Friday, 16 October 2015

மக்களுக்கு தண்ணிய லிட்டர் 10 ரூபாய்க்கு விற்கும் அரசுக்கு"மறைநீர்" பற்றி தெரிய வேண்டாமா? ஒரு சமூக விழிப்புணர்வு பார்வை...

ஒரு பொருளுக்குள் மறைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத நீர், 'மறைநீர்' ஆகும்.அதாவது ஒரு பொருளை தயாரிக்க, உற்பத்தி செய்ய எவ்வளவு நீர் (water) தேவைப்படுகிறதோ அதை "மறைநீர்" என்பர். பல நாடுகள்  "மறைநீர்" அளவை அறிந்தே தங்கள் நாட்டில் பொருள்களை உற்பத்தி செய்கின்றன... ஆனால் நம்மிடம் அதன் விழிப்புணர்வு இல்லை...  

தமிழகத்தில் நிமிடத்திற்கு மூன்று கார்கள் தயாராகின்றன.ஒரு கார் தயாரிக்கத் தேவைப்படுகிற நீரின் அளவு 4 இலட்சம் லிட்டர் !இதில் பெரும்பாலும் கார்கள் ஏற்றுமதிக்கே உற்பத்தி செய்யப்படுகிறது.

இவுங்க கார மட்டும் ஏற்றுமதி செய்யலீங்க ; தமிழ்நாட்டில இருந்து நிமிசத்துக்கு 12 இலட்சம் லிட்டர் தண்ணியையும் சேத்தே ஏற்றுமதி செய்றாங்க ! 




 1.1 டன் எடையுள்ள காரை, உற்பத்தி செய்ய 4 லட்சம் லிட்டர் தண்ணீர் மறைநீராக உள்ளது. மேலும் திருநெல்வேலியில் தினமும் 15 இலட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வரும் பெப்சிகோலா நிறுவனங்கள். ஒரு ஜீன்ஸ் பேன்ட் தயாரிக்க 10 ஆயிரம் லிட்டர் மறைநீர் தேவை. நாம் ஒரு கிலோ அரிசியை உருவாக்க  2500 முதல் 3000 லிட்ட தண்ணீர் தேவைப்படுகிறது. அந்தளவு நீர் அரிசியில் மறைந்துள்ளது.




தண்ணீரின் அவசியத்தை இனியாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கும், வேளாண் சார் பொருட்களுக்கும் மறைநீர் தேவையாக உள்ளது.வேளாண் பொருட்களைவிட, இதர பொருள் உற்பத்திக்கே, மறைநீர் பயன்பாடு அதிகம் உள்ளது. மழைநீரை நம்பியே விவசாயம் செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் பல தரப்பினரால் வீணடிக்கப்படுகிறது. மறுசுழற்சிக்கும் பயன்படுத்துவதில்லை. விவசாயத்தில் ஒவ்வொரு துளி நீரும் மறுசுழற்சிக்கு ஏதோ ஒருவகையில் வரும்.

ஆதிகமாக மறைநீர் தேவைப்படும் பொருள்களை இனி இறக்குமதி செய்யலாம், குறைவான மறைநீர் தேவைப்படும் பொருள்களை நாம் உற்பத்தி செய்யலாம்.நீரின் வளம் குறைந்து வரும் இந்நாட்களில், நீரின் அளவை அறிந்து இனி நாம் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.




நிலத்தடி நீரை பயன்படுத்துவோர், பயன்படுத்திய நீரைப் போல, இருமடங்கு நீரை தங்கள் பகுதியில் மழைநீர் சேகரிப்பு மூலம் நிலத்தடியில் சேமிக்க வேண்டும். நீரை சுத்திகரிப்பு செய்து மறுசுழற்சிக்கோ, மரம், புல் வளர்க்கவோ வழங்கலாம். காடுகள், மேய்ச்சல் நிலங்களை உருவாக்கலாம். ஒவ்வொரு வீடும் மழைநீர் சேமிப்பு கலனாக மாற வேண்டும். நீரின் தேவை, பொருட்களின் தேவையை உணர்ந்து, அதற்கேற்ப உற்பத்தி திட்டங்களை வகுத்தால், இதை சாதிக்கலாம், 
நீர் மேலாண்மையில் இன்னொரு விசயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நீர் ஆதாரம் குறைவாக உள்ள நிலங்களைக்கொண்ட பகுதிகளில், நீரின் அளவிற்கேற்ற பயிர்களை உற்பத்தி செய்ய அறிவுறுத்த வேண்டும். தென்னை, பருத்தி மற்றும் கரும்பு உற்பத்திக்கான நீரின் தேவை அதிகப்படியானதாகும். இந்த விவசாயப் பொருட்களை நாம் நமது தேவைக்கு அண்டை மாநிலங்களிலிருந்து விலைகொடுத்து எளிதில் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், இந்த விளை பொருட்களின் உற்பத்திக்காக நாம் அதிகப்படியான நீரை செலவிட்டு வருகிறோம்.

 நம் தமிழகத்தில் நீரின் உற்பத்தி ஆதாரங்கள் குறைவு. நீரின் பயன்பாட்டைக்கட்டுப்படுத்துவதன் மூலமாகவே, நமது மாநிலத்தின் எதிர்கால நீரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். ஆகவே, கரும்பு, பருத்தி, தென்னை போன்ற பயிர்களை நீர் ஆதாரம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே விவசாயம் செய்ய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும். வாழ்விடங்களின் குடி நீர் தேவையின் அளவை நீர் மேலாண்மைக்குழு ஆராய்ந்து அதற்கேற்ப விவசாய பயன்பாட்டை வழிமுறைப்படுத்த வேண்டும்.

 நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர் வற்றும்போது, பூமியில் வறட்சி ஏற்பட்டு நாளடைவில் பாலை வனமாகும் அபாயமிருக்கிறது. இன்று பல விவசாய நிலங்களில், நிலத்தடிநீர் பன்மடங்கு குறைந்து, கீழே சென்று விட்டது. நிலப்பயன்பாடும், நீர்ப் பயன்பாடும் குறித்த விழிப்புணர்வு ஒன்றே எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றும்.

எனது  கருத்து..
பல பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக தண்ணீர் (மறைநீர்) தேவைப்படும் பொருள்களை, தொழிற்சாலைகளை நம் நாட்டில் நிறுவி இருப்பது இதன் காரணமாகத் தான். 
மற்ற மாநிலங்களில்  இல்லாத தண்ணியா தமிழ்நாட்டுல இருக்கு.இந்தியாவிலேயே நம் தமிழ்நாட்டுகாரன் மட்டும்தான் இலிச்சவாயன்.எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்.ஆனால் நாம் பழம்பெருமைகளை மட்டுமே பேசி, பெருமைபட்டுக்கொண்டே இருக்கிறோம்.
இனியாவது நீரின் அளவை குறைவாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளை காட்டுவோம் , குறைவான நீரை உட்கொள்ளும் பொருள்களை உற்பத்தி செய்வோம், நாட்டின் நீர் வளம் காப்போம்...

குடி நீர் பிரச்சினை தீர வழி வகுக்கலாம்.கடல் நீரில் இருந்து 2 மெகா வாட் மின் உற்பத்தி செய்த பின் ஆர்வோ முறையில்ஓவ்வொரு கடலோர மாவட்டகளிலும் ஒரு நாளைக்கு 10-20 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யலாம். நீரினால் பரவும் 20 வகை நோய்களை தடுத்து மக்களின் ஆரோக்யத்தைக் காக்க முடியும்.  தினமும் தயார் செய்து பத்து ருபாய் வீதம் விற்று வருடத்திற்கு 3000 கோடிகளுக்கு மேல் அரசிற்கு வருமானம் கிடைக்கவும் செய்ய முடியும்.அரசின் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகின்றேன்.

ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment