Wednesday 11 October 2017

'மாத்தம்மா' வாழ்க்கைமுறை சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் !! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்..





திருப்பதி பகுதியில் உள்ள மாத்தம்மா கோவில் பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாக பரவலாக நம்பப்பட்ட ஒரு வழக்கம் இன்னமும்கூட நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் பெயரைச் சொல்லி பெண்குழந்தைகளின் வாழ்வை சுரண்டும் இந்த 'மாத்தம்மா' நடைமுறையைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள் யார்? இதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடத் தொடங்கும்போது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஆந்திரா மற்றும் திருவள்ளூரை ஒட்டியுள்ள சித்தூர் மாவட்டங்களில் மாத்தம்மா தேவி கோவிலுக்கு ''பெண்குழந்தைகளை விடுவது'' நடைமுறையில் உள்ளது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு மாநிலங்களில் இருந்து அறிக்கை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

சடங்கின் ஒரு பகுதியாக, அச்சிறுமிகள் மணப்பெண்ணாக உடையணிந்து விழா முடிந்தவுடன், அவர்களின் ஆடைகள் ஐந்து சிறுவர்களால் அகற்றப்படுகின்றன, கிட்டத்தட்ட நிர்வாணமாக அங்கேயே விடப்படுகின்றனர். பின்னர் அச்சிறுமிகள் மாத்தம்மா கோவில்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு பொது சொத்து என்று கருதப்பட்டு பாலியல் சுரண்டலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முடியவில்லை “மாத்தம்மா” நடைமுறை

சித்தூர் மாவட்டத்தின் கிராமங்களில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும், திருப்பதி நகரின் மையத்திலும் மாத்தம்மா கோவில்களைக் காணமுடியும். சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில், இதில் அதிகமாக பெரும்பாலும் புட்டூர், நகரி, நாகலாபுரம், பிச்சாத்தூர், கே.வி.பி. புரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி, எர்பேடு, தொட்டம்பேடு, பி.என். கந்த்ரிகா, நாராயணவனம். ஆகிய இடங்களில் இவ்வழக்கம் உள்ளது. மேற்கு மண்டலங்களான பாயிரெட்டிபள்ளி மற்றும் தவனம்பலே மற்றும் பங்காருபாலெம் ஆகிய இடங்களிலும் தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மாத்தம்மா வழக்கம் ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானா பகுதியிலும் சம அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தேவதாசி என அழைக்கப்படும் இவ்வழக்கம் என்றோ வழக்கொழிந்துபோனது. ஆனால் மாத்தம்மா என்ற நடைமுறை பெயரில் இன்றும் தொடர்கிறது. இவர்களின் எண்ணிக்கையை சில அரசு சாரா அமைப்புகளாலும் சில தன்னார்வலர்களாலும் வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் 'பாசிவி', கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 'சானி', விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 'பார்வதி' என்று இவ்வழக்கம் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சமூக அழுத்தங்கள் காரணமாக பெண்கள்மீதான இச்சுரண்டல் முறையை விட்டு வெளியேற முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது.

திருமணம் இல்லாத வாழ்க்கை

கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த மாத்தம்மாவாக நேர்ந்துவிடப்பட்ட ஒரு பெண் வயது 40, வீட்டு வேலை செய்வதன் நிமித்தம் ஸ்ரீகாளஹஸ்தியில் குடியேற தன் கிராமத்தைவிட்டு வெளியேற விரும்பினாலும், அங்குள்ள இளைஞர்கள் வெளியேற அனுமதிக்காததோடு, எஜமானரிடமே தங்கியிருக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.

திருப்பதி மண்டலத்தின் எம்.ஆர்.பள்ளியைச் சேர்ந்த ஒரு தினக்கூலியான 14 வயது மாத்தமாவின் தந்தை மாத்தையா, தனது மகள் பிறந்ததிலிருந்து இதற்காக நேர்ந்துவிட்டு விடவேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாகக் கூறுகிறார்.

''மாத்தம்மா தெய்வத்திற்கு நாங்கள் அவளை நேர்ந்துவிட்டோம். அப்போது அவளுக்கு வயது 3, அப்போதிலிருந்தே அவள் அங்குதான் வளர்ந்தாள். திருமணம் இல்லாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒருவகையில் இது வேதனையானதுதான். ஆனால் நாங்கள் தெய்வீக சக்திக்குக் கட்டுப்பட்டிருந்தோம்'' என்கிறார்.

சமூக ஆர்வலர்களோ, இவ்வழக்கத்தினால் பெண்கள் சுரண்டப்படுவதாகவும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொழிலாளர்களாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதில் நிறைய பெண்கள் வயதாகி தனிமையில் இறந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் மாத்தம்மா கோவில்களிலேயே அவர்கள் தினமும் உறங்கவேண்டும். ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள வீடுகளில் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம்தான்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான மதர்ஸ் கல்விக் கழகம் என்ற ஒரு அமைப்பின் ஆய்வின்படி, 1990 மற்றும் 1992 க்கு இடையில் தன்னார்வக் குழுக்களால் பல விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெண்கள் கோவிலுக்கு நேர்ந்துவிடுதலுக்கான தடுப்புச் சட்டம் 1988ல் உருவானபிறகுஇந்த அமைப்புகள் தொடர்ந்து இந்த பெண்கள் மத்தியில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை தொண்டாற்றியது.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் பிற மெட்ரோபாலிடன் நகரங்களிலும் பல மாத்தம்மாக்கள் இருப்பதை இந்த தன்னார்வ அமைப்பு ஒரு துணிகர முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்தது. 2011லிருந்து, சித்தூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர். தற்சமயம், இதே மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மாத்தம்மாக்களாக உள்ளனர். அதில் 363 குழந்தைகள் 4-15 வயதுக்குள் உள்ளவர்கள். பெண்கள் கோவிலுக்கு நேர்ந்து விடுதலுக்கு எதிரான சட்டம் இந்த மாவட்டத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை, 2016ல் புத்தூரில் குறைந்தபட்சம் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

அடுத்ததாக தொட்டம்பேடுவில் ஒரு வழக்கு அவ்வளவுதான். 2016 ஆம் ஆண்டில் மட்டுமே இந்த சட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.கே.ரோஜா, சுகுணாம்மா மற்றும் டி.கே.சத்யபிரபா ஆகிய மூவரும் ஆந்திர சட்டப்பேரவையில் இப்பிரச்சனையை எழுப்பினர்.

மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம்

புத்தூர் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி கோட்டங்களைச் சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், இந்த மாத்தம்மா முறை இன்னும் பல மண்டலங்களில் நடைமுறையில்தான் உள்ளது. இருந்தாலும், முறையான தரவு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் கிராமப் பெரியவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லாததால் அறிவியல் ரீதியான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்படவில்லை. இது சமூகத்தின் உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதத்தில், அரசு இயந்திரங்களும் மற்றும் அரசியல் கட்சிகள் பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுவதில்லை. மேலும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட சமூகத்தை சிறுபிரிவு மக்களாகவே பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகின்றனர். அதோடு அம்மக்களிடம் பெரிய ஓட்டுவங்கியும் இல்லை என்கிறார் மதர்ஸ் கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான கல்விக்கழக தலைவர் என்.விஜயகுமார்.

முப்பது ஆண்டுகளாக திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன், தி இந்துவிடம் தெரிவிக்கையில், பல நூற்றாண்டுகளாக மாதிகா சமூகத்தினரை சுரண்டுவதற்கான ஒரு சாட்சியமாக மாத்தம்மா முறை உள்ளது. இதனால் இச்சமூகம் பொருளாதார வளர்ச்சி இன்றி நீண்டகாலமாகவே நலிவடைந்த நிலையில் உள்ளது. மறுவாழ்வு என்ற பெயரில் அரசுகளும் சிறு தொகையை வழங்கி நிறுத்திக்கொள்கிறது. இதனால் இந்த பெண்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது இவர்களை இந்நிலையில் வைத்துள்ள சமூக அமைப்புமுறையைப் போலவே மோசமானது" என்று முன்னாள் எம்.பி. கூறினார்.

சித்தூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.ராஜசேகர் பாபு, தான், மாத்தம்மாக்களின் வாழ்வுநிலையை ஆராய்ந்துவருவதாகவும், உண்மைகளைக் கண்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள்படி, மாதிகா சமூகத்தினர் வாழும் கிராமங்கள் பலவற்றிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாத்தம்மாக்கள் உள்ளதாகத் கூறுகின்றன. இவர்களில் 19 வயதிலிருந்து 30 வயதுக்குட்ட நிலையில் 400 பேரூம், 15 வயதுக்கு குறைவான சிறுமிகளாக 350 பேரும் உள்ளனர்.

மாற்று வாழ்வாதாரங்கள்

எனினும் வரதப்பள்ளம் மற்றும் சத்யவேடு போன்ற சில மண்டலங்களில் இயங்கிவரும் ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பெண்களும் சிறுமிகளும் வேலைக்கு அனுமதிக்கப்படுவதால் இந்த நடைமுறை, மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் கேவிபி புரம் மண்டலங்களில் நடக்க இருந்த சிறார் திருமணங்கள் தன்னார்வக் குழுக்களின் தலையீடுகளால் தடுத்துநிறுத்தப்பட்டன. 2000 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாத்தம்மாக்கள் சிறிய அளவு பொருளாதார பயன்களைப் பெற்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூர்மவிலாசபுரம் கிராமத்தில், அருந்ததியர் பாளையத்தில் உள்ள மாத்தம்மா கோவிலுக்கு வெளியே கிராமத்தின் ஒரு பிரிவினர் கூடிவிவாதித்தனர். "ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகா தேவி (மாத்தம்மா)வின் வாழ்க்கையில் ஒரு விவாதமாக இருந்தது. அது சர்ச்சையைத் தூண்டியது.

மாத்தம்மா கோவிலுக்கு நேர்ந்துகொண்டு பெண் குழந்தைகளை பொட்டி கட்டிவிட்டுவிடும் இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கு முன் மூடநம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது இங்கு நீண்டநாள் தொடரவில்லை பெண்குழந்தைகளை மாத்தம்மாவாக விடும் வழக்கம் தவிர, தங்கள் உடல்நலக்குறை தீர்வதற்காக கன்றுக்குட்டிகளை கோவிலுக்கு நேர்ந்துவிடுவதும் இங்கு வழக்கத்தில் உண்டு. அது மற்ற சாதியினரிடம்கூட வழக்கத்தில் உள்ளது. " என்றார் கூர்மவிலாசபுர கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.வெங்கடேசன்.

இக்கிராமத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6ந்தேதி வரை மாத்தம்மா திருவிழா நடைபெற்றது. ஐந்தாம் நாள் திருவிழாவில் மாத்தம்மா வாழ்க்கையைப் பற்றிய நாடகம் ஒன்றை இளைய தலைமுறைக்கு விளக்கும்விதமாக நடத்தப்பட்டது. ஒரு சிறிய பெண் இதில் ரேணுகா தேவி வேடத்தில் வருகிறார். ஜமதக்னி முனிவருக்கு சாப்பாடு எடுத்துச்செல்லப்படும் காட்சிஅது. அந்த நேரம் நான்கு சிறுவர்கள் கடத்தல்காரர்களைப் போல செயல்படுகிறார்கள், இதனால் அவளை வேறு விதமாகக் கையாள்வதும், அவளைத் துன்புறுத்தும் முயற்சியும் கூட நடக்கிறது. இக்காட்சியைப் பற்றிய பேசிய அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் ஏ.எஸ்.தண்டபாணி இது நமது தொன்மத்தின் ஒரு பகுதி. இந்த நாடகத்தின் இக்காட்சி மக்களை சிறுமியின் ஆடைகளைக் களைவதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறுகிறார்.

மாத்தம்மா நடைமுறைகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பிறகாவது மாத்தம்மாக்களுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

தமிழில்: பால்நிலவன்
நன்றி :தமிழ் ஹிந்து 

No comments:

Post a Comment