இதே நாள் 46 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடி என்ற ஊர் இலங்கை மேற்கு தலைமன்னாருக்கு 18 கிலோ மீட்டர் தொலைவு தானாம் ! ஏறக்குறைய 46 ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடிக்கும் எழும்பூருக்கும் இரயில் போக்குவரத்து இருந்திருக்கிறது. அதற்கு போட் மெயில் என்று பெயராம். தனுஷ்கோடியில் இறங்கி நீராவிப் படகு மூலம் இலங்கைக்குப் பயணம் எனது தாத்தா செய்துள்ளனர்.
23-12-1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலில் எழுந்த பெரும் கடல் அலைகளால் தனுஷ்கோடி நகரம் முற்றிலும் கழுவி விடப்பட்டது போல் காணாமல் போனது. அப்போது தொடர்வண்டியில் பயணம் செய்த 128 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு தொடர்வண்டிப் போக்குவரத்து இராமேஸ்வரத்தோடு நின்றுவிட்டது. தனுஷ்கோடி மீண்டும் புத்துயிர் பெறவில்லை. நிகழ்வு நடந்த 45 ஆண்டுகளுக்குப் பிறகும் அழிவின் சாட்சியாய் வெள்ளையர் காலத்து மாதா கோயில் உள்ளிட்ட சில இடிந்த கட்டடங்கள் நம்மை அன்றைய சூழலுக்கு அழைத்துச் செல்கின்றன.
இப்போது அங்கே நிலையாக யாரும் வாழவில்லை. ஒரு பெட்டிக்கடை உள்ளது. கடை நடத்தும் அவரும் இரவு தங்குவது இல்லையாம். தொழில் நிமித்தமாக மீனவர்கள் நடமாடுகின்றனர். அமாவாசை என்றால் கொஞ்சம் பேர் வருவார்களாம். ஓரிரு படப்பிடிப்புகள் இங்கே நடைபெற்றதாகச் சொன்னார்கள்.
தனுஷ்கோடியை பற்றி இன்றும் நினைவில் வரும் போது, அழிந்து போன அந்த ஊர் தந்த வெறுமை, அதன் காற்றில் மாண்டு போனவர்களின் ஓலங்களை கேட்பது போல் உணர்கிறேன்.
நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் என்பவரின் தனுஷ்கோடி பற்றிய கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
அழிந்து சிதலமாகி நிற்கும் தனுஷ்கோடியின் கரையில் நின்று கொண்டிருந்தேன். கடல் அடங்கியிருந்தது. மாலை நேரம். வெளிறிய நீல வானம். மேற்கில் ஒளிரும் சூரியன். மிதமான காற்று. கடல் கொண்டது போக எஞ்சிய இடிபாடுகள் கண்ணில் விழுகின்றன. ஒரு நாய் அலையின் முன்பாக ஒடியாடிக் கொண்டிருக்கிறது.
கடலின் அருகாமை நம் சுபாவத்தையே மாற்றிவிடுகிறது. பலநேரங்கள் பேச்சற்று அதை பார்த்து கொண்டேயிருக்கிறோம். கடலை எப்படி உள்வாங்கி கொள்வது. கண்களால் கடலை ஒரு போதும் அறிய முடியாது. அலைகள் அல்ல கடலின் வசீகரம். அலைகள் கடலின் துள்ளாட்டம். சிறகசைப்பு அவ்வளவே. கடலைப் புரிந்து கொள்வது எளிதில்லை. அது ஒரு நிலைகொள்ளாமை. தவிப்பு. காற்றில் பறக்கும் பட்டம் போல சதா மாறிக்கொண்டிருக்கும் பேரியக்கம்.
கடலும் கரையும் கொண்டிருக்கும் உறவு விசித்திரமானது. ஒன்றையொன்று நெருங்குவதும் பிரிவதுமான முடிவற்ற தவிப்பு. கண்ணால் பார்க்கும் போது கடல் உப்பரிப்பதில்லை.
கடல் நம் மனதில் நிரம்புவதற்கு அதன் ஊடாகவே வாழ வேண்டும். கடலோடு பேசவும் கடலை நேசிக்கவும் தெரியாதவனை கடல் தன்னுள் அனுமதிப்பதில்லை என்று ஒரு மாலுமியின் குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன்.
நடந்து வந்த மணல்வெளியின் அடியில் தனுஷ்கோடி புதைந்துகிடக்கிறது. பாதி கடலுக்குள்ளும் இருக்க கூடும். வாழ்வதற்கு தகுதியற்ற இடம் என்று அரசு தனுஷ்கோடியை கைவிட்டுவிட்டது. ஆனால் இந்த இடிபாடுகளுக்கு இடையில் பாசிமாலைகள், குளிர்பானங்கள் விற்கும் கடைகளும் குடும்பங்கள் வசிக்கிறார்கள். இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளி ஒன்று கூட இங்குள்ள மீனவ சிறுவர்களுக்காக நடக்கிறது. வாழ்ந்தாலும் செத்தாலும் தனுஷ்கோடியை விட்டு போவதில்லை என்று பிடிப்பு கொண்ட பல குடும்பங்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன. அதில் ஒருவரிடம் பேட்டரியில் இயங்கும் தொலைக்காட்சி பெட்டி கூடயிருக்கிறது.
ஆனால் அழிவு அதன் வலிய கரத்தால் நகரத்தை இன்னமும் தன் பிடிக்குள் தான் வைத்திருக்கிறது. நீண்ட மண்பாதையின் வெறுமையும் அரித்து போன தண்டவளாங்களும் அதை நினைவு கொள்ள செய்கின்றன.
என்றோ ஒடி மறைந்து போன ரயிலின் ஒசை இருளுக்குள் புதைந்திருக்கிறது. கடற்பறவைகள் மணலில் எதையோ தேடியலைகின்றன. சுற்றுலா வந்த சிறுமி ஒருத்தி மண்மேடுகளை தன் கால்களால் எத்தி சிப்பிகளை தேடிக் கொண்டிருக்கிறாள். கண்ணாடி அணிந்த வயதான பெண்மணி கடலின் முன்னே நின்றபடியே தன்னை புகைப்படம் எடுத்து தர சொல்லிக் கொண்டிருந்தாள். கடலின் முன்னே இவள் யார்? புகைப்படத்தில் உள்ள கடல் அலையடிப்பதில்லை தானே. மீனவர்களின் குலசாமியான கூனிமாரியம்மன் கோவில் ஒன்று தனுஷ்கோடியிலிருக்கிறது. அதன் சொல்லுக்கு கடல் அடங்கி போகும் என்பது மீனவ நம்பிக்கை.
மண்ணுக்குள் புதையுண்ட எலும்புகள் இன்றும் விழித்து கொண்டுதானிருக்கின்றன. அது எவரெவர் வழியாகவே தன் நினைவுகளை மீள்உரு கொள்ள செய்தபடியே இருக்கின்றன. தனுஷ்கோடி ஒரு அழிவின் மணல் புத்தகம். அதன் உள்ளே முடிவில்லாத கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மணலை வாசிக்க தெரிந்த மனிதன் அதை புரிந்து கொள்ள கூடும்.
அழிந்து போன இடங்களை பார்த்தவுடன் ஏன் மனது வருத்தம் கொண்டுவிடுகிறது.. அழிந்த நகரங்கள் பலவற்றை பார்த்திருக்கிறேன். அதற்குள் சென்றவுடன் உடல் பதற்றம் கொள்ள துவங்கிவிடுகிறது. மனது விழித்து கொள்கிறது. ஒவ்வொரு அடியும் கவனமாக எடுத்து வைக்க. யாரோ உற்று பார்க்கிறார்கள் என்பது போன்ற பிரமை உருவாகிறது. நெருக்கமான எதையோ இழந்துவிட்ட துயர் மனதில் வலிக்க துவங்குகிறது.
பள்ளி நாட்களில் இருந்து இன்று வரை பலமுறை தனுஷ்கோடிக்கு சென்றிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அது தனித்த அனுபவமாகவே இருக்கிறது. பத்து வருசங்களுக்கு முன்பு ஒரு புதுவருசப்பிறப்பின் இரவில் விடியும் வரை தனுஷ்கோடியில் இருந்தேன். கடலுக்கும், இருளில் புதைந்த மனிதர்களுக்கும் வாழ்த்து சொல்லி பிறந்தது அந்த புதுவருசம். பின்னரவில் தனுஷ்கோடி கொள்ளும் அழகு ஒப்பற்றது. அது மணப்பெண்ணின் வசீகரம் போன்றது. அந்த புது வருச கொண்டாட்டம் அற்புதமானது.
இன்று தனுஷ்கோடி அடங்கியே இருந்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே மாலை வடிந்து இருள் துவங்கியிருந்தது. கடலுக்குள் வீழ்ந்திருந்தது சூரியன். இனி இரவெல்லாம் அதை மீன்கள் தின்னக்கூடும்.
தனுஷ்கோடியில் மின்சார வெளிச்சமில்லை. ஆனால் பார்வை புலனாகும் அளவில் குறைந்த வெளிச்சம் இருளுக்குள் ஒழுகிக் கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்தில் எவர் முகமும் தெளிவாக தெரிவதில்லை. குரல்கள் தான் நகர்கின்றன. இடிபாடுகளை நிரப்புகிறது இருள். கடல் அரித்து போன தேவாலயம் இருளில் முணுமுணுத்து கொள்கிறது தன் கடந்த காலத்தின் நினைவுகளை.
என் அருகில் நீண்ட தாடி வைத்த மீனவக் கிழவர் வந்து நிற்கிறார். கடலை பார்த்தபடியே முந்திய நாள் பெய்த மழையை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். மழை பெய்யும் போது எங்கிருந்தீர்கள் என்று கேட்டேன். இதே இடத்தில் நின்று கொண்டுதானிருந்தேன். நான் மழைக்கு ஒடி ஒதுங்குற ஆள் இல்லை. மழை நம்மளை என்ன செய்ய போகுது. கடல் புரண்டுதிமிறுவதை பார்த்து கிட்டே இருந்தேன். பத்து வயசு பையன்ல இருந்து கடலை பாத்துகிட்டு தானே இருக்கேன். அதுக்கு என்னை நல்லா தெரியும் என்றார்.
பிறகு தன் பையிலிருந்து ஒரு பீடியை எடுத்துக் கொண்டு பற்ற வைக்க முயற்சித்தார். காற்று நிச்சயம் தீக்குச்சியை அணைத்துவிடும் என்று நினைத்தேன். அவர் தீக்குச்சியை உரசிய விதமும் அதை கைக்கூட்டிற்குள் காப்பாற்றி நெருப்பில் பீடி பற்ற வைத்த விதமும் வியப்பாக இருந்தது. அவர் காற்று இன்னைக்கு வேகமில்லை என்றபடியே புகைக்க துவங்கினார்.
இருட்டிற்குள்ளாகவே பாசி விற்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஈரமேறிய கடல் மணல் அருகே போய் நின்றேன். கால்களில் அலை படும்போது மணல்கள் கரைந்து போக குறுகுறுப்பாகிக் கொண்டிருந்தது.
நட்சத்திரங்கள் உலகை பார்த்தபடியே இருக்கின்றன. அதற்கு தனுஷ்கோடி என்றோ, மச்சுபிச்சு என்றோ, பேதமில்லை. அது பூமியை தன் விளையாடுமிடமாக மாற்றியிருக்கிறது. இருண்ட கடற்கரையிலிருந்தபடியே நட்சத்திரங்களின் வெளிச்சத்தை காண்பது அலாதியானது. காற்றும் சேர்ந்து கொண்டது. கண்முன்னே பிரபஞ்சம் இயங்கி கொண்டிருப்பதை காண முடிகிறது.
கடல் மணலில் கிடந்த கல் ஒன்றை குனிந்து எடுத்தேன். எதன் மிச்சமது. இடிந்த ரயில் நிலையமா? வீடா, தேவாலயமா? குடியிருப்பா. இல்லை எங்கிருந்தாவது கடல் கொண்டு வந்த போட்டதா? அந்த கல் ஈரமேறியிருந்தது. உலகில் உள்ள எல்லா கற்களும் பழையதாகவே இருக்கின்றன. புத்தம் புதிய பூவை காண்பது போல இன்று பிறந்த கல் என எதையும் காண முடியவேயில்லை. எல்லா கற்களும் ஏதோவொன்றின் சிறு பகுதி தானில்லையா?

கடல் சப்தம் சீராக வந்து கொண்டிருந்தது. அந்த வயதானவர் அதிகம் பேசுகிறவராக இல்லை. அவரும் இருளுள் உட்கார்ந்திருந்தார். காற்று அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உலகின் மிக தொன்மையான கடலின் முன்பாக உட்கார்ந்திருக்கிறேன் என்ற உணர்வு மேலோங்கியிருந்தது. கடற்கரையில் இருளுக்குள்ளும் நாய் அலைந்துகொண்டிருக்கிறது. அதற்கு கடலிடம் பயமில்லை.
ஒரு சிறுமி இருளுக்குள்ளாகவே நடந்து சாப்பிட அழைப்பதாக கிழவனை அழைத்தாள். அவர் வானத்தை ஏறிட்டு பார்த்துவிட்டு இன்னும் மணி ஒன்பது கூட ஆகியிருக்காது. பிறகு வர்றேன் என்றார்.
இயற்கை தான் அவர்களது கடிகாரம். அதன் நகர்வோடு தங்களையும் பொருத்திக் கொண்டிருக்கிறார்கள். மனித உள்ளுணர்வை விட மேலான இயந்திரம் என்ன இருக்கிறது.
கடற்காற்று, தனிமை, கடலிடம் பயங்கொள்ளாத நெருக்கம், நாளை பற்றிய கவலையில்லாத ஏகாந்தமான மனநிலை. என்றிருந்த அந்த கிழவனை பார்த்து கொண்டிருந்தேன். அந்த நிமிசத்தில் உலகின் மிகச் சந்தோஷமான மனிதன் அவரே.
மிக பெரிய சந்தோஷங்கள் எதுவும் விலை கொடுத்து வாங்காமல் கிடைக்க கூடியதே அந்த நிமிசத்தில் தோன்றியது. தனுஷ்கோடி ஒவ்வொரு முறையும் ஏதோவொன்றை கற்றுகொடுக்கிறது. நினைவுபடுத்துகிறது. அன்றும் அப்படியே உணர்ந்தேன்.
நன்றி : எஸ்.ராம கிருஷ்ணன்.
தனுஷ்கோடியின் அவல நிலைகுறித்து நான் எழுதிய நேரடி ரிப்போர்ட் இது - புதிய தலைமுறை வார இதழில் கவர் ஸ்டோரியாக சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது...
தனுஷ்கோடியில் ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு என 500 மீனவக் குடும்பங்கள் உட்பட பல்வேறு இனத்தவருமாக கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர் எனப் பரபரப்பாக இயங்கிய தனுஷ்கோடி, இன்று ‘வாழத் தகுதியற்ற பகுதி’
சரி புயல் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகவே அது ஆகிவிட்ட்தாகவே இருக்கட்டும். அப்படி ஆகிவிட்டால் அதைப் புதுப்பிக்கும் கடமை அரசுக்குக் கிடையாதா? 2006ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு அவை இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆனால், 1964ல் கிட்டத்தட்ட சுனாமி போல ராட்சத அலைகளால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி மட்டும் இன்னும் ஒரு சாலை கூட சரி செய்யப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது ஏன்?
இதற்கு தெளிவாக விடை சொல்பவர்கள் யாரும் இல்லை. நிறைய ஊகங்கள்தான் விடையாகத் தரப்படுகின்றன. தனுஷ்கோடியிலிருந்து இலங்கை 15 கீ.மீ.தான். கிழக்குக் கடற்கரையோரம் இலங்கைக்கு நெருக்கமாக உள்ள வேதாரண்யம், கோடிக்கரை, நாகப்பட்டினம் போன்ற பகுதிகள் தமிழ்நாட்டின் நிலப்பகுதியோடு இணைந்த பகுதியாக உள்ளன. அங்கே பாதுகாப்பை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதும், கண்காணிப்பதும் அதிகம் சிரமான விஷய்ம் அல்ல. ஆனால் தனுஷ்கோடி தீவு. இலங்கையில் உள்நாட்டுப் போர் இருந்த சூழலில் தனுஷ்கோடி மீண்டும் உயிர்த்தெழுவதை பாதுகாப்புக் காரணங்களுக்காக அரசுகள் விரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இது குறித்துப் பேச இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரை அணுகினோம். தனுஷ்கோடியின் மறுசீரமைப்பு குறித்துப் பேச வேண்டும் என்றதுமே, "அது குறித்த முந்தைய தகவல்களை சேகரித்து விட்டு அழைக்கிறோம்" என்று அவரது உதவியாளர் நமது தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார். ஆனால், அவரிடமிருந்து அழைப்பு வராததால் மீண்டும் நாமே தொடர்பு கொண்டபோதும் விரைவில் அழைப்பதாகவே பதில் வந்தது.
அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. ஹசன் அலியை தொடர்பு கொண்டபோது, "நான் இப்போது சட்டமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறேன். இராமேஸ்வரத்தை பெருநகரமாக ஆக்கச் சொல்லி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து தனுஷ்கோடிக்கும் வழி பிறக்கும்" என்றார் சுருக்கமாக
ஆனால் இப்போது உள்ள ஆட்சியின் கடைசி சட்டமன்றத் தொடரும் முடிந்து விட்ட்து. இனித் தேர்தல் முடிந்து புதிய சட்டமன்றம் அமைந்த பிறகு குரல் எழுந்தால்தான் உண்டு.
"பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக இருந்த நிதிஷ்குமாரை தனுஷ்கோடிக்கே வரவழைத்து, அதன் அவலத்தைப் பார்வையிட வைத்தேன். அவரும் ரயில்வே துறை அதிகாரிகளை அழைத்து, தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து அமைக்க எவ்வளவு செலவாகும் என்று திட்டமிடச் சொன்னார். அவர்களும் 40 கோடி ரூபாய்க்கு ஓர் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்கள். ஆனால், ஆட்சி மாற்றம் காரணமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. சேது சமுத்திரத் திட்டம் மூலம் இதுவரை 600 கோடி ரூபாய் வரை கடலில் வீணடித்திருக்கும் இந்த அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஊருக்கு ஒரு சாலை கூடப் போட முன்வரவில்லை " என்கிறார் பி.ஜே.பி.யின் தேசியப் பொதுக்குழு உறுப்பினரான இராமேஸ்வரத்தைச் சேர்ந்த கே.முரளிதரன்.
வாழத் தகுதியற்ற ஊர் என அரசாங்கம் அறிவித்து விட்டாலும், இன்றைக்கும் தனுஷ்கோடியிலும் அதனைச் சுற்றி இருக்கும் கடற்கரை கிராமங்களிலும் சுமார் 600 மீனவக் குடும்பங்கள், தாம் வாழ்ந்த அந்தக் கடற்கரை மண்ணை விட்டுப் பிரிய மனமில்லாமல் இன்றைக்கும் அங்கேயே மீன் பிடித்துப் பிழைக்கிறார்கள். (தனுஷ்கோடியைச் சுற்றியுள்ள பகுதியில் மீன் வளம் அதிகம். கடலின் நீர்மட்டம் குறையும் போது முழங்கால் அலவு நீரில் இறங்கி வெறும் கையாலேயே மீன் பிடிக்கலாம்!). ஓலைகளால் வேயப்பட்ட குடிசைகளில் தங்கி. மணலைத் தோண்டி சின்னச் சின்ன கிணறுகளை அவர்களே ஏற்படுத்திக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் குடிநீரையே பருகி வாழ்கிறார்கள். மின்சாரம் அறவே கிடையாது. ஊருக்குள் ஒரே யொரு டீக்கடை இருக்கிறது. அனைவரது வீட்டிலும் இருக்கும் ஃபிளாஸ்கில் டீ வாங்கி வைத்துக் கொண்டு அவ்வப்போது அதைப் பருகுகிறார்கள். காய்கறிக்கடை வசதியெல்லாம் இல்லாததால் தினமும் விற்பனைக்காகப் பிடிக்கும் மீன்களில் ஒருசிலதான் அவர்களின் தினசரி சமையல்.
‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என அறிவித்திருக்கும் அரசாங்கம் இந்த ஊரில் ஒரு நடுத்தரப் பள்ளியை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது ஒரு இனிய ஆச்சரியம். அங்கே 73 மாணவர்கள் பயில்கிறார்கள். ஒரு தலைமை ஆசிரியை, இரண்டு ஆசிரியைகள், ஒரு சத்துணவு அமைப்பாளர் இதற்காக நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். பஸ் வசதி இல்லாத காரணத்தால் அந்த ஆசிரியைகள் தினசரி ஏழு கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு ஆபத்தான வேன் பயணத்தின் மூலமாகத்தான் வந்து போவதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள். தங்கள் பெயரையோ, புகைப்படத்தையோ வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்கள் தாங்கள் படும் சிரமங்களைப் பற்றிச் சொன்னார்கள்,
"இங்க டிரான்ஸ்ஃபர் ஆகி வந்த பிறகுதான், இந்த ஸ்கூலுக்கு வந்துபோக பஸ் கிடையாதுன்னு தெரிஞ்சுது. சுற்றுலாப் பயணிகள் வரும் வேன்லதான் நாங்களும் தினசரி வர்றோம். எங்களிடம் சில டிரைவர்கள் பத்து இருபது மட்டும் வாங்கிக்குவாங்க. சில பேரு இலவசமா இறக்கி விடுவாங்க. சில நாட்கள்ல, பயணிகள் கூட்டம் சேரலைன்னு வேனை எடுக்க மாட்டாங்க. அப்ப நாங்க இந்த மணல் பாதை வழியா தனியா நடந்தே வந்துட்டு, சாயந்திரம் நடந்தே போவோம். பல நாட்கள் தினசரி பதினான்கு கிலோ மீட்டர் வரை நடந்திருக்கோம். மழை நாட்களில் மிகவும் சிரமம். ஆனால், குழந்தைகளுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்கிற மன நிறைவு ஒன்றுதான் எங்களுக்குக் கிடைக்கும் நிம்மதி" என்கிறார்கள் சோர்ந்துபோன குரலில்.
தங்க நாற்கரச் சாலைகள் இந்தியா நெடுக நீண்டு கிடைக்கின்றன. ஆனால் இந்தத் தீவிற்குக் கடற்கரை மணலின் ஊடாகச் செல்லும் ஒரு ஒற்றையடிப்பாதைதான் சாலை. முகுந்தராயர் சத்திரம் என்னும் இடம் வரை பஸ்ஸிலோ காரிலோ வந்து, அங்கிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடிக்கு வேனில்தான் பயணிக்க வேண்டும். வட நாட்டிலிருந்து புனிதப் பயணம் வருபவர்களுக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்காகவும் சுமார் ஐம்பது பழைய வேன்கள் முகுந்தராயர் சத்திரத்தில் காத்திருக்கின்றன. ஓர் ஆளுக்கு கட்டணம் எண்பது ரூபாய். பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய அந்த வேன்களில் சுமார் முப்பது பேர் வரை ஏற்றிக் கொள்கிறார்கள். அந்த வேன் டிரைவர்களில் முக்கால்வாசிப் பேர், இருபதை தொட்டிருக்கும் இளைஞர்கள். அவர்களிடம் ஆட்டோ ஓட்டுவதற்கான ‘பேட்ச்’ மட்டுமே இருக்கிறது. ‘நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான ஹெவி லைசேன்ஸ் அநேகம்பேரிடம் கிடையாது’ என்பதை ஒப்புக் கொள்கிறார் ஒரு மூத்த டிரைவர்.
ஒத்தையடிப் பாதையாக, கடற்கரை மணலில் புதைந்தபடியே வளைந்து வளைந்து, குலுங்கியபடியே செல்லும் ஆபத்தான அந்தப் பயணத்தில் எந்நேரமும் அந்த வேன் கவிழ்ந்து விடும் என்கிற உணர்வு ஏற்படுகிறது. இப்படி தினசரி ஐநூறு பயணிகளாவது தனுஷ்கோடிக்கு வந்து போகிறார்கள். விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மூன்று மடங்காகிறது. ஐயப்ப சீசனின்போது கூட்டம் இன்னும் அதிகரிக்குமாம்.
"இராமயணத்தைப் படித்து முடித்ததும் அது நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்தான் தனுஷ்கோடி வந்தேன். ஆனால், ஆபத்தான இந்த வேன் பயணம் தற்கொலைக்கு சமம் என்பதால் ஏழு கிலோ மீட்டர் தூரம் நடந்தே போய் வந்தேன். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்திற்கு உங்கள் அரசாங்கம் போக்குவரத்து வசதிகள் செய்யாதது ஏன்?" என்று கேள்வி கேட்கிறார் போலந்து நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ரசே.
"புயல் வந்தன்னைக்கு தன் குடும்பத்தோட அடுத்தவங்க புள்ளை குட்டிகளையும் தலைமேல தூக்கி வச்சுக்கிட்டு நீந்தி கரை சேர்த்திருக்காரு எங்கப்பா. அதனாலேயே அவருக்கு ‘ நீச்சல்’ காளினு பேரு.. நான் எவ்வளவோ வற்புறுத்திக் கூப்பிட்டும் இந்த தனுஷ்கோடிய விட்டு கடைசிவரைக்கும் வெளியே வரமாட்டேன்னு பிடிவாதமா இருந்து போன வருஷம்தான் செத்துப் போனாரு. ‘மறுபடியும் தனுஷ்கோடிக்கு உயிர் வரும்டா’ன்னு நம்பிக்கையோட சொல்லிக்கிட்டிருந்தவரு, போன வருஷம்தான், தொண்ணூத்தி ரெண்டு வயசுல உசுர விட்டுட்டாரு. அவரு சொன்னமாதிரி இந்த தனுஷ்கோடிக்கு ஒரு ரோடு போடச் சொல்லி பல அதிகாரிகளச் சந்திச்சு மனு கொடுத்துக்கிட்டே இருக்கேன்" என்கிறார் தனுஷ்கோடியைச் சேர்ந்த டி.எம்.இ. படித்த மீனவரான காளி. நம்புராஜன்.
அந்த மக்கள் கேட்பதெல்லாம் ஒரு சாலை. ஆனால் 47 வருடங்களாக அது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வாழத் தகுதி இல்லாத அந்த ஊர் இப்போதும் அரசாங்கத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தனுஷ்கோடியில் சினிமாப்படம் எடுக்க விரும்புவர்களிடம் அரசு ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.
தனுஷ்கோடியை மீண்டும் சீரமைக்க என்ன செய்ய வேண்டும்? அப்படிச் செய்வதனால் என்ன பயன்?
" ரோடு வசதி தனுஷ்கோடிக்கு வந்துட்டா, பக்தர்கள் கூட்டமும் சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வர வாய்ப்பிருக்கு. அதன்மூலம் அரசுக்கும் இங்குள்ள மக்களுக்கும் வருமானம் பெருகும்" என்கிறார் இராமேஸ்வரத்தில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றும் மாரிப்பிச்சை. 64ம் வருடத்திய புயலின்போது, தனுஷ்கோடி துறைமுகத்தில் போர்ட்டராக இருந்த இவரின் தாத்தாவால் தப்பிப் பிழைத்தவர் இவர்.
"தமிழக அரசு, சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் தனுஷ்கோடியை புதுப்பித்து, ஓர் அழகான கடற்கரை கிராமமாக இதை உருவாக்கலாம். பக்தர்கள் தங்க லாட்ஜ்கள், வெளிநாட்டவர்களுக்கு ரிசார்ட்ச் என்று அமைத்தால் இந்தியாவிலேயே மிகச் சிறப்பான வரலாற்றுச் சின்னமாகவும், சுற்றுலா ஸ்தலமாகவும் தனுஷ்கோடி பிரபலமடைய வாய்ப்பிருக்கிறது" என்று யோசனை தெரிவிக்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளரான வி.துரைசிங்கம்.
ஆனால் இளைஞரும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த வலைப்பதிவருமான முகவைத் தமிழன் என்கிற ரெய்சுதீன் சொல்லும் யோசனை இவற்றையெல்லாம் விட ஆக்கபூர்வமானது. "இலங்கையின் நல்லுறவை விரும்பும் இந்திய அரசு, தனுஷ்கோடியை மறுசீரமைத்து கப்பல் போக்குவரத்தை துவக்கலாம். அதன் மூலமாக இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை இந்த மாவட்டத்தின் நரிப்பையூரில் அமைத்ததைப் போலவே, தனுஷ்கோடியிலும் அமைத்தால் இராமேஸ்வரம் உட்பட அந்தப் பகுதி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.” என்னும் முகவைத் தமிழன் சினிமாக்காரர்ர்கள் மீது சீறுகிறார்.
“தனுஷ்கோடியை சினிமாக்காரர்கள் படப்பிடிப்பிற்காகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும். ‘விஷுவல் பியூட்டி’ என்ற காரணத்திற்காக அங்கே பாடல் காட்சிகளைப் படமாக்கும்போது, இடிந்து போன சர்ச் மற்றும் கட்டிடங்களின் மீது குரூப் டான்சர்களை ஏற்றி ஆட வைப்பது மிகவும் கொடுமையானது. ஆயிரக்கணக்கானவர்கள் செத்து மடிந்து அந்த மண்ணில் புதைந்து போயிருக்கும்போது அதன் மேலே இப்படி ஆட விட்டுப் படம் பிடிப்பது வேதனைக்குரியது" என்கிறார் முகவைத் தமிழன்
இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு நீச்சல் காளி ஊடகங்களிடம் தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். தனுஷ்கோடியின் தெற்கு மூலையில் ஒரு பிள்ளையார் கோயில் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த காலத்தில் அதன் முன் உள்ள திடலில்தான் அவர் விளையாடிக் கொண்டிருப்பார். 1964 புயலின் போது ராட்சச அலைகள் தனுஷ்கோடியைத் தின்ற போது, அந்தப் பிள்ளையார் கோயிலும் கடலுக்கடியில் மூழ்கிப் போனது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அந்தப் பிள்ளையார்கோயிலின் உச்சி வெளியே தெரிய ஆரம்பித்த்திருப்பதாகவும் அதைத் தான் கண்ணால் கண்டதாகவும் காளி தெரிவித்தார்.
“கடல் பின் வாங்குகிறது. இனி மெல்ல மெல்ல பழைய தனுஷ்கோடி நமக்குக் கிடைத்துவிடும்” என்று அவர் மிக மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
தனுஷ்கோடி மீண்டு விட வேண்டும் என்ற ஒரு கிழவனுடைய உள்மனதின் ஆசையாக, கனவின் பிரதிபலிப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். ஆனால் அரசு மனது வைத்தால் இப்போதும் கூட தனுஷ்கோடியை சீரமைத்து உயிர்ப்பிக்கலாம்.
மனது வைக்குமா? அல்லது வெறும் கனவாகவே போய்விடுமா?
நன்றி: புதிய தலைமுறை

தொகுப்பு : மு. அஜ்மல் கான்.
நன்றி தோழா.
ReplyDeleteகனவுகள் - நினைவுகள் ஆக மாறும்.......