Saturday 23 June 2012

நகைச்சுவை டாக்டர்கள் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ் சினிமா!! ஒரு சிறப்பு பார்வை..

ரு திரைப்படம் என்றாலே அதில் நகைச்சுவை  கட்டாயம் குடி கொண்டிருக்கும் இல்லையென்றாலும் குடியமர்த்தப்படும்.1931 ம் ஆண்டு அக்டோபர் 31 ந் தேதி தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸ் வெளிவந்தது.அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமா பல பரிணாமங்களைத் தாண்டி வந்திருக்கிறது.திரையில் ஜொலித்த எத்தனையோ நடிகர்களையும் நடிகைகளையும் நாம் பார்த்து ரசித்துப் போற்றி தத்தம் இதயக் கோயிலில் வைத்து பூசித்திருக்கிறோம். ஒரு திரைப்படத்திற்கு நாயகன் நாயகி அவசியம். அதற்கடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த கதா பாத்திரம் என்னவென்று பார்த்தால் அது நகைச்சுவை பாத்திரம் தான். அந்தப் பாத்திரத்தில் நடித்த நடிகர்களையும் நாம் நாயகனுக்கு இணையாக போற்றியிருக்கிறோம் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது.

                    ஒரு படத்தின் வெற்றிக்கு எப்படி நாயகன், நாயகியின் நடிப்பு முக்கியமோ அதைப் போலவே அப்படத்தின் நகைச்சுவை நடிகனின் பங்கும் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. கறுப்பு வெள்ளைப் படங்களில் நகைச்சுவைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்தார்களோ அந்த முக்கியத்துவம் இன்னும் தமிழ் திரைப்பங்களில் குறையாமல்தான் இருக்கிறது.  

                  கறுப்பு வெள்ளை சினிமாக்கள் ரசிகர்களை சிரிக்க வைப்பதற்கு மட்டும் நகைச்சுவையை பயன்படுத்தாமல் அதன் மூலம் சமுதாயக் கருத்துக்களையும் சொல்லிவந்திருக்கிறது. ஆனால் இன்றைய திரைப்படத்தில் வரும் நகைச்சுவையில் சமுதாயக் கருத்துக்கள் முற்றிலும் காணாமல் போயிருக்கிறது.தமிழில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்து போயிருந்தாலும் நம் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர்கள் என்று சொன்னால் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேல், சந்தானம் போன்றோர்கள் மட்டுமே..   
                    கறுப்பு வெள்ளைப் படங்களில் கலைவாணரின் ஒவ்வொரு நகைச்சுவையும் பல கருத்துக்களைச் சொல்லும். சந்திரபாபுவின் பாடல்களும் பல தத்துவங்களை சொல்லிபோகும். நாகேஷ் தனது அசாதாரமான நடிப்பால் கொள்ளை கொண்டார். உடல் அசைவுகளின் மூலம் நகைச்சுவையை திரையில் புகுத்தியவர் என்றே சொல்லலாம். கறுப்பு வெள்ளை ஆதிக்கம் முடியும் தருவாயில் திரைத்துறையில் நுழைந்தவர் கவுண்டமணி.அவர் திரயில் நுழைந்த வருடம் முதல் கிட்டத்தட்ட 30 வருடங்கள் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நகைச்சுவை நடிகனாகத் திகழ்ந்தார். அவரோடு ஜோடி சேர்ந்த செந்தில் 25 வருட சினிமாவை ஆட்கொண்டார். அவர்கள் இருவரும் உச்சத்திலிருந்த போது பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவேக் தனக்கென பாணியை வைத்துக்கொண்டு மெல்ல வளர்ந்து கொண்டிருக்க, ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப் பட்ட வடிவேலு அசுர வளர்ச்சி அடைந்தார். நாகேஷைப் போல உடல் அசைவுகளும் அப்பாவித்தனமான அவரது உரையாடலும் பாமரனையும் சிரிக்க வைத்தது.

                       தமிழ்த் திரையுகலம் ரஜினி கமல் போன்றோரை மூத்த நாயகர்கள் என்று பட்டியலிட இளைய நாயகர்களாக விஜய், அஜீத் உள்ளே நுழைந்தனர். அவர்களின் படங்களில் விவேக்கும், வடிவேலும் இடம் பிடிக்க கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இன்னும் இருவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சம்பளம் அதிகமாக மற்றும் கால்சீட் கிடைக்காமல் போக மாற்று நகைச்சுவை நாயகனை சில இயக்குனர்கள் அறிமுகம் செய்ய அதில் கருணாஸ் மற்றும் கஞ்சாகருப்பு, சந்தானம் போன்றோரே சிரிக்க வைத்தனர். அப்போது நகைச்சுவைக்கும் அடுத்த தலைமுறை உருவாகிவிட்டது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.

      மாறாக கருணாஸ் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்க வைக்க முடியாமல் தடுமாற திடீரென நாயகனாகி இப்போது நடித்து வருகிறார். கஞ்சா கறுப்பு உச்சக்கட்ட காமெடியில் நடித்தால் கூட ரசிகர்கள் சிரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் அவரும் இடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.ஆனால் சந்தானம் யாரும் எதிர்பாராத விதமாக தனது டைமிங் காமெடியில் அசத்தி   இளைய தலைமுறையினர் நடிக்கும் எல்லாப் படங்களில் ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்.

            சந்தானம் சென்னை பாஷை மட்டுமே பேசுவதால் மற்ற மாவட்ட ரசிகர்களுக்கு அவரது நகைச்சுவை புரியாமல் போகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சென்னை சுற்றுப்புற ரசிகர்கள் சந்தானம் என்ன சொன்னாலும் எதைச் செய்தாலும் ரசிக்கிறார்கள்.

       
             கவுண்டமணி செந்தில் இல்லாத வெற்றிடத்தை எப்படி வடிவேலுவும் விவேக்கும் நிரப்பினார்களோ அப்படி விவேக்கும் வடிவேலும் இல்லாத வெற்றிடத்தை சந்தானத்தால் நிரப்ப முடியாது. காரணம் வடிவேலு நகைச்சுவை விவேக் நகைச்சுவை என்று பிரித்து இனம் காட்டலாம் அப்படி சந்தானத்தின் நகைச்சுவை இது என இனம் காட்ட முடியாது. படத்தின் ஏதாவதொரு ஒரு காட்சியைத்தான் காட்ட முடியும். இன்னும் சொல்லப்போனால் சந்தானம் தனியாக நகைச்சுவை நடிகனாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நாயகனின் நண்பனாக நடித்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் என்றே சொல்லலாம். வடிவேல் போலவோ விவேக் போலவோ காமெடிக்கென்று தனியாக ஸ்கிரிப்ட் எழுதப் பட்டு அவர் நடிப்பதில்லை. கதையோடுதான் பயனப்பட்டுக்கொண்டிருக்கிறார். பெரும்பாலும் சென்னையில் நடக்கும் கதைப்படி நாயகனுக்கு நண்பனாக வந்தால் மட்டுமே அவரது டைமிங் காமெடி எடுபடுகிறது. இன்றைய சூழலில் இவர் மட்டும்தான் காமெடி நடிகர் என்றொரு நிலை இருக்கிறது. அதனால் அவரும் தொடர்ந்து ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார். அனைத்து முன்னணி இளைய நடிகர்களோடு நடிக்க வேறு காமெடி நடிகர் இல்லாதது சந்தானத்தின் மார்க்கெட் உயர காரணமாகிறது. வடிவேல் பிசியாக இருந்தால் விவேக் நடிப்பார். விவேக் பிசியாக இருந்தால் வடிவேலு நடிப்பார் என்ற நிலை இப்போதில்லை.

       வடிவேலு முன்னணி நடிகர்களோடு நடித்தாலும் சின்ன சின்ன கிராமத்துப் படங்களிலும் நடிப்பார். ஆனால் சந்தானம் கிராமத்து படங்களில் நடிப்பதில்லை. அப்படி நடித்தாலும் அவரது சென்னை பாஷை அதற்கு பொருந்தாமல் போகிறது. வடிவேலு சொந்தப் பிரச்சனை காரணமாக நடிக்காமல் இருக்க, கிராமத்துப் படங்கள் சிறிய பட்ஜெட் படங்களில் நடிக்க நகைச்சுவை நடிகர் இல்லாமலேயே இருக்கிறார். வடிவேலு நடிக்க வேண்டிய பாத்திரங்களில் இப்போது மைனா படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய நடிகர் தம்பி ராமையா நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படி பார்த்தாலும் விவேக் இடத்தை நிரப்ப சந்தானம் என்றாலும் கூட வடிவேலு இடத்தை நிரப்ப ஆள் இல்லாமல்தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment