Sunday, 20 November 2016

மோடியின் செல்லாத நோட்டு திட்டத்தை முட்டாள்தனமென்று காறி துப்பும் வெளிநாட்டு பத்திரிகைகள்!

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என வந்த அறிவிப்பையொட்டி பல வெளிநாட்டு பத்திரிக்கைகள் தெரிவித்த விமர்சனங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு 19.11.16 அன்று வெளியிட்டது. இப்பத்திரிகைகள் அனைத்தும் மோடியின் அறிவிப்பை முட்டாள்தனமென்று காறித்துப்பியிருக்கின்றன. இதில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பத்திரிகைகள் மட்டுமல்ல, பா.ஜ.கவின் பாசத்திற்குரிய பாகிஸ்தான் பத்திரிகையும் உண்டு. அதன் சாரத்தைப் பார்ப்போம்.

இந்த நிலைமைகளைப் பற்றி பல்வேறு வெளிநாட்டு பத்திரிக்கைகள் என்ன சொல்லுகின்றன?
தி கார்டியன் – (The Guardian):
செல்வந்தர்கள் யாரும் இதனால் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தங்களது ஊழல் பணத்தையெல்லாம் தங்கமாகவும், பங்குகளாகவும், ரியல் எஸ்டேட் துறையிலும் மாற்றிவிட்டனர். ஆனால் 120 கோடி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் ஏழைகள்தான் இந்த நடவடிக்கையால் இழந்துள்ளனர். அவர்களில் பலருக்கு வங்கி கணக்குகளே இல்லை. மணிக்கணக்கில் வங்கிகளில் நிற்பதன் மூலம் அவர்களின் கூலியும், வேலைக்கான நேரமும் கணிசமாக இழக்கப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் சில பத்து உயிர்களும் பலி வாங்கப்பட்டுள்ளன. அரசோ இன்னும் சில வாரங்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகிறது.
மோடியின் இந்த திட்டமானது ஏற்கனவே பல நாடுகளில் சர்வாதிகாரத்தின் மூலம் அமல்படுத்தப்பட்டு, விலைவாசியை உயர்த்தி, பணத்தை சீர்குலைத்து, பெரும் மக்கள் எதிர்ப்பில் தோல்வியடைந்த ஒன்று. அது மட்டுமல்ல பல நாடுகளில் பணச் சரிவையும், கலகங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஊழலுக்கு முடிவு கட்டுவேன் எனக் கூறியிருந்த மோடி அதனை பழைய வரி வசூலிக்கும் முறைகளை சீர்திருத்தியிருந்தாலே செய்து இருக்க முடியும்.
தி நியூயார்க் டைம்ஸ் (The New York Times):
இந்தியாவை பொருத்தவரை பணம் தான் ராஜா. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் 20 முதல் 25 சதவீதமாக உள்ள நேரடி பணப் பரிவர்த்தனை இந்தியாவில் கிட்டத்தட்ட 78 சதவீதமாக உள்ளது. அதே போல இந்தியாவில் பலரிடம் வங்கிக் கணக்கு கிடையாது. அதனால் அவர்களின் வியாபாரங்கள் நேரடிப் பணம் தவிர்த்த வேறுவழிகளில் (கடன் அட்டை, வங்கி அட்டை மூலம்) செய்யவும் வாய்ப்பில்லை.
இது போன்ற திட்டத்தை அறிவிக்கும் முன்னர் போதுமான முன் ஏற்பாடுகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கையால் இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கி வாசலில் நிற்கும் நிலை, பொருளாதாரத்தை ஒரு வன்முறைக் கலகத்தில் தூக்கி எறிந்துவிட்டது.
புளூம்பெர்க் (Bloomberg) :
பார்ப்பதற்க்கு ஆரம்பத்தில் மோடி அவர்களின் திறன்மிகுந்த செயலாகக் காணப்பட்ட ஒன்று தற்போது ஏன் தப்புக் கணக்காக மாறியுள்ளது… ஒரே வாரத்தில் எது இப்படி நிலைமையை தலைகீழாக மாற்றியது?
ஒருவிசயம் தெரிகிறது புழக்கத்தில் இருக்கும் 86 சதவீத நோட்டுக்களை செல்லாது என்று அரசாங்கம் ஒரு மொக்கை தைரியத்தில் தான் முடிவெடுத்திருக்கிறது. தற்போது ரிசர்வ் வங்கியோ போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சிட முடியாமல் திணறுகிறது. மேலும் புதிய நோட்டுக்கள், இயங்கிக் கொண்டிருந்த ஏ.டி.எம் இயந்திரங்களுக்கு பொருந்தும் வடிவத்திலும் இல்லை.
இந்த சிக்கல்களை எல்லாம் மோடி அவர்கள் 50- நாள்களில் சரி செய்துவிடலாம். பொருத்துக் கொள்ளுங்கள் என்கிறார். உண்மையில் இப்பிரச்சினைகளைச் சரி செய்ய குறைந்தது 4-மாதங்கள் வரை ஆகலாம்.
சில கிராமங்களுக்கு மட்டுமதான் ஏ.டி.எம் வசதி இருக்கின்றனது. பலர் வங்கிகளின் வாசலில்தான் நிற்க வேண்டியிருப்பதால் தங்களது வேலை வாய்ப்புகளை இத்தகைய பிரச்சினைக்குரிய நாட்களில் இழக்கின்றனர். பல இந்தியர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் இல்லை.
இந்நிலையில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ எத்தனை 1000 ரூபாய் நோட்டுக்கள் எழைகளிடம் இருக்கப் போகிறது என கணிப்புடன் கேட்கிறார். கேள்வி தருக்கபூர்வமாக இருந்தாலும் எதார்த்தம் அப்படியில்லை. இந்தச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் வீழ்வதற்கு முன்பாக இப் பிரச்சினைகளை சரி செய்ய யாராவது முயல வேண்டும்.
ஹெரால்டு (Herald):
எந்த சூழலிலும் தனது வாக்குறுதிகளை காப்பாற்றுவதுதான் ஒரு நாட்டினுடைய செலவாணிக்கு அழகு. ஆனால் அந்த உறுதியானது இந்தியாவில் உடைக்கப் பட்டிருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். ரொக்கம் காலியாகி வங்கிகளும் விரைவிலேயே மூடப்படுகின்றன.
அரசை அதிதீவிரமாக ஆதரிக்கும் சிலர் இந்த அறிவிப்பை எகத்தாளமாக ஆதரிப்பதோடு சில வாதங்களையும் முன் வைக்கின்றனர். அதாவது அதிக மதிப்புள்ள 1000, 500 நோட்டுக்கள் மதிப்பிழக்கச் செய்யப்பட்டதால் கருப்புப் பணத்தை கண்பிடிக்க முடியுமாம். இந்த அறிவிப்பு ரகசியமாக காப்பாற்றப்பட்டு வெளியிட்டதால் கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை வேறு வழிகளில் மாற்றுவதர்கான அவகாசம் மறுக்கப்பட்டுள்ளது. எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் கருப்புப் பண முதலைகள் கடந்த காலங்களில் அவர்களுக்கு கிடைத்த போதுமான நேரத்திலேயே அவற்றை வேறு வழிகளில்பதுக்கி இருப்பதால் தற்போது அவர்கள் ஏன் மாற்ற வேண்டும்? ” எனக் கேட்கிறது பாக்கிஸ்தானில் இருந்து வெளியாகும் இப்பத்திரிக்கை

No comments:

Post a Comment