Wednesday, 25 October 2017

கந்து வட்டி கொடுமை தாங்காமல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் முன் தீக்குளிப்பு!!

Image may contain: 3 people, child and outdoorஒரு தகப்பன் மனைவி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தின் முன் தீ குளித்திருப்பது அந்த மாவட்ட கலெக்டருக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் அவமானம்..


அந்தக்குழந்தைங்க என்ன பன்னிச்சு.. அத ஏன் கொளுத்தினாங்க..? என்று உதிர்க்கப்படுகிற உணர்ச்சியற்ற வெற்று வார்த்தைகளை வெறுக்கிறேன்..


தலைகுப்புறக் கிடந்தபடி எரிகிற குழந்தையைப்பாருங்கள், என்னவென்றே புரியாமல் நின்றபடி எரிந்துகொண்டிருக்கும் சிறுவனைப்பாருங்கள், கணவனின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து எரிந்து கொண்டிருக்கும் மனைவியின் கதறலைப் பாருங்கள்.. இந்த முடிவுக்குத்துனிந்த கணவன் அமர்ந்த நிலையில் எரிந்துகொண்டிருப்பதைப் பாருங்கள்..


1 லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வரை கட்டியப்பின்னும் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறது கந்துவட்டி கும்பல்.


வேறு வழியின்றி உள்ளூர் காவல் நிலையத்திலும்..

கலெக்டர் குறை தீர்ப்பு முகாமிலும் 6 முறை மனு கொடுத்திருக்கிறார் இசைக்கி முத்து.


ஆனால் குற்றம் செய்தவனையும் பாதிக்கப்பட்டவனையும் ஒன்றாக அமர வைத்து பஞ்சாயத்து செய்வதே கடமையாக கொண்ட காவல்துறையினர் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.


கந்து வட்டி கும்பலிடமிருந்து வரும் மாமூலை கூலித்தொழிலாளிகள் கொடுப்பார்களா என்ன..

இந்த முடிவெடுக்கும் முன்பு எவ்வளவு அவமானப்பட்டிருப்பான், எவ்வளவு யோசித்திருப்பான்,

எவ்வளவு அழுதிருப்பான். எவ்வளவு அவநம்பிக்கையடைந்து இருப்பான், எவ்வளவு விரக்தியடைந்திருப்பான்...


தங்களுக்கு எங்கேயாவது ஒரு இடத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை முற்றும் அற்றுப் போகும் இடத்தில்தான்.. உயிரையே மாய்த்துக் கொள்ளும் துணிவு பிறக்கிறது..


எல்லா இடங்களுக்கும் ஓடி முடித்த கால்கள்.. எந்த ஒரு இடத்திலும் இனி நியாயம் கிடைக்காது என்பதை உணர்ந்த அந்தக் கணம்தான் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும்.


வருமை கொடியது.. வருமை தரும் அவமானம் அதைவிடக் கொடியது.. மனிதர்கள் வாழத் தகுதியற்ற இந்தச் சமூகத்தில், தம் பிள்ளைகளை விட்டுச்செல்ல மனமில்லாத அந்த அன்பு பரிபூர்னமானது.. உங்கள் வியாக்கியானங்களுக்கும், வெற்றுப்பசப்புகளுக்கும் அது புரியாது... அந்தச் சூழலில் சிக்குண்டவர்கள் தவிற, அந்த உளவியலைக் கற்பனைகூட பன்னிப்பார்க்க முடியாது...


காவல்துறை.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. இங்கெல்லாம் ஒரே ஒரு ஈர மனசு இருந்திருந்தாலும்.. வைத்த தீ நமத்துப் போயிருந்திருக்குமே..


ஒரு அதிகாரி மனசில்கூட ஈரம் இல்லாமலேயே போய்விட்டதே..


என் முத்தே.. பொன்னே.. மணியே.. என்று கொஞ்சி கொஞ்சித் தூக்கி வளர்த்த கரங்களே.. நெருப்பிட்டு துடிதுடிக்கக் கொன்றுவிட்டதே..

சிரிக்கும் பிஞ்சு முகத்தில் நெருப்பு வைக்க மனம் எப்படி வந்தது?


மனசு கல்லாக இறுகியிருந்திருக்குமோ..
அவ்வளவு ரணமா இந்த சமூகம் அந்தத் தாய்க்குக் கொடுத்தது?
பணம் பாதாளம் மட்டும் பாயுமாம்..


உண்மைதான்.. பாதாளத்தின் படுகுழிக்கே ஒரு குடும்பத்தை அந்தப் பணம் தள்ளிவிட்டதே..உதவிக்காக எல்லா கதவுகளையும் தட்டி அத்தனை நம்பிக்கைகளையும் இழந்து போன ஒரு மனம் இறுதியில் தீ குளித்திருக்கிறது.என்ன எழுதியும் நம் மனம் ஆற மாட்டேன் என்கிறது.


நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி புகைப்படத்தை வைப்பது போல, இனி இந்தப் படத்தை எல்லா காவல் நிலையங்களிலும்.. எல்லா அரசு அலுவலக வாசலிலும் வையுங்கள்..


ஒரு அதிகாரியாவது அதைப் பார்த்து திருந்தமாட்டாரா?


இது மிக பெரிய கொடூரம் .பார்க்க மனம் வலிக்கிறது குழந்தைகள் எப்படி துடித்திருப்பார்கள் .கேடுகெட்ட ஊடகங்கள் இதை படம்பிடிக்கும் நேரத்தில் குழந்தை களை காப்பாற்றி இருக்கலாமேடா பாவிகளா


ஞாயம் கிடைக்குமா? இந்த படுபாதக ஈவு இரக்கமற்ற கொடூர கொலைகளுக்கு!!கந்துவட்டிக் கும்பலோ காவல் துறைக்கும்பலோ இந்தச் சமூக அமைப்போ இந்த மரணங்களுக்கு காரனமான ஒவ்வொருவரையும் சபிக்கிறேன்..தகுதியில்லாதவர்களிடத்தில் ஆட்சியும் அதிகாரமும் இருக்கும் வரை இப்படிபட்ட அக்கிரமங்களை நாம் காண நேர்ந்துகென்டிருக்கிறது, இன்னும் என்னென்ன கொடூர குற்ற செயல்களை காணவேண்டியுள்ளதோ!!!


அப்படியேனும் ஒரு ஏழைக்காவது எங்கேயாவது நியாயமான 
நியாயம் கிடைக்கட்டும்..

ஆக்கம் மற்றும்  தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment