Tuesday, 25 August 2015

இந்திய பங்குசந்தையின் இவ்வளவு சரிவு ஏன் ? ஒரு சிறப்பு பார்வை....

உலகம் முழுவதுமே கடந்த திங்கட்கிழமையை ‘‘கருப்பு திங்கட்கிழமை’’ என்று பெயர் சூட்டியது. அந்த அளவுக்கு இந்தியா உள்பட பல நாடுகளின் பங்குசந்தை பெரும் சரிவை கண்டது. இதனால் பெருமளவில் பொருளாதார தாக்கமும் ஏற்பட்டது. ‘‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால், பனை மரத்தில் நெறிகட்டும்’’ என்பதுபோல, இதற்கெல்லாம் மூலகாரணம் சீனாவின் பணமான யுவானின் மதிப்பு குறைந்ததும், சீனாவின் பங்குகள் 9 சதவீதம் சரிந்ததும்தான், அது என்னவோ தெரியவில்லை. இதுவரை 10 முறை பங்குமார்க்கெட் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதில், 7 முறை திங்கட்கிழமைகளில்தான் பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால்தான் திங்கட்கிழமை என்றாலே பங்குமார்க்கெட்டில் பரபரப்பான நிலை நிலவும். ஒரு தனிப்பட்ட நிறுவனத்தின் பங்குவிலை உயர்ந்தால், அந்த நிறுவனம் வளர்ச்சிபெற்றதாக கருதப்படும். அதுபோலத்தான், பங்குசந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிப்டியின் குறியீட்டு எண் ஏற்ற இறக்கத்தை பொருத்துத்தான், பங்குசந்தையின் நிலைமை கணக்கிடப்படுகிறது.

சென்செக்ஸ் என்பது இந்திய பங்குசந்தையின் பழமைவாய்ந்த குறியீடு ஆகும். பல துறைகளிலும் உள்ள 30 பெரிய நிறுவனங்களுடைய பங்குகளின் மார்க்கெட் மதிப்பை வைத்தே சென்செக்ஸ் எண் மதிப்பிடப்படுகிறது. இதுபோல, நிப்டி என்பது தேசிய பங்குசந்தையின் குறியீடு ஆகும். இந்தியாவில் உள்ள 23 துறைகளைச் சேர்ந்த 50 நிறுவன பங்குகளின் பங்குவிலை ஏற்ற, இறக்கத்தை வைத்து நிப்டி எண் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குசந்தையில் புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் சிறப்பாக இருந்தால், இன்று பங்குமார்க்கெட் காளையின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவார்கள். இப்போதுபோல பங்குமார்க்கெட் சரிந்தால், கரடியின் பிடியில் மார்க்கெட் சிக்கித்தவிக்கிறது என்பார்கள். இப்போது பங்குமார்க்கெட்டை கரடி அதள பாதாளத்துக்கு கீழே இழுத்துவிட்டது.

2009 ஜனவரி 9–ந்தேதியன்று உலக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சிகண்ட நேரத்தில்தான் பங்கு மார்க்கெட் 6.2 சதவீதத்தில் இருந்து 7.2 சதவீதம்வரை வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த திங்கட்கிழமையன்று 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 சதவீதம் அதாவது, சென்செக்ஸ் 1,625 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 25,742 என்ற புள்ளியில் முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது.


இந்திய பங்குசந்தையின் இவ்வளவு சரிவு ஏன் ?

பங்குசந்தைகள் இந்தளவுக்கு சரிய சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.


1. உலகின் பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆசிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது. 


2. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (ரூ.66.48-ஆக) கடுமையாக சரிந்துள்ளது.


3. நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி குறையும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடி தெரிவித்துள்ளது. 


4. நாட்டின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.3 சதவீதம் மட்டுமே உள்ளது. மதிப்பீட்டில் 23.13 பில்லியன் டாலராக இருக்கிறது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் 12.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.


5. கச்சா எண்‌ணெய் உற்பத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் சரிவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவிலேயே இருக்கின்றன.


இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 


7 லட்சம் கோடி இழப்பு: பங்குசந்தையில் இன்று ஒரேநாளில் ஏற்பட்ட சரிவால் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களின் பங்குக‌ளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குசந்‌தை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சரிவு இது. 


ரகுராம் ராஜன் கருத்து: இதுப்பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்: உலகளவில் இத்தகைய சூழல் நிலவுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலராக உள்ளது, தேவைப்பட்டால் இது பயன்படுத்தப்படும். பங்குசந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும். பணவீக்கம் சரிவு போன்ற விஷயங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.


அருண் ஜெட்லி கருத்து: உலகில் எங்காவது ஒரு சில நாடுகளில் ஏற்படும் பிரச்னை மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா, இதுபோன்ற சவால்களை நிறைய எதிர்கொண்டு வருகிறது. இந்த சரிவு தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இது மாறும். குறிப்பாக பருவமழையால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பங்குசந்தைகளை உற்று நோக்கி கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார்.



 பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் அதேநேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பும் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு 66.65 ஆக நிலை கொண்டிருந்தது. நேற்றும் வீழ்ச்சி தொடர்ந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு, 45 டாலருக்கும் கீழே போய் இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கும் நிலையில், பொது மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை குறையும். இதுபோல, தங்கம் விலை உயர்ந்துகொண்டே போவதால் தங்கத்தின் தேவை குறையும். இந்த இரு பொருட்களையுமே இந்தியா இறக்குமதி செய்வதால், அன்னிய செலாவணி மிச்சமாகும். மொத்தத்தில், ஏற்றுமதிக்கு அதிக லாபம் கிடைக்கும், இறக்குமதிக்கு அதிக செலவை சந்திக்க நேரிடும். வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் செலவாகும். வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்துக்கு கூடுதல் ரூபாய் கிடைக்கும். இதுபோல, ஒருசில தாக்கங்களை வைத்து திருப்தி அடைந்துவிடமுடியாது. பொருளாதாரத்தைக் காப்பாற்ற கரடியின் பிடியில் இருந்து நாட்டைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கியும், மத்திய அரசாங்கமும் துரித நடவடிக்கை எடுக்கத்தொடங்கிவிட்டது. இதன் பலன் அடுத்த சில நாட்களில்தான் தெரியும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment