Friday, 2 January 2015

பிச்சாவரம் வன சுற்றுலாதலம் பற்றிய சிறப்பு பார்வை ..

தமிழகத்தில் பரவலாக அறியப்படாத, ஆனால், நேரில் சென்று அறிந்தவர்களை ஆச்சரியப்படுத்தும் சுற்றுலா தலங்களில் ஒன்று பிச்சாவரம். இதன் இயற்கை எழில் சற்றே வித்தியாசமானது. அனைவரையும் ஈர்க்கக் கூடியது.கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. இந்தியாவிலேயே சதுப்பு நிலக்காடுகள் சுற்றுலாத் தலமாகத் திகழ்வது பிச்சாவரத்தில் மட்டுமே என்கிறது. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. 



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனசுற்றுலா மையம் உள்ளது.மேலும் இது சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ளது. குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன.ஆறுகள் கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியில் உருவாகும் சதுப்பு நிலத்தில் அமைந்த காடுகளே சதுப்பு நிலக் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
 1,358 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த சதுப்பு நிலக்காடு, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் இணைந்த பகுதியாகும். இந்த சதுப்பு நிலக்காட்டில் 50க்கும் மேற்பட்ட தீவுகளும், அவற்றைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட ஓடைகளும், வாய்க்கால்களும் உள்ளன.

 சதுப்பு நிலக்காடுகளில் 4,444 கால் வாய் திட்டுகளும், நீர் முள்ளி, நரி, வெண், சிறு, கருங்கண்டன் என, 18க்கும் மேற்பட்ட வகையான மூலிகைத் தாவரங்களும் நிறைந்துள்ளன. இயற்கை சீற்றங்களைத் தடுக்கும் அரணாக, இக்காடுகள் அமைந்துள்ளன. மூலிகை தன்மையுள்ள காற்றை சுவாசிப்பதால், பல நோய்கள் தீருகின்றன. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகளாகும்.செப்டம்பர் முதல் ஏப்ரல் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை கவனிப்பாளர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.


காடுகளை பாதுகாக்க, 1984 ஜூன் 16ல், ஐந்து ஏக்கர் பரப்பில், ஆறு படகுகளுடன் சுற்றுலாத் தலமாக துவங்கப்பட்டது. 1987 மார்ச் 13ல் தமிழ்நாடு ஓட்டல், காடுகளின் நடுவில், ஆறு காட்டேஜ், 20 கட்டில் வசதிகளுடன், இரண்டு தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்ததைத் தொடர்ந்து, கூடுதல் படகுகள், சிறுவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், அரிய வகை சிற்பங்கள் அமைக்கப்பட்டன. வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மருத்துவ குணம் கொண்ட தில்லைமரம்:  பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தில்லை மரம் மருத்துவக்குணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும். தனது தொழுநோய் குணமடைய வேண்டி் முதலாம் பராந்தக சோழகன் தில்லை நடராஜரை வேண்டி இங்கு வந்து தங்கி 45 நாட்கள் முனிவர் ஒருவரிடம் தில்லை மூலிகை தாவரத்தை மூலம் சிகிச்சை பெற்று அந்நோய் குணமடைந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும் சுரபுண்ணை செடி புற்றுநோய் மற்றும் கொடி நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மையம் சோதனை மூலம் கண்டறிந்துள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

படகுசவாரி: பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுகுழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. படகுகுழாமில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.40 வீதம் துடுப்பு படகில் 5 பேர் பயணம் செய்ய ரூ.200  கட்டணமும், மோட்டார் படகில் இரண்டு மணி நேரத்திற்கு 8 பேர் பயணம் செய்ய ரூ.2100 வசூலிக்கப்படுகிறது.   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகுசவாரிக்கு அனுமதியளிக்கப்படுகிறது.  விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி எண்கள்:  பிச்சாவரம் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாக மேலாளர் உதயகுமார் தொலைபேசி எண்: 04144-249249. சிதம்பரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக தொலைபேசி எண்: 04144-238739; கிள்ளை பேரூராட்சி தொலைபேசி எண்: 04144-249227. வெப்சைட் முகவரி: www.killai.com.

தங்கும் விடுதி மற்றும் உணவகம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பிரபல நிறுவனமான ஹோட்டல் சாரதாராம் நிறுவனம் உணவகம் மற்றும் பாருடன் கூடிய தங்கும் விடுதியை திறந்துள்ளது. மேலும் விழாக்கள், கருத்தரங்கம், பயிலரங்கு நடத்தும் வகையில் கூட்ட அறை (Confrance HALL) ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு மற்றும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிச்சாவரத்திலேயே தங்கி சுற்றி பார்க்கலாம் என அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.சுவேதகுமார் தெரிவித்தார். பிச்சாவரம் சுற்றுலா மைய ஹோட்டல் சாரதாராம் தொலைபேசி எண்: 04144 249399, 249400.

வேறெங்கும் கிடைக்காத அனுபவம்..
சதுப்பு நிலக்காட்டில் அமைந்துள்ள சுற்றுலாத் தலம் என்பதாலும், வனத்திற்குள் சிறு சிறு வளைவுகளின் வழியாக படகில் பயணிப்பது வேறெங்கும் கிடைக்காத அனுபவம் என்பதாலும், சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர்..சுற்றிலும் விதவிதமான மரம் செடி கொடிகள், மயில், மீன் கொத்தி, நாரை, பருந்து என விதவிதமான பறவைகள், குள்ளநரி, நீர் நாய் போன்ற விலங்குகள் உள்ளன.இவற்றை பார்ப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதாய் உள்ளது என்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

அறிய வேண்டிய பல்வேறு அம்சங்களையும், பொழுதுபோக்கையும் கொண்டுள்ள பிச்சாவரத்திற்குச் செல்ல சிதம்பரம் மற்றும் கடலூரில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய இடங்களில் ஒன்று பிச்சாவரம் என்பதில் சந்தேகம் இல்லை.

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment