Sunday, 29 October 2017

பட்டுச்சேலை மோசடி.ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...

Image may contain: 1 person

நாம் வாங்குகின்ற பட்டுச்சேலைகளில் 100க்கு 80 புடவைகள் அசல் காஞ்சிபுரம் பட்டுப்புட‍வைகளே அல்ல.. ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்...
தங்கம் வாங்கும்போதுதான் சேதாரத்திலே மக்கள் ஏமாந்து போறாங்கன்னு பாத்தா பட்டுப்புடவைகள் விஷயத்தில் நுாற்றுக்கு, 99 சதவீதம் பேர் ஏமாறத் தான் செய்கின்றனர். ஒரு பெண்மணி தனக்கு நேர்ந்த சம்பவத்தை தினமலரில் பகிர்ந்துள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல பட்டுச்சேலை விற்பனையகத்தில், 22 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுப்புடவை ஒன்றை அவர் வாங்கியுள்ளார். அசல் பட்டு, அசல் ஜரிகையிலான பட்டு எனக் கூறி, விற்பனை செய்துள்ளது அந்த பிரபல நிறுவனம். அவர் வசிக்கும் பகுதியான விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாட்டில் பட்டுச்சேலை நெசவு செய்யும் நெசவாளர் ஒருவரிடம், பட்டுச்சேலையை கொடுத்து தரம் குறித்து கேட்டுள்ளார்.அவர் சேலையை பார்த்து, 'இது அசல் பட்டு அல்ல; வெறும், 3,௦௦௦ ரூபாய்க்கு வாங்க வேண்டிய சேலையை, 22 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டீர்களே' எனக் கூறியுள்ளார்.
அந்தப்பெண்மனி தான் ஏமாந்ததை நினைத்து பதற்றப்படவில்லை.வீட்டிற்கு வந்த அவர், வெள்ளைத்தாளில், 50 ரூபாய் ஸ்டாம்பை ஒட்டி, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, அச்சேலையை விற்பனை செய்த கடை உரிமையாளரிடம், சில விளக்கங்களை கேட்டு பதிவு தபால் அனுப்பியுள்ளார். அதில், சேலையில் தரம்; சேலையை யாரிடம் கொள்முதல் அந்த நிறுவனம் செய்தது, கொள்முதல் செய்த நாள்; அதன் கொள்முதல் விலை என்ன; கடை உரிமையாளரின் முகவரியையும், பட்டை நெசவு செய்த நெசவாளியின் விபரம் ஆகியவற்றைக் கேட்டிருந்தார். பின், சில நாட்கள் கழித்து, அவருக்கு ஒரு தபால் வந்துள்ளது. அதில், சேலையின் தரம், விலையை பற்றி, கடை உரிமையாளர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், விலையை மட்டும் தவறுதலாக தெரிவித்து இருந்தார்.
அந்தப் பெண்மணிக்கு பட்டுப் புடவை பற்றி அரிச்சுவடியே தெரியாது என்றும், பெண் தானே என்ன செய்து விடுவார் என அந்த கடைக்காரர் நினைத்து விட்டார் போலும். கடிதம் கிடைத்தவுடன், ஜவுளிக் கடைக்காரர் கொள்முதல் செய்த நெசவாளிக்கு, தகவல் அறியும் உரிமை சட்டப்படி, விளக்கம் கேட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், கடை உரிமையாளர் எழுதிய கடித நகலை இணைத்து, நெசவாளிக்கு அனுப்பியதோடு 'சரியான விளக்கம் அளிக்காவிட்டால், கோர்ட்டிற்கு செல்ல வேண்டி இருக்கும்' என, தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில், கடை மேலாளர், நெசவாளி ஆகிய இருவரும் அப்பெண்மணி வீட்டிற்கு வந்துள்ளனர்.
'எங்களை மன்னித்து விடுங்கள்; உங்களுக்கு தவறான தகவலை அனுப்பி விட்டோம். இனி மேல், நாங்கள் யாரையும் ஏமாற்ற மாட்டோம். இதை கோர்ட்டுக்கு கொண்டு போய் பெரிய பிரச்னை ஆக்கிவிடாதீர்' என கூறி மன்றாடி உள்ளனர். இருவரும் அந்தப் பெண்ணின் காலில் விழுந்துள்ளனர். என்னிடம், 22 ஆயிரம் ரூபாயை கொடுத்து, 'அந்த சேலையை நீங்களை வைத்து கொள்ளுங்கள்' எனக் கூறி, காரில் பறந்துள்ளனர்.
இன்று, தமிழகத்தில் செயல்படும் பட்டுச்சேலை விற்பனை கடைகளில் இப்படிப்பட்ட மோசடிகள் அரங்கேறுகின்றன. எனவே பட்டுச்சேலையை வாங்க விரும்புவோர். காஞ்சிபுரம் நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று வாங்கினால்,சேலை தரமானதாக இருக்கும். இந்தப்பெண்மணியைப் போன்று, யாராவது ஏமாந்திருந்தால், தைரியமாக தகவல் அறியும் உரிமைக்கு கடிதம் எழுதுங்கள்...
ஒரு வேளை அந்த பட்டுப்புடவை தரமற்றதாகவும், அசல்பட்டாக இல்லாமல் இருந்தால் ஏமாந்த பணம் வீடு தேடி வந்து சேரும். கடல் கொள்ளைக்காரர் களை விட மோசமான கொள்ளைக்காரர்களாக, சில பட்டுச்சேலை கடைக்காரர்கள் மாறியதை நினைத்தால், மனசு எரிமலையாக வெடிக்கிறது!
நன்றி: தினமலர்..

No comments:

Post a Comment