பி.எஸ்சி., விவசாயம்
பல்வேறு தொழிற்துறைகள் இருந்தபோதிலும் நாட்டின் முதுகெலும்பாக விவசாயமே திகழ்கிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியால் சுதந்திரத்திற்குப் பின் நாம் விவசாயத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.
விவசாயத்தில் திட்டமிட்ட நீர்ப்பாசன முறை, புதியரக விதைகள், வேதி உரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழிற்துறை வளர்ச்சியில் விவசாயத் தொழில்நுட்ப வல்லுனர்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.
பி.எஸ்சி., விவசாய படிப்பில், விவசாய வர்த்தக நிர்வாகம், அக்ரிகல்சுரல் பயோடெக்னாலஜி, ரசாயனம், பொருளாதாரம், ஏற்றுமதி மேலாண்மை, கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி, இந்திய பாரம்பரியம், மார்கெட்டிங் மற்றும் சர்வதேச வர்த்தகம், வானிலை, பிராஜக்ட் அனலைசிஸ், புள்ளியியல், அக்ரோ இண்டஸ்ட்ரியல் என்டர்பிரைசஸ், அக்ரோனமி, அப்ளைடு என்டோமாலஜி, அப்ளைடு பிளான்ட் பேத்தாலஜி போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன.
இத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள், அரசு விவசாய அதிகாரியாகவும், விவசாயம் தொடர்பான தொழிற்சாலைகளில் லேண்ட்ஸ் கேப் டிசைனர்களாகவும், ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. பல்வேறு விவசாய பல்கலைகழகங்களில் இத்துறையில் முதுநிலைப்பட்டப் படிப்பும், பி.எச்டி., படிப்புகளும் உள்ளன.
பி.வி.எஸ்சி.,
உலகிலேயே கால்நடைகள் அதிகமுள்ள நாடு இந்தியா. கிராம வளர்ச்சியில் கால்நடைகளும், பால்பொருட்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. செல்லப்பிராணிகள், கோழிகள், மீன்கள், பறவைகள், விலங்குகளை பாதுகாப்பான முறையில் வளர்க்க கால்நடை மருத்துவர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர். மேலும் பண்ணைகளை பராமரித்தல், விலங்குகளை பாதுகாத்தல் சமூகத்திற்கு முக்கியமானதாகும்.
கால்நடைகளுக்கு பொதுவாக மாஸ்டிட்டிஸ், புரூ செல்லோசிஸ், பன்றி காய்ச்சல், அக்கி நோய்வகைகள், ஆந்த்ராக்ஸ், லெப்டோஸ்பைரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. அம்மை குத்துதல், தொற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பளித்தல் போன்ற பணிகள் மட்டுமல்லாது ஆந்த்ராக்ஸ், டியூபர்குளோசிஸ், புரூசெல்லோசிஸ், கேனைன் டிஸ்டம்பர் மற்றும் ரேபிஸ் முதலான நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து, மற்ற விலங்குகளுக்கும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க அவற்றை தனிமைப்படுத்துதல், தொற்றுநோய்கள், இன்பர்டிலிட்டி, ஊட்டச்சத்து குறைவு போன்றவற்றுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஐந்தாண்டு படிப்பான கால் நடை மருத்துவத்தில் அனாடமி, பிசியாலஜி, ஹிஸ்டாலஜி, பார்மகாலஜி, மைக்ரோபயாலஜி(பாக்டீரியாலஜி, வைராலஜி, பாரசைட்டாலஜி உட்பட) பேத்தாலஜி போன்ற பிரி கிளினிக்கல் பாடங்களும், இன்டர்னல் மெடிசின், சர்ஜரி, பிரிவென்டிவ் மெடிசின் போன்ற கிளினிக்கல் பாடங்களும் உள்ளன. சிகிச்சை அளிக்க பயிற்சியும் வழங் கப்படுகிறது. புண்கள், எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அறுவை சிகிச்சை முறைகளும்,ரேடியாலஜி, அனஸ்தீசியாலஜி, ஆப்சஸ்டட்ரிக்ஸ் போன்ற நவீன மருத்துவ நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பு முடிந்தவுடன் ஆறு மாத பயிற்சி அவசியம்.
கால்நடைகள், செல்லப்பிராணிகள், மிருகக் காட்சி சாலைகளில் உள்ள காட்டு விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால்நடை மருத்துவர்கள் சிறந்து விளங்கலாம்.இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. இதில் சிறந்து விளங்க முதுநிலைப்பட்டமோ, சூப்பர்ஸ்பெஷாலிட்டி படிப்போ தேவையில்லை. பலர் இப்படிப்பில் இளநிலையை முடித்தவுடனே பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதில் முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர விரும்பினால் எளிதில் இடம் கிடைக்கும்.
அனிமல் ஜெனிடிக்ஸ், அனாடமி, ஹஸ்பன்ட்ரி, எகனாமிக்ஸ், ரீபுரடக்சன், டெய்ரி இன்ஜினியரிங், பேத்தாலஜி, பாரசிட்டாலஜி, நியூட்ரிஷியன், பிசியாலஜி மற்றும் போட்டர் டெக்னாலஜி போன்ற பாடத்திட்டங்களில் முதுநிலைப் பட்டப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். கால்நடை மருத்துவத்தை தவிர்த்து பயோடெக்னாலஜி, ஜெனிடிக் இன்ஜினியரிங், பயோ இன்பர்மேட்டிக்ஸ் போன்ற துறைகளிலும் முதுநிலைப்பட்டப்படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம். ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளராகவும் உருவாகலாம்.
மாநில அரசின் கால்நடை மையங்கள், கால்நடைப் பண்ணைகள், பால் தொழிற்சாலைகள், ராணுவம் (கால்நடைப் பிரிவுகளுக்கு), பார்மசூட்டிக்கல் கம்பெனி, பால்பண்ணைகள், கோழிப் பண்ணைகள், மிருகக்காட்சி சாலைகள், சரணாலயங்கள், விலங்கு பாதுகாப்பு அமைப்புகள், இறைச்சி ஆய்வகங்கள், பொது இன்சூரன்ஸ், குதிரைப்பந்தய கிளப்புகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் இத்துறையை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியாக மருத்துவமனை தொடங்கியும் சாதிக்கலாம்.
தோட்டக்கலை..
காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்களை பற்றிய படிப்பே தோட்டக்கலை (ஹார்ட்டிகல்சர்). அலங்கார செடிகள், மரங்கள், தோட்டங்கள் பற்றியும் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. இதில் பல்வேறு முக்கிய பிரிவுகள் உள்ளன.
ஆர்போரிகல்சர் அலங்கார மரங்கள் மற்றும் செடிகள் வளர்த்து பராமரித்தல் பற்றியது.புளோரிகல்சர் பூக்கள் நிறைந்த தாவரங்களை வளர்த்தல் மற்றும் விற்பனை செய்தல்ஆலரிகல்சர் காய்கறிதாவரங்களை பயிரிடுதல் மற்றும் விற்பனை செய்தல்போமாலஜி பழங்கள் உற்பத்தி மற்றும் விற்பனைவிட்டிகல்சர் திராட்சை உற்பத்தி மற்றும் விற்பனை
விவசாய பல்கலைக்கழகங்களில் பி.எஸ்சி., ஹார்ட்டிகல்சர் மற்றும் பி.டெக்., ஹார்ட்டிகல்சர் படிப்புகள் உள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தானிய உற்பத்தியாளர், தாவர பராமரிப்பு நிபுணர், ஆராய்ச்சியாளர், திசு வளர்ப்பு நிபுணர் மற்றும் பல்வேறு பதவிகளில் இப்படிப்பை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன.
மேலும் லேண்ட்ஸ்கேப் ஆர்க்கிடெக்சர், கட் பிளவர் இன்டஸ்ட்ரி, பிளான்ட் நர்சரி, பிளான்ட் பயோடெக்னாலஜி, புரூட் அண்டு வெஜிடேபிள் பிராசசிங், பெர்டிகேசன், பார்மசூட்டிகல் பிளான்ட் கல்டிவேசன், பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்ற இடங்களில் இத்துறையை சேர்ந்தவர்கள்பணிபுரியலாம்.
பி.எப்.எஸ்சி.,
மீன் மற்றும் இதர கடல்வாழ் உயிரினங்கள் மனிதனின் உணவுக்காக பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகளுக்கென பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக உணவுப்பொருளாக பயன்படுத்தப் படுவதில்லை.
மிக நீண்ட கடற்கரையை கொண்ட இந்தியா மீன்பிடி தொழிலில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது. மீன் தொழிற்கூடங்களும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. மீன்களை உரிய முறையில் பாதுகாத்தல், பதப்படுத்துதல், டின்களில் அடைத்தல் தவிர இது தொடர்பான விற்பனை மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் திறன்மிகு வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். கடல்வாழ் உயிரினங்களை பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வமும், அறிவியல் மனப்பாங்கு கொண்டவர்களுக்கு இத்துறை பொருத்தமானது.
நான்காண்டு பி.எஸ்சி., பிஷரிஸ் படிப்பில் அக்குவாகல்சர், பிஷரி பயாலஜி, பிராசசிங் டெக்னாலஜி, பிஷரி ஹைட்ரோகிராபி, பிஷிங் டெக்னாலஜி, பிஷரி இன்ஜினியரிங் அண்டு மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ் போன்ற பாடப்பிரிவுகள் உள்ளன. இத்துறையில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. தேசிய அளவில் கூட இப்படிப்பில் குறைந்த இடங்களே உள்ளன. அரசு மீன்வளத் துறை, கடல் உணவுப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பிடி சாதனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், மீன்பண்ணைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முதலியவற்றில் இத்துறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் தொடங்கியும் சாதிக்கலாம்.
பிஷரிஸ் பயாலஜி அண்டு கேப்சர் பிஷரிஸ், அக்குவாகல்சர், பிஷ்ஷிங் டெக்னாலஜி அண்டு பிஷரிஸ் இன்ஜினியரிங், பிஷ் பிராசசிங் டெக்னாலஜி, பிஷரிஸ்என்விரான்மென்ட், பிஷரிஸ் எகனாமிக்ஸ் அண்டு ஸ்டேட்டிக்ஸ், பிஷரிஸ் எக்ஸ்டன்சன் போன்ற பாடப்பிரிவுகளில் முதுநிலை படிப்பை தொடரலாம்.
பி.எஸ்சி., பாரஸ்ட்ரி
காடுகள், தோட்டங்கள், இயற்கை வளங்கள் நிர்வகிப்பது தொடர்பான கலை மற்றும் அறிவியல் படிப்பு பி.எஸ்சி., பாரஸ்ட்ரி. காடு வளர்ப்புக்கலை என்பது காடுகள் மற்றும் செடிகள், மரங்களை வளர்த்தல், பாதுகாத்தல் தொடர்பான அறிவியல் படிப்பு. தற்போது காடுகள், கட்டுமானப்பணிக்கு தேவைப்படும் மரங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இதுதவிர விலங்குகளின் உறைவிடமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்றில் உள்ள கார்பன்டை ஆக்சைடை குறைக்கவும் காடுகள் பயன்படுகின்றன.
ஒரு செமஸ்டர் பயிற்சியுடன் கூடிய நான்காண்டு பி.எஸ்சி., படிப்பில், அக்ரோ பாரஸ்ட்ரி அண்டு சோஷியல் பாரஸ்ட்ரி, அக்ரோனமி, பயோகெமிஸ்ட்ரி, எகனாமிக்ஸ், என்டமாலஜி, என்விரான்மென்டல் பாரஸ்ட்ரி, எக்ஸ்டன்சன் எஜூகேசன் அண்டு கம்யூனிகேசன் மெத்தட்ஸ், பேத்தாலஜி, பாலிசி அண்டு லெஜிஸ்லேஷன், புரொடக்ஷன் எகனாமிக்ஸ் அண்டு மார்கெட்டிங், சில்விகல்சர் பிராக்டிஸ் ஆகிய பாடங்கள் உள்ளன.
இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ், அரசு வனத்துறை, காடுகள் தொடர்பான தொழில் நிறுவனங்கள், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள், நகர்ப்புற மர வளர்ப்பு, பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் முதலியவற்றில் வேலை வாய்ப்புகள் உள்ளன. டேராடூனில் உள்ள இந்தியன் கவுன்சில் ஆப் பாரஸ்ட்ரி ரிசர்ச் அண்டு எஜூகேசன் மற்றும் போபாலில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் போன்ற சில பல்கலைக்கழகங்களில் பாரஸ்ட்ரி தொடர்பான முதுநிலை படிப்பும், ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment