Thursday 23 March 2017

நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? நீட் தேர்வு ஏன் தேவை?

Related imageதமிழ்நாட்டின் மனநிலை என்பதே எந்த திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பது என்றாகிவிட்டது. நீட் (National Eligibility Cum Entrance Test -NEET) பற்றி நம் புரிதல் என்ன? நம் தமிழக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் நமக்கு என்ன சொல்லி இழுத்தடித்துக்கொண்டிருக்கின்றனர்? 


“முதலில் நீட் பற்றி தெரிந்து கொள்வோம்”
மத்திய பாஜக அரசு தான் தமிழர்களை சுரண்ட இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்ததாக இங்கே பல அரசியல் கட்சிகள் பேசி வருகின்றனர்.
உண்மையில் நீட் திட்டம் இந்திய மருத்துவ குழுவால் (The Medical council of India- MCI)  2012ஆம் ஆண்டே பரிந்துரைக்கபட்டது. அடுத்த ஓர் ஆண்டிலேயே 115 வழக்குகள் தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் தொடரபட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் 2016ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற MCIயின் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
2016ஆம் ஆண்டு கல்வியாண்டில் நீட் தேர்வில் இருந்து சில மாநிலங்கள் விலக்கு கோரின அதில் தமிழ்நாடும் ஒன்று.
“ஏன் தமிழ்நாட்டிற்கு விலக்கு?”
தமிழ்நாட்டில் தற்போது வரை மருத்துவ இடங்கள் 12ம் வகுப்பின் மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பபட்டு வருகின்றன. நீட் தேர்வு முறை என்பது CBSE பாட திட்டங்களை அடிப்படையாக கொண்டு நிரப்பபடுவது. தேர்வு சற்று கடினம் தான் என்பதை ஒப்புக்கொள்வோம். எனவே பாடதிட்டங்களை மாற்ற வேண்டும் என்றும் தேர்வுக்கு தயாராக கால அவகாசம் வேண்டும் என்று கூறியும் தமிழக அரசால் விலக்கு கோரபட்டு விலக்கும் அளிக்கபட்டது.
என்ன செய்திருக்க வேண்டும் தமிழக அரசு மாணவர்களை தேர்வுக்கு தயாராக பாடதிட்டங்களை மாற்றி இருக்கலாம். இல்லையென்றால் பாட புத்தகங்களை தமிழில் அச்சிடும் பணிகளை தொடங்கியிருக்கலாம் ஆனால் மெத்தன போக்காக கண்டுகொள்ளவே இல்லை.
எதிர்கட்சிகளோ வழக்கம் போல இதிலும் அரசியல் ஆதாய விளையாட்டுகளை அரங்கேற்ற தொடங்கின அவர் முன் வைத்த அரசியல் ஆதாய கருத்துக்கள்..
1) மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பறிக்கிறது.
2) தாழ்த்தபட்ட பிற்படுத்தபட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது.
3) தமிழகம் கல்விதுறையில் சிறந்து விளங்குவதால் மத்திய அரசு வளங்களை சுரண்ட பார்க்கிறது.
என்பன எல்லாம் அவர்களின் வாதம்.
இங்கே கவனியுங்கள் மாநில அரசும் சரி, மாநில எதிர் கட்சிகளும் சரி துறை சார்ந்து பிரச்சனையை அனுகாமல் அரசியல் சீண்டல்களையே தொடுத்தனர். உச்சநீதி மன்றம் கொடுத்த விலக்கையும் கால அவகாசத்தையும் தட்டிக்கழிப்பது போல நடந்து கொண்டனர்.
ஏன் நீட் தேர்வு வேண்டும்?
இப்போது மருத்துவ தேர்வு தனியார் கல்லூரிகளாலும் மாநிலங்களாலும் பல தேர்வுகள் நடத்தி நிரப்பபட்டு வருகின்றன. (உதாரணங்கள் PGIMER, NIMHANS, SCTIMST, AIIMS, JIPMER) மாணவர்கள் பல்வேறு தேர்வுகளுக்குள் ஆளாவதால் மன அழுத்தமும் ஒவ்வொரு தேர்வுக்கும் வேறு வேறு பாட திட்டங்களை படிப்பதால் சீரற்ற போக்கும், சமமற்ற போட்டிநிலையும் நிலவுகிறது.
இதற்கு பின்னால் பெரு வணிகம் ஒன்றும் இருக்கிறது. சில தனியார் கல்லூரிகள் ஏன் எதிர்க்கின்றனர்? Capital fee, Donation, Management quota போன்றவற்றால் தான் அதிக வருமானம் ஈட்டி வந்தனர். இதனால் உண்மையிலேயே திறமை உள்ளவர்களுக்கு இடம் கிடைக்காமல் போவதை மக்கள் நன்கு அறிவர். நீட் தேர்வு  இந்த முறைகளை வெளியேற்றி அனைவருக்கும் சமமான அடித்தளத்தை போட்டுக்கொடுக்கிறது.
தேர்வு கடினமாக இருக்கிறது என்பது கண்டிப்பாக வரவேற்கதக்க ஒன்று. ஏனென்றால் அதுவே திறமையான மாணவர்களை மட்டும் மருத்துவதுறைக்குள் அனுமதிக்கும் கடினமாக படிக்க வேண்டும் என்ற மனநிலையோடு மாணவர்கள் படிப்பர்.
“இங்கே ஓர் கேள்வி ” தமிழகம் கல்விதுறையில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டி இருக்கிறது அந்த வளர்ச்சிக்கு நாங்கள் தான் காரணம் என போட்டி போட்டு மார்தட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஏன் இந்த கடினமான பாடதிட்டங்களை அனுமதிக்க மறுக்கிறது.
“இதை அடிப்படையாக வைத்து தான் ஏன் தமிழகம் போட்டி போட இயலாத அளவிற்கு பின்தங்கிய மாநிலமா என்ற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்பி இருக்கிறது”
இங்கே கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள் கல்விதுறையில் நாம் வெகுவாக முன்னெறியுள்ளோம் என்பது உண்மை என்றால் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக நாம் தான் நீட் தேர்வை முன்னெடுத்து சென்றிருக்க வேண்டும்.
“இந்த திராவிட கட்சிகள் தங்களுக்கு மட்டும் தான் தாழ்த்தபட்டோர், பிற்படுத்தபட்டோர் நலனில் அக்கறை இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அவர்களை வளரவிடாமல் தாழ்த்தியே வைத்திருக்கின்றனர். தாழ்த்தபட்டோர்களே முன்னால் வந்து நீட் தேர்வை எதிர்கொள்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருந்தால் இவர்களால் கட்சி நடத்த முடியுமா எனவே தான் வளரவிடாமல் செய்து வருகின்றனர்.”
நீட் தேர்வு என்பது நிச்சயம் அவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பு(இங்கே மருத்துவம் பயிலும் தாழ்த்தபட்ட மாணவர்கள் சிலரும் நீட் தேர்வை வரவேற்கின்றனர் என்பதை சொல்லிகொள்கிறேன்)
தமிழக அரசு உடனடியாக நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களை இனியாவது செயல்படுத்த வேண்டும். புத்தகங்கள் தமிழில் இல்லை என்பதெல்லாம் காய்ச்சல் விடுமுறை வேண்டும் என்பது போல இருக்கிறது. 
இப்போது மாணவர்கள் தேர்வு ரத்தாகுமா இல்லையா என்ற குழப்பத்திலேயே படித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்தோடு உங்கள் ஆதாயத்திற்காக விளையாடா வேண்டாம். துணிந்து எதிர்கொள்ள ஏற்பாடுகளை துரிதபடுத்துங்கள்.
பயிற்சி வகுப்புகள் தேவைபடும், சாதாரண மாணவர்களுக்கு எட்டாது அதிக கட்டணம் கொடுத்து பயிலும் நிலை என்றால் அரசே பயிற்சி வகுப்புகளை தரமாய் நடத்துங்கள்.
நாடு முழுவதும் சமமான போட்டியில் நம் திறமை அதிகமாகி முதலில் வந்தால் அதுதானே தமிழக கல்விதுறையின் மெய்யான சாதனை. பல மாநிலத்தில் மாணவர்கள் நீட் தேர்வு வேண்டும் என்று போராடி வருகின்றனர்.
வியாபம் போன்ற மருத்துவ ஊழல்களை நீட் தடுக்கும் பல தனியார் கல்லூரிகளுக்கு கடிவாளமாக இருக்கும்.
சரி கால அவகாசம் வேண்டும் என்று கேட்குறீர்களா?
மாநில அரசே அதற்கான வழியையும் தீர்வையும் ஏற்படுத்தலாம்.
PRO-RATA BASIS என்ற முறையின் கீழ் மாநில அரசே நீட் தேர்வில் இருந்து மாணவர்களுக்கு விலக்கை ஏற்படுத்தி கொடுக்கலாம். திருநெல்வேலியை சேர்ந்த ஜி. ராம கிருஷ்ணன் என்ற கல்வியாளர் இந்த திட்டம் பற்றி மாநில அரசுக்கு யோசனை சொல்லி இருக்கிறார். 
PRO RATA BASIS என்றால் என்ன?
உள் இடஓதுக்கீடு அதாவது மாநில அரசு இதன் அடிப்படையில் 70% இடங்களை நிரப்ப முடியும். இதனால் இரண்டு வாயில்களை ஏற்படுத்த முடியும் நீட் தேர்வு மூலம் வருபவர்கள் பிறகு மதிப்பெண் அடிப்படையில் வருபவர்கள். யாரும் யாருடைய இடத்தையும் அபகரிக்க முடியாது. 
இந்த திருத்தத்தை மாநில அரசே தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்படுத்திக்கொள்ள முடியும். கடந்த ஆண்டு நீட் அறிமுகபடுத்திய போது குஜராத் அரசு இந்த முறையை பயன்படுத்தி தாழ்த்தபட்டோர் இடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த ஆண்டும் அதையே குஜராத் அரசு தொடர போகிறது. இந்த முறை பத்து வருடங்களாக அங்கே நடைமுறையில் இருக்கும் ஒன்று.
இப்போது புரிகிறதா மாநில கட்சிகள் நடத்தும் அரசியல் விளையாட்டு.இந்த முறையை பற்றி எந்த ஊடகமோ கட்சிகளோ பேசவில்லை. தன்னிடமே தீர்வு இருந்தும் மாணவர்களை பலிகடா ஆக்கிகொண்டிருக்கிறது.
இப்போது தேர்வு நெருங்கிவிட்டது இனியாவது அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள அக்கறை எடுங்கள். 
ஆட்சியை காப்பாற்றி கொள்வது ஒருபக்கம் இருந்தாலும் மாணவர்களின் எதிர்காலம் காப்பது அரசின் கடமை.
நீட் கண்டிப்பாக தேவை துணிச்சலாக அதன் முக்கியதுவத்தை விளக்குங்கள். எதிர்கட்சிகளும் அரசியல் தவிர்த்து சரியான வழிகாட்டுதலை மேற்கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment