Tuesday, 16 December 2014

கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்தா? மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்...

மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்படவில்லை: ஸ்மிருதி இரானி அறிவிப்புவாஜ்பாய், மதன்மோகன் மாளவியா போன்ற பாஜ மூத்த தலைவர்கள் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சிபிஎஸ்சி மற்றும் நவோதயா பள்ளி களில் கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள இந்த முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

என் கருத்து..
நானும் மோடிக்கு வோட்டு போட்டவன்தான். ஆனால்கொஞ்ச நாட்களாக நடப்பதெல்லாம் பார்த்தால்இந்த அரசு வேண்டுமென்றே மக்களை திசை திருப்பும் வேலையில் குழப்பி அரசியல் செய்கிறதோ என்று தான் எண்ண வைக்கிறது. முதலில் ஒரு மந்திரி அனைவரும் ராமரின் பிள்ளைகள் என்றார், பின்னர் ஒரு மந்திரி பகவத்கீதை தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்றார். இப்போது கிறிஸ்துமஸ் விடுமுறை இல்லை என்பது போல ஒரு அறிக்கை. யாரும் யார் மதத்தையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்வதால் ஹிந்து மதம் வளர்ந்து விடாது, மதம் என்ற சொல்லுக்கு நெறி என்றும் பொருளுண்டு. வெறியென்றும் பொருளுண்டு. இப்போதைய அரசு வெறி என்ற 
பொருளில் செயல்படுவதாக தோன்றுகிறது.

திமுக தலைவர் கருணாநிதி..
பாஜக அரசின் நடவடிக் கைகள் நாளுக்குநாள் விபரீதத்தை ஏற்படுத்துவதாகவும், வேதனையைத் தருவதாக வும்தான் உள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்து மகாசபைத் தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளை ‘நல்லாட்சி தினம்’ என்ற பெயரில் டிசம்பர் 25-ம் தேதி, அதாவது கிறிஸ்துமஸ் நாளன்று கொண்டாடுவதற்கு முன்வந்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதையொட்டி, மத்திய அரசு சிபிஎஸ்இ பள்ளிகள் அன்றைய தினம் கட்டுரைப் போட்டிகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறது. மத்திய அரசு, தானே நடத்துகின்ற ‘நவோதயா வித்யாலயா’ பள்ளிகளுக்கு இதை சுற்றறிக்கையாக அனுப்பி, டிசம்பர் 24, 25 ஆகிய நாட்களில் கட்டுரைப் போட்டி நடத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் என்பதை மாணவர்கள் கொண்டாட முடியாத ஒரு நிலையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாகரிகத்தைச் சிதைத்திட முனையும் இத்தகைய பிரச்சினைகளில் பிரதமர் மோடி உடனடியாகத் தலையிட்டு, இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், எதிர் காலத்தில் இதுவே பெரிய வரலாற்றுப் பிழையாகிவிடும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்)..
டிசம்பர் 25-ம் தேதியை நல் ஆளுமை நாளாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி மத்திய இடைநிலை கல்வி வாரியப் பள்ளிகளில் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய நம்பிக்கையின்படியான கொண்டாட்டத்தை கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)..
நவோதயா பள்ளிகளில் வாஜ்பாய் மற்றும் மதன்மோகன் மாளவியா பிறந்தநாளை நல்லாட்சி தினமாக அறிவிக்க இருப்பதாகவும், இதற்காக டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.இது அநீதியான செயலாகும். கிறிஸ்துமஸ் விடுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புவதற்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (தமிழக காங்கிரஸ் தலைவர்)..
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகா சபா தலைவர் மதன்மோகன் மாளவியாவின் பிறந்த நாளை ‘நல்ல ஆளுமை’ தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ரத்து செய்துவிட்டு அன்றைய தினம் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி போன்றவற்றை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு, காலம்காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக் கும் முயற்சியாக உள்ளது.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)..
டிசம்பர் 25-ம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபாவின் தலை வராக இருந்த மதன்மோகன் மாளவியா ஆகியோரது பிறந்த நாளையொட்டி மத்திய அரசால் நடத்தப்படும் நவோதயா பள்ளி களில் மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி நடத்தப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது கடும் கண்டனத் துக்குரியது. இந்த சுற்றறிக்கையை மத்திய அரசு விலக்கிக்கொள்ள வேண்டும்.

மாநிலங்களவையில் சுற்றறிக்கை நகல்...
வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாது என்றும் அன்றைய தினம் ”நல்லாட்சி நாள் " என்று கடைபிடிக்கப் பட வேண்டும் என்று பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில், எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டன.. இது தொடர்பாக மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் எச்சூரி பிரச்சினை எழுப்பினார். மத உரிமைகள் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது மாநிலங்களவையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இல்லை. அவருக்கு பதிலாக நிதியமைச்சரும், மாநிலங்களவை பாஜக தலைவருமான அருண்ஜெட்லி பதில் அளித்தார். மத்திய அரசு பள்ளிகளில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து சுற்றறிக்கை ஏதும் அனுப்பப்படவில்லை என்றும் அன்றைய தினம் ஆன்லைனில் கட்டுரை போட்டி நடத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் மத்திய அரசின் பள்ளிகளுக்கு மத்திய கல்வி வாரியம் அனுப்பிய சுற்றறிக்கை நகல் ஒன்றை மாநிலங்களவையில் எச்சூரி படித்து காட்டினார். அதில் கிறி்ஸ்துமஸ் தினத்தன்று மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சுற்றறிக்கை நகலை மாநிலங்களவை துணை தலைவர் குரியனிடம் எச்சூரி வழங்கினார். இதை தொடர்ந்து அவையில் தவறான தகவலை அளித்த அருண்ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். 

மீண்டும் கிறிஸ்துமஸ் விடுமுறை...
விடுமுறை ரத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கல்வி மந்திரி ஸ்மிரிதி இரானி பத்திரிகை செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், பத்திரிகை செய்தி தவறானது. கிறிஸ்துமஸ் அன்று வழக்கம் போல் எல்லா பள்ளிகளுக்கும் விடுமுறைதான் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.  கட்டுரைப் போட்டிகள் மட்டும் ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment