Monday, 1 June 2015

முஸ்லிமுகளுக்கு எதில் தேவை முன்னுரிமை ? ஒரு சமுதாய பார்வை ..


இன்று நடக்கும் சில செயல்பாடுகளை சுட்டிக்காட்டி நம் தவ்ஹீத் ஜமாத் சகோதரர்களிடம் கேள்விகேட்டால் நம்மை எதிர்கேள்வி கேட்டு நம்மை தூற்றுகிறார்கள்.பிஜே மீதும் இந்த இயக்கத்தின் வளர்ச்சியின் மீதும் பொறாமை கொண்டு பேசுவதாக சொல்கிறார்கள்.
இவர்கள் என்ன பேசுகிறார்களோ அதைவிட அதிகமா நாம் பல பேரிடம் பேசி இருக்கிறோம். விவாதித்திருக்கிறோம்.
நாம் அன்று சகோதரர் அண்ணன் pj மேல் வைத்திருந்த அன்பைவிட அவர்மேல் இருந்த வெறியைவிட இன்று இவர்களால் இருக்கமுடியுமா என்றால் சந்தேகம் தான் சந்தோசம் தான்.
இன்று அதே அன்புகொள்ளக்கூடிய நிலையில் அண்ணன் இருக்கிறாறா என்றால் சத்தியமாக இல்லை என்பதை உறுதியாக சொல்லமுடியும்.
இவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்கத் தேவையில்லை.அன்று அண்ணன் சத்தியத்தில் இருக்கும் போது அவரை குறை சொல்கிறவர்களை நாம் விட்டுக்கொடுத்தது இல்லை. வீட்டுக்கொடுக்கும் நிலையில் அன்று அவரும் இல்லை.
இன்று அண்ணனின் ரசிகர்கள் எதை சொன்னாலும் ஏன் பெருமானார் (ஸல்) அவர்களே வந்தாலும் இன்றைய நிலையில் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ என்று சந்தேகம் கவலை தான் வருகிறது.
அன்று தவ்ஹீதில் தஞ்சைமாவட்டத்தின் கும்பகோணம் பகுதியில் ஒட்டுமொத்தமாக விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருந்த நாம் கும்பகோணத்தில் காமராஜர் ரோட்டில் சகோதரர் மௌலவி நசீர் அஹமத் அவர்கள் தலைமையில் இஸ்லாமிய விளக்க மையம் என்று ஆரம்பித்து அதன் மூலம் பல கருத்துக்களையும் பேசக்கூடிய பல்வேறு கொள்கைகளையுடைய தலைவர்களையும் வாரம்தோறும் அழைத்துவந்து பேசக்கூடியவர்களாக இருந்தோம்.
15 பைசா போஸ்ட்கார்ட்லதான் அதையே அறிவிப்பு செய்தோம்.
அன்று அண்ணனோடு இருந்த அறிஞர்கள் ஒருசிலரை தவிர இன்று அவரோடு எவரும் இல்லை.இந்த இயக்கம் வளர்ச்சியடைய அவர்களின் உழைப்பும் தான் காரணம்.இதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம்.
அன்று தந்தையிடம் வாங்கிய அடிகளும்(நான் பலமுறை வீட்டுக்கு தெரியாமல் pj கூட்டங்களுக்கு சென்றதால் பலநாள் பலமான அடிகள் வாங்கியிருக்கிறேன்) வசைகளும் இவர்களுக்கு ஏற்பட்டதில்லை.அன்று பொருளாதார வசதியில்லாத போதும் பல்வேறு எதிர்ப்புகள் இருந்தும் நாம் எந்த போராட்டத்தையும் மாநாட்டையும் பொதுக்கூட்டத்தையும் தவிர்த்ததில்லை.அன்று கடையில் வேலை செய்து வந்த பணத்தை வீட்டிற்கு கூட கொடுக்காமல் புத்தகம் கேசட் போக்குவரத்து செலவு என்று செலவழித்தேன்.
ஒவ்வொரு டிசம்பர் ஆறுக்கும் வாஜ்பாய் ,அத்வானி சென்னை வரும் போதெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கைது,போலிஸ் அச்சுறுத்தல் போன்ற நிலைகள் இவர்களுக்கு இன்று இல்லை.
இன்று கூட்டம் அதிகமாகிவிட்ட மமதையில் அண்ணனும் அவரின் விழுதுகளும் ஆடுகிறார்கள்.அவரின் இன்றைய விழுதுகள் அன்று நாம் இருந்தது போல் ஆடுகிறார்கள்.ஆடட்டும் இவர்களுக்கு பதில் சொல்லி புரயோஜனம் இல்லை. இஸ்லாத்தின் வரம்புகள் மீரப்படும் போது இறைவனின் உதவி நிறுத்தப்பட்டு தானாக ஆட்டம் அடங்கும்.
நாம் ஏதாவது கேள்வி கேட்டால் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறோம் என்று வந்துவிடுகிறார்கள்.சந்தோசம்தான் .
யாருக்கு பதில் சொல்லப்போகிறார்கள்.புதிதாக என்ன சொல்லபோகிறார்கள்.இவர்கள் யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர்களுக்கு சொல்லட்டும்.
எதில் நமது கவணம் முக்கியத்துவம் பெறவேண்டும் என்ற புரிதல் இல்லாதவர்களிடம் எதைச்சொன்னாலும் விழலுக்கிறைத்த நீர்போலத்தான் இருக்கும்.
நாம் எந்த சமுதாயத்திற்கு பணிசெய்கிறோயோ அந்த சமுதாயம் இஸ்லாத்தை தூய வழியில் பயணம் செய்ய வழிகாட்டவேண்டும் தான்.
அடுத்து அந்த சமுதாயத்தின் பொருளாதார வீழ்ச்சிக்கான காரணம் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.நம்முடைய சமுதாயம் வீழ்ச்சியடைந்ததற்கு கல்விகற்காதது தான் முக்கிய காரணம்.
இன்று அதிலிருந்து முன்னேறி கல்விகற்க ஆரம்பித்துள்ளோம்.ஏன் கல்விகற்கவேண்டும்! கல்விகற்பதின் பயன் என்ன!? எந்த மாதிரியான கல்வி நாம் கற்கவேண்டும்! அதற்கான முன்னெடுப்புகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற விசயங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்று நினைத்தேன்.அதற்காக என்னால் முடிந்த முயற்சிகளை எடுக்க முயன்றேன்.அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்.அதற்கு காரணம் இவர்களை உருவாக்கிய ஜமாத் அவ்வாறான முன்னெடுப்புகளில் ஆர்வம் இல்லாமல் இருப்பதே காரணம்.
இஸ்லாத்தை சிந்தனை ரீதியாகவும் ,கொள்கை ரீதியாகவும் அழுத்தமான பயிற்சி கொடுக்காமல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலைவாத நடவடிக்கை களுக்குதான் இஸ்லாமிய இயக்கங்கள் இன்று முன்னுரிமை கொடுக்கின்றன .
நிகழ்கால ஜாஹிலீய கவர்ச்சிகளின் முன் "வாழ்வு" என்பதை இஸ்லாமிய வடிவத்தோடு கொடுத்தல் என்பதில் "மக்கள் திருப்தியே மகேசன் திருப்தி " என்பதே சில இஸ்லாமிய இயக்கங்களின் அமுத வாக்கு.
அதாவது சிக்கல் இல்லாத பிரச்சாரம்,
சமூக சேவைகள் மூலம் தம்மை தக்க வைத்தல் ,
ஆட்சேர்த்தல் ,தம்மை நியாயம் காட்டல் என்ற கருத்தியலோடு கல்வி, சமுதாய சேவைகள் ,போன்ற சுய விளம்பர வடிவமெடுத்துள்ள சில 'தாவா 'கம்பனிகளுக்கு முன் மக்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை எதை தெரிவு செய்வது ? எவ்வாறு தெரிவு செய்வது? என்பதே .
சிலமார்க்க சட்டங்களை பேசியும் இரத்த தானம், கண்தானம், தெருமுனை பிரச்சாரம், கோடைகால இஸ்லாமிய வகுப்பு, தனிபள்ளி, தனியாக பெருநாள் தொழுகை தொழுவது என்று மார்க்கத்தை சுருக்கி ஒரு இளைஞர் சமுதாயத்தையே கெடுத்து குட்டிச்சுவராக்கி இந்தநிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.
இறைவன் சரியான புரிதலையும் அந்த புரிதலின் அடிப்படையில் நம் வாழ்க்கையை இறைவனுக்கும் அவனின் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க கூடியவர்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ஆமின்.
ஆரம்பத்தில் ஜமாத்தே இஸ்லாமி என்ற இயக்கம் தான் எங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்பின் அதன் மாணவர் அமைப்பான SIO வில் இருந்து அதன் பணிகளில் (அரங்க கூட்டங்களில் மட்டுமே இஸ்லாத்தை பேசுவது) இல்லாத வெளிப்படைத்தன்மையால் விலகி அதன்பின் தப்லிக் ஜமாத்,தவ்ஹீத் ஜமாத்,தமுமுக, மனிதநீதிபாசறை என்று இருந்து யாரோடும் முழுமையாக ஒத்து போக முடியாத அதிகமாக கேள்விகேட்கும் தன்மையால் அனைத்திலிருந்தும் விலகி இருக்கிறேன்.25 ஆண்டுகள் என் தந்தையின் தொடர் தாஅவா பணிகளால் அருகிலிருந்து பார்த்து எவ்வளவோ கற்றிருக்கிறேன்.
அன்று அழைப்பு பணிக்கு நாங்கள் கூட்டும் கருத்தரங்கங்களுக்கு பல இயக்க தாயிக்களை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாத்தை சொல்ல அழைத்தால் ஒருஇயக்கத்தை சேர்ந்தவர்கள் வந்தால் அடுத்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் வரமாட்டார்கள்.அந்த அளவுக்கு ஒவ்வொரு இயக்கவாதிகளிடமும் தன் இய்க்கம் மட்டுமே சரியானது என்ற கர்வம் இருந்தது.இன்று மற்ற இயக்கத்தவர்களிடம் அந்த நிலை மாறியுள்ளது.
இன்று இஸ்லாமிய இயக்கங்கள் மறுக்க முடியாத இன்னும் சில பிரச்சனைகள் என்னவென்றால்
இன்று காணப் படக்கூடிய எல்லா இஸ்லாமிய இயக்கங்களையும் முன்னிறுத்தி பின்வரும் வினாவை தொடுத்தால் சில நேரம் அவர்களுக்கும் மக்களுக்கும் மயக்கம் தீரலாம் .அது இஸ்லாத்தை நிலைநாட்டும் கருவி (tool ) இயக்கங்களா ? அல்லது இயக்கத்தை நிலை நிறுத்துவதற்கான கருவி (tool ) இஸ்லாமா ? என்ற வினாவே அதுவாகும்.
இந்த வினாவுக்கு முன் இன்றைய நிகழ்கால நடப்புகளின் படி இயக்கங்களுக்காகத்தான் இஸ்லாம் என்ற பதில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .இந்த மனோ நிலையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களின் வரவுகள் தான் முஸ்லீம் சமூகத்தின் இயல்பான சிந்தனைத் தரத்தை விட்டும் தூரப் படுத்தியுள்ளதுடன் பிரிவினைகளையும் நியாயப்படுத்தி உள்ளது.
தமக்கென வரையறுத்த ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தி அடுத்த இயக்கங்களையும் அங்கீகரிக்கிறோம் என வெளிப்படையாக கூறிக் கொண்டு உள்ளார்ந்த ரீதியாக அடுத்த இயக்கங்களுக்கு எதிராக சேறு பூசி மக்கள் மத்தியில் 'கூல் கேம் கொடுக்கும் இன்டலிஜென்ட் கிரிமினல் டிப்லோமேடிக் இயக்கங்கள் ஒருபுறம் .
தாம் மட்டுமே சரியானவர்கள் அடுத்த இயக்கங்கள் வழிகேடர்கள் காஃபிர்கள், முனாஃபிக்குகள் என வெளிப்படையாகவே சொல்லி சவால் விட்டு சண்டைக்கிழுத்து தற்பெருமை பேசி சகோதரத்துவ சண்டையில் தாமே ஏகபோக பிரச்சார வேங்கைகள் என மார்தட்டி நிற்போர் மறுபுறம்.
மொத்தத்தில் இஸ்லாத்தை அதன் தூய வழியில் மகக்ளுக்கு பிரச்சாரம் செய்வதாக சொல்ல வந்தவர்கள் அதிகரித்துப் போனதால் அவர்களே இஸ்லாமிய சமூகப்புற்றின் ஆபத்தான' கான்சர் செல்களா '? என்ற சந்தேகத்தின் மத்தியில்
இந்த உள்ளார்ந்த சச்சரவுகள் எமக்கு விமர்சனத்துக்குரியதாகவும் , இஸ்லாத்தின் எதிரிகளுக்கு வேடிக்கையான வாடிக்கையாகவும் மாறிவிட்டதும் கவலையான உண்மைதான் .
தயவு செய்து மனதார ஒப்புக் கொள்ளுங்கள் நான் சுட்டிக்காட்டிய விசயங்கள் சூழ்நிலையின் சுருக்கங்களே தவிர விமர்சனம் அல்ல.
சகோதரத்தை விட மேலோங்கி விட்ட இயக்க
வாதங்கள் நம்மை இன்னும் பின்னடையவே செய்யும் . அல்லாஹ்வுக்காக இந்தத் தவறில் இருந்து தவிர்ந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
கலிஃபாக்களினது ஆட்சிக்கு பின்னால் இஸ்லாம் பல பிரச்சினைகளை எதிர்கொண்டது. அந்தகாலகட்டத்தில் நாளடைவில் கொஞ்சகொஞ்சமாக இஸ்லாம் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது அல்லது பள்ளிக்குள் மாத்திரம் மற்றும் சில சடங்கு சம்பிரதாயங்களில் மாத்திரம் இஸ்லாம் ஒரு அம்சமாக மாரியது.
இது தொடர்ந்து கி.பி. 1924 இல் பெயரளவு கிலாஃபத்தும் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் இஸ்லாம் திக்குத் தெரியாமல் வீசிஎறியப்பட்டது. இதன் ஆரம்ப கட்டமான கி.பி. 1000 களுக்கு பின்னர் அரபுநாடுகளில் சிலைவணக்கம், ஷிர்க்கான செயல்கள் மலிந்து காணப்பட்டது இதனை எதிர்கொள்ள இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் போராடினார்கள். இதனை இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் புரட்சியாகவே குறிப்பிடுகிறார். அதனை அடுத்து கி.பி. 1750 களுக்கு பின்னர் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஒரு போரட்டத்தைக் கொண்டுசென்றார்கள்.
இந்த போராட்டங்களின் விளைவாக மேற்கத்திய இஸ்லாமிய எதிர்ப்பு வரலாற்று ஆசிரியர்களினால் 'வஹ்ஹாபிகள்' எனப்படும் அரபுலக இஸ்லாமிய சிந்தனை கொண்டவர்கள் தோற்றம் பெற்றார்கள். அவர்களது சிந்தனைகளால் கவரப்பட்ட தமிழகத்தில் தௌஹீத் பிரச்சாரம் தோற்றம் பெற்றது. இன்று தவ்ஹீத் ஜமாஆத் என்றுள்ளது. இந்த ஜமாத் பல அரிய சேவைகளை செய்துள்ளது. குறிப்பாக ஷிர்க்குகளுக்கு எதிராக பகிரங்க போர்க்கொடிதூக்கி அதில் ஓரளவு மக்களிடம் விழிப்புணர்வும் வெற்றியும் பெற்றுள்ளது. அதே போன்று மார்க்கத்தில் நுழைந்த (பித்அத்) புதியன வற்றை தக்கசான்றுகளுடன் நிருபித்துக் காட்டினர். இதனால் சமூகத்தில் பல அசம்பாவிதங்கள் தோன்றியது உண்மையாயினும் ஷிர்க், பித்அத் களையப்பட வேண்டும் என்ற ரீதியில் அது தவிர்க்க முடியாதது.
இதனால் பல ஷிர்க்கான, பித்அத்தான செயல்களிலிருந்து மக்கள் புரிந்து விலகிக்கொண்டனர்.
ஆனாலும் இவர்கள் மீது சில குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது என்ன?
சத்தியத்தை சொல்வதிலே நிதானத்தை இழந்து செயல்படுகின்றார்கள். ஏனென்றுசொன்னால் தௌஹீத் ஜாமாஆத் செயற்படும் எல்லா இடங்களிலும் சமூகத்துடன் மோதல் எற்படுகின்றது. ஒரு தவறை தடுக்கும், கண்டிக்கும் ஒழுங்கு இவர்களிடம் பேனப்படுவதில்லை,அதாவது காலங்காலமாக தவறையே மார்க்கம் என்று கருதி அல்லது அரசியல் பின்னனியுடன் செயல்படும் ஒருவரை அல்லது சமூகத்தை ,ஒரே இரவில் மாற்றிவிட முடியாது, இது காய்ந்து வலைந்த குச்சியை நிமித்த முயலுவது போன்றதாகும்.ஆனால் இந்த விசயத்தை புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் .
அதுபோல மற்றுமோரு குற்றச்சாட்டு என்னவென்றால் இவர்கள் தமது கொள்கையுடன் ஒத்துப்போகாத அனைவரையும் பித்அத் வாதியகளாகவும், வழிகேடர்களாகவும், காபீர்களாகவும் காட்டுகிறார்கள் என்பது.
இதில் சில உண்மைகள் இருப்பது மறுக்கமுடியாத உண்மை என்று வெட்ட வெளிச்சமாக நாம் காண்கிறோம் வெளிப்படையாகவும் நமக்கு நன்றாகவே தெரிகிறது. ஏனென்று சொன்னால் தவ்ஹீத் ஜமாஆத்தின் உருவாக்கப் பின்னனி அப்படியானது. அது தவறு என்று காணும் ஒன்றை நேருக்கு நேர் சொல்லும் பண்புகொண்டது. நேருக்கு நேர் எதிர்க்கும் தன்மை கொண்டது. காரணம் அது மார்க்கத்தில் தூய்மையை பேணவிரும்புகிறது. உண்மையில் இஸ்லாமிய இயக்கம், இஸ்லாத்தை பாதுகாக்கும் காவலர்களின் பண்பு இப்படித்தான் இருக்க வேண்டும்.
ஆனால் இது சம்மந்தமாக இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் ஒரு கூற்றை நினைவுபடுத்திக்கொள்வது சிறந்தது என்று நினைக்கிறேன். அது என்ன?
"எனது கருத்து சரியானது; அது பிழையாகவும் இருக்கலாம். பிரருடைய கருத்து பிழையானது; அது சரியாகவும் இருக்கலாம்" என்பது.
மற்றுமொரு முக்கியமான குற்றச்சாட்டு இவர்கள் சுன்னத்தான விடயங்களுக்கு அல்லது இரண்டு கருத்துகளுக்கு உள்ள விசயங்களில் தமது ஒரு கருத்தை தினிக்க முற்படுகின்றனர் அல்லது அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துவிடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு. இதுவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயமாகும். இதில் இவர்கள கவனம் செலுத்துவதில்லை.
இவர்கள் தொடர்பான மற்றுமொரு குற்றச்சாட்டு இவர்கள் குர்ஆனையும், நபி வழியையும் மாத்திரம் பின்பற்றுவோம் என்ற கோசம். இது தொடர்பாக விமர்சகர்கள் கருத்து சொல்லும் போது, தப்லீக் ஜமாஆத்தினரது கோசமான 'அல்லாஹ்வின் கட்டளை நபிகளாரின் வழிமுறை' என்று அவர்கள் தமது சில குறிப்பிட்ட விடயங்களுக்கு சொல்வதுதுபோல், தௌஹீத் ஜமாஆத்தினரும் தமக்கு சார்பான அல்லது தான் பின்பற்றும் கொள்கையுடன் தொடர்பான விடயங்களை பின்பற்றுவதை மாத்திரமே இவர்கள் குர்ஆன், நபி வழி என்று கூறுகின்றனர் என்பதாகும். இக்குற்றச்சாட்டுக்கு இவர்கள் இலக்காவதற்கு முக்கிய காரணம். சில அல்குர்ஆன், நபி வழிகளை இவர்கள் மற்ற விசயங்களில் பேசிய அளவுக்கு பேசாமையும் அவற்றில் காட்டும் அக்கரையின்மையுமாகும்.
மதுவை தடை செய்யும் குர்ஆன் அதற்கு கட்டம் கட்டமாக குர்ஆன் வசனங்களை இறக்கியே தடை செய்தது, முழுக் குர்ஆனும் இறங்கி முடிவுபெற 23 வருடங்கள் எடுத்தன. அவ்வாறே சிலைகள் கஃபாவில் இருக்கும் போதே நபிகளார் அவர்கள் அதில் தொழுதிருகிறார்கள். ஹாரூன் (அலை) அவர்கள் தனது சமூகம் மாட்டை வணங்குவதை ஷிர்க் என்று கருதியும் பார்த்துக் கொண்டிருந்தை அல்குர்ஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது எனினும் இவர்களிடம் தவறை திருத்துவதில் இந்த அல்குர்ஆன் நபிவழியும் பேனப்படுவதில்லை.
நபிகளார் அவர்கள் இஸ்லாமிய அரசை உருவாக்கி அதன் முதலாவது ஜனாதிபதியாகவும் இருந்தார்கள், தொடர்ந்து ஸஹாபாக்கள் கலீஃபாக்களாக இருந்தார்கள் இந்த நடைமுறையயும் இவர்கள் பேசுவதுல்லை இது குறித்து பேசும் ஜமாஆத்கள் இவர்களது விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன (குறிப்பாக உலக அரங்கில் இஹ்வானுல் முஸ்லிமீன். இந்தியாவில் ஜமாஆத்தே இஸ்லாமி, SDPI - இவர்கள் பற்றிய விமர்சனங்களுக்கு இப்போது செல்ல விரும்பவில்லை.
இஸ்லாமிய அரசு என்கிற அம்சம் இவ்வளவு தெளிவாக இருந்தும் இஸ்லாமிய கிலாபத் 1924 வரை பெயரலவிலாவது இருந்தும் இஸ்லாத்தை நிலை நாட்டுவதில் இந்த நபிவழி பேனப்படுவதில்லை.
அறிஞர்களை விமர்சித்தல்:
நபிகளார் (ஸல்) அவர்கள் காபீர்களின் கடவுள்களை கூட ஏசவேண்டாம் என்று சொல்லி இருக்கும் போது இவர்கள் தமது கொள்கைக்கு மாற்றமானவர்களை அல்லது மாற்றமாக கருத்து செல்பவர்களை கரசாரமாக தூற்றுகின்றனர். இதனால் இஸ்லாமிய பண்பாடுகளை அப்பட்டமாக உடைக்கின்றனர்.
அவர்களது குறைகளை சமூகத்தில் அனைத்து இடங்களிலும் சொல்லி அந்த அறிஞரது மானத்தையும், கௌரவத்தையும் அழிக்க முயலுகின்றனர். உலகில் மிகப் பெரிய அறிஞர்களை அந்த இயக்க ஆரம்பகட்ட அல்லது பள்ளிக்கூட மாணவன் கூட தூற்றும் அளவுக்கு நபிகளாரின் பண்பாடுகள் கேல்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது.
இந்த நபிவழி பேனப்படுவதில்லை.
இதுபோன்ற இன்னும் சில குற்றச்சாட்டுக்களும் உள்ளன.
எவ்வாறு மத்ஹபை பின்பற்றும் ஜமாத்துகள் இன்று வரை அதனை அப்படியே பின்பற்றிவருகிறார்களோ அவ்வாறே இந்த தௌஹீத் ஜமாஆத்தும் ஷிர்க், பித்அத் போன்றவற்றை எதிர்த்தல் அதனூடாக மாத்திரம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக வாழ்விலும் தூய இஸ்லாத்தை பின்பற்றல் என்று இஸ்லாத்தை சுருக்கி இன்றுவரை தொடர்ந்து வருகின்றனர்.
ஆனால் இவ்வாறு தௌஹீத் பேசும் தௌஹீத் ஜமாஆத் இன்று 10க்கும் மேற்பட பல பிரிவுகளாக பிரிந்துள்ளது ஏன் என்பது விவாதத்திற்குறியது இல்லையா?

இந்த பிரிவுகளுக்கு கடும்போக்கும், பண்பாடுகள் பற்றிய பயிற்சி இன்மையும் தானே முக்கிய காரணங்களாக இருக்க முடியும். இதை களைந்து சரியான வழியில் பயணிக்க நம் அனைவருக்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்.
ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment