Tuesday, 9 December 2014

கொத்தடிமை தொழிலாளர்களாக அரசு பள்ளிகளால் உருவாகும் மாணவர்கள்!! ஒரு சிறப்பு பார்வை..

நம் நாட்டில் வாழும் ஒவ்வொரு ஏழை மக்களும் மழைக்கு கூட தான்ஒதுங்காத கல்விச்சாலைகளுக்கு தன் மழலைகளை கல்வி கற்க அனுப்பிகின்றனர்.
கர்மவீரர் காமராஜரும், புரட்சித்தலைவர் M.G.R அவர்களும் இதற்காகத்தான் சத்தான மதிய உணவு திட்டத்தை அளித்து உலகிற்கே முன்னோடியாக விளங்கினார்கள். அதற்கு பின் வந்த எல்லா கழக அரசுகளும் போட்டி போட்டு கொண்டு மாணவர்களுக்கு தினம் முட்டை, சத்துமாவு, சைக்கிள்,ஜாமென்ட்ரி பாக்ஸ் , புத்தக பை, சீருடைகள் ,காலணிகள் மேலும் முத்தாய்ப்பாக உலக நடப்புகளை விரல்நுனிக்கு கொண்டு வரும் லேப்டாப்களை தமிழக அரசு மாணவர்களுக்கு எவ்வித பாரபட்சமும் பாராமல் கொடுத்து வருகிறது. இதற்கு காரணம் நமது மாணவர் சமுதாயம் “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் கல்வியில் இல்லாமை இல்லாத நிலை வேண்டும் “ என்ற உயரிய எண்ணம் தான்.
ஆனால் காஞ்சிபுரம் பட்டு தறியில் நசிந்து கொண்டிருந்த குழந்தை தொழிலாளர்களை மீட்கவும்,சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் உழைத்து கொண்டிருந்த குழந்தை தொழிலாளர்களை மீட்கவும், சென்னை கடற்கரை வியாபார நெருப்பில் எரிந்து கொண்டிருந்த குழந்தை தொழிலாளர்களை மீட்கவும் தமிழக அரசும் நடுவண் அரசும் உலக வங்கி நிதி உதவியுடன் INDUS திட்டம் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க கோடிகணக்கான ரூபாய்களை செலவழித்து வருகிறது. ஆனால்அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை அவர்களின் பொருளியல் நிலையின் அடிப்படையில் மாதா,பிதா விற்கு பிறகு நாம் வணங்கும் குருவானவர்கள் மனிதாபமே இல்லாமல் மாணவர்களை கொத்தடிமைகளாக வேலை வாங்குகின்றனர். 

மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு செய்ய
o கடைக்கு அனுப்புதல் ( சிகரெட், உணவு ,டீ வாங்கிவர )
o கழிவறையை சுத்தம் செய்தல் (மாணவர்களுக்கு கழிவறை என்னவோ பொட்டால் தான் )
o தண்ணீர் சுமக்க வைத்தல்.
o வளாகத்தை பெருக்குதல் .
o கட்டிட வேலைக்கு கல் மண் சுமக்க வைத்தல்.
o இரு சக்கர வாகனகங்களை கழுவுதல்.
o வீட்டு வேலை செய்ய வைத்தல்.
o தனியார் பள்ளிகளில் படிக்கும் தன பிள்ளைகளை அழைத்து வர வைத்தல் .
என வளரும் அரசு பள்ளி மாணவ செல்வங்களை கூலி தொழிலாளியாக பாவிக்கும் மனப்பான்மை அரசு பள்ளி அசிரியரிடையே கொடிய நஞ்சாக பரவி வருகிறது. குருகுல கல்வி முறையில் கூட மாணவர்களை இத்தகைய இழி செயல்களுக்கு ஆளாக்க மாட்டார்கள்
.


மாணவர்களுக்கு பொறுப்பு வர வேண்டும் எனவே தான் இத்தகைய பணிகளை செய்ய வைக்கிறோம் என சமாளிக்கும் ஆசிரியர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி - உங்கள் பள்ளிகளில் உள்ள நீங்கள் பயன்படுத்தும் கழிவறைகளை நீங்கள் ஒரு நாளாவது சுத்தம் செய்துள்ளீர்களா ? 

தனியார் பள்ளிகளில் இத்தகைய நிலை இருந்தால் இந்த சமுகம் பொறுத்துக்கொள்ளுமா ... தனியார் பள்ளி மாணவர்களை விட இந்த மாணவர்கள் எந்த வழியில் தாழ்ந்து போனார்கள். அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க, கோவணம் கட்டிக்கொண்டு அடுத்த வேலை உணவிற்கு வியர்வை வழிய ஏர்பிடித்து உழைக்கும் குப்பனும், மற்றவர் மலம் தன் தலையில் வழிவதை பாராமல் இச்சமுகத்தை சுத்தப்படுத்த சாக்கடையில் இறங்கி சுத்த படுத்தும் துப்புரவு தொழிலாளி சுப்பனும் கொடுக்கும் வரிப்பணம் தானே காரணம் .அவர்களின் குழந்தைகளை கூலியாக நடத்துவது எத்தகைய பாவச்செயல்.

இது சமூக பயிற்சி தானே என சப்பைக்கட்டு சொல்வோர்களே !! மாணவர்களுக்கு இத்தகைய பணிகள் சமூக பயிற்சி என்றால் மாணவர்களுக்கு வழிகாட்டியாக என்றாவது ஆசிரியர்களும் சேர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபடுகிறார்களா? தங்கள் கழிவறையைத் தாங்களாவது கழுவிக் கொள்கிறார்களா? மாணவன் கழிவறை வசதி இன்றி பொட்டலில் கழிக்க, ஆசிரியர்கள் தங்கள் கழிவறையைக் கூட மாணவர்களை விட்டுக் கழுவச் சொல்வதற்கு பேர் சமூகப் பயிற்சியா?

நாம் படித்த பள்ளியிலேயே ஆசிரியருக்கு தேநீர், cigarette, பாக்கு வாங்கி வர பாட நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம் .இத்தகைய செயல்கள் இன்றும் தொடர்கிறது . இது ஆசிரியர்களின் எல்லா பணிவிடைகளையும் செய்து தரும் குருகுல முறை தான். இதன் தொடர்ச்சி தான் சில முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களைக் கூட அவர்களின் ஆய்வு வழிகாட்டிப் பேராசிரியர்கள் " காய்கறி வாங்கவும், மின்சாரக் கட்டணம் கட்டஅனுப்புவதுமாகத் தொடர்கிறது

சில ஆசிரியர்கள் கூறுவதுபடி இத்தகைய பணிகளை செய்ய அரசு நிதி ஒதுக்குவதில்லை அதனால் இத்தகைய பணிகளை ஆசிரியர்கள் செய்ய சொல்லகூடும் என்பதை ஏற்று கொள்ள முடியாது. ஏன் இந்த பணிகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமாகவோ , கிராம கல்வி குழுவின் மூலமாகவோ செய்யலாமே அல்லது அவ்வாறு ஒதுக்கப்படும் நிதி மாணவர்களை கொண்டு வேலை வாங்கி கொண்டு உழல் செய்யப்படுகிறதா ? என்ற ஐயம் எழாமல் இல்லை. எது எப்படியோ பள்ளிகல்வி துறை இத்தகைய செயல்களை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பாருங்கள் அந்த மாணவியின் முகத்தில் தெரியும் வேதனையை பாருங்கள். புத்தகப்பை சுமக்க கூட அவள் உடலில் திராணி இல்லை. அந்த பிஞ்சு கரங்களில் நீர் குடத்தை சுமக்க வைத்ததவர்கள் கல்வி கற்றுகொடுக்கும் ஈரம் இல்லாதா நெஞ்சர்களே !! 



 மாணவர்கள் கல் மண் சுமக்கும் சித்தாள் வேலை வாங்கி வேடிக்கை பார்ப்பவர் கல் மனம் கொண்ட கல்வியாளரே!!

இது நடந்தது எங்கே தெரியுமா! தமிழகத்திற்கே கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த , வீடுதோறும் கைப்பிடி அரிசி வசூலித்து கே.வி. சாலை பள்ளிகள் உருவான விருதுநகரில் என்பதை எண்ணும் போது இதயத்தில் காய்ச்சிய கம்பியை இறக்கிய வேதனை எழுகிறது.

மேலும் ஒரு அவமான செய்தி ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவரை தலைமையாசிரியர் பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது எத்தகைய கொடுமையான கேவலமான செயல்.“ தீண்டாமை ஒரு பாவச் செயல் “ என பாட புத்தகத்தின் பின் பக்கத்தில் அச்சிட்டால் போதாது போதிக்கும் ஆசான்களின் இதயத்திலும் பதிய வைக்க வேண்டும்.

இதற்கு என்ன தீர்வு சொல்ல போகிறது இந்த அரசு. நடப்பவற்றை அறியாமல் இல்லை கல்வித்துறை அதிகாரிகள் , குற்றம் புரிந்த ஆசிரியர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள், மிக பொறுப்புள்ள ஆசிரிய சமுதாயத்தில் எழுந்துள்ள இத்தகைய களைகளை அகற்ற வேண்டிய கடமை அச்சமுதாயதிற்கு உண்டல்லவா?

இறுதியாக அப்துல் கலாம் அறிவுரையின் படி கனவுகளை சுமக்க வேண்டிய மாணவர்கள் கற்களையும் மண்ணையும் சுமக்க கூடாது. பென்சில் பிடிக்கும் பிஞ்சு கைகளில் துடைப்பத்தை திணிக்க கூடாது. குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வேண்டிய நாம் அவர்கள் உருவாக காரணமாக இருக்க கூடாது என ஒவ்வொருவரும் சங்கல்ப்பம் எடுக்க வேண்டிய தருணம் இது.

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment