Tuesday, 6 February 2018

தேனிக்காரரின் விரலசைவில் இயங்கும் வீடு !! ஒரு அறிவியல் பார்வை..

ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் டெமோ கிட்
சில தினங்களுக்கு முன்னால் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய கூகுள் தமிழர் சுந்தர் பிச்சை, “நெருப்பையும் மின்சாரத்தையும்விட மனித குலத்துக்குச் செயற்கை அறிவுத்திறன் அதிமுக்கியமானது” என்றார். ஏற்கெனவே தன்னுடைய கூகுள் வலைப்பூவில், “எதிர்காலத்தைப் பார்க்கிறேன். அதில் கருவிகள் கிடையாது. எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் உலகம், அத்தனைக்கும் செயற்கை அறிவுத்திறனைத் தேடும் உலகமாக மாறப்போகிறது” என்று பதிவிட்டிருந்தார்.
“எல்லாவற்றுக்கும் செயற்கை அறிவுத்திறனா? இது சாதாரணர்களின் வாழ்க்கையில் சாத்தியமல்ல” என்று இப்போது நாம் விவாதிக்கலாம். ஆனால், இப்படித்தான் பத்தாண்டுகளுக்கு முன்னால் மொபைல் போனைப் பற்றியும் நாம் நினைத்துக்கொண்டிருந்தோம். முக்கியமாக இந்தக் கருத்தைச் சொன்னது, புதிய தொழில்நுட்ப உலகைக் கட்டமைக்கும் பிரம்மாக்களில் ஒருவரான சுந்தர் பிச்சை என்பதில்தான் சூட்சுமம் அடங்கியுள்ளது!

தொழில்நுட்பத் தோழி

இதன் ஒரு கட்டமாக உலகத்தைக் குரலால் இயக்கும் தொழில்நுட்பத் தலைமுறைக்கு நாம் வந்திருக்கிறோம். சொன்னதையெல்லாம் கேட்ட மாத்திரத்தில் செய்யும், ‘கூகுள் ஹோம்’ (Google Home), ‘அமேசான் எக்கோ’ (Amazon Echo), ‘ஆப்பிள் சிரி’ (Apple Siri) போன்ற அதிநவீனக் கருவிகளை கூகுள், அமேசான், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் போட்டிபோட்டு தயாரித்துக்கொண்டிருக்கின்றன. குரல் ஆணையில் இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் வயர்லெஸ் ஒலிப்பெட்டிகள் இவை.
பாடல் இசைப்பது, அலாரம் வைப்பது, போக்குவரத்து நெரிசல் தகவல்களை அறிவிப்பது, கார் புக்கிங் செய்வது, ஒலிப் புத்தகங்களை வாசிப்பது, வீட்டிலுள்ள விளக்குகள்; ஏசி ஆகியவற்றை ஆன்/ஆஃப் செய்வது, யூடியூப் வீடியோவைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது – இப்படி நம்முடைய வீட்டில் என்னவெல்லாம் செய்யச் சொல்கிறோமோ, நம்முடன் உரையாடியபடியே அவற்றைச் செய்துமுடிக்கும் சகலகலாத் தொழில்நுட்பத் தோழிகள் இவை.
2015-லேயே அமெரிக்கச் சந்தையில் அறிமுகமான இதுபோன்ற கருவிகள் அடுத்தடுத்துத் தொழில்நுட்பரீதியாக மேம்படுத்தப்பட்டுவருகின்றன.  

செலவு குறைவான மாற்றுவழி

கடந்த ஆண்டு இந்தியச் சந்தைக்குள்ளும் அவை கால்பதித்துவிட்டன. ஆனால், தற்போதைக்கு இரண்டு காரணங்களுக்காக இவற்றை வாங்கிப் பயன்படுத்துவது சிலருக்கு மட்டுமே இந்தியாவில் சாத்தியம். ஒன்று விலை, மற்றொன்று தொழில்நுட்பத் தளம்.
ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப் ஆப்ஸ்
இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் அமேசான் எக்கோ, கூகுள் ஹோம் போன்ற கருவிகள் இயங்குகின்றன. இவற்றைக் கொண்டு நம்முடைய வீட்டு உபயோக சாதனங்களான தொலைக்காட்சிப் பெட்டி, ஃபிரிட்ஜ், வாஷிங் மிஷின், அலமாரி ஆகியவற்றை இயக்க வேண்டுமானால் அவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இன்று நாம் பயன்படுத்துவதில் பெரும்பாலானவை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் சாதனங்கள்தான். இத்தகைய சாதாரண சாதனங்களையும் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் கொண்டு இயக்கவும் கட்டுப்படுத்தவும் மாற்றுவழியைக் கண்டுபிடித்துள்ளனர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.இ. எம்பெடெட் சிஸ்டம் டெக்னாலஜீஸ் (M.E. Embedded System Technologies) பட்டம்பெற்ற விஜயராஜா ரத்தினசாமி மற்றும் அவர் குழுவினர்.
நாம் தற்போது பயன்படுத்திவரும் வீட்டு உபயோக சாதனங்களை டிஜிட்டலாக மாற்றும் ‘Gemicates Hagway Smart Hub’ என்ற இணைப்பு மையத்தை இவர் வடிவமைத்திருக்கிறார்.


உள்ளங்கையில் வீடு..

“எம்படெட் சிஸ்டம் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தினரும் புதிய தொழில்நுட்பப் பாய்ச்சலை எட்டிப்பிடிக்க முடியும். ஏனென்றால், touch screen பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் சாதனங்களான வாஷிங் மிஷின், இண்டக்ஷன் ஸ்டவ், மொபைல் ஃபோன் ஆகியவற்றின் display panel-ல் எம்பெடெட் தொழில்நுட்பத்தின் மென்பொருளும் வன்பொருளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் சாதாரண மின், மின்னணு சாதனங்களையும் டிஜிட்டலாக மாற்றலாம்.
உதாரணமாக, தற்போது எலக்ட்ரானிக் முறையில் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல் விளக்குகளை டிஜிட்டலாக மாற்றலாம். அதில் ஜி.பி.எஸ். பொருத்தினால், ஆம்புலன்ஸ் ஒரு தெருவுக்குள் நுழையும்போது தானாகக் கண்டறிந்து போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்ஞைகளை அது அனுப்பும். இப்படி இணையதள வசதியை கொண்டு மற்ற பொருட்களை இயக்குவதுதான் இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ். இந்த அடிப்படையில்தான் வீட்டு உபயோகப் பொருட்களை இயக்கும் ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட்-ஹப் உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார் விஜயராஜா.

வாய்ஸ் கண்ட்ரோல் ரோபோட்
கைக்கு எட்டும் தூரத்தில்..

தேனி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த விஜயராஜா, 2012-ல் பி.இ. எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும்போதே செவி மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு ‘Voice Control Humanoid Robot’-ஐ வடிவமைத்தார். அப்போதே தனக்கு ரோபோட்டிக்ஸ், எம்பெடெட் தொழில்நுட்பம் மீது தீராத காதல் இருந்ததாகக் கூறுகிறார். ஆனால், போதுமான நிதி உதவியோ ஊக்கமோ இல்லாததால் அவருடைய கண்டுபிடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.
தற்போது, தன்னுடைய அடுத்த கண்டுபிடிப்பை நட்பும் தொழில்நுட்பத் திறனும் கொண்ட குழுவினரோடு இணைந்து உருவாக்கியுள்ளார். தொழில்நுட்ப உதவியாளர் ரஞ்சித்குமார், மிடில்வேர் டெவலப்பர் ராஜராஜன், பிசிபி டிசைனர் தீபலட்சுமி, ஆப்ஸ் டெவலப்பர் பிரஷாந்த், ஐ.ஓ.எஸ். டெவலப்பர் செல்வா, கிளவுட் கம்ப்யூட்டிங் டெவலப்பர் ரகு ஆகியோர் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்குப் பின்னால் உழைத்திருக்கிறார்கள்.
“ஜெமிகேட்ஸ் ஹேக்வே ஸ்மார்ட் ஹப்-ஐ பல்ப், மின்விசிறி, வாஷிங்மெஷின் போன்ற சாதனங்களின் எலக்ட்ரிகல் போர்டில் பொருத்திவிடுவோம்.
மின்விளக்குகளைக் கட்டுப்படுத்தும் ஆப்ஸ்
நாங்கள் வடிவமைத்த வைஃபை வசதியில் செயல்படும் ‘ஸ்மார்ட் வீடு’ ஆப்ஸை ஆண்ட்ராய்டு ஃபோனில் பதிவிறக்கம்செய்வோம். இப்போது நம் உள்ளங்கையில் உள்ள ஸ்மார்ட் ஃபோன் வழியாக பல்ப், மின்விசிறி ஆகியவற்றை இஷ்டம்போல இயக்கலாம்.
இதேபோல ஸ்மார்ட் பூட்டு, ஸ்மார்ட் வெப்பநிலைச் சீராக்கி, ஸ்மார்ட் ஜன்னல் என ஹோம் ஆட்டோமேஷன் மூலம் நவீன வாழ்க்கை முறை எல்லோருக்கும் சாத்தியமாகும். இதன்மூலம் மின்சாரம் சேமிக்கப்படும், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காகப் பயன்படும், பணம் மற்றும் நேரம் விரயமாகாமல் தவிர்க்கலாம்.
பெருநிறுவனங்கள் தயாரிக்கும் இத்தகைய சாதனங்கள் குறைந்தபட்சம் ரூ. 40 ஆயிரத்துக்கு விற்கப்படுகின்றன .
அதற்கேற்றமாதிரி நம்முடைய வீட்டு உபயோகப் பொருட்களை மேம்படுத்த ரூ. 2 லட்சமாவது செலவாகும். ஆனால், நாங்கள் வடிவமைத்திருக்கும் ஆப்ஸ் மற்றும் ஹப் ரூ. 20,000 தான்.
இதற்கான காப்புரிமை மட்டும் கிடைத்துவிட்டால் இந்தியத் தொழில்நுட்பச் சந்தையில் இது ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தும்” என்கிறார் ஸ்மார்ட் வீட்டை உருவாக்கும் இந்த இளம் தொழில்நுட்ப நிபுணர்.

நன்றி : தி இந்து நாளிதழ்.

No comments:

Post a Comment