Thursday 26 December 2019

NRC, CAB என்றால் என்ன? அசாம் குடியுரிமை சட்டம் எதிர்ப்பு !! ஒரு சமூக பார்வை..


அண்மையில் நாடு முழுவதும் CAB க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுபற்றி முழுமையாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் இந்த கட்டுரை அதற்கு உதவும். புரிதலுக்காக படிப்படியாக ஒவ்வொரு விசயத்தையும் பார்ப்போம்.

NRC என்றால் என்ன?


NRC என்பதற்கான ஆங்கில விளக்கம் National Register of Citizens. தமிழில் தேசிய குடிமக்கள் பதிவேடு என சொல்லலாம். அதாவது இந்தியாவின் குடிமக்கள் யார் என்பதற்கான ஒரு பதிவேடு. இந்தியாவின் குடிமக்கள் யார்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும்? என்பது குறித்த சட்டம் பல்வேறு காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.



அதன்படி இந்தியாவின் குடிமக்கள் யாரெனில்,

ஜூலை 1, 1987 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவராக இருந்தால் அவர் இந்தியக்குடிமகன்


ஜூலை 1, 1987 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்திருந்தால் அவருடைய பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த குழந்தை இந்திய குடிமகனாக கருதப்படுவார்

மீண்டும் திருத்தப்பட்ட சட்டப்படி, டிசம்பர் 3, 2004 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த ஒரு நபர் இந்திய குடிமகனாக கருதப்பட வேண்டுமென்றால், அவரின் பெற்றோர் ஒருவர் கட்டாயம் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும், மற்றொருவர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவராக இருத்தல் கூடாது.

ஜனவரி 26,1950 க்கு பிறகு இந்தியாவிற்கு வெளியே பிறந்தவர்கள் மற்றும் சரியான ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் வசிப்பவர்கள் சட்டவிரோத குடியேறிக
ள்.


நன்றாக கவனியுங்கள் இந்த தேதி அசாம் மாநிலத்தை பொறுத்தவரைக்கும் மார்ச் 25, 1971.

இந்தியாவிற்கு வெளியே பிறந்த ஒரு குழந்தை இந்திய குடியுரிமை பெற அவரது பெற்றோரில் ஒருவர் இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம். அதேபோல பிறந்த ஓராண்டுக்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டும் இருக்க வேண்டும்

இந்திய குடிமகனை திருமணம் செய்துகொண்டு பதிவு செய்வதன் மூலமாக இந்திய குடியுரிமை பெறலாம்

குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அதற்க்கு முந்தைய 14 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்து இருக்க வேண்டும். புதிய சட்ட திருத்தத்தின்படி 5 ஆண்டுகள் போதுமானது.

CAA அல்லது CAB

தற்போது இந்தியா முழுமைக்கும் மிகப்பரவலாக நடைபெறுகிற போராட்டம் CAA அல்லது CAB ஐ எதிர்த்துதான். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது மசோதா [Bill] என கூறுவோம் அதுவே குடியரசுத்தலைவர் கையொப்பமிட்டுவிட்டால் அது சட்டமாகிவிடும் [Act]. ஆக CAA [Citizenship Amendment Act] CAB [Citizenship Amendment Bill] இரண்டுமே ஒன்றுதான். இதனை முதலில் தெரிந்துகொள்வது அவசியம். சரி இந்த CAA என்ன சொல்கிறது, மேலே நாம் ஒருவர் இந்தியக்குடிமகனாக பதிவு செய்துகொள்வதற்கு உள்ள விதிகளை பார்த்தோம் அல்லவா, அதில் சில மாறுதல்களை கொண்டுவருதற்க்காக நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தம் தான் CAA.

இதன்படி,

இந்தியாவிற்கு அருகாமையில் இருக்கக்கூடிய முஸ்லீம் நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல்களினால் அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் 31, டிசம்பர் 2014 க்கு முன்னதாக குடியேறியவர்களில் இந்து, கிறிஸ்டியன், சிக், பார்சி, ஜெயின், புத்தமதம் சார்ந்தவர்கள் இந்தியக்குடியுரிமை பெற தகுதி உடையவர்கள். மேற்கூறிய மூன்று நாடுகளும் முஸ்லீம் மத நாடுகள் ஆகையால் அங்கே முஸ்லீம் மதத்தவர் மத துன்புறுத்தலுக்கு உள்ளாக வாய்ப்பில்லை. ஆகவே அவர்கள் குடியுரிமை பெறமுடியாது.


மேற்கூறியவை இரண்டும் தான் தற்போது இருக்கக்கூடிய சட்டங்கள். தற்போது பிரச்சனைகளுக்குள் வருவோம்,




அசாம் – குடியுரிமை சட்டம் – எதிர்ப்பு



தற்போது நடந்துவரக்கூடிய போராட்டங்களை நாம் இரண்டு வகைகளாக பிரித்துப்பார்க்க வேண்டும்.


1.அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டம்

2.அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம்



அசாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டம்

தற்போதைய சூழலில் குடியுரிமை சட்டம் [NRC] அசாம் மாநிலத்தில் மட்டும் தான் அமல்படுத்தப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் நடைபெறுகிற எதிர்ப்பு என்பது [NRC] க்கு எதிரானது அல்ல. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள CAA க்கு எதிரானது. அசாமின் ஒட்டுமொத்த வரலாறும் குடியேற்றம் தொடர்புடையதுதான். அசாம் மாநிலத்தில் வெகுகாலமாக குடியேறிகளால் தங்களது கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விசயங்களில் தங்களது உரிமை போவதாக போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.

இந்த போராட்டம் வலுவடையவே 1985 ஆம் ஆண்டு Assam Accord அல்லது அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி மார்ச் 25, 1971 க்கு முன்னர் இந்தியாவிற்குள் குடியேறியவர்கள் இந்திய குடிமகன் உரிமையை பெற தகுதி வாய்ந்தவர். தற்போதைய சட்ட திருத்தம் இந்த தேதியை 31, டிசம்பர் 2014 என மாற்றியுள்ளது. இதுதான் அசாம் மாநிலத்தவர் இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்க காரணம். இதன் மூலமாக இன்னும் பலருக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் இதனால் ஏற்கனவே எங்களது பிரச்சனையாக நாங்கள் கருதிய கலாச்சார சிதைவு வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளிட்டவற்றை நாங்கள் சந்திக்க நேரிடும். மேலும் எங்களோடு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை இந்த சட்டத்திருத்தம் மீறுகிறது . இதனால் தான் அசாம் மிக முக்கியமாக இந்த சட்ட திருத்தத்தை எதிர்க்கிறது .


அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கும் போராட்டம்

தமிழகம் உட்பட அசாம் மாநிலத்திற்கு வெளியே நடக்கின்ற போராட்டங்கள், மற்ற மதத்தவருக்கு குடியுரிமை பெற தகுதி அளிக்கின்ற இந்த சட்ட திருத்தம் முஸ்லீம் மதத்தவரை மட்டும் விலகியிருப்பது இந்திய மதசார்பின்மைக்கு எதிரானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதைப்போல இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தேசிய குடியுரிமை பதிவேடு கொண்டுவரப்பட்டால் அப்போது முஸ்லீம் மக்கள் குடியுரிமைக்கு தகுதி இல்லாதவர்களாக கருதப்படும் நிலை உண்டாகும். ஆகவே முஸ்லீம் மதத்தவரையும் இந்த திருத்தத்தில் இணைக்க வேண்டும். இதோடு NRC நாடு முழுமைக்கும் விரிவுபடுத்த கூடாது என கோரியும் போராட்டம்நடைபெறுகிறது.

அசாம் மாநிலத்தில் மட்டும் குடியுரிமை பதிவேடு ஏன் எடுக்கப்படுகிறது ? அசாம் மாநிலத்தில் குடியுரிமை பதிவேடு உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் தான் எடுக்கப்படுகிறது. அசாம் ஒப்பந்தத்தின்படி அசாம் மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தாங்கள் அல்லது தங்களது மூதாதையர்கள் மார்ச் 25, 1971 க்கு முன்னர் இந்தியாவில் இருந்ததற்கான ஆவணத்தை காட்ட வேண்டும். இல்லையேல் அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.

முஸ்லீம் மக்கள் அச்சப்பட காரணம் என்ன?
உண்மையில் NRC என்பது எந்த மதத்தின் அடிப்படையிலும் செயல்படுவது இல்லை . இந்துவுக்கும் அதே விதிதான், முஸ்லீம் க்கும் அதே விதிதான். ஆனால் அண்மையில் திருத்தப்பட்ட CAA முஸ்லீம் மக்கள் தவிர்த்த பிற மதத்தவரும் ஆதரவாக இருக்கிறது. அதோடு அசாம் மாநிலத்தில் NRC எடுக்கப்படும் சூழலில் கூட பலர் ஆவணங்களை முறையாக வைத்துக்கொள்ளவில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் பிற பகுதிகளில் இருக்கும் படிப்பறிவற்ற ஏழை எளிய முஸ்லீம் மக்கள் ஆவணங்களை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும், அப்படி இல்லாவிட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் தான் முஸ்லீம் மக்களின் போராட்டத்திற்கு காரணம்.


சில விளக்கங்கள் :


  • NRC எந்த மதத்திற்கும் சிறப்பு சலுகை வழங்குவது இல்லை

  • NRC இல் பதிவு செய்துகொள்ள மிகவும் சிக்கலான ஆவணங்களை கொடுக்க அவசியமில்லை, பெற்றோரின் தகவல்களையும் கொடுக்க அவசியமில்லை என தெளிவபடுத்தப்பட்டுள்ளது .

  • NRC க்கு என்ன ஆவணங்களை காட்டலாம் என்ற பட்டியல் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.

  • NRC வேறு CAA வேறு என சொல்லப்பட்டாலும் கூட இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை தான்.

  • உச்சநீதிமன்றத்தில் CAA மதச்சார்பு குறித்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment