Saturday, 17 December 2011

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!

                              குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!


தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான் பிற்காலங்களில் அவர்கள் பெரியவர்களான பிறகு இதுபோன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். அவர்களுடைய வீடு, கல்வி, தொழில் சூழல்களில் மருந்துக்குக்கூட மார்க்கத்தை நாம் காணமுடியாது! கண்ணியமாக மார்க்க அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகளால் தான் ஒரு சமுதாயத்தைச் சிறப்புறச் செய்யமுடியும்.

பெற்றோர்கள் தம்முடைய குழந்தைகளை மேல்நிலைப்பள்ளி / கல்லூரிகளில் சேர்த்துவிட்டு நம்முடைய வேலை முடிந்துவிட்டது என்றில்லாமல் அவர்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க வேண்டும். அப்படி கவனிக்கத்தவறியகுழந்தைகள் தான் கூடாநட்பு, காதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான செயல்களில் ஈடுபட்டு சமுதாயச் சீரழிவை உண்டாக்குகின்றனர். கூடாநட்பு, காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிப்பதற்கு இஸ்லாம் எந்த அளவிற்கு இவற்றைத் தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு பெற்றோர்களிடத்தில் இல்லாததே காரணமாகும்.

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதிஉள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும்! நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும்! மனம் ஏங்குகின்றது; இச்சைக் கொள்கின்றது; பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது அல்லது பொய்யாக்குகின்றது’ (புகாரி)
மேலும் குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாக இருக்கிறது. இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:
“முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்”  (அல்-குர்ஆன் 66:6)

கல்வி கற்பதன் அவசியத்தை இஸ்லாம் வலியுறுத்திய அளவிற்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை! இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்:
‘அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.’  (அல்-குர்ஆன் 39:9)


ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு உலகக்கல்வியை கற்றுக் கொடுப்பதற்கு எடுக்கக்கூடிய முயற்சியில் 100 -ல் ஒரு பங்கு கூட இஸ்லாமியக் கல்வியை கற்றுக்கொடுப்பதற்கு முயற்சிப்பதில்லை என்றால் அது மிகையாகாது! நபி (ஸல்) அவர்கள் போதித்த அடிப்படை இஸ்லாமியக் கல்வியோடு சேர்ந்த உலகக் கல்வி தான் இரு உலகிலும் பலன் அளிக்கக்கூடியதாக உள்ளது.
நம்மில் எத்தனை பேர் நம்முடைய குழந்தைகளை குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதக் கூடியவர்களாக உருவாக்கி இருக்கிறோம்? இறைவன் திருமறையில், ‘இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்’ என்று ஒரே சூராவில் திரும்ப திரும்ப நான்கு முறை கூறுகின்றான். (பார்க்கவும் : 54:17; 54:22; 54:32 மற்றும் 54:40)

ஓதுவதற்கு எளிதான குர்ஆனின் மேல் குழந்தைகளுக்கு ஆர்வம் காட்டுவதற்கு பதிலாக கற்றுக் கொள்வதற்கு கடினமான உலகக்கல்வியில் அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். உலகக் கல்வி வேண்டாம் என்று கூறவில்லை! மார்க்க கல்வியை விட்டுவிட்டு உலகக் கல்வியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டாம் என்றுதான் கூறுகின்றோம்! ஏனெனில் நபி (ஸல்) அவர்கள்,
‘எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகின்றான்’ என்று கூறியிருக்கிறார்கள். (அறிவிப்பவர் : முஆவியா (ரலி); ஆதாரம் : புகாரி)


நம்முடைய குழந்தைகளிடம் ‘TOP TEN’ (சுவர்க்கவாசிகள் என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட) சஹாபாக்களின் பெயர்கள் கேட்கப்பட்டால், பதில் கூறக்கூடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் ‘TOP TEN’ சினமாவோ அல்லது பாடலோ கேட்கப்பட்டால் பதில் கூறாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! இதற்காக பெருமைப் படக்கூடிய பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர் என்பதுதான் இதிலே வேதனையான விஷயம்! இதுபோன்ற தவறான செயல்களில் ஆர்வமூட்டுவதன் மூலம், நம்முடைய குழந்தைகளை நாமே படுகுழியில் தள்ளியவர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தம் குழந்தைகளை நல்ல தரம்வாய்ந்த கல்விக் கூடங்களில் சேர்ந்து பயிற்றுவிக்க அனைவரும் ஆசைப்படுவது இயல்புதான்! அப்படி குழந்தைகளை பயிற்றுவிப்பதற்கு, நம் சமுதாய கல்விக்கூடங்களில் சேர்க்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையெனில், வேறு கல்விக் கூடங்களில் சேர்ப்பதற்கு முன்பே, இந்த பள்ளியில் / கல்லூரியில் படித்தால் நம் குழந்தைகள் இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளான தொழுகை, புர்கா போன்றவைகளை பேணி நடக்க பள்ளி நிர்வாகம் அனுமதிக்குமா என்று சிந்தித்து செயல்பட வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் பெற்றோர்களின் பங்கு மிக மிக முக்கியமானது என்பதை உணர வேண்டும். ஏனெனில் குழந்தைகள் உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதம் என்பதை மறந்துவிடாதீர்கள். அமானித மோசடி செய்து மறுமையிலே இறைவனின் முன்பு நஷ்டவாளிகளாக ஆகிவிடவேண்டாம்.

நம்முடைய குழந்தைகளுக்கு ஜமாஅத்தோடு தொழுவதற்கு கற்றுத்தரவேண்டும். நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் போதெல்லாம் நம்முடைய குழந்தைகளை நம்முடன் அழைத்துச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அம்மார் பின் ஸூஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
‘உங்கள் குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது தொழச்சொல்லி ஏவுங்கள்; பத்து வயதாகும் போது தொழவில்லையெனில் (காயம் ஏற்படாதவாறு) அடியுங்கள்! மேலும் படுக்கையிலிருந்து பிரித்து வையுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : அபூதாவுத் 495).

குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கை நபி (ஸல்) அவர்கள் எவ்வளவு அழகாக தெளிவுபடுத்துகிறார்கள். சிறுவயது முதலே பழக்கப்படுத்தாத குழந்தைகள் 15 வயது ஆனவுடன் திடீரென்று எவ்வாறு தொழ ஆரம்பிக்கும்? தம்மை மிகப்பெரிய அறிவாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் தொழுகையில் கவனக்குறைவாக இருப்பதற்கு, சிறுவயது முதலே அவர்களை தொழுகைக்குப் பழக்கப்படுத்தாதது தான் காரணம் என்றால் அது மிகையாகாது! குழந்தை பெரியவனாக வளர்ந்து இஸ்லாமிய ஒழுக்க மாண்புடன் திகழ்வதற்கு பெற்றோரின் பங்கு எவ்வளவு முக்கியமானதாக இருக்கின்றது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும். மேலும் நம்முடைய குழந்தைகள் பெரியவர்களான பிறகு தீய, மற்றும் மானக்கேடான செயல்களில் ஈடுபடாமல் நல்லொழுக்கமுடையவர்களாக திகழவேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் விருப்பமாகும். இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நம் குழந்தைகளை சிறுவயது முதலே தொழச் சொல்லி ஏவி அதற்குப் பழக்கப்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
“(நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக! இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்! அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்” (அல்-குர்ஆன்  29:45)


நபி (ஸல்) அவர்களின் எத்தனை அழகான ஒரு அறிவுரை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?

எனவே, குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாமிய வழிமுறைகளில், வளர்க்க வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம். அவ்வாறு வளர்த்து விட்டால், நாம் நம்முடைய பொறுப்பு மற்றும் அமானிதத்தை நிறைவேற்றி விட்டதோடு அல்லாமல், நம்முடைய குழந்தைகள் நமக்கும் மற்றும் நம் சமுதாயத்திற்கும்  ஈருலகில் பயன்களை ஏற்படுத்தித் தரவல்லவர்களாக மாறக் கூடும்!
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் நல்லவர்களுடைய கூட்டத்தில் ஆக்கி அருள்வானாகவும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.
ஒருவர் ஐவேளை தொழுகைகளை ஜமாஅத்தோடு தொடர்ந்து தொழுவாரானால், நிச்சயமாக அல்லாஹ் அவரை மானக்கேடான மற்றும் தீய செயல்களில் இருந்தும் பாதுகாக்க வாக்குறுதி அளிக்கின்றான்.
நாம் சொர்க்கம் செல்வதற்கு, நம்முடைய நல்ல அமல்கள் மறுமை நாளில் நமக்கு உதவிசெய்யும். நம்முடைய நற்செயல்களைத் தவிர மற்றவர்களுடைய நற்செயல்களின் மூலமாகவும் சொர்க்கம் செல்ல முடியுமா? நிச்சயமாக முடியும்! அதற்கான வழிமுறைகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.
‘மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)
மார்க்கக் கல்விக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து நம் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. நம் குழந்தைகளுக்கு அல்லாஹ் நன்மையை நாடிவிட்டால் அதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்?
நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.
மேற்கூறிய நபி (ஸல்) அவர்களின் அறிவுரையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் கூறி கூடாநட்பு என்ற சீர்கேட்டில் தம் பிள்ளைகள் விழுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் எப்படி காதலிப்பது என்ற கேடுகெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றபோது, அதைத் தடுக்க வேண்டிய பெற்றோர்களும் சேர்ந்துக்கொண்டு தான் அதைப் பார்க்கின்றனர். விளைவு, குழந்தைகள் பரீட்சையில் தேர்வு ஆகாமல் இருப்பது ஒருபுறமிருக்க, தம் பிள்ளைகள் யாருடனேனும் ஓடிப்போகும் போது அவமானம் தாங்காமல் தற்கொலைச் செய்து கொள்கின்ற அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.
சிந்தனையும், தவறான பார்வையையும், அசிங்கமான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்துவரும் அசிங்கங்களுக்கு இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை!

No comments:

Post a comment