Monday, 7 November 2016

உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் யார்?

Trump-Hillary-Clintonஇந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சியின் சார்பில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும்; களமிறங்கி உள்ளனர். உலகின் வல்லரசான அமெரிக்காவின் அதிபர் எடுக்கப் போகும் ஒவ்வொரு முடிவும், மற்ற நாடுகளை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எப்படி நடக்கிறது அமெரிக்க தேர்தல்?


அமெரிக்காவில் வாக்குப்பதிவு நடைமுறை பிற நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தியாவைப் போன்று அல்லாமல், ஒவ்வொரு மாநிலமும் தனி நாடு போலச் செயல்படுவதால், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென பிரத்யேகமான விதிமுறைகளையும் கொண்டிருக்கின்றன

* குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில், தகுதியுள்ள பலரும் போட்டியிடலாம்
* அந்தந்த கட்சிகளின் சார்பில், வேட்பாளரை முடிவு செய்வதற்கான, முதற்கட்ட தேர்தல் நடக்கும்'பிரைமரி' மற்றும், 'காகஸ்' என, அழைக்கப்படும் இந்த தேர்தலில், அந்தந்த கட்சி உறுப்பினர்கள் விவாதித்து, ஓட்டளித்து, தங்கள் கட்சியின் வேட்பாளரை முடிவு செய்வர்
* இதற்காக, நாடு தழுவிய அளவில் பிரசாரமும், ஆதரவும் திரட்டப்படும்; கட்சி உறுப்பினர்களின் ஓட்டுகளின் அடிப்படையில், வேட்பாளர் முடிவு செய்யப்படுவர்
* இரு கட்சிகளிலும் நடக்கும் தேசிய மாநாடுகளில், அதிகாரப்பூர்வ வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்
* இரு கட்சி வேட்பாளர்களும், நாடு முழுவதும் பிரசாரம் செய்து, ஆதரவு திரட்டுவர்
* அமெரிக்காவின் வளர்ச்சி, செயல் திட்டம் முதல், தனிப்பட்ட விமர்சனம் வரை, அனைத்தும், இந்த பிரசாரத்தில் இடம் பெறும்
* அதிபர் பதவிக்கு போட்டியிடும் இரு வேட்பாளர்களும், நேரடியாக பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி, மிக முக்கியமானவை; இதில், இருவரின் செயல் திறன் மதிப்பிடப்படும்
* தேர்தலில் முன்னிலை வகிப்பது யார் என்ற கருத்து கணிப்புகள் நடக்கும்
* அமெரிக்க அதிபர் தேர்தல் தேதி நிரந்தரமானது. தேர்தல், ஆண்டின் நவ., மாதத்தின், முதல் திங்கட்கிழமையை தொடர்ந்து, வரும் செவ்வாய் கிழமை தேர்தல் நடக்கும்
* அன்றைய தினத்தில், 'எலக்ட்டோரல் காலேஜ்' எனப்படும், 'தேர்வு செய்வோர் அவை' உறுப்பினர்களுக்கு, மக்கள் ஓட்டளிப்பர்
* மாகாணங்களின், எம்.பி.,க்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், இதன் எண்ணிக்கை இருக்கும்
* மிக அதிகமாக, கலிபோர்னியா மாகாணத்திற்கு, 55 உறுப்பினர்களும், மிக குறைவாக, மொன்டானா உள்ளிட்ட மாகாணங்களுக்கு, மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்
* தேர்வு செய்வோர் அவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 538; இதில், 270 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றவரே, அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுவார்
* அமெரிக்க அதிபரை தேர்வு செய்ததும், இந்த உறுப்பினர்கள் கலைந்து விடுவர். அவர்களுக்கு பதவிக் காலமோ, வேறு பணிகளோ கிடையாது.
* புதிய அதிபர், 2017 ஜனவரியில் பதவி ஏற்பார்.


தேர்தல் நடத்தும் அதிகாரம்!!


அமெரிக்காவில் தேர்தல் நடத்துவதில், தேர்தல் ஆணையத்தின் பங்கு மிகக் குறைவே; பிரசாரத்தை கண்காணிப்பது, வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கணக்கிடுவது உள்ளிட்ட பணிகளை மட்டுமே செய்கிறது. தேர்தல் நடத்துவதில், 'கவுண்டி' எனப்படும், பஞ்சாயத்து அமைப்புகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, வேட்பாளருக்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பது, தேர்தலை நடத்துவது, முடிவு அறிவிப்பது என, அனைத்து அதிகாரங்களும் இதற்கு உண்டு. அங்கு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமின்றி ஓட்டுச்சீட்டுகள் மூலமும், சில இடங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது.

டொனால்டு டிரம்ப், 70
குடியரசு கட்சி
பலம்: தொழிலதிபர்
அமெரிக்க தேசிய உணர்வாளர்
தொழிலாளர்கள் ஆதரவு
பலவீனம்: அரசியல், நிர்வாகத்திற்கு
புதியவர். உளறி கொட்டுபவர்உலக நாடுகளில் மதிப்பு குறைவு
சொத்து மதிப்பு: ரூ.25,000 கோடி
சர்ச்சை: முஸ்லிம்களுக்கு எதிரான கருத்து
சீனா, இந்தியா பற்றிய விமர்சனம்
பாலியல் புகா
ர்

ஹிலாரி கிளிண்டன், 68
ஜனநாயக கட்சி
முன்னாள் வெளியுறவு அமைச்சர்
பலம்: கணவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்.
அரசியல்,நிர்வாகத்தில் அனுபவம்,
பலதரப்பட்ட மக்களின் ஆதரவு
பலவீனம்: 'இ - மெயில்' சர்ச்சை


துணை அதிபர் யார்?

குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்சை, 57, முன்னிறுத்தியுள்ளார். அமெரிக்க பார்லிமென்ட்டின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபை, எம்.பி.,யாக இருந்து, நீண்டகால அனுபவம் பெற்ற இவர், தற்போது, இண்டியானா மாகாண கவர்னராக உள்ளார். மைக் பென்ஸ்
ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன், துணை அதிபர்வேட்பாளராக, டிம் கைனேவை, 58, நிறுத்தியுள்ளார்; மேயர், மாகாண கவர்னர் என, பல பதவிகளை வகித்துள்ள அவர் தற்போது, செனட் சபை எம்.பி.,யாக உள்ளார். டிம் கைனே

இந்தியாவுக்கு நண்பன் யார்?

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள இருவரில், ஹிலாரி, அரசியலிலும், நிர்வாகத்திலும் நீண்ட அனுபவம் பெற்றவர்; டிரம்புக்கு, இவை இரண்டுமே புதிது. எனினும், உள்நாட்டு பிரச்னையானாலும் சரி, வெளியுறவு கொள்கையானாலும் சரி, அதுபற்றி, தடாலடியாக பேசி வருபவர் டிரம்ப்.


டிரம்ப்: ஒபாமா நிர்வாகத்தின் வெளியுறவு கொள்கைகளை, கடுமையாக டிரம்ப் விமர்சித்து உள்ளார். எனவே, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஆசியாவில் அமெரிக்காவின் வேகம் குறையலாம்; அந்த வெற்றிடத்தை, சீனா நிரப்ப முற்படும். இதனால், இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்படலாம்.
'அமெரிக்க தொழில்களை இந்தியா அபகரிக்கிறது' என, டிரம்ப் கூறினார். அதே சமயம், ஹிந்து கூட்டணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப், 'இந்தியாவுக்கும், ஹிந்துவுக்கும் நண்பனாக இருக்கப் போகிறேன்' என்றார்.

ஹிலாரி: ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த போது, தெற்காசிய நாடுகளில், அதிக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு, தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். செனட் சபை, எம்.பி.,யாக இருந்த போது, இந்திய ஆதரவு குழுவுக்கு தலைமை ஏற்று நடத்தியவர்.

ஹிலாரியின் தெற்காசிய கொள்கைகளால், அமெரிக்க ஆதிக்கம் அதிகரித்து, சீனாவை சமன் செய்ய வாய்ப்புள்ளது. தென் சீன கடல் விவகாரத்திலும், சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்; சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

ஹிலாரியின் சீன எதிர்ப்பு, இந்தியாவுக்கு ஊக்கமாக அமையும்; அதனால் தான், ஹிலாரி அதிபராவதை, சீனா விரும்பவில்லை. அதே சமயம், ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்கப் படைகளை திரும்ப பெறும் ஒபாமா நிர்வாகத்தின் முடிவை, ஹிலாரி ஆதரிக்கிறார். இதனால், ஆப்கானிஸ்தானில் அதிகரிக்கும் பயங்கரவாத செயல்கள், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும்; ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களுக்கும், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படும்.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை, ஹிலாரி, டிரம்ப் இருவமே எதிர்க்கின்றனர். அதே போல், அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை, 'அவுட்சோர்சிங்' முறையில், மற்ற நாட்டினருக்கு வழங்குவதற்கு, இருவருமே எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவுடன் நெருக்கம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு அமைந்ததும், அமெரிக்காவுடன் நெருக்கமான நட்புறவை வலுப்படுத்தியது. இந்த நட்பு தொடரவும், அமெரிக்காவின், இந்தியா சார்ந்த வெளியுறவு கொள்கைகள் அதிகரிக்கவும், ஹிலாரி, அதிபராவது அவசியம்.

அதே சமயம்,
பயங்கரவாத எதிர்ப்பு விஷயத்தில், டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றுகிறார். பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியா, இதை வரவேற்கிறது.

மாற்றம் இருக்காது
இந்தியாவுடனான, வர்த்தகம் மற்றும் தொழில் விஷயங்களில், ஹிலாரி மற்றும் டிரம்பின் நிலைபாடுகளில், பெரிய அளவில் மாற்றம் இருக்காது. அறிவுசார் சொத்துரிமை, காப்புரிமை விஷயங்களை, இந்திய தொழில் நிறுவனங்களுக்கு எதிராக, இருவருமே பயன்படுத்துவர். அமெரிக்க தொழில் நிறுவனங்களின் விருப்பப்படியே, இருவரின் நடவடிக்கை அமையும்.

எச் - 1 பி விசா

இந்திய, ஐ.டி., ஊழியர்களுக்கு பெருமளவில் பயனளிக்கும், 'எச் - 1 பி விசா' விஷயத்தில், டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். 'இந்தியாவில் இருந்து வரும் ஊழியர்களால், அமெரிக்கர்களின் தொழில் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. எனவே, இந்த விசாவுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வரப்போகிறேன்' என, பிரசாரம் செய்துள்ளார்.

இதற்கு, இந்தியர்கள் மட்டுமின்றி, அமெரிக்க தொழில் நிறுவனங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த விஷயத்தில் ஹிலாரி, கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை.

எப்.பி.ஐ., அறிவிப்பால் புதிய திருப்பம்
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், ஹிலாரி கிளிண்டன், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, தனிப்பட்ட, 'இ - மெயில்' முகவரியை, அரசு பணிக்கு பயன்படுத்திய விவகாரத்தில், அவர் மீது குற்றம் ஏதுமில்லை' என, அந்நாட்டு புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., அறிவித்துள்ளதால், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும், ஹிலாரி கிளிண்டன், வெளியுறவு அமைச்சராக இருந்த போது, தனிப்பட்ட, இ - மெயில் முகவரியை, அரசு பணிக்கு பயன்படுத்திய விவகாரம், சில நாட்களுக்கு முன், பூதாகரமானது.
'ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய, இ - மெயில்களை, ஹிலாரி நீக்கினார் என்ற, குடியரசு கட்சியின் புகார் குறித்து, மீண்டும் விசாரிக்கப்படும்' என, எப்.பி.ஐ., இயக்குனர் ஜேம்ஸ் அறிவித்தார்; இந்த விவகாரம், ஹிலாரிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால், ஹிலாரியின் செல்வாக்கு சரியும் சூழல் உருவானது. 


தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment