Monday, 12 October 2015

நடிகையர் திலகம் பத்மஸ்ரீ ஆச்சி மனோரமா வாழ்க்கை பற்றிய சிறப்பு பார்வை..

தமிழ் திரை உலகில் ஆச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு வந்த நடிகை மனோரமா, மறைந்த நடிகர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் ஆகியவர்களுடனும், ரஜினி, கமல் ஆகியோருடனும், தற்போதைய இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.

தனது திரைப்பட வாழக்கையில்.வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர்விருது, பத்மஸ்ரீ ,தேசிய விருதுஉள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 

நகைச்சுவை அரசியின் வாழ்க்கை வரலாறு..


"ஆச்சி' மனோரமா

தமிழ் திரையுலகினராலும், ரசிகர்களாலும் அன்போடு "ஆச்சி' என்று அழைக்கப்பட்ட நடிகை மனோரமா, தமிழ்ப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பெருமை பெற்றவர். மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா' கொண்டாடியவர். 

பெற்றோர்  மற்றும் பிறப்பு  :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937, மே 26ல் கோபிசாந்தா காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகிய தம்பதிகளுக்கு மகளாக மனோரமா பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் கோவிந்தம்மாள். மனோரமாவின் தந்தை, வெள்ளையர் ஆட்சி காலத்தில் ரோடு காண்ட்ராக்டராக இருந்தார். அதனால் மிகவும் வசதியான குடும்பமாக இருந்தது....இந்த நிலையில் மனோரமாவின் தாயார், தனது உடன் பிறந்த தங்கையையே கணவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தார்....இதன் காரணமாக வீட்டு நிர்வாகம் மனோரமாவின் சித்தியின் கைக்கு மாறியது. அதன் பிறகு துன்புறுத்தல்களும் அதிகரிக்கத் தொடங்கியது....இதனால் மனமுடைந்த மனோரமாவின் தாயார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது மனோரமாவுக்கு ஒரு வயது கூட ஆகவில்லை....மனோரமாவின் அழுகுரலை கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது, மனோரமாவின் தாயார் தூக்கு மாட்டிக்கொண்டு, உயிர் போகும் நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து பதறினார்கள். கயிற்றை அறுத்து அவரைக் காப்பாற்றினார்கள்....அதன் பின்னர் மனோரமாவை அழைத்துக்கொண்டு, அவரது தாயார் ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்..


சிறுமியாக இருந்த போதே போராட்டம் !!

மிகவும் வறுமையில் வாடி வந்த அவர்கள், பலகாரம் சுட்டு விற்பனை செய்யும் தொழிலை தொடங்கினார்கள். 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மனோரமா சினிமா 'டூரிங்' கொட்டகைக்கு சென்று பலகாரம் விற்பார்...அங்கே பலகாரம் விற்பதுடன், எந்த காட்சியிலும், எந்த நேரமும் உள்ளே சென்று படம் பார்க்கும் இலவச அனுமதியும் கிடைத்தது. 'பாட்டுப் பாடுற பொண்ணு படத்தைப் பார்த்தா பாடக் கத்துக்கும்' என்று பிரியமாக விட்டு விடுவார்கள். அதனால் மனோரமாவும் இடை, இடையே தியேட்டருக்குள் சென்று பாடல் காட்சிகளை பார்த்து விட்டு வருவார்...இப்படியே தியேட்டரில் படம் பார்த்தும், கிராமபோன் ரெக்கார்டுகளைக் கேட்டும் அவருடைய இசை ஞானம் வளர்ந்தது...இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் ஒரு சோதனை வந்தது. அவருடைய அம்மாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மனக்கவலை, வறுமை, கடுமையான உழைப்பு இவை அனைத்தும் சேர்ந்து நோயாக மாறியது...ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தனது தாயாருக்கு துணையாக மனோரமா இருந்தார். ஒரு ஆண்டு சிகிச்சை பெற்ற பின்னர்தான் மனோரமாவின் தாயார் குணம் அடைந்தார்...அதன் பின்னர் மனோரமாவின் தாயாருக்கு வேலை பார்க்க முடியாத சூழ்நிலை உருவானது. எனவே, பள்ளத்தூரில் வசதி படைத்த செட்டியார் வீடுகளில் மனோரமாவை வேலைக்கு சேர்ந்துவிட முடிவு செய்தார்...இதனால் ஒரு செட்டியார் வீட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ள மனோரமாவை அனுப்பி வைத்தார்...இரண்டு மாதங்கள் அங்கு வேலை பார்த்தார். பின்னர் வேலையை விட்டு விட்டார். மனோரமாவும், அவர் தாயாரும் மிகவும் சிரமப்பட்டனர்..இந்த நிலையில் தான் மனோரமாவின் பார்வை நாடக கலை மீது முழு அளவில் விழுந்தது ..

 மேடை நாடகங்களில் மனோரமா !!
மனோரமா தனது 12 வயதில் நாடகத்தில் நடிக்க தொடங்கினார். "யார் மகன்' என்பது தான் இவரின் முதல் நாடகம்.  யார் மகன்? என்ற நாடகத்தில் மனோரமா நடிக்கும் போது  நாடக இயக்குநர் திருவேங்கடம்தான் இவருக்கு "மனோரமா' என பெயர் சூட்டினார். ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார்.முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி' உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன்' நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும் நடிக்க மனோரமா கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். நாடகங்களில் நடிப்பு மட்டுமல்லாமல் பாடவும் தொடங்கினார். "அந்தமான் கைதி' என்ற நாடகம் இவர் நடித்ததில் புகழ்பெற்ற நாடகம்.ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திருமணம் வாழ்க்கை !!
மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் மகன் பூபதியுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.


வெள்ளித்திரைக்கு பயணம்..

நாடகத்தில் நடித்து வந்த மனோரமா 1958ல் "மாலையிட்ட மங்கை' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தார். இவரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் கண்ணதாசன். முதல் படத்தில் காமெடி ரோலில் இவர் நடித்தார். ஆரம்பக்காலத்தில் காமெடியில் மட்டுமே கவனம் செலுத்தினர். முன்னணி காமெடி நடிகர் நாகேஷ் - மனோரமாவும் பல படங்களில் ஜோடியாக காமெடியில் கலக்கினர். இவர்கள் இருவரும் திரையில் தோன்றினாலே திரையங்களில் சிரிப்பு மழை பொழிய ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இருவரும் காமெடியில் கலக்கினர்.

பாடல்..
"மகளே உன் சமத்து' என்ற படத்தில் முதன்முதலாக பாடினார். தயாரிப்பாளர் குமார் என்பவர் இந்த வாய்ப்பினை வழங்கினார். "தாத்தா தாத்தா பிடி கொடு... இந்த தள்ளாத வயசில சடுகுடி' என்று இந்த பாடல் தொடங்கும். இருப்பினும் இவர் பாடிய "வா வாத்தியாரே வுட்டான்ட' என்ற பாடல் மனோரமாவின் முதல் ஹிட் பாடலாக அமைந்தது. "டில்லிக்கு ராஜாவானாலும் பாட்டி சொல்லை தட்டாதே' , "நாட்டு புற பாட்டு ஒன்னு...' , "மெட்ராச சுத்தி பாக்க போறேன்...' , உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார். 

ஆறு மொழிகளில்..
மனோரமா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழி படங்களில் நடித்துள்ளார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும். ஒரு முறை சொல்லிக் கொடுத்தாலே, நச்சென்று பேசிவிடக்கூடிய ஆற்றல் பெற்றவர்.

விருதுகள் !!
1989ம் ஆண்டு "புதிய பாதை' என்ற படத்தில் நடித்தற்காக, "சிறந்த துணை நடிகைக்கான' தேசிய விருது மனோரமாவுக்கு வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு மத்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான "பத்ம ஸ்ரீ' விருதை மனோரமா பெற்றார். தமிழக அரசின் "கலைமாமணி' விருது ஆகியவற்றை மனோரமா பெற்றுள்ளார். ஆச்சியின் நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக கலிபோர்னியா பல்கலைக்கழகம் இவருக்கு "கௌரவ டாக்டர்' பட்டம் வழங்கியது. அதிக படத்தில் நடித்ததற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார். 

முக்கிய நிகழ்வுகள்..

* 1963ல் வெளிவந்த "கொஞ்சும் குமரி' என்ற படத்தில் நடிகையாக மனோரமா அறிமுகமானார். 
* "கண் திறந்தது' படக் கதாநாயகன் எஸ்.எம்.ராமநாதனுடன் மனோராமா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூபதி என்ற மகன் உள்ளார். 
* "குன்வர பாப்' என்ற இந்தி படத்தில் மெகமூத் என்ற பாலிவுட் காமெடி நடிகருடன் நடித்துள்ளார். 
* "நடிகன்' என்ற படத்தில் சத்யராஜ்க்கு ஜோடியாக மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் 50 வயது திருமணமாகாத பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் மனோரமாவுக்கு பிடித்த படங்களில் ஒன்று. 
* அதிகளவில் "அம்மா' கேரக்டர்களில் மனோரமா நடித்துள்ளார். 
* இவரது இளமை பற்றி மனோரமாவிடம் கேட்டபோது, "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, மனதை மகிழ்ச்சியாக வைத்திருந்தால், உடலும் இளமையாக இருக்கும் என தெரிவித்தார். 
* ஒரு "டிவி' நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் "சோ', இவரை "பெண் சிவாஜி' என்று குறிப்பிட்டார். 
* மனோரமா கடைசியாக சிவாஜியை (இறப்பதற்கு முன்) சந்தித்த போது, சிவாஜி தன் மனைவியிடம் "தமிழ் மொழியில் மனோரமாவைத் தவிர, எவராலும் இந்தளவுக்கு நடிக்க முடியாது' என தெரிவித்தார். இது தன் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என மனோரமா தெரிவித்தார். 
* "உனக்கும் வாழ்வு வரும்' என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார். 
* "மஞ்சள் குங்குமம்' என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "கட்டுவிரியன்' பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம்' படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார். 
* இவர் கடைசியாக நடித்த படம் "பொன்னர் சங்கர்'.

5 தலைமுறை நடிகை நடித்த சில முக்கியபடங்கள்:


*மாலையிட்ட மங்கை (முதல் திரைப்படம் )
*தில்லானா மேகனம்பாள்
*களத்தூர் கண்ணம்மா
*திருவிளையாடல்
*அன்பேவா
*கந்தன் கருணை
*கலாட்டா கல்யாணம்
*காசேதான் கடவுளடா
*முகமது பின் துக்ளக்
*அனுபவி ராஜா அனுபவி
*பாட்டி சொல்லை தட்டாதே
*சம்சாரம் அது மின்சாரம்
*நடிகன் 
*சின்னக்கவுண்டர்
*அபூர்வ சகேதாரர்கள்
*எஜமான்
*மன்னன்
*அண்ணாமலை
*ஒன்ன இருக்க கத்துகோனும் 
*ரசிகன்
*பொண்டாட்டி  சொன்ன கேட்டுகொனும் 
*சின்னதம்பி
*சூரியன்
*கிழக்கு வாசல்

5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசி..

 தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர், ஆகியோருடனும், என். டி. ராமாராவுடன் தெலுங்கு படங்களில் என 5 முதல்வர்களுடன் நடித்திருக்கிறார். ஆயிரத்திற்கு மேற்பட்ட நாடகங்களில் மனோரமா நடித்துள்ளார்.

இறப்பு :
ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த மனோரமா நீண்ட காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார் . கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 10.10.2015 அன்று இரவு தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது .இதில் 5 தலைமுறை சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு நடிகை மனோரமாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.  பின்பு அவரது உடல் இறுதி ஊர்வலமாக இன்று மாலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டு ஐஸ் அவுஸ் ஐ.ஜி. ஆபிஸ் பின்புறம் உள்ள கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

மனோரமா  ஆச்சி பற்றிய கவிதை..

மனோரமா எனும் ஆச்சி!
மரணம் கொண்டு போச்சு!
நடிப்பில் நீ ஒரு சிவாஜி!
நகைச்சுவையில் ஒர் அலாதி!
எமனே சலிப்படைந்து விட்டான் போல!
தான் சிரிக்க உன்னை
எடுத்து போனான் மேலே!
துடிப்புடன் நடிப்பது உன் தனி முத்திரை!
நடிப்பல்ல இது உண்மையான நித்திரை!
உன்னால் மட்டுமே முடியும்
சில பாத்திரம்!
உன் திறமைக்கு முன் ஏனையோர் எம்மாத்திரம்!
உன் வெளியீடுகளை எண்ணி எண்ணி விரல்
வலிக்கிறது!
உன் இல்லாமையை எண்ணி எண்ணி மனம்
சலிக்கிறது!
ஆண்கள் இத்துறையில்
வந்து சென்றார்கள்!!
பெண்ணோருவள் நீ மட்டுமே நிலைத்து நின்றாய்! வென்றாய்!!
முத்துக்குளியல் நடக்குமிடம் தூத்துக்குடி!
அத்தனையும் உனக்கு அத்துப்படி!
ஜாம்பஜார் ஜக்கு! நீ சைதாப்பேட்டை கொக்கு!
ஜாம்பவானாகிய உன்திறமை வேறாருக்கிங்கு இருக்கு!
எல்லா பாத்திரமும் உனக்கு பொருத்தமே!
இத்துறையில் உன் வாரிசில்லாதது வருத்தமே!
சம்சாரத்தில் மின்சாரம் பாய்ச்சிய மனோரமா!
உன்னை மீண்டும் காணும்
நாள் தான் வருமா?



முடிவு :
தற்போது  தமிழ் நகைச்சுவை சினிமாவின் தாயையும் இழந்திருக்கிறது அரசியல், கட்சி, பாகுபாடு இல்லாமல், அனைவரின் உயர்ந்த மரியாதையை பெற்றவர் இவர்.அபார நடிப்பாலும், அன்பாலும் அனைவருக்கும் குருவாக வாழ்ந்தவர் ஆச்சி மனோரமா.  அவர்களின் இறப்பு தமிழ் சினிமாவிற்கே பேரிழப்பு..உண்மையில் ஒரு பெண் சிவாஜி..சினிமாவிற்கு  பின் அலையாதிர்கள் அது ஒரு மாயை, அந்த மாயை மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும்.

நம் மக்களும், இளைஞர்களும் சினிமாவிற்கு காட்டும் அக்கறையை உழைப்பில் காட்டினால் வாழ்க்கையில் உயர்வு உண்டு. சினிமாவிற்கு  பின் அலையாதிர்கள் அது ஒரு மாயை, அந்த மாயை மனிதனின் வாழ்க்கையை அழித்துவிடும்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment