Thursday, 8 January 2015

தென்னாட்டின் ஜான்ஸிராணி கடலூர் அஞ்சலையம்பாள் பற்றிய சுதந்திர பார்வை..

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளிச்சத்திற்கு வராமல் போயின. வரலாற்றுத் தரப்படி நிலையில் இத்தகைய பிழைகள் இன்று வரைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அத்தகைய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவர்தான் விடுதலைப் போராட்ட வீரர் கடலூர் அஞ்சலையம்பாள். கடலூர் முது நகரில் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38ஆம் எண் இல்லத்தில் 1890 ஆம் ஆண்டு பிறந்த அஞ்சலையம்மாள் திண்ணைப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்.


பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த பெணமணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும். 

சிறை வாழ்க்கை..

1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது. 
1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம், 
1930-உப்பு சத்தியாகிரகப்போர், 
1933-கள்ளுக் கடை மறியல்,
1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நானகரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர்.ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை தென்னாட்டின் ஜான்ஸிராணி என அழைத்தாராம்.குறிப்பாக வேலுர் பெண்கள் சிறை அவர் அடிக்கடி சென்று வந்த சிறையாகும். 1932 ஆம் ஆண்டு வேலுர் பெண்கள் சிறையில் 727 ஆம் எண் கைதியாக அஞ்சலையம்மாள் இருந்த போது அவர் நிறை மாத கர்ப்பிணி, சிறையிலேயே குழந்தை பிறந்துவிடுமென்பதால் அவரை வெளியில் அனுப்பி குழந்தை பிறந்ததும் மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனால் சிறையில் குழந்தை பிறந்ததற்கான எவ்வித ஆவணமும் இல்லை. அப்போது பிறந்தவர்தான் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில் சின்னஞ்சிறு குடிசையில் வாழ்ந்து வருகிறார். 

சிறையில் அடைபட்டிருக்கும்போது கடலூரில் அஞ்சலை அம்மாளின் வீடு ஏலத்திற்கு வந்தபோது, ஒரு முஸ்லீம் குடும்ப நண்பர் சமயத்தில் உதவி செய்கிறார். அஞ்சலை அம்மாளின் குழந்தைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. பொருளாதார பிரச்சினை ஒரு புறம், பாதுகாப்பின்மை ஒரு புறம் - அதன் தாக்கம் அந்த குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்கிறது.

 திருமண வாழ்க்கை..
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள நற்குணம் என்ற சிற்றூரில் முருகப்படையாட்சி என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவர் கணவர் முருகப்படையாட்சி 1932 ஆம் ஆண்டு கடலுர் சிறையில் அடைக்கப்பட்ட போது அவருக்கு வயது 56 தொழில் நெசவு என்று சிறைப்பதிவேடுகளில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.அஞ்சலையம்மாளின் அரசியல் பணிக்கு உறுதுணையாகக் கணவரும் கடலுரிலேயே தங்கி விடுதலைப் போரில் பங்கேற்று அவரும் பல முறை சிறை சென்றுள்ளார் இவர்களின் மூத்த மகள் அம்மாப்பொண்ணு ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று லீலாவதி எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார். அங்கு செவிலியர் படிப்பை முடித்து சென்னை வந்ததும் தன்னைப்போலவே இளம் வயதில் விடுதலைப் போரில் ஈடுபட்ட பன்மொழிப் புலவர் ஜமதக்னியைத் திருமணம் செய்து கொண்டார். 

அரசியல்  வாழ்க்கை..
காங்கிரஸ் வளர்ச்சிக்கும் அஞ்சலையம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் அஞ்சலையம்மாளின் இல்லம் எப்போதும் காங்கிரஸ் தொண்டர்களால் நிறைந்திருக்கும். அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்த வண்ணமிருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்காக செலவிட்டிருக்கிறார். கடனை அடைக்கமுடியாமல் வீடு ஏலத்திற்கு வந்தது நல்ல உள்ளம் கொண்ட சிலர் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலையம்மாள் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார். 1946 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள் அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை அவைக்குறிப்புகளில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. "கதர் என்று மகாத்மா கொண்டு வந்தார், கிராமங்களில் நூற்றால் ஒரு சிட்டம் இரண்டரை அணா விற்கிறது. இதை நாம் பலப்படுத்திட பஞ்சு வெளியில் போகாமல் கிராமங்களிலேயே வைத்து நூற்க வேண்டுமென்று அரசாங்கத்திலே சட்டம் இயற்றி விட்டால் துணி பஞ்சமில்லாமல் கவுரவமாய் இருப்போம்... கிராமத்தில் பயிரிடுவோர் காலையில் எழுந்து வயலுக்குப் போய்விடுவார்கள். பத்து மணிக்கு அவர்களுக்கு சோறு கொண்டு போவார்கள், அதைச் சாப்பிட்டு விட்டு மாலை ஐந்து மணிக்கு வீட்டிற்கு வருவார்கள். நாம் மூன்று வேளை சாப்பிட்டு விட்டு மருத்துவரிடம் செல்கிறோம். அவர்களுக்கு உணவில்லை, துணியில்லை. இங்கே ஒரு கோட்டு இரண்டு கோட்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய துணியைக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்".(சட்டமன்ற அவைக்குறிபு தொகுதி-1,பக்.317,மே,ஜூன்-1946) ஏழைப் பணக்காரர் நிலையை ஒப்பிட்டு பேசியது அவரின் பொது உடைமைச் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உழவு, நெசவு ஆகிய இரு தொழில்களையும் அவர் குடும்பத்தினர் செய்துள்ளனர். இருப்பினும் நெசவுத் தொழிலையே முதன்மையான தொழிலாகச்செய்துள்ளனர். 

 அஞளசலையம்மாளும் அவர் கணவர் முருகப்படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி தரி நெசவு செய்து நீண்டநாள் கட்சிப்பணி செய்துள்ளனர். நெசவு செய்த கைத்தரி துணிகளைச் சுமந்து கொண்டு தந்தைப் பெரியாரோடு சென்று சிற்றூர்களில் விற்றுள்ளனர். அன்றைய தென்னார்க்காடு மாவட்டக் கழக உறுப்பினராகவும் அஞ்சலையம்மாள் பணியாற்றியுள்ளார். 

அஞ்சலையம்மாளின் சேவை... 
இவரின் முயற்சியால் தான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ் கதிர் கருவி கொண்டுவரப் பட்டுள்ளது.
 பண்ணுருட்டியைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் நல்ல குடி நீர் கிடைக்காமல் மக்கள் நரம்பு சிலந்தி நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அத்தகைய சிற்றூர்களில் அஞ்சலையம்மாள் விழிப்புணர்வுப் பரப்புரை செய்தார். 
வீராணம் ஏரியிலிருந்து புவன கிரிக்கு பாசன நீர் செல்லும் பெரிய வாய்க்காலில் ஒரு கிளை வாய்க்காலை ஏற்படுத்தி தீர்த்தாம்பாளையம் என்ற சிற்றூருக்கு பாசன வசதி செய்தார் அவ்வாய்க்கால் இன்றும் அஞ்சலை வாய்க்கால் என்றே குறிப்பிடப் படுகிறது. கடலூர் அஞ்சலையம்மாள் விடுதலை வீரர்களுக்குக் காவல் துறை வளாகத்திலேயே உணவு சமைத்துக் கொடுத்தார் அதனால் அவர் சிறைத் தண்டனைப் பெற்றார் என எழுதப்பட்டுள்ளது அஞ்சலையம்மாளின் வரலாறு. 


இத்தகைய வரலாற்று நாயகியை நம் வரலாற்றுப் பாட நூல்கள் எப்படி சிறப்பித்துள்ளது தெரியுமா?இவ்வளவு தியாகங்கள் செய்த குடும்பம் வரலாற்று ஏடுகளில் எங்கே உள்ளது? 
இந்த சரித்திர சுவடுகள் பெண்களை ஒதுக்கி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டில்/ தென்மாவட்டத்தில் சுதந்திரபோராட்டத்திற்கு பங்களித்த எத்தனை பெண்கள் உடனே நம் நினைவுக்கு வருகின்றனர்? பெண்களின் போராட்டங்களை இந்த சமூகம் மறைக்கிறது அல்லது மறக்கிறது! 

அரசர்களுக்கும், முதலாளித்துவ வர்க்கத்திற்குமே சரித்திரம் சொந்தமானது என்றால் சாதாரண அஞ்சலை அம்மாக்களின் தியாகத்தை யார் சொல்வது? யார் இதை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைப்பது? யார் யாருக்கோ சிலை நிறுவும் அரசாங்கம் அவர்களை எப்படி மறக்கலாம்?இவர்கள் சாதி, மதங்கள் தாண்டி வெளியில் வந்து போராடியவர்கள் ஆயிற்றே! History என்பது his-story மட்டுமல்ல her-storyயையும் உள்ளடக்கியது தானே! அரசு செய்ய மறந்தால் அல்லது மறுத்தால் இந்த சமுதாயமாவது அன்னாருக்கு சிலையெடுத்து சரித்திரத்தை திரும்பி பார்க்க வைக்கட்டும்! 

பெண் என்பவள் சமைக்கப் பிறந்தவள் என்னும் ஆணாதிக்கப் பொதுப் புத்தியின் வெளிப்பாடுதான் இது.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல். 

No comments:

Post a Comment