Wednesday 28 February 2018

அரபு நாடுகளில் ஒருவர் இறந்தால் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர என்ன வழிமுறை?

இந்தியா - யூஏஇ தூதரகம்
பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்துப் பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. முதலில் ஶ்ரீதேவி மாரடைப்பால் உயிரிழந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருடைய மரணம் விபத்து என்றும், குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி அவர் உயிரிழந்தார் என்றும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்கூறு ஆய்வுக்குப் பின், அவரின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான வழிமுறைகளை துபாயில் உள்ள இந்தியத் தூதரகம் துரிதப்படுத்தி வருகிறது.
அரபு நாடுகளில், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இறந்தால், சம்பந்தப்பட்டவரின் உடலை இந்தியா கொண்டுவர பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அந்த வழிமுறைகள் பற்றி வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்திலேயே அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம். 
தேவைப்படும் ஆவணங்கள்:
1. அசல் இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
2. உடல் பதப்படுத்தப்பட்ட அசல் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
3. உடலைக் கொண்டுசெல்ல, சுகாதார அமைச்சகத்தின் தடுப்புமுறை மருத்துவத் துறையிலிருந்து சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
4. இறுதிச் சடங்குகளுக்காக உடலை இந்தியாவிற்குக் கொண்டுசெல்வதற்கான வசதிகளைக் கோரி, இறந்தவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் கடிதம்.
5. இறந்தவரின் அசல் பாஸ்போர்ட், அதன் முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கத்தின் இரண்டு நகல்கள்.
6. உடலைக் கொண்டு செல்லும்போது, உடலுடன் பயணம் செய்யும் நபரின் பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 பக்கங்கள் மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
7. இறப்புப் பதிவேட்டில் கையெழுத்திடுவதற்காக, பதிவின்போது உடலுடன் செல்லும் நபரும் உடனிருக்க வேண்டும்.
8. இறந்த நபரின் உறவினரிடம் இருந்து, பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் இறந்தவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்கள் குறித்த கடிதம்.
9. விமான நிறுவனத்திடமிருந்து இடவசதிப் பதிவு பற்றிய உறுதியளிப்புச் சான்று.
10. இறந்தவரின் நெருங்கிய உறவினரிடமிருந்து, குறிப்பிட்ட பிரதிநிதி உடலைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் அங்கீகாரக் கடிதம்.
குறிப்பு: இச்சேவை விடுமுறை தினங்களிலும், பணி நேரம் அல்லாத சமயங்களிலும் முழுமையாகக் கருணை அடிப்படையில் வழங்கப்படுகிறது. பணி நேரத்திற்குப்பின் சேவைக்கு, தயவுசெய்து பணியிலுள்ள அலுவலரை 02-4492700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஏற்பாட்டாளர் விமானச் செலவை ஏற்க மறுக்கின்ற அல்லது அவரைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலைகளில், ஏர் இந்தியா / இந்தியன் ஏர்லைன்ஸ் மூலம் இலவசமாக உடலைக் கொண்டு செல்வதற்கு, தூதரகத்தின் பணியாளர் மற்றும் நலப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அதிகாரி, ஏர் இந்தியா / இந்தியன் ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்கு ஓர் பரிந்துரை கடிதம் வழங்குவார்.
இந்தியாவுக்கு உடலைக் கொண்டுவராமல், அரபு நாட்டிலேயே அடக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கெனத் தனி வழிமுறைகள் உள்ளன. 
1. அசல் இறப்புச் சான்றிதழ் மற்றும் அதன் ஏழு நகல்கள்.
2. உள்ளூர் நல்லடக்கத்திற்காக தங்கள் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியிடம் உடலை ஒப்படைக்குமாறு கோருகின்ற, தூதரகத்திற்கு எழுதப்பட்டு, தூதரகம் நேரடியாகப் பெறுகின்ற இறந்தவரின் நெருங்கிய உறவினரின் கடிதம் / தொலைநகல் (ஃபேக்ஸ்).
3. இறந்தவரின் அசல் பாஸ்போர்ட், அதன் முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கத்தின் இரண்டு நகல்கள்.
4. உடலை நல்லடக்கம் செய்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட நபருடைய பாஸ்போர்ட்டின் (முதல் 2, கடைசி 2 மற்றும் விசா பக்கம்) இரண்டு நகல்கள்.
5. இறந்தவரின் ஏற்பாட்டாளரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பில் இறந்தவருக்குச் செலுத்த வேண்டிய நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்கள் குறித்த கடிதம்.

No comments:

Post a Comment