Thursday 1 October 2015

நாம் ஏன் உணர்வுசார் நுண்ணறிவு (EQ) குறித்து அக்கறை கொள்ள வேண்டும்? ஒரு தவகல்..


Image result for Emotional Quotientநுண்ணறிவுத்திறன் (IQ) என்பது ஒரு மனிதனின் புத்திசாலித்தனத்தை குறிப்பிட்ட சோதனைகளின் மூலம் அளவிடுவதாகும். 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முறை, பல காலமாக மனிதனின் திறனை அளவிடும் ஒற்றை கருவியாக பொதுவில் ஏற்றுகொள்ளப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தர்க்க ரீதியாக (Logic) ஒரு பிரச்சினையை எப்படி அணுகுகிறோம் என்பதை இந்த அளவீட்டு முறை சோதிக்கிறது. சோதனை முடிவின் அடிப்படையில், அதிக மதிப்பெண் பெறும் நபர்கள் அதிக நுண்ணறிவு உள்ளவர்களாவும், அறிவாளிகளாகவும் அங்கீகரிக்கப்பட்டு வந்துள்ளனர்.

இருப்பினும், மனித நுண்ணறிவுத்திறன் என்பது ஒற்றை தன்மை கொண்டதன்று என்ற கோட்பாட்டை, ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner), தமது ஆய்வின் மூலம் 1980-களில் நிறுவினார். கார்ட்னர் கூற்றுப்படி (Theory of Multiple Intelligences) ஒரு மனிதனின் திறன் 9 பகுப்புகளாக அமையப்பெற்றுள்ளது. அவை முறையே Spatial, Linguistic, Logical-mathematical, Bodily-kinesthetic, Musical, Interpersonal, Intrapersonal Naturalistic மற்றும் Existential. மரபார்ந்த நுண்ணறிவுத்திறன் (IQ) சோதனைகள், ஒரு மனிதனின் மொழி மற்றும் தர்க்கரீதியிலான சிக்கல்களை களையும் ஆற்றலை மட்டுமே சோதிக்கின்றன. அது முழுமையான திறன் மதிப்பீடு அல்ல என்கிறார் கார்ட்னர். தன்னைத்தானே அறிந்து கொள்ளுதல் (Interpersonal), அடுத்தவரை அறிந்து கொள்ளுதல் (Intrapersonal) ஆகிய இரண்டும் கார்ட்னரின் திறன் பகுப்பை ஒட்டி பின்னாளில் தனிபெரும் கோட்பாடாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், டேனியல் கோல்மென் (Daniel Goleman), "உணர்வுசார் நுண்ணறிவு: ஏன் அது ஐக்யூவை விட மேலானதாகக் கருதப்படுகிறது (1995)" என்ற தனது புத்தகத்தின் மூலம் உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Quotiant) என்ற திறனை பிரபலப்படுத்தியவராக அறியப்படுகிறார். கோல்மெனுக்கு முன்பு வேறு சிலர் இத்திறனை முன்வைத்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும், வெகுமக்கள் தளத்தில் இத்திறன் குறித்து விவாதங்களையும், புரிதலையும் பரவலாக ஏற்படுத்தியவர் என்ற வகையில் கோல்மென் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். 

ஒருவர் தமது உணர்வுகளையும், மற்றவர்கள் / குழுக்களின் உணர்வுகளையும் அடையாளம் கண்டு, மதிப்பீடு செய்து அதைத் திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றலே உணர்வுசார் நுண்ணறிவு எனப்படுகிறது. டேனியல் கோல்மெனின் கூற்றுப்படி உணர்வுசார் நுண்ணறிவின் கூறுகள் பின்வருமாறு:

1) ஒருவர் தனது உணர்வுநிலையை துல்லியமாக அறிதல்
2) ஒருவர் தன்னுடைய உணர்வுநிலையை திறம்பட மேலாண்மை செய்தல்
3) ஒருவர் தம்மை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொள்ளுதல்
4) இன்னொருவருடைய உணர்வுநிலையை புரிந்து கொண்டு அங்கீகரித்தல்
5) இன்னொருவருடனான உறவைம் பேணுதல்

உணர்வுசார் நுண்ணறிவு குறித்து நாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்?
Image result for Emotional Quotientஉணர்ச்சிவசப்படுதல் என்பது மிகச்சாதாரணமாக நம் அன்றாட வாழ்வில் கேள்விப்படும் விசயமாக உள்ளது. நம்முடைய மரபார்ந்த புரிதலில் உணர்ச்சிவசப்படுதலை மனம் சார்ந்த ஒரு நிலையாக நாம் அறிந்து வந்துள்ளோம். மனம் என்ற புள்ளி நம் உடலின் எந்தப் பாகத்திலிருந்து செயல்படுகிறது என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. எனினும், உணர்வு சார்ந்து நாம் தன்னிச்சையாக எடுத்துவிடும் பல்வேறு முடிவுகளுக்கு மூளையின் செயல்பாடுதான் காரணம் என்பதை LeDoux (1996) என்பவர் நிறுவியுள்ளார். மனித மூளை இரண்டு தளங்களில் செயல்படுவதாக அவர் கூறுகிறார். ஒன்று தர்க்கப் புத்தி, மற்றொன்று உணர்வுசார் புத்தி. பெரும்பாலான வேளைகளில் நம் ஐம்புலன்களின் வழி உணரும் விசயங்கள், தர்க்கப்புத்தியின் பரிசீலனைக்குப் பிறகே செயல்வடிவம் காணுகின்றன. இது மூளையின் பொதுவான செயல்பாடு. இருப்பினும் சில குறிப்பிட்ட வேளைகளில், தர்க்கப்புத்தியின் பரிசீலனைக்கு முன்பே, உணர்சார் புத்திக்கு குறுக்கு வழியில் அனுப்பப்படும் சமிஞ்சைகள் மூலம் உணர்வு வயப்பட்ட முடிவுகளை நாம் எடுத்துவிடுகிறோம். 

இன்று பெருமளவில் நடைபெறும் குற்றச்செயல்கள், தற்கொலைகள், மணவிலக்குகள் போன்றவற்றிற்கு உணர்வுசார் நுண்ணறிவின் போதாமையே காரணம். அண்மைய புள்ளிவிபரப்படி மலேசியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக இருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். (காண்க: http://thestar.com.my/news/story.asp?file=/2011/2/10/nation/8035599&sec=nation) பதினாறு வயதிலிருந்து இருபத்து ஐந்து வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை எண்ணம் கொண்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவில் விஞ்ஞானத்தின் உச்சகட்ட வளர்ச்சி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகத்தையே கைக்குள் அடக்கிக்கொள்கின்ற வசதி நமக்கு இப்போது வாய்த்துள்ளது. வாழ்வின் அடிப்படைத் தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படும் நிலையே இன்றுள்ளது. இருப்பினும் எது நம்மை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது?

மேலும், மலேசியாவில் நடைபெறும் மணவிலக்குகளின் எண்ணிக்கையும் கவலைகொள்ளும் விதத்திலேயே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது புள்ளிவிபரம். 2000 - 2009 வருட கணக்குப்படி மொத்தம் 217,909 மணவிலக்குகள் மலேசிய பதிவிலாகாவால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே காலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 1,698,375 திருமணங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மணவிலக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 13 சதவிகிதமாகும். மணவிலக்குகள் இரண்டு தனிநபர்களை மட்டும் பாதிப்பவை அல்ல. அவர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் உளவியல் சிக்கல்கள், தொடர்ந்து அது சமூகத்தளத்தில் ஏற்படுத்தும் சலனங்கள் ஆகியவற்றை நாம் அறிந்து வைத்துள்ளோமா?

இன்றைய நமது வாழ்க்கை முறையை குறிப்புணர்த்த இயந்திரத்தனமானது என்ற சொலவடை உபயோகிக்கப்படுகிறது. என்னைக் கேட்டால், நம் வாழ்வை உருவகப்படுத்த நாம் புதிய ஒரு வார்த்தையை கண்டுபிடிக்கவேண்டும் என்பேன். இயந்திரத்தனமானது என்பதைவிட சிக்கலாகி உள்ளது இன்றைய வாழ்வு. பாலகப்பருவம் முதற்கொண்டு வேலை செய்யும் பெரியவர்கள் வரை பல்வேறு தளங்களில் வாழ்வு நம்மை வெறிகொண்ட மிருகமாய் துரத்திக்கொண்டே இருக்கிறது. பொருள்முதல்வாதத்தின் கரிய நிழல் நம் இன்றைய சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் நீக்கமற படிந்துள்ளது. பொருள்முதல்வாதத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதத்திலேயே நம் கல்விமுறை பல காலமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தர்க்கப்புத்தியை பட்டைத்தீட்டும் விதமாகவே மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர். கணிதமும், அறிவியலுமே ஒரு மனிதனின் தரத்தை நிர்ணயிக்கக்கூடியவைகளாக உள்ளன. இவை இரண்டும் தர்க்கப்புத்தியைக்கொண்டே செயல்படுகின்றன. ஒருவன் தன்னைப்பற்றி அறிந்து கொள்வதற்கோ, இன்னொரு சக மனிதனை புரிந்து கொள்வதற்கோ தேவையான பயிற்றுமுறைகளை இன்றைய கல்விமுறை முற்றாகப் புறக்கணிக்கிறது. தர்க்கப்புத்தி பட்டைத்தீட்டப்பட்ட இன்றைய மனிதர்களில் பலர், அகம்சார்ந்த பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதை நாம் இன்று சாதாரணமாகக் காண்கின்றோம். இந்த சமன்நிலை தவறிய நிலைக்கு தர்க்கப்புத்தியின் அளவிற்கு உணர்வுசார் நுண்ணறிவு வளர்த்தெடுக்கப்படாததே முக்கிய காரணமாகும். 

ஒரு மனிதனின் நுண்ணறிவுத்திறன் (IQ) குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு பெருமளவில் மாற்றமடையாமல் சீராகவே இருக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உதாரணமாக, தேர்வுகளின் அடிப்படையில் ஒரு மனிதனின் நுண்ணறிவுத்திறன் (IQ) 120 என்று கணக்கிடப்பட்டால், அவரின் வாழ்நாள் முழுவதும் இந்த மதிப்பீடு தொடரும் என்கின்றனர். இருப்பினும், உணர்வுசார் நுண்ணறிவு (EQ) என்பது அத்தகையதன்று. உணர்வுசார் நுண்ணறிவை நாம் தொடர்ந்து வளர்த்தெடுக்க முடியும் என்று நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

இன்றைய நமது வாழ்வின் ஆகச் சிக்கலான விசயமாக நான் நினைப்பது, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் ஏற்படும் நெருக்கடியேயாகும். ஒருவன் தன்னைத்தானே அறிந்து கொள்ளாததற்கும், சக மனிதனை புரிந்து கொள்ள முடியாததற்கும், இன்றைய வாழ்வின் நெருக்கடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த நிலையை மேம்படுத்த நாம் என்ன செய்யலாம்? தர்க்கப்புத்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதனை தொடர்ந்து மேம்படுத்த நாம் கொள்ளும் முனைப்பை ஓரளவிற்கேனும் உணர்வுசார் நுண்ணறிவை மேம்படுத்துவதற்கும் நாம் செலவிட வேண்டும். உணர்வுசார் நுண்ணறிவை எப்படி மேம்படுத்தலாம்? ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வழிகளை இதற்கென வகுத்துள்ளனர். இருப்பினும் மிகச் சுலபமான வழியை நான் உங்களுக்கு பரிந்துரைக்க முடியும். இலக்கியம் வாசியுங்கள்!  

இலக்கியம் நமக்கு எதைக் கற்பிக்கின்றது? 

இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்பார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்தின் மனித வாழ்வும் இலக்கியத்தில் பதிவு செய்யப்படுகிறது. நாம் வசிக்கும் இடத்தில் இருந்த படியே உலகம் முழுவதுமுள்ள மனித வாழ்வையும், மனிதனின் குணாதியங்களையும் நாம் இலக்கிய வாசிப்பின் மூலம் கண்டுகொள்ள முடியும். நம்முடைய நெருக்கடியான வாழ்வுச் சூழலில் மனித வாழ்வின் பல்வேறு தருணங்களை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வது என்பது முடியாத விசயம். ஆனால், இலக்கிய வாசிப்பு அந்த அனுபவங்களை நமக்குள் கடத்த வல்லது. தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல இலக்கியப் பிரதிகளை கவனமாக வாசிப்பதன் மூலம் பல்வேறு மனித மன நெருக்கடிகளையும், ஒவ்வொரு காலகட்டத்தின் வாழ்வியல் சிக்கல்களையும் நாம் நிச்சயமாக நம்முள் உணர முடியும். பலர் தம்முடைய வாழ்வைப்பற்றி குறைபட்டுக் கொள்வதை நாம் தினமும் கேட்டு வருகிறோம். நமக்கேகூட நம் வாழ்வின் மீது அதிருப்தி உண்டாகி இருக்கலாம். நம் முன்னே இருக்கும் பிரச்னைகள் பூதாகரமானதாக நமக்குத் தோன்றலாம். ஆனால், இலக்கிய வாசிப்பின் மூலம், ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மனிதர்கள் இத்தகைய சிக்கல்களை எதிர்நோக்கியே வந்துள்ளனர் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். பிரச்னைகள் எப்போதும் இருப்பவையே என்பது நமக்கு மிகத் தெளிவாக புலப்படும். இதன் மூலம் உணர்வுசார்ந்த தளத்தில் ஒரு சமன்பாட்டை நமக்குள் நாமே ஏற்படுத்திக் கொள்ள முடியும். வாழ்வியல் சிக்கல்களை உதட்டோர சிரிப்புடன் அணுகும் பக்குவம் நமக்கு வாய்க்கும். 


மேலும், இலக்கிய வாசிப்பு தரும் மனிதச் சித்திரங்களின் துணைக்கொண்டு, இன்னொரு மனிதனின் நெருக்கடியை நம்மால் ஓரளவிற்கேனும் உணர முடியும். ஆங்கிலத்தில் Empathy என்ற ஒரு வார்த்தை உண்டு. இன்னொரு மனிதனின் நிலையில் நம்மை வைத்து பார்ப்பது. எல்லா நேரங்களிலும் நாம் இதனை அமல்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் இன்னொரு மனிதன் சொல்ல வருவதை காது கொடுத்து கேட்கும் பக்குவத்தையாவது இலக்கிய வாசிப்பு நமக்கு தர வல்லது. முன்முடிவின்றி ஒரு பிரச்னையை அணுகுவதன் மூலமும், ஒருவர் சொல்ல வருவதை கவனமாக செவிமடுப்பதன் வழியும் மனிதர்களிடையேயான பல்வேறு சிக்கல்களை நாம் மிகச் சுலபமாக கடந்து போக முடியும். 

இருப்பினும், இலக்கிய வாசிப்பு என்பது வெகுமக்கள் தளத்தில் அறியப்படும் வகையில் அத்துணை சுலபமானதன்று. மிகக் கடின உழைப்பைக் கொண்டே இலக்கிய வாசிப்பின் நன்மைகளை நாம் அடைய முடியும். அதற்கு முதலில் நம்மை நாம் தயார் படுத்தி கொள்வது அவசியமாகும்.

மேலும் அறிய..

http://www.ihhp.com/free-eq-quiz/
http://psychology.about.com/library/quiz/bl_eq_quiz.htm
http://www.maetrix.com.au/meit/eitest.html

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment