Sunday 6 July 2014

பட்டப்படிப்பிற்கு அரசு தரும் சலுகைகளை அடைவது எப்படி ?

பள்ளி வாழ்க்கையை முடித்துவிட்டு கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லும் மாணவர்கள் பட்டப்படிப்பு குறித்த அரசின் சலுகைகளையும் தெரிந்து கொள்வது கட்டாயமான ஒன்றாகும். பிளஸ்2 மாணவர்களுக்கு எப்படி அரசு கல்விக்கான உதவித் தொகைகளும், சலுகைகளையும் கொடுத்ததோ அதே போல் கல்லூரியில் சேரும் போதும் பல்வேறு சலுகைகளை தருகிறது. இது குறித்த விஷயங்கள் மாணவர்களுக்கு தெரியாத காரணத்தினால் பலர் அரசின் சலுகைகளை நழுவவிடுகின்றன. இப்போது அரசின் சலுகைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.  


இலவச கல்வி... 


தற்போது தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் 62 கலை அறிவியல் கல்லூரிகளும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 162 அரசு உதவிப்பெறும் கல்லூரிகளும் செயல்பட்டுவருகிறது. சமூகத்தின் அடித்தளத்தில் இருந்து வரும் மாணவர்களின் மீதான அக்கறை மற்றும் நலன் கருதி அப்பிரிவு மாணவர்கள் உயர்கல்வி ஊக்குவிக்கும் வகையில் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. அனைத்து அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளங்கலை வரை இலவச கல்வி வழங்கப்படுகிறது. 

அரசு கல்வியியல் கல்லூரியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முதுகலைப்படிப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இதே சலுகை அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு வரை வழங்கப்படுகிறது. இதே போல் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்காக 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்கல்வி, தொழில்நுட்ப கல்வி, பி.இ, பி.டெக், எம்பிஏ, எம்சிஏ மாணவர்களுக்கு மத்திய அரசலர் தெரிவு செய்யப்பட்ட கல்வி நிலையங்களில் படிக்கும் மைனாரிட்டி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் முழுவதும் வழங்கப்படும். மற்ற கல்வி நிலையங்களில் படிப்பவர்களுக்கு, சேர்க்கை கட்டணம், கற்பிப்பு கட்டணம், தேர்வு கட்டணம், நூலக கட்டணம் உட்பட அதிகபட்சமாக ரூ20 ஆயிரம் வரை வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாணவரின் பெற்றோர் வருமானம் இரண்டு லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். 

முந்தைய ஆண்டு இறுதித்தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இரண்டாம் வருடம் புதுப்பிக்கும் போது முதல் ஆண்டில் 50 சதவீத மதிப்பெண் பெற்று அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மைனாரிட்டி மாணவர்கள் இச்சலுகைகளை பெறுவதற்கு www.tn.gov.in , www.momascholarship.gov.in என்ற இணைய தளங்களில் விண்ணப்ப படிவங்களை டவுன்லோடு செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான (சாதி சான்று, வருமான சான்று, பேங்க் கணக்கு எண் ஐஎப்எஸ் கோடு உள்பட) சான்றுகளுடன் குறிப்பிடப்பட்ட கால கெடுவிற்குள் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

 தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment