தொழிலதிபர்கள் என்றாலே மக்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். பணம் பதுக்கும் தொழிலதிபர்கள்,
வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் பற்றி தினமும் செய்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலதிபர்கள் பற்றிய நல்ல செய்தி அவ்வப்போது கண்களில் தென்படும். ஒரு சில தொழிலதிபர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். கடந்த 2015ஆண்டு சூரத்தைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனத் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கினார். அண்மையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள் ஷ்ரேயா தனது திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தார். இந்த வரிசையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் குஜராத்தைச் சேர்ந்த சவானி குழுமத் தலைவர் மகேஷ் சவானி. சூரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் சவானி, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக தந்தை இல்லாத ஏழை இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்து வருகிறார்.
மகேஷ் சவானி இளம் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. இவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர், தன் மகளின் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் இறந்து போனார். அந்த தொழிலாளியின் மகளுக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மகேஷ் சவானி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அப்போது, அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம். அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி, மகேஷ் சவானியின் மனதில் பெரும் மாறுதலைத் தந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் தந்தையர் இல்லாத இளம் பெண்களை இனம் கண்டு திருமணம் நடத்தி வைக்கும் பணியில் இறங்கினார் மகேஷ் சவானி.
கடந்த 2016 டிசம்பர் 26-ம் தேதி மகேஷ் சவானியின் மகன் மிதுல் சவானிக்கும் ஜான்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மகனது திருமணத்தை முன்னிட்டு 236 இளம் பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதில் 5 முஸ்லிம் மணமக்களும் ஒரு கிறிஸ்துவ மணமக்களும் அடங்கும்.
பெயருக்காகவும், பெருமைக்காகவும் சில அரசியல் கட்சிகள் நடத்திவைக்கும் இலவசத் திருமணம் போல அல்ல இவர் நடத்தி வைக்கும் திருமணங்கள்! ஆம்! சவானி குழுமத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு எந்த மாதிரியாக திருமணம் நடைபெற்றதோ, அதே போலவே - மண அரங்கத்தில் இருந்து மற்ற எந்த விஷயங்களிலும் வேறுபாடு காட்டாமல் - சரிசமமாக அனைவருக்கும் ஒரே விதத்தில் திருமணம் நடைற்றதுதான் இந்த மாஸ் வெட்டிங்கின் ஸ்பெஷல். இஸ்லாமிய மணமக்களுக்கு இஸ்லாமிய முறைப்படியும் கிறிஸ்துவ மணமக்களுக்கு கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதற்காக சூரத்தில் உள்ள மைதானத்தில் தனித் தனியாக திருமண அரங்குகள் தயார் செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதுல் - ஜான்கி மாலை மாற்றிக் கொண்ட போது மற்றவர்களும் மாலை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மணமக்களை சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும் புதுமண தம்பதியரை மலர் தூவி வாழ்த்தினர்.
குஜராத்தைச் சேர்ந்த மணமக்கள் மட்டுமல்ல ராஜஸ்தான், மகராஷ்டிரா போன்ற மாநிலத்தைச் சேர்ந்த மணமக்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடத்தி வைப்பதோடு, மணமக்கள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் என ஒவ்வொரு தம்பதியருக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்து வைக்கப்பட்டது.
இதுவரை 959 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி 2008ல் இருந்து 2012 வரை 1,300 பெண்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
251 பெண்களில் 108 பெண்களுக்கு மோவாலியா குடும்பத்தினர் கன்யாதானம் செய்து வைத்தனர். ஒவ்வொரு பெண்ணின் திருமணத்திற்கும் ரூ. 5 லட்சம் செலவு செய்துள்ளனர். ஜாதி மத பேதமின்றி இந்த திருமணங்கள் நடந்தன. திருமணமானவர்களில் ஒருவர் கிறிஸ்துவர், 5 பேர் முஸ்லிம்கள், ஒருவர் ஊனமடைந்தவர். மற்றவர்கள் 31 வகையான பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களது மதச் சடங்கின்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணம் குறித்து சவானி குழும இயக்குநர் மகேஷ் சவானி கூறுகையில், '' இது போன்ற திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதே அரங்கத்தில்தான் எனது மகன் மிதுல் எனது மருமகன் ஜே ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்து வைப்பதோடு எனது பணி முடிந்து விட்டதாகக் கருதவில்லை. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக என்னால் என்ன உதவியெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தும் கொடுக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக இதனை செய்து வருகிறேன். இதுவரை தந்தைகள் இல்லாத 959 இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில் 959 மகள்களுக்கு நான் தகப்பன் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் '' என்கிறார்.
ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
No comments:
Post a Comment