படியே எல்லாம் நடக்கிறது. இதில் கர்நாடகா முதல் பிறமாநிலக்காரர்களைக் குறைத்து சொல்ல என்ன இருக்கிறது ?

வெளிநாட்டில் தமிழன் தமிழனாகத்தான் பார்க்கப்படுகின்றனா ? எந்த நாட்டிலும் தமிழன் தமிழனாகப் பார்க்கப்படுவதில்லை, இந்தியன் என்றே பிறரால் அழைக்கப்படுகிறார்கள். சிங்கப்பூர்வாழ் இந்தியர்கள், மலேயா வாழ் இந்தியர்கள், மாலத்தீவு இந்தியர்கள் என்றே சொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு பிரச்சனை என்றால் மட்டும் ஒட்டு மொத்த இந்தியாவே அது தமிழர்களின் தனிப்பட்ட பிரச்சனை போல் நினைப்பது ஏன் ? மொழிப்பெரும்பான்மை என்பதைத் தவிர்த்து தமிழன் எந்தவிதத்தில் தான் இந்தியன் இல்லை என்று காட்டிக் கொள்கிறான்? தமிழன் என்கிற மொழி பண்பாடு அடையாளத்தை ஒரு இனத்தின் அடையாளம் போல் சித்தரிக்கப்பட்டுவிட்டு புறக்கணிக்கப்படுகிறோம் என்பது கர்நாடகத்திலும் பிற மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆண்டாண்டு காலம் பிறமாநிலங்களில் வாழ்ந்தாலும் நம்மை ஒரு தனி இனமாக கருதி ஒதுக்கப்படுவதால் நமக்கு தமிழ்த்தாய் வாழ்த்து போதுமே! தேசிய கீதமும், இந்தியன் என்ற அடையாளமும் நமக்கு எதற்கு ?


ஈழத்தமிழர்கள் என்ற 'தமிழ்மொழி' அடையாளத்தில் இலங்கையில் போராட்டம் நடைபெறாமல் ஈழவாழ் இந்திய வம்சாவழியினர் என்ற அடையாளத்தில் போராடி இருந்தால் இந்த பிரச்சனை தீர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா ?

தற்பொழுது கூட ஈழ இந்தியர் பிரச்சனைகள் என்று பெயர் மாற்றிக் கொண்டால் முழு இந்தியாவையே அதற்கு ஆதரவாக திரட்ட முடியுமா ? தேசியவாதிகளே மற்றும் தமிழ் தேசியவாதிகளே ஈழத்தமிழர்கள் வாழ்க்கை கண்டுக் கொள்ளப் படாமல் போனதற்கு அவர்கள் தமிழர் என்பது தான் காரணாமா ? அவர்கள் இந்திய வம்சாவளியினர் இல்லையா ?

நீங்கள் இந்தியரா ? என்று ஒரு சிங்களரிடம் கேட்டுப் பாருங்கள் . இல்லை நான் ஏசியன் அல்லது சிங்களன் என்றே சொல்லுவார் ஒருகாலும் இந்தியன் என்றோ இந்திய வம்சாவளியினர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். வெளிநாடுவாழ் தமிழர்கள் அவ்வாறெல்லாம் சொல்லிக் கொள்வது இல்லை. இந்தியாவில் அவர்களுக்கு தொப்புள் கொடி உறவு என்றும் இருக்கிறது.

ஈழப்பிரச்சனை தீரததற்கு தமிழ்தான் அடையாளம் என்ற ஒரு காரணமிருந்தால், நான் தமிழன் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியன் என்றே சொல்லிக் கொள்கிறேன். ஈழப்பிரச்சனை ஈழவாழ் இந்தியர்களின் போராட்டமாக மாற்றி நினைத்துக் கொள்கிறேன். ஈழவிடுதலைக்கு தமிழன் என்ற அடையாளம் தடையாக இருந்தால் எனக்கும் அது தேவையற்றதே.

முட்டாள்கள் தின சிந்தனையாக, இந்தியாவுக்குள்ளும் தமிழன் என்ற ஒரே காரணத்தால் பக்கத்து மாநிலத்தில் பிறந்து வளர்ந்து தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள தமிழர்கள் தாக்கப்பட்டு இரத்தம் சிந்தும் போது நாம் 'இந்தியர்' என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோமா ? இல்லை... நீங்கள் இந்தியர்கள் அல்ல, தமிழர்கள் என்று அவர்கள் ஒரு இனமாக அடையாளப்படுத்துவதை அப்படியே ஏற்றுக் கொள்கிறோமா ?

Wednesday, 26 November 2008

மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள் !! ஒரு விழிப்புணர்வு பார்வை..

Image result for Most common rainy season diseasesதமிழகத்தில் பருவமழை தொடங்கி விட்டது.மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். இந்தக் காலத்தில் பெரும்பாலான நோய்கள் நம்மை எளிதாக தாக்கக்கூடும்.

ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும் இழுத்துக் கொண்டோடும் மழைநீரில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் உற்சாக மாக நீந்திக்கொண்டிருக்கும். தன் வழியில் சிக்கிய வர்களை எல்லாம் நோயில் விழ வைத்துவிடும். 

மழை நாட்களில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் ஒடிக்கொண்டே இருக்கும். இதனால் எளிதில் நோய்க் கிருமிகள் பரவும் வாய்ப்பு அதிகம்.. தண்ணீர் மூலம் எளிதில் பரவக்கூடிய கிருமிகளில் முக்கியமானது இன்ஃபுளூயன்ஸா.  இன்ஃபுளூயன்ஸா வைரஸ் நோய்க் கிருமிகள் முதலில் வயதானவர்களையும், குழந்தை களையும் தாக்கும். அதேபோல ஏற்கெனவே நோயுற்றிருப்ப வர்களிடமும் தன் கைவரிசையைக் காட்டும்.

இன்ஃபுளூயன்ஸா தாக்கியப்பின் உடலின் நோய் எதிர்ப்புசக்தியைக் குறைத்து, பாக்டீரியா தாக்குதலுக்கு வழி ஏற்படுத்தித் தரும். இருமல், சளி, தும்மல் என ஆரம்பிக்கும் தாக்குதல் காய்ச்சலில் முடியும். இதை சாதாரண காய்ச்சலாக நினைத்து கவனிக்காமல் விட்டுவிட்டால் அதுவே நிமோனியா காய்ச்சலாக மாறும் அபாயமும் இருக்கிறது. அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம்.

பொதுவாகவே நாம் அருந்தும் குடிநீர் மூலமாகத்தான் நோய்கள் அதிகமாக தாக்குகிறது. அதுமட்டுமில்லாது வீட்டை சுற்றி நீர் தேங்கி இருப்பின் அதில் கொசுக்கள் உருவாகின்றன.


* நாளடைவில் தேங்கி இருக்கும் நீர் சாக்கடை போல் மாறி விடுகின்றது. வேறு வழியின்றி வீட்டிற்கு வெளியில் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்கிறோம். இவ்வாறு இருக்கும் போது வைரஸ் கிருமிகள் எளிதில் பரவி நோய்களை ஏற்படுத்துகிறது.
* சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.
* மழை நீர் தேங்கிய பகுதியில் உருவாகும் கொசுக்கள்  மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் ஆகிய நோய்கள் வரலாம். மழை காலத்தில் தான் வழக்கத்தைவிட அதிகம் பேர் நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதுபோன்ற நோய்கள் நம்மை தாக்காமல் இருக்க எளிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வரலாம்.
* காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.
* சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.
* தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் ரத்தப் பரிசோதனை செய்து என்ன கிருமி தாக்கியுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
* குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
* கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
* மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* வீட்டைச் சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
* செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
* உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது. 
* வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.

வைரஸ் கிருமிகள் காற்றில் துகள்கள் வடிவில் பரவும். எனவே ஒருவர் பயன்படுத்திய டவல், கைக்குட்டை ஆகியவற்றை மற்றவர் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் தும்மல், இருமல் போன்ற காரணத்தினாலும் வைரஸ் காய்ச்சல் பிறரை எளிதில் தாக்கும்.

கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ்கள் ரத்த உறைவு அணுக்களின் எண்ணிக்கையை  குறைத்து விடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தீவிரமாகி உடலின் பல பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்படும். ரத்தக் கசிவு மூளையில் ஏற்பட்டால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.


மலேரியா, சிக்குன் குன்யா இரண்டுமே கொசுக்களால் பரவக்கூடியதுதான்.  அதனால் தொடர்ச்சியான காய்ச்சல் தும்மல் இருமல் அலர்ஜி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். 


மூன்றுவித பிரச்னைகள் பொதுவாக மழைக்காலத்தில் 3 விதமான பிரச்னைகள் ஏற்படும். மாசுபட்ட சூழ்நிலை, மாசுபடும் குடிநீர், தண்ணீர் சார்ந்த உயிரினங்கள் ஆகியவற்றின் மூலம் நோய்கள் பரவுகின்றன. இதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள பழகிவிட்டாலே, நாம் எளிதில் நோய்களை வென்று விடலாம். நிச்சயம் நம் குழந்தைகளுக்கும் இவற்றை கற்றுக்கொடுத்தே ஆக வேண்டும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

நன்றி : டாக்டர்  பீ.பஷீர் அஹமது. விஜயா மருத்துவமனை, சென்னை .

Saturday, 22 November 2008

ஜும்மாவை தாமதமாக தொழலாமா ?...



வெளிநாட்டில் வாழும் என் போன்ற சகோதரர்களுக்கு குறிப்பாக பிரான்ஸ் இங்கிலாந்து நாட்டில் பணிபுரிவோருக்கு ஜும்மா கிடைப்பது அரிது. அதனால் வேலை நேரத்தில் நேரம் கிடைக்கும் போது 15 அல்லது 30 நிமிடங்கள் முன்னாலோ பின்னாலோ தொழுதால் ஜும்மா கூடுமா? குறிப்பிட்ட மூன்று நேரம் தவிர மற்ற நேரங்களில் தொழத் தடை இல்லை என்பதால் இப்படி தாமதமாகத் தொழலாம் அல்லவா?



ஜுமுஆத் தொழுகையை சூரியன் உச்சியிலிந்து சாய்ந்த உடனே சீக்கிரமாகவும் தொழலாம். சற்று நேரம் கழித்தும் தொழலாம். இரண்டிற்கும் ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

சூரியன் (உச்சியிலிருந்து) சாயும் நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜுமுஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (904), திர்மிதீ (462), அபூதாவூத் 916), அஹ்மத் (12057)

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜுமுஆத் தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குச் சுவர்களுக்கு நிழல் இருக்காது.

அறிவிப்பவர் : ஸலமா (ரலி),
நூல்கள் : புகாரீ (4168), முஸ்லிம் (1424?)

ஜுமுஆ தொழுகைக்குச் சீக்கிரமாகச் சென்று விட்டு அதன் பின்பே நாங்கள் முற்பகல் தூக்கம் மேற்கொள்வோம்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
நூல்கள் : புகாரீ (940)

ஜுமுஆவிற்குப் பிறகு தான் நாங்கள் முற்பகல் தூக்கத்தையும், காலை உணவையும் கொள்வோம்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி),
நூல்கள் : புகாரீ (939), முஸ்லிம் (1422?)

நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவார்கள். வெப்பம் கடுமையாக இருக்கும் போது தொழுகையை -அதாவது ஜுமுஆத் தொழுகையை- வெப்பம் தணிந்த பின் தொழுவார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி (906)

பொதுவாக ளுஹர் நேரம் சூரியன் உச்சிக்கு வந்த பிறகு தான் ஆரம்பமாகும் என்றாலும் அதற்கு பகரமாக தொழும் ஜும்மா தொழுகை நேரம் லுஹர் நேரத்தை விட விசாலமானதாகும். அதாவது சூரியன் உச்சிக்கு வருவதற்கு முன்பே ஜும்மா தொழலாம். காலை உணவையே ஜும்மாவுக்குப் பின்னர் தான் உட்கொண்டுள்ளதாக மேற்கண்ட ஹதீஸ்களில் கூறப்படுவதில் இருந்து காலையிலேயே ஜும்மா தொழுதுள்ளனர் என்பது தெரிகின்றது.

சூரியன் உச்சிக்கு வரும் நேரத்தில் மட்டும் தொழுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்று நேரங்களில் தொழ வேண்டாம். அல்லது இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.

1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.

2. சூரியன் உச்சிக்கு வந்து சாயும் வரை.

3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி)
நூல்: முஸ்லிம் 1373

Thursday, 6 November 2008

தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கிய இஸ்லாமியர்...?

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ - பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் - துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட - இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க - மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.


நன்றி : தினமணி.