விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர்கள், ஆர்வம் இருந்தும் விவசாயம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று பலரையும் தேர்ந்தெடுத்து, ‘ஒரு நாள் விவசாயி’ என்ற பெயரில் அவர்களை நெல், காய்கறிகள், மரப்பயிர்கள் என்று பல்வேறு விதமான விவசாயப் பண்ணைகளுக்கு அழைத்துச் சென்று கடந்தாண்டு விவசாயத்தைப் பற்றி கற்றுக் கொடுத்தது பசுமை விகடன்.
சென்னை, காஞ்சிபுரம், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி என்று தமிழகம் முழுவதும் ஐ.டி., அரசு, தனியார் என்று பல துறைகளில் பணிபுரியும் பலருக்கு வி
வசாய அனுபவத்தைப் பெறச் செய்ததோடு, அதை கற்றும் கொடுத்திருக்கிறது. இதற்கு பலரிடம் இருந்து வாழ்த்தும் வரவேற்பும் குவிய, தொடர்ந்து ‘ஒருநாள் விவசாயி பருவம்-2’ என்ற பெயரில் மீண்டும் விவசாயத்தைக் கற்றுக் கொடுக்கும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது பசுமை விகடன். இதில் ஒரு நாள் முழுக்க விவசாயப் பணிகளைச் செய்ய வைப்பதன் மூலம் விவசாயம் குறித்த சிறு விதையை அவர்களின் மனத்தில் விதைப்பதே இந்தப் பகுதியின் நோக்கம்.
இந்தமுறை ஒரு நாள் விவசாயி பருவம் 2-க்காகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் சென்னையைச் சுற்றியுள்ள மனிதவளத்துறை அதிகாரி சின்னமுனியாண்டி, வங்கி அதிகாரி வைத்தீஸ்வரன், தனியார் நிறுவன மேலாளர் தேவராஜ், செல்வக்குமார்-ஆர்த்தி தம்பதி, கல்லூரி மாணவிகள் ரக்ஷனா, காவ்யா ஆகியோர்.
இவர்களை நாம் அழைத்துச் சென்றது, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகே கெங்காபுரம் கிராமத்தில் சிறப்பாக பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிர் செய்து வரும் ‘இயற்கை விவசாயி’ மணியின் பண்ணைக்கு.
ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், ஓய்வுக்குப்பிறகு கற்றுக்கொண்ட ‘செல்தெரபி’ மூலம் மருத்துவம் பார்த்து வருகிறார். 2003-ம் ஆண்டு முதல் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஏற்கெனவே ‘காலாநாமக்’ மற்றும் ‘வரகு’ சாகுபடி செய்தபோது, இவரைப் பற்றி பசுமை விகடன் இதழில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘பாரம்பர்ய நெல்லைத் தவிர வேறு எந்தவொரு ரக நெல்லையும் என்னுடைய நிலத்தில் அனுமதிக்கமாட்டேன்’ என்று சொல்லும் இவர், பணம் கொட்டும் மருத்துவத்தைக்கூட பகுதி நேரமாக வைத்துக்கொண்டு, விவசாயத்தில் முழு நேரமாகச் செயல்பட்டு வருகிறார்.
ஒருநாள் விவசாயிகள் பண்ணைக்குள் நுழைந்தபோது மழை பெய்து முடிந்த இதமான சூழல் நிலவியது. பண்ணைக்குள் நுழைந்ததும் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்ற மணி ‘மூலிகைப் பானகம்’ கொடுத்தார். ஒருவரையொருவர் அறிமுகப்படுத்திக்கொண்டதும் இயற்கை விவசாயம் குறித்து ஒருநாள் விவசாயிகளிடம் பேசினார் மணி.
“இயற்கை விவசாயம்ங்கறது எளிமையான முறை. அதிகச் செலவில்லாதது. இயற்கை விவசாயம்தான் தற்சார்பு விவசாயம். நாமே இடுபொருட்களைத் தயார் செஞ்சுக்கலாம். ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைக் கண்டிப்பா தவிர்த்திடணும். மாட்டு எரு, சில பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தினாலே போதும். எந்தப்பயிரா இருந்தாலும் பழுதில்லாம மகசூல் எடுத்திடலாம். இங்க எல்லாத்தையுமே நீங்க நேரடியா பார்க்கலாம். எதையும் நேரா பார்க்கும்போதுதான் நல்லா புரியும்” என்ற மணி அனைவரையும் வயலுக்குள் அழைத்துச் சென்றார்.
“இங்க எனக்கு 40 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல 25 ஏக்கர்ல வருஷம் மூணு போகம் நெல் விதைப்பேன். 10 ஏக்கர் நிலத்துல கீரைகளையும் காய்கறிகளையும் பயிரிடுவேன்” என்றார்.
அவரைக் குறுக்கிட்ட வைத்தீஸ்வரன், “பொதுவா பயிர்சுழற்சி முறையிலதான் விவசாயம் செய்யணும்னு சொல்றாங்களே? வருஷத்துல மூணு போகமும் நெல் விதைச்சா மகசூல் சரியா வருமா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மணி, “தம்பி, நான் இன்னிக்கு நேத்து இல்ல... பல வருஷமாவே நெல்லை மட்டும்தான் திரும்பத் திரும்ப பயிர் செய்றேன். நம்ம நிலத்தைத் தயார் செய்யுற முறை சரியா இருந்தா, எல்லாமே சரியா இருக்கும் என்பது என் நம்பிக்கை. ஏக்கருக்கு 2 டன் மாட்டு எருவோடு, உயிர் உரங்களக் கலந்து தூவி விடுவேன். அறுவடை முடிஞ்சப்பறம் வயல்ல இருக்குற நெல் தாளோடவே ஏர் ஓட்டி, மாட்டைக் கட்டி பரம்படிச்சு விட்டிடுவேன். சரியான பருவத்துல, விதை நேர்த்தி செஞ்சு நாத்து விடுவேன். முளைச்ச நாத்துகள சீரான இடைவெளியில நடவு செய்வோம். இங்க எப்பவுமே கை நடவுதான். இந்த முறைகளோடு பயிருக்குச் சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கிற மாதிரி நடவு செஞ்சா நெல்லுல அதிக மகசூல் கிடைக்கும்” என்றார்.
“இடுபொருள் தயாரிப்பு முறைகளைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார், சின்னமுனியாண்டி. “அது சொன்னா புரியாது. கண்ணுல பாத்தாதான் தெரியும்” என்ற மணி, மாட்டுக் கொட்டிலுக்குள் அழைத்துச் சென்று, மாடுகளின் சிறுநீரைச் சேகரிக்கும் முறை பற்றி விளக்கினார். மாட்டுக்கொட்டிலின் ஓரத்தில் சிறுநீர் சேகரிக்கும் நான்கு பெரிய தொட்டிகள் இருந்தன. அதற்கு மேல் வாத்துக்கூண்டு, அதற்கு மேல் புறாக்கூண்டு என அமைத்திருந்தார். அதைப்பார்த்த ஒரு நாள் விவசாயிகள் ஆச்சர்யமானார்கள்.
அனைவருக்கும் ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறையைச் சொல்ல ஆரம்பித்தார், மணி. “200 லிட்டர் தண்ணீர், ஜீவனுள்ள ஒரு கைப்பிடி மண், ஏதாவதொரு பயறு வகை மாவு 2 கிலோ, வெல்லம் 2 கிலோ, நாட்டு மாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், நாட்டுப் பசுஞ்சாணம் 10 கிலோ. இதையெல்லாம் ஒரு தொட்டியில் ஒண்ணா போட்டு கலந்து நன்றாக கலக்கிவிடணும். வெயில் படாதபடி இத மூடி வைக்கணும். தினமும் 2 முறை இந்தக் கரைசலை ஒரு நிமிடம் கலக்கி விடணும். இப்படி மூணு நாள் தொடர்ந்து செஞ்சா ஜீவாமிர்தம் தயாராகிடும்.
ஒரு கைப்பிடி மண்ணுல 5 கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் இருக்குது. ஒவ்வொரு 20 நிமிஷத்துக்கும் இந்த நுண்ணுயிர்கள் இரண்டு மடங்கா பெருகிக்கிட்டே இருக்கும். இந்த நுண்ணுயிர்க் கலவைதான் ஜீவாமிர்தம்.
நடவு செஞ்சதுல இருந்து 15 நாளுக்கு ஒரு தடவை பயிர்களுக்கு ஜீவாமிர்தத்தைத் தெளிச்சிட்டு வர வேண்டும். 10 நாட்களுக்கு ஒருமுறை களையெடுக்கணும். மூணு மாசத்துக்கு இப்படிச் செஞ்சிட்டு வந்தா, பங்கமில்லாம மகசூல் கிடைச்சுடும்” என்ற மணி, மாட்டுச் சாணம் மூலம் உயிர் உரம் தயாரிக்கும் முறை குறித்துச் சொல்லிக் கொடுக்க... ஒரு நாள் விவசாயிகள் அனைவரும் சாணத்தைக் குவித்து உயிர் உரம் தயாரிக்க ஆரம்பித்தனர்.
பண்ணையில் இருந்த 40 நாட்டு மாடுகளைப் பார்த்த ஒரு நாள் விவசாயிகள், “நாட்டு மாடுகள்ல பால் குறைவாத்தான் கிடைக்கும். அதை ஏன் வளர்க்கிறீங்க?” என்றனர்.
“பால் எவ்வளவு கிடைக்கும்கிறது முக்கியமில்லை. பால் எவ்வளவு சத்தானதுங்கிறதுதான் முக்கியம். அதில்லாம நாட்டு மாட்டுச் சாணத்துலதான் நுண்ணுயிர்கள் அதிகமா இருக்கும். இதுல இடுபொருட்கள் தயாரிக்கிறப்போ வீரியமா இருக்கும். அதனாலதான் நாட்டு மாடுகளை அதிகமா வெச்சிருக்கேன்” என்ற மணி, பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு முறைகள் குறித்தும் ஒரு நாள் விவசாயிகளுக்கு விளக்கிச் சொல்லி, பிறகு நெல் வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஆட்கள் நாற்றங்காலில் இருந்து நாற்றுகளைப் பறித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு ஒரு நாள் விவசாயிகளும் இணைந்து நாற்றுகளைப் பறித்து, கட்டுக் கட்ட ஆரம்பித்தனர். கல்லூரி மாணவிகள் ரக்ஷனாவும், காவ்யாவும் அங்கிருந்த பணியாளர்களிடம் விடாமல் சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே இருந்தனர். தொடர்ந்து நாற்று நடவுப் பணியிலும் ஈடுபட்டனர், ஒரு நாள் விவசாயிகள். அவர்கள் ஆர்வத்துடன் நாற்று நடுவதைக் கண்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பணியாளர்கள் ஆச்சர்யப்பட்டனர்.
வைத்தீஸ்வரன் ஒவ்வொரு நாற்றாக நடவு செய்வதைப் பார்த்த வேலையாட்கள், “ஒரு குத்துக்கு ரெண்டு நாத்தா நட்டா, ஒண்ணு இல்லாட்டி ஒண்ணு வளந்து வந்துடும். அதனால எப்போதுமே நெல்பயிரை நடவு செய்யும்போது ரெண்டு ரெண்டா நட வேண்டும்” என்றனர்.
No comments:
Post a Comment