Tuesday 8 January 2008

திருக்குறள் பற்றி எனக்குள் எழும் கேள்விகள் !! ஒரு சிறப்பு பார்வை..


'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்' - குர்ஆன் 14;4

'மனிதர்களாகிய நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும் நிலையானதுமாகும். இது முந்தைய வேதங்களிலும், இப்றாகிம்,மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. - குர்ஆன் 87- 16,17,18

மேற் கண்ட குர்ஆன் வசனத்தின் படி செம் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலும் நிச்சயமாக வேதமும், தூதரும் வந்திருக்கலாம். அது திருக் குறளும், திருவள்ளுவரும் ஆக கூட இருக்கலாம். ஆனால் கடைசி வேதமான குர்ஆன் இறங்கிய பிறகு இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களின் சட்டங்களை பின் பற்ற வேண்டும் என்ற கட்டளை முஸ்லிம்களுக்கு இடப் படவில்லை. அவர்களை கட்டுப் படுத்தக் கூடிய வேதம் குர்ஆன் ஒன்றுதான். இனி  கீழே  உள்ள திருக்குறளைப் பற்றிப் பார்ப்போம்.

நன்றி மறப்பது நன்றன்று - நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் - ஆறாதே
நாவினால் சுட்ட வடு

மகன் தந்தைக்காற்றும் உதவி - இவன்தந்தை
என்னோற்றான் கொல் என்சொல்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் - தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.

படிக்கும் காலங்களில் மனனம் செய்ததை எடுத்து எழுதியுள்ளேன். ஏதும் தவறுகள் இருப்பின் திருத்தி வாசிக்கவும. இது போன்ற பல குறள்களை நான் படிக்கும் போது இவ்வளவு எளிமையாக இரண்டு அடிகளில் சொல்ல வந்த கருத்தை திருக்குறள் எவ்வளவு அழகாக விளக்குகிறது என்று வியந்து போவேன். அதிலும் உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதன் சட்டங்கள் பலதும் அமைந்துள்ளது இதற்கு மேலும் சிறப்பு. திருக்குறளின் பல கருத்துகள் குர்ஆனோடு ஒத்துப் போவதையும் பல இடங்களில் பார்க்கிறோம். குர்ஆனில் இறைவன் சொல்லக் கூடிய பல உதாரணங்கள் திருக் குறளிலும் வருவதைப் பார்த்து நான் சில நேரம் ஆச்சரியப் பட்டுப் போவேன்.

இது போன்று எண்பது சதவீத குறள்கள் உலக மாந்தர் அனைவருக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. இதில் குறைந்த எண்ணிக்கையில் சில குறள்கள் உலகத்தார் அனைவருக்கும் பொருந்தாததாகவும், சில அறிவியல் கருத்துக்களோடு மோதுவதாகவும் உள்ளது.எனவே அது போன்று வரக் கூடிய கருத்துக்கள் திருவள்ளுவருக்குப் பிறகு சேர்க்கப் பட்ட இடைச் செருகலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. ஒருக்கால் என் எண்ணம் தவறாக கூட இருக்கலாம் பைபிள்,தௌராத்,ஜபூர் போன்ற இதற்கு முன் அருளப் பட்ட வேதங்களை நம்பச் சொல்லும் குர்ஆன், அந்த வேதங்களில் மனிதக் கருத்துக்கள் சேர்ந்து மாற்றப் பட்டதால் அதை பின் பற்றக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளை செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.' - 2;75

'இது இறைவனிடமிருந்து வந்தது எனவும் கூறுகின்றனர். அது இறைவனிடமிருந்து வந்ததல்ல. அறிந்து கொண்டே இறைவன் பெயரால் பொய் கூறுகின்றனர்.' - குர்ஆன் 3;78

மேற்கண்ட வசனங்களின் மூலம் இறை வேதங்கள் பலவும் மனிதக் கரங்களால் மாசு படுத்தப் பட்டுள்ளன என்று விளங்க முடிகிறது. ஆது போன்று நான் நினைக்கும் ஒரு சில குறள்களை பட்டியலிடுகிறேன். குறளை புரிந்து கொண்ட விதத்தில் ஏதும் தவறுகள் என்னிடம் தென் பட்டு நண்பர்கள் சுட்டிக் காட்டினால் தவறை திருத்திக் கொள்கிறேன்.

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.


இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment