Wednesday 16 July 2014

இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி!! ஒரு ஏக்கருக்கு 4லட்சத்து ஐம்பதாயிரமா ?

இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள்.
சிறுவாணிக் காற்று சிலுசிலுக்கும் இளமாலைப் பொழுதொன்றில், மேற்குத்தொடர்ச்சிமலைச் சாரலில் இருக்கும் உடன்பிறப்புக்களின் பண்ணையில் நுழைந்தோம். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் கல்பந்தலுக்குள் கருநீல நிறத்தில் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன, பன்னீர் திராட்சைகள். கைக்கு அடக்கமான கத்தரிக்கோலில் லாகவமாக அறு வடை செய்து கொண்டிருந்தனர் சில பெண்கள். பாங்காய் வெட்டிய பழக்குலைகளை உதிராமல் அட்டைப் பெட்டியில் அடைத்து எடைபோட்டு அடுக்கிக்கொண்டிருந் தனர், சில பணியாளர்கள். இதை யெல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களைச் சந்தித்தோம்.
சோதனையான சாதனை!
முதலில் பேசியவர், சதாசிவம். ''பரம்பரை விவசாயக் குடும்பம். 60 ஏக்கருக்கு மேல நிலம் இருக்கு. எல்லாமே கிணத்துப்பாசனம்தான். வாழை, தக்காளி, வெங்காயம், திராட்சைனு பணப்பயிர் சாகுபடிதான் அதிகம். இதுல திராட்சைப் பந்தல் மட்டும் 40 ஏக்கர்ல இருக்கு. திராட்சையைப் பொருத்தமட்டில் சுழற்சி முறை விவசாயம்தான். வருஷமெல்லாம் திராட்சை அறுவடை நடக்கிற மாதிரி திட்டம் போட்டு பந்தலைப் படர விட்டிருக்கோம். அதனால, நாள் தவறாம இங்க அறுவடை நடந்துட்டே இருக்கும். பந்தல் வேலைக்கு மட்டும் 50 ஆட்களை நிரந்தரமாக வெச்சிருக்கோம்.
நாங்க திராட்சை விவசாயம் பக்கம் வந்து 30 வருஷமாச்சு. முன்னயெல்லாம் தீவிர ரசாயன விவசாயிங்கதான் நாங்க. பூச்சிக்கொல்லி கம்பெனிக்காரங்க, ரசாயன உர கம்பெனிக்காரங்கஎல்லாருக்கும் பரிசோதனை வயலே எங்க தோட்டம்தான்.
23 வருஷமா திராட்சைக்கு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை லிட்டர் கணக்குல ஊத்தியிருக்கோம். டன் கணக்குல வீரியமான ரசாயன உரங்களைக் கொட்டியிருக்கோம். அந்த சாதனையைப் பாராட்டி பல கம்பெனிக்காரங்க 'சாதனை விவசாயி’ விருதெல்லாம் கொடுத்திருக்காங்க. உண்மையில இதெல்லாம் சாதனையில்ல... வேதனைங்கிறதை நம்மாழ்வார் ஐயா மூலமாவும், 'பசுமை விகடன்’ மூலமாவும் தெரிஞ்சிக்கிட்டோம். பசுமை விகடன்ல வர்ற கட்டுரைளைப் படிச்சுட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை நேர்ல போய் பார்த்து தெரிஞ்சிட்ட விஷயங்கள் மூலமா, நாங்களும் இயற்கை விவசாயிகளா மாறிட்டோம்.
7 வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் திராட்சை சாகுபடி செய்றோம்'' என்ற சதாசிவம், ஒரு கொத்து திராட்சைப் பழங்களைப் பறித்து நம் கையில் திணித்து, ''சாப்பிட்டுப் பாருங்க பஞ்சகவ்யாவில் வெளைஞ்ச பன்னீர் திராட்சை... பஞ்சாமிர்தமாக இனிக்கும்'' என்றார்.
அவர் சொன்னது உண்மை என்பதை, அடுத்த நொடியே நம் நாக்கு ஆமோதித்தது!
அள்ளிக் கொடுக்கும் ஆட்டு எரு!
அண்ணனைத் தொடர்ந்த தம்பி மாறன், ''களிமண், களர்மண் நிலத்தைத் தவிர மத்த எல்லா மண்ணிலும் திராட்சை நல்லா வரும். அதுவும் செம்மண் நிலத்துல பிரமாதமா வரும். எங்க பகுதி முச்சூடும் அருமையான செம்மண்ணுங்க. அதேசமயம் திராட்சை வெள்ளாமைக்குப் பொருத்தமான சீதோஷ்ண நிலையும் இருக்கறதால மத்த பகுதிகளைவிட இங்க கெட்டியான மகசூல்தான். திராட்சையில் பல ரகங்கள் இருந்தாலும், நாங்க போட்டுருக்கிறது, பன்னீர் திராட்சைங்கிற நாட்டு ரகம்தான்.
மாடு, கன்னுக போக 250 செம்மறி ஆடுகளும் வெச்சிருக்கோம். அதுகள தோட்டத்தை ஒட்டி இருக்கிற மலைக்கு பகல்ல மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். ராத்திரியில நிலத்துல கிடை போட்டுடுவோம். மாசக்கணக்கில அதுகளோட புழுக்கை, தோட்டம் முழுக்க மண்டிக் கிடக்கிறதால, கொடிகளுக்கு ஊட்டம் கிடைச்சுட்டே இருக்கும். ஆடுகள் வளர்க்கிறதுக்கான சூழல் எங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். அடி உரமா தொழுவுரமும், ஆட்டு எருவும் சேர்ந்து செய்ற மாயாஜாலம்... இடுபொருள் செலவைக் குறைக்கிறதோட, அதிக மகசூலையும் அள்ளிக்கொடுக்குது'' என்றார்.
இயற்கை முறையில் திராட்சை சாகுபடி செய்யும் நுட்பங்கள் பற்றி, சதாசிவம் தந்த தகவல்களை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது!
'நிலத்தில் சில மாதங்கள் ஆட்டுக்கிடை போட்டு... நன்றாக உழ வேண்டும். பிறகு, வழக்கமான முறையில் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு குழியெடுத்து... ஒவ்வொரு குழிக்குள்ளும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம், ஆட்டு எரு 3 கிலோ, கோழி உரம் ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். திடமான, நன்கு விளைந்த கணுக்கள் உள்ள திராட்சைக்கொடித் தண்டுகளை வெட்டி எடுத்து, பஞ்சகவ்யா மற்றும் சூடோமோனஸ் கரைசலில் நனைத்தெடுத்து, நடவுசெய்து பாசனம் செய்யவேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திராட்சைக்கு சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. நீர் சிக்கனம், களைக் கட்டுப்பாடு, திரவ உரப் பயன்பாடு போன்ற பல நன்மைகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் உண்டு.  

15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்குச் செடி 750 மில்லி பஞ்சகவ்யா கரைசலை நேரடியாகக் கொடுக்க வேண்டும். நடவு செய்த ஒரு ஆண்டில் வளர்ந்து நிற்கும் கொடிகளை எடுத்து பந்தலில் படரவிட வேண்டும். தொடர்ந்து கிளைகளை கவாத்து செய்து வந்தால், பூ எடுத்து குலைகளில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் பிஞ்சுக்குலைகளை கீழே தொங்கும்படி எடுத்துக் கட்டவேண்டும். இடையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை
10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கொடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். பூக்கள் அனைத்தும் பிஞ்சாக மாற இது அவசியம். பழஅழுகல் சேதாரத்தையும் இது கட்டுப்படுத்தும்.

சாம்பல் நோய்க்கு வேப்பங்கொட்டை, சுண்ணாம்புக் கரைசல்!
திராட்சையை அதிகம் தாக்குவது, சாம்பல் நோய். இதில் அடிச்சாம்பல் நோய், மேல்சாம்பல் நோய் என இரண்டு வகைகள் உண்டு. இந்த வகை சாம்பல் நோய், இலைகள் மற்றும் பழங்களில் படர்ந்து, குலைகளின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதைப்போக்க, ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சணக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டை சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும், துத்தநாகம் சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் நோயின் அறிகுறி தெரிந்தால், தேவையான பராமரிப்புச் செய்தால் போதுமானது.
காய்ந்த வேப்பங்கொட்டையை ஒரு கிலோ எடுத்து, அரைத்துப் பொடியாக்கி, 2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் வீதம் கலந்து, கைதெளிப்பான் மூலம் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இலைகள் மீது புகைபோல் தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும். பழஈக்கள் மற்றும் பொன்வண்டுகளையும் இது விரட்டிவிடும். இதற்கு, சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படாவிடில், துத்தநாகக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு கிலோ துத்தநாகத்தை துணியில் முடிந்து, 200 லிட்டர் தண்ணிரில் மூழ்குமாறு 24 மணிநேரம் வைக்க வேண்டும். 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை ஊற வைத்து வடிகட்டி, அதை துத்தநாகம் ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் கலந்து அப்படியே தெளித்தால்... சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படும்.
90 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை!
நடவு செய்த 16-ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். 90 நாட்களுக்கு ஓர் அறுவடை. இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை அறுவடை செய்யலாம். முதல் முறை ஏக்கருக்கு 5 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். அறுவடைக்குப் பிறகு, பவர் டில்லர் மூலம் பந்தலுக்குள் களை எடுத்து, ஆட்டுக்கிடை போட வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் தலா 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டவேண்டும். தொடர்ந்து நீர் பாய்ச்சி முறையாகப் பாரமரித்தால், அடுத்த 90-ம் நாளில் இரண்டாவது அறுவடை. இதில் 4 டன் வரை மகசூல் கிடைக்கும். மூன்றாவது அறுவடையில் 4 டன் கிடைக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், தொடர்ந்து ஊட்டம் கொடுத்து வந்தால், 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிதாக செடிகளை நடவு செய்யவேண்டும்.'

மனதிருப்திக்கு ஈடே இல்லை!
சாகுபடிப் பாடம் முடித்த சதாசிவம், ''வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல சராசரியா 10 டன் மகசூல் கிடைக்கிது. இப்போதைக்கு ரசாயன விவசாயத்துல கிடைக்கிற மகசூலைவிட இது குறைவுதான். இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல ரசாயனத்துல கிடைக்கிறதைவிட அதிக மகசூலை எடுத்துக் காட்டுவோம். எங்க தோட்டத்துக்கு அங்ககச் சான்றிதழ் வாங்கிட்டோம். நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ திராட்சைக்கு 45 ரூபாய் விலை கிடைக்கிது. ஒரு ஏக்கர்ல, ஒரு வருஷத்துல 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் சேர்த்து, 2 லட்சம் ரூபாய் போக... 2 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதைவிட பெரிய லாபம், ரசாயனங்களைக் கொட்டிக்கொட்டி மலடாகிப் போன எங்க மண், மறுபடியும் உயிர்ச்சத்துள்ளதாக மாறியிருக்கிறதுதான். இதையெல்லாத்தையும்விட மக்களுக்கு விஷமில்லாத திராட்சையைக் கொடுக்கிறோம்கிற மனதிருப்திக்கு ஈடே இல்லை'' என்று நெகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

பந்தல் அமைக்க பட்டியல்!
 ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க குறைந்தபட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 8 அடி உயரத்தில் 280 கல்தூண்கள் தேவைப்படும். ஓரக்கால்களுக்கு முட்டுக்கொடுக்க,
20 தூண்கள் தேவைப்படும். ஆக, ஏக்கருக்கு மொத்தம் 300 கல்தூண்கள் தேவை. தூண்களை நடும்போது மண்ணுக்குள் இரண்டரை அடியும், மேலே ஐந்தரை அடியும் இருக்குமாறு 15 அடி இடைவெளியில் நடவேண்டும். ஒரு ஏக்கர் பந்தலுக்குள் வலை பின்ன 750 கிலோ கம்பி தேவை. பந்தல் கம்பிகளை இறுக்கமாக இழுத்துக்கட்டுவது மிக அவசியம். இந்த வகைப் பந்தல் 25 வருடங்கள் வரை தாங்கி நிற்கும்.

 மதிப்புக்கூட்டல் மந்திரம்!
சதாசிவத்தின் மனைவி ராஜாமணியும், மாறனின் மனைவி துளசிமணியும் திராட்சையில் ஜூஸ், ஜாம் எனத் தயாரிக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசும் ராஜாமணி, ''பசுமை விகடன்ல் வர்ற தண்டோரா பகுதி தகவலைப் பார்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல நடந்த மதிப்புக்கூட்டுதல் பயிற்சியில கலந்துகிட்டு, திராட்சையை மதிப்புக்கூட்டுறது பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். இதைத் தொடர்ந்து நாங்க தயாரிக்குற பொருட்களை கோயம்புத்தூர்ல இருக்கிற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறோம். வாரம் 100 பாட்டில் வரைக்கும் விற்பனையாகுது'' என்று குஷி பொங்கச் சொன்னவர்,
''திராட்சை ரசத்தோட, கேரட் சாறு சமஅளவு கலந்து தினமும் ஒரு நேரம் குடிச்சா, சிறுநீரக கல்லெல்லாம் கரைஞ்சுடும். திராட்சைப் பழங்களை விதையோட சேர்த்துச் சாப்பிட்டா, வாதம் மட்டுப்படும். புற்றுநோய் வராது. திராட்சை ரசத்தோடு தேன் கலந்து சாப்பிட்டா, ரத்தம் விருத்தியாகும்'' என்று மருத்துவ ஆலோசனைகளையும் தந்தார்.


இல்லை, இடைத்தரகு!
தோட்டத்தில் விளையும் திராட்சையை நேரடி விற்பனை செய்து வருகிறார், சதாசிவம். இதைப் பற்றிப் பேசியவர், ''இங்க விளையுற திராட்சையை, எங்க பண்ணை பெயர் அச்சடிக்கப்பட்ட 2 கிலோ அட்டைப் பெட்டிகள்ல அடைச்சு சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு பகுதிகள்ல இருக்கிற இயற்கை வேளாண்மை உணவுப்பொருள் விற்பனை அங்காடிகளுக்கு அனுப்புறோம். அதோட சிறுவாணி மெயின்ரோடு பகுதியில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், நவீன குடியிருப்புக்கள், கோயில், தியான மடங்கள் இருக்கறதால... மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்.
அதை மனசுல வெச்சு அங்க ஒரு திராட்சை விற்பனை மையம் நடத்துறோம். கோயம்புத்தூர்ல இருக்கற உழவர் சந்தைகளுக்கும் கொண்டுபோய் நேரடியா விற்பனை செய்றோம். அதனால எங்களுக்கு தரகர் கமிஷன் செலவே கிடையாது'' என்றார்.
தொடர்புக்கு,
கே.ஆர். சதாசிவம், செல்போன்: 97866-44424
கே.ஆர். மாறன், செல்போன்: 97866-22424

நன்றி : விகடன்

No comments:

Post a Comment